நாசமாய்ப் போன கருத்துச் சுதந்திரம்!

4 Sep

விமானப் பயணத்தின்போது, பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை தொந்தரவு செய்யும் விதமாக பாஜக அரசை எதிர்த்து கோஷமிட்ட இளம்பெண் லூயிஸ் சோஃபியா கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் இன்றைய பரபரப்புச் செய்தி.

சோஃபியா கைதைக் கண்டித்து ஸ்டாலின் உள்ளிட்ட பல எதிர்க்கட்சியினரும், ‘மதசார்பற்ற’ ஊடகங்களும், கருத்துச் சுதந்திரவாதிகளும் குமுறி வருகின்றனர். தமிழிசை இதை நாகரிகமாக, பெருந்தன்மையாக, கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம் என்று பலர் அறிவுரை கூறியுள்ளனர்.

இதில் நடந்தது என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியமே. ஏனெனில் நாளை யாருக்கும் இதே போன்ற நிலைமை ஏற்படலாம். அப்போதும் இதே கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.

நடந்தது என்ன?

சென்னையிலிருந்து 03.09.2018 அன்று, காலை 10.20 மணிக்கு தூத்துக்குடி கிளம்பிய தனியார் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பயணித்துள்ளார். அதே விமானத்தில், தூத்துக்குடி, கந்தன் காலனியைச் சேர்ந்த டாக்டர் சாமியின் மகள் லூயிஸ் சோஃபியா என்ற இளம்பெண்ணும் பயணித்துள்ளார். கனடாவில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவியான சோஃபியாவுக்கு தமிழிசையைக் கண்டவுடன் ஆவேசம் ஏற்பட்டு, ‘பாசிஸ பாஜக ஒழிக, மோடி ஒழிக’ என்று கோஷமிட்டுள்ளார்.

விமானத்தில் தமிழிசை அருகில் அமர்ந்திருந்த அவர், பயண நேரம் முழுவதும் பாஜகவைக் கண்டித்து முழக்கமிட்டு வந்துள்ளார். அதனை தமிழிசை கண்டித்தபோது அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை சக பயணிகளோ, விமான ஊழியர்களோ கண்டித்ததாகத் தெரியவில்லை.

இதையடுத்து தூத்துக்குடி விமான நிலையத்தில் நிலைய அதிகாரிகளிடமும், தனியார் விமான நிறுவனத்தினரிடமும் இது தொடர்பாக தமிழிசை புகார் செய்தார். தமிழிசையை வரவேற்க வந்திருந்த பாஜகவினர் இந்த விவரத்தை அறிந்தவுடன், மாணவிக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

இறுதியில், பொது இடத்தில் நாகரிகமின்றிச் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மாணவி சோஃபியா மீது வழக்கு பதிவு செய்த விமான நிலைய போலீசார், அவரைக் கைது செய்தனர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது உடல்நலக் குறைவு (அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல் சிந்தனை வந்தாலே யாரானாலும் சிறைக்குச் சென்றவுடன் உடல்நலம் குன்றிவிடும்! அப்போதுதானே பிணையில் விடுதலை ஆக முடியும்?) ஏற்பட்டதால் மருத்துவமனையில் கைதியாக சிகிச்சை பெறுகிறார் சோஃபியா.

கருத்துச் சுதந்திரமா?

சோஃபியா கைது செய்யப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று பலர் குமுறுகிறார்கள். குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சோஃபியா கைதைக் கண்டித்து டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வழக்கம்போல பாஜகவின் எதிரிகள் கருத்துச் சுதந்திரத்துக்காகக் கூக்குரலிடுகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளாக பாஜக, இந்து இயக்கத் தொண்டர்கள் இதே தமிழகத்தில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டபோது கருத்து சுதந்திரம் பேசாத இந்த நாதாரிகள், பொது இடத்தில் இங்கிதமின்றி ஒரு கட்சியின் தலைவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய மாணவியை கைது செய்ததற்குப் பொங்குகிறார்கள். இதுதான் தமிழினத்தின் டிசைன் போல!

முதலில் கருத்துச் சுதந்திரம் என்பது என்ன என்பதை அந்த ஆராய்ச்சி மாணவிக்கோ, அவரை ஆதரிக்கும் அரசியல் குருடர்களுக்கோ யாரேனும் விளக்கினால் நல்லது. தனது எதிரியை வசைபாடக் கிடைக்கும் வாய்ப்பல்ல கருத்துரிமை. தனது எதிரியே ஆயினும், அவரது கருத்துக்கு மதிப்பளிப்பதே கருத்துரிமை.

இந்தச் சம்பவத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை மிகவும் பொறுமையாகவே அந்த மாணவியின் அத்துமீறலை சகித்துக் கொண்டிருந்திருக்கிறார். பொறுமை எல்லை கடந்தபோதுதான் அந்த மாணவியைக் கண்டித்திருக்கிறார். உடனே, பாஜகவை விமர்சிக்க உரிமை இல்லையா என்கிறார்கள் சிலர்.

நிச்சயமாக அனைவருக்கும் கருத்துரிமை உண்டு. ஆனால் எதற்கும் இடம், பொருள் என்று ஒன்று இருக்கிறது. அபான வாயுவைக் கூட யாரும் ஆவேசமாக வெளியேற்ற முடியாது.

சில மாதங்களுக்கு முன் ‘கோ பேக் அமித் ஷா, கோ பேக் மோடி’ கோஷமிட்ட திமுகவினர், அண்மையில் கருணாநிதிக்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் (காண்க: படம்) பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி பங்கேற்றபோது ‘கோ பேக் கட்கரி’ என்று கோஷமிடவில்லை. மாறாக அவருடன் ஆனந்தமாகக் குலவினர் ஸ்டாலினும் கனிமொழியும். அதுதான் அரசியல். நாளை பாஜக அரசை திமுக ஆதரிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தவிர, ஜனநாயகத்தில் சபை நாகரிகமும் பொது இங்கிதமும் அவசியம். இவை எல்லாம் கிறிஸ்தவக் குடும்பத்தில் பாஜக / இந்து எதிர்ப்பு மனநிலையில் வளர்க்கப்பட்ட சோஃபியாவுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஸ்டாலினுக்குத் தெரியாமல் இருக்கலாமா?

நாளை இதே ஸ்டாலின் விமானப் பயணம் செல்லும்போது, பாஜகவினரோ, இந்து இயக்கத்தைச் சார்ந்தவர்களோ, அவருக்குப் பின்னால் இருந்துகொண்டு ‘சர்க்காரியா ஆணையம் என்ன ஆச்சு, 2ஜி ஊழல் என்ன ஆச்சு?’ என்று கருத்துரிமையுடன் கோஷமிட்டால் அவர் சும்மா இருப்பாரா?

கள்ளத் தோணியில் சென்ற ஒருவரும் சோஃபியாவுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார். அவர் விமானப் பயணம் செல்கையில் பின்னால் இருந்து ‘இடைத்தரகர்களின் குலக்கொழுந்தே’ என்று சொன்னால் சும்மா இருப்பாரா?

திட்டமிட்ட செயலா?

மாணவி சோஃபியா திட்டமிட்டே விமானத்தில் தமிழிசைக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சிலர் கூறுகின்றனர். அதற்கு அவரது டிவிட்டர் டிவீட்டை சான்றாகக் காட்டுகின்றனர். (கீழே கொடுக்கப்பட்டுள்ளது). அதில் அவர் கூறுகிறார்:

“தமிழிசை பயணிக்கும் விமானத்தில் நானும் உள்ளேன். இப்போது ‘மோடி- பாஜக- ஆர்.எஸ்.எஸ். ஆட்சி ஒழிக’ என்று கோஷமிட நினைக்கிறேன். என்னை விமானத்திலிருந்து இறக்கி விட்டு விடுவார்களா?” என்று அதில் தனது நண்பர்களிடம் கேட்கிறார். நேரம் காலை 10.22 மணி. இதற்கு குறைந்தபட்சம் 392 பேர் மறு டிவீட் செய்திருக்கிறார்கள். 658 பேர் லைக் செய்திருக்கிறார்கள்.

ஆக, விமானத்தினுள் அவ்வாறு கோஷமிடுவது தவறு என்பது சோஃபியாவுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் மதவெறியும், பாஜகவுக்கு எதிரான மனநிலையும் அவரது ஆய்வுத் திறனை மழுங்கடித்திருக்கின்றன.

அவர் திட்டமிட்டு இதற்காக விமானத்தில் பயணிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், விமானத்தில் தமிழிசையைக் கண்டவுடன் அவருக்கு ஆத்திரம் வருகிறது என்றால், அவர் ஏற்கனவே பாஜக/ ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பால் வளர்க்கப்பட்ட ஒருவராகத் தான் இருந்திருக்க முடியும். அவரை பலர் லைக் செய்திருப்பதைக் காண்கையில் அவர் ஏதேனும் இயக்கம் சார்ந்தவராகத் தான் இருக்க முடியும். அநேகமாக, அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கிளர்ச்சியில் தொடர்புடையவராக இருக்கக்கூடும்.

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்துக்கு கொண்டுவந்ததே திமுக தான் என்பது சோஃபியா போன்ற அரசியல் வெறியர்களுக்குத் தெரிவதில்லை.

இதேபோல யாராவது ஒரு பாஜக அபிமானி, ஏதாவது எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து விமானத்தில் கோஷமிட்டிருந்தால், இதே மொண்ணைகள் அப்போதும் ‘பாஜகவின் பாசிஸம் தலைவிரித்தாடுகிறது’ என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.

இதையெல்லாம் காணும்போதுதான், பாஜக சார்பில்லாமல் நடுநிலையாக இருக்கலாம் என்று நினைப்பவர்களும்கூட பாஜக ஆதரவாளர்களாக மாற வேண்டி வருகிறது.

பெண் என்றால் இளக்காரமா?

இதே இடத்தில் தமிழிசைக்குப் பதிலாக பாஜக தலைவர் ஹெச்.ராஜா இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? கேவலம் தமிழிசை பெண் தானே என்ற இளக்காரம் அல்லவா அவர் முன்னிலையில் பாஜகவை கேவலப்படுத்தி சோஃபியாவை வசைபாட வைத்திருக்கிறது?

தமிழிசை பெண்தான். ஆனால் அவர் சென்னையில் உள்ள சிறந்த மருத்துவர்களில் ஒருவர். சிறந்த பேச்சாளரும் கூட. அவரது தந்தை குமரி அனந்தனைத் தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. பாஜக போன்ற மத்தியில் ஆளும் தேசிய கட்சியின் தலைவராக உயர்வது சாதாரணமானதல்ல. (இதையெல்லாம் வாரிசு அரசியலுக்கு சாமரம் வீசுவோர் புரிந்துகொள்ள முடியாது).

அவர் தனது சொந்தக் காரியமாக விமானத்தில் பயணிக்கையில் அவரது மனதைப் புண்படுத்த சக பயணிக்கு உரிமை உள்ளதா? அவ்வாறு புண்படுத்துவதை தமிழிசை தட்டிக் கேட்கக் கூடாதா? கோணல் புத்தியுள்ள ஊடகங்கள் இச்செய்தியை தங்கள் விருப்பத்துக்கு வளைத்து எழுதுவதைக் காண்கையில் இதழியல் துறை மீதே வெறுப்பு மேலிடுகிறது. இதே நிலை நமது குடும்பப் பெண்கள் யாருக்காவது வேறு ஏதாவது ஒரு வகையில் பொதுப் போக்குவரத்தின்போது நடைபெற நாம் அனுமதிப்போமா? இதுவும் ஒரு வகையில் ‘டீசிங்’ தானே?

தமிழிசை பாஜக தலைவர் மட்டுமல்ல. விமானப் பயணத்தில் செல்லும் ஒரு சாதாரணப் பயணியும் கூட. அவருக்கு விமானப் பயணத்தில் சக பயணி அசௌகரியம் ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் அல்லவா? இதற்காகத் தான் நாம் சுதந்திரம் பெற்றோமா?

இது ஊடக தர்மமா?

தி ஹிந்து ஆங்கிலப் பத்திரிகை இந்தச் செய்திக்கு கொடுத்திருக்கும் தலைப்பு: Woman held for calling BJP govt. ‘fascist’. மனமறிந்து செய்தியை எழுத வேண்டாமா? பாஜக அரசை பாசிஸ்ட் என்று கூறியதற்காகவா அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்? அவர் பேசிய இடம் தவறு என்பதும், விமானப் பயண விதிகளை (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) மீறிவிட்டார் என்பதும் தானே சோஃபியாவின் கைதுக்குக் காரணம்? தி ஹிந்து பத்திரிகையின் அதிபர் விமானப் பயணம் செல்கையில் பின்னாலிருந்து ‘சீன ஆதரவு இதழாளர் ஒழிக’ என்று கோஷமிட்டுக் கொண்டே இருந்தால் அதை அவர் கண்டுகொள்ளாமல் சென்று விடுவாரா?

பாஜகவை விமர்சிப்பது என்றால் தரம் தாழ்ந்த எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பது ஓர் இயல்பாகி வருகிறது. அதேபோல பிற கட்சிகளை எந்தப் பத்திரிகையும் விமர்சிப்பது கிடையாது. இதுவும் ஒருவகையில் நவீன தீண்டாமையே. உண்மையில் இத்தகைய பித்தலாட்ட ஊடகங்கள்தான் மோடியே மீண்டும் பிரதமராக உதவி செய்கின்றன. இவை செய்யும் துஷ் பிரசாரத்துக்கும் உண்மைக்கும் இடையே காணப்பட்டும் வேறுபாடு, வாசகர்களைச் சிந்திக்க வைக்கிறது.

‘அர்பன் நக்ஸல்கள்’ என்ற வார்த்தை சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டை விரும்பாத பலரும், மோடி அரசை தங்கள் அறிவுஜீவித் தளத்தில் எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு கருத்துரிமை உள்ளது. போலவே, அவர்களை எதிர்க்கவும் பாஜக சார்பானவர்களுக்கு உரிமை உள்ளதை மறந்து விடுகிறார்கள். பாஜகவை ஆதரிப்பவர் முஸ்லிமாகவே இருந்தாலும் இந்துத்துவர் என்று முத்திரை குத்துவது அவர்களது இயல்பு. இத்தகைய பிரசாரங்களால் தடம் புரண்ட சோஃபியா போன்ற மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு கோஷமிட்டு தங்கள் எதிர்காலத்தை நாசமாக்கிக் கொள்கிறார்கள்.

கருத்துச் சுதந்திரத்துக்கும் பொது இடத்தில் புழங்கும் நாகரிகத்துக்கும் இடையில் வேறுபாடு தெரியாதவர்கள் அல்லர் நமது இதழாளர்கள். அவர்களில் சிலரது கண்களை பாஜக எதிர்ப்பு என்ற திரை மறைத்திருப்பதால் கருத்துக் குருடர்கள் ஆகி இருக்கிறார்கள். அவர்கள் தெரிந்தே தங்கள் தர்மத்திலிருந்து விலகுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இதையே நாம் கண்டோம். இதன் ஒரு பக்கவிளைவுதான் சோஃபியா விவகாரம்.

தமிழகத்தில் உள்ள நடுநிலையான அறிவுஜீவிகள் வெளிப்படையாக இந்த அக்கிரமத்தைக் கண்டிக்க வேண்டும். அரசியல் சார்புள்ளவர்களும் கூட, சற்றே சிந்தித்துப் பார்த்து, நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இங்கிதம் தேவை:

நமது அரசியல் களம் மட்டுமல்ல, சமூக ஊடகங்களும் இங்கிதத்தை இழந்து வருகின்றன. சோஃபியா விவகாரத்திலேயே இருதரப்பாக நின்று வசை பாடும் போக்கு கடுமையாகவே காணப்படுகிறது. இது நாகரிக வாழ்வுக்கு உகந்ததல்ல.

இதே தமிழகத்தில்தான் ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்க தேவர், அண்ணாதுரை, ராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் அரசியல் நடத்தினார்கள். கொள்கைகளில் வேறுபட்டபோதும் ஒருவரை ஒருவர் அவர்கள் மதித்தார்கள். அவர்களது எதிர்ப்பில் தனிப்பட்ட ஆளுமைக்கு எதிரான தாக்குதல்கள் இருந்ததில்லை. கட்சிகளை விமர்சிக்கும்போதும் கொள்கை அடிப்படையிலேயே அவர்கள் செயல்பட்டார்கள். அப்போது ஈ.வே.ராமசாமி போன்றோர் வெறுப்பு அரசியலை நடத்தியபோதும், அத்தகையவர்கள் எக்காலத்திலும் தமிழகத்தின் முன்னுதாரணம் ஆகிவிடவில்லை.

ஆனால், இன்று தமிழகத்தின் நாம் காண்பது மாபெரும் கலாசாரச் சீரழிவு; அரசியல் நாகரிக வீழ்ச்சி. இந்த விஷயத்தில், ஒரு கட்சியின் தலைவரான தமிழிசைக்கு ஆதரவாக மற்றொரு கட்சியின் தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர் கருணாநிதியின் மகன்தானே? காமராஜர் அல்லவே?

அதேசமயம், தமிழிசை தான் குமரி அனந்தனின் புதல்வி என்பதை நிரூபிக்க இப்போது வாய்ப்பிருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டதாலோ, தவறாக வழிநடத்தப்பட்டதாலோ, விமானத்தில் கோஷமிட்டு தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய இளம்பெண் சோஃபியாவை அவர் நினைத்தால் மன்னிக்க முடியும். அனைவரையும் ஒருங்கிணைக்கும் சங்க சமுத்திரத்தில் சங்கமமானவர் என்பதால், அவர் தனது புகாரை வாபஸ் பெற்று சோஃபியாவை மன்னிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து.

சட்டம் முறைப்படி தன் கடமையைச் செய்யட்டும். அதேசமயம் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புகள் நமது பண்பாட்டைக் குலைக்க அனுமதித்துவிடக் கூடாது. சோஃபியா காட்டத் தவறிய சக மனிதர் மீதான மதிப்பையும் மரியாதையையும் தமிழிசை காட்ட வேண்டிய தருணம் இது.

உண்மையான புரட்சியாளர் டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கரின் வார்த்தைகளுடன் எனது பதிவு நிறைவடைகிறது:

ஜனநாயகம் என்பது வெறுமனே ஓர் ஆட்சி முறை மட்டுமல்ல. அடிப்படையில் அது ஒரு கூட்டு வாழ்க்கைக்கான வழிமுறை; அனைத்து கருத்துப் பரிமாற்ற அனுபவங்களுக்குமான வழிமுறை. சக மனிதர்கள் மீது நாம் காட்ட வேண்டிய மதிப்புக்கும் மரியாதைக்குமான அடிப்படை அணுகுமுறை ஜனநாயகம்தான்.

.

-முகநூல் பதிவு (04.09.2018)

 

5 Responses to “நாசமாய்ப் போன கருத்துச் சுதந்திரம்!”

 1. Enuyir Thamizha 05/09/2018 at 5:26 PM #

  நண்பரே நான் என் உயிர் தமிழா என்று ஒரு புதிய வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறேன் அதற்கு வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

  வலைத்தளத்திற்கான முகவரி https://enuyirthamizha.blogspot.com/

  நன்றி..
  “குத்தூசி

  Like

 2. வேகநரி 05/09/2018 at 5:51 PM #

  விமான பயணத்தில் சோபியா நடந்து கொண்ட தவறான ஸ்ரண்ட் முறையை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரித்து ஊக்குவிப்பது தவறு.

  Liked by 1 person

 3. தற்கால அரசியல்வாதிகளிடம் சகிப்புத்தனமை குறைந்து வருவதையே இது காட்டுகிறது.

  Liked by 1 person

Trackbacks/Pingbacks

 1. நாசமாய்ப் போன கருத்துச் சுதந்திரம்! – TamilBlogs - 04/09/2018

  […] 5 mins ago அரசியல் Leave a comment 1 […]

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: