எழுவர் விடுதலை: எது நியாயம்?

10 Sep

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பை ஆளுநர் வசம் தள்ளிவிட்டபோதே இம்முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான்.

ஆனால், நாட்டின் முன்னால் பிரதமரைக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர்களை விடுவிக்கலாமா என்ற கேள்வி மனதை உறுத்தவே செய்கிறது. தமிழகத்தில் உணர்ச்சி அலைகளுக்குத் தான் எப்போதும் முதலிடம் இருப்பதால், நியாய தர்மங்களோ, சட்டமோ இங்கு கண்டு கொள்ளப்படுவதில்லை. மனிதநேய அடிப்படையில் இந்த 7 பேரையும் விடுவிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தாலும், தங்கள் தவறுகளை இவர்கள் உனர்ந்ததாகவோ, அதை ஒப்புக்கொண்டதாகவோ இதுவரை தகவல் ஏதும் இல்லை.

உதாரணமாக, பேரறிவாளன் தான் இன்னமும் ஒரு பேட்டரி செல் வாங்கிக் கொடுத்ததற்காக இவ்வளவு பெரிய தண்டனையா என்றுதான் வாதிட்டு வருகிறார். 1989-90களில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல், இந்திய வெறுப்புப் பிரசாரம் ஆகிவற்றை கவனித்து வந்தவர்களுக்கு இந்த வாதம் எத்துணை போலியானது என்பது தெரியும். இலங்கை சென்ற அமைதிப்படையால் தான் சுதந்திர தமிழீழக் கனவு முறியடிக்கப்பட்டதாகவும், அங்கு இந்திய ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் உச்சகட்டப் பிரசாரம் அப்போது தமிழகத்தில் செய்யப்பட்டது. அதனால்தான், இந்தியா திரும்பிய அமைதிப்படையினரை வரவேற்கச் செல்லாமல் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி புறக்கணித்தார். ராஜீவ் கொலைக்கு அடிப்படைக் காரணம் அமைதிப்படையால் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது என்பதே.

ராஜீவ் கொலைக்குப் பிந்தைய ஜெயின் ஆணைய விசாரணை, இந்தக் கொலைக்குப் பின்புலத்தில் இருந்த அரசியல் சக்திகளை அடையாளம் காட்டியது. அதனால்தான் அன்று காங்கிரஸ் கட்சியின் நிர்பந்தம் காரணமாக திமுக அரசு கலைக்கப்பட்டது.

அப்போதும்கூட, ஈழமும் தனித் தமிழகமும் இணைந்த சுதந்திர தமிழ்த் தாயகம் உருவாகும் என்றே சில முட்டாள்கள் பேசி வந்தனர். அவர்களது பேச்சை நம்பி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மோசம் போனதால்தான் 2009-இல் மாபெரும் அழிவுக்கு இலங்கைவாழ் தமிழர்களும், இந்திய வம்சாவளியினரும் இலக்காயினர்.

பிரபாகரனேகூட, ராஜீவ் கொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறியபோதும், அதை பெரும் வெற்றி நிகழ்வாகக் கொண்டாடிய தனித் தமிழ் தேசியவாதிகள் இன்றும் உள்ளனர். அவர்களைப் பொருத்த வரை இந்தியா என்பது என்றைக்கேனும் சிதறு தேங்காயாக உடையப் போகும் ஒரு நாடு மட்டுமே. அவர்கள்தான் பேரறிவாளனின் விடுதலைக்கு மாய்ந்து மாய்ந்து குரல் கொடுத்தனர். பிற ஆறு பேருக்கு அந்த அளவுக்கு அவர்கள் குரல் கொடுக்கவில்லை என்பதை நாம் அறிவோம்.

‘உன் நண்பன் யார் என்று கூறு; உன்னைப் பற்றிக் கூறுகிறேன்’ என்று ஒரு பழமொழி உண்டு. பேரறிவாளனை ஆதரிக்கும் பெரும்பாலோர் இந்திய தேசியத்தை நிராகரிப்பவர்களாக இருப்பதைக் காண்கையில், பேரறிவாளன் யார் என்பது நமக்கு சொல்லாமலே விளங்குகிறது. அத்தகையவருக்கு ஏன் இந்திய தேசம் கருணை காட்ட வேண்டும்? பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் போராட்டம் உண்மையிலேயே உருக்கமானதுதான். ஆனால், அவர் தனது மகனின் தேச விரோத நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்பாரா?

இந்த விஷயத்தில் அளவுக்கு அதிகமாகவே தமிழகத்தில் பிரசாரம் செய்தாகிவிட்டது. அதன்மூலமாக ஏதோ ஒட்டுமொத்த தமிழகமே இந்த எழுவரின் விடுதலைக்கு ஏங்குவது போல தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாநில அமைச்சர் ஜெயகுமார் கூட தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்கவே ஏழு பேரை விடுதலை செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளதாகக் கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். அதாவது ஒரு பொதுக்கருத்து வலுவாக உருவாக்கப்பட்டதென்றால் அங்கு சட்டமோ, நியாயமோ தள்ளுபடி செய்யப்படலாம் என்ற புது நியாயம் உருவாகிறது. இது நிச்சயமாக சட்டத்தின் ஆட்சிக்கு உறுதுணை புரியாது. உச்ச நீதிமன்றமே கூட பொதுக்கருத்து சார்ந்து பல தீர்ப்புகளை அளிக்கத் துவங்கிவிட்டதை 377-வது ஷரத்து விவகாரத்திலும் கண்டோம். இது நீண்டகால நோக்கில் நாட்டுக்கு நல்லதல்ல.

இன்றும் கூட, சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரும் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளவில்லை. தவறை ஒப்புக் கொள்ளாதவர்களால் அதற்கு பிராயச்சித்தம் தேட முடியாது. அதற்கான தண்டனையிலிருந்து தப்பவும் முடியாது.

இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் அம்புகள் மட்டுமே. அவர்களை, கொலைச் சதிக்கு உடந்தையாக பின்னணியில் இருந்து இயக்கிய பலரும் இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். இந்த எழுவருக்குப் பின்புலமாக தமிழகத்தில் செயல்பட்ட பலர் அரசுக்கு அஞ்சி அமைதியாகிவிட்டனர். ஆனால் அவர்களது அரசியல் செயல்பாடுகள் வேறு திசையில் – தேச விரோதமாக – நடந்துகொண்டுதான் உள்ளன. அவர்கள் இந்த எழுவரின் விடுதலையை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பது முக்கியமான கேள்வி.

ராஜீவ் குடும்பம் இந்த எழுவரையும் மன்னித்தாலும், அவருடன் கொல்லப்பட்ட 14 பேரின் குடும்பங்கள் குற்றவாளிகளை மன்னிக்கவில்லை. சட்டத்தின் முன்பு முன்னாள் பிரதமரோ, அவருடன் கொல்லப்பட்ட குழந்தையோ, அனைவரும் நிகரே. ராகுலின் பெருந்தன்மை அரசியலுக்காக இந்த எழுவரை விடுவிப்பது என்பது முறையாக இருக்காது.

இதனை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிடாதது மாபெரும் தவறு. வெளிநாட்டு விவகாரத்தை இவ்வழக்கில் முன்வைத்த மத்திய அரசு, ‘ராஜீவுடன் கொல்லப்பட்டவர்களில் ஒருவரது குடும்பம் எதிர்த்தாலும் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது’ என்று அறிவித்திருக்க வேண்டும்.

தற்போது விடுதலை குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் மாளிகைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர் அதை அப்படியே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கு முன் அவர் கண்டிப்பாக மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்பார் என்பது தெரிந்த விஷயமே. மத்திய பாஜக அரசைப் பொருத்த வரை, இந்த வழக்கை முன்னாள் காங்கிரஸ் தலைவர் கொலை வழக்காகக் காணவில்லை. முன்னாள் பிரதமர் கொலை வழக்கு என்ற நிலையிலேயே இதனை பாஜக அணுகி வந்துள்ளது. எனவேதான், ராஜீவ் கொலையாளிகளை மன்னிக்கக் கூடாது என்று அக்கட்சி கூறி வருகிறது. தற்போது பாஜகவும் மத்திய அரசும் என்ன முடிவு எடுக்கப் போகின்றன?

இதற்கு முன் 2014 பிப்ரவரி 19-இல், இந்த எழுவரையும் விடுவிப்பதாக ஜெயலலிதா அரசு அறிவித்தபோது, மத்திய அரசை ஆலோசிக்காமல் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கூடாது என்று கூறியே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தடையாணை பெற்றது. அதற்கு மத்தியப் புலனாய்வு அமைப்பு சார்ந்த வழக்கு இது என்று காரணமும் கூறப்பட்டது. அதனை ஏற்று 2015 டிசம்பர் 2-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் அளித்தது. ஆயினும் அரசியல் சாஸனத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்வதானால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று அப்போதே கூறப்பட்டது.

எனவேதான், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தற்போது உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறது. அதாவது ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட வேண்டியவர்; அதே சமயம் மத்திய அரசின் பிரதிநிதி என்பதால் அவர் இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம் என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடு.

ஆக, தற்போது இந்த விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போது முடிவு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வசம் உள்ளது. அவர் மேதகு ஜனாதிபதியின் பிரதிநிதியும்கூட. அவர் எந்த முடிவு எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றாக வேண்டும். ஆனால், அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியிலேயே ஆளுநரை நிர்பந்திப்பது போன்ற கருத்துகளை முன்வைத்திருக்கிறார். அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும் என்று அவர் மிரட்டல் தொனியில் பேசி இருக்கிறார். அவரது சட்ட ஞானம் கவலை அளிக்கிறது.

இப்போதும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இந்த விவகாரத்தை கிடப்பில் போட முடியும். அவரை மிரட்டி மீன் பிடிக்கலாம் என்று யாரேனும் கருதினால் அது தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டுக் கொள்வதாகிவிடும். அவர் மத்திய அரசின் ஆலோசனைப்படியும் செயல்பட்டாக வேண்டிய நிலையில் உள்ளவர் என்பதை மறக்க வேண்டாம்.

சரி அடுத்து என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு பாஜக தான் பதில் சொல்ல வேண்டும். அந்தக் கட்சியின் ஆலோசனை, 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த எழுவர் மீது கருணை காட்டுவதாகவும் அமையலாம். அல்லது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடக் கோருவதாகவும் இருக்கலாம். மத்திய அரசு என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பதில் சொல்ல வேண்டியது. தமிழகத்தின் நிர்பந்தத்துக்காகவோ, குறுகிய அரசியல் லாபத்துக்காகவோ மத்திய பாஜக அரசு செயல்பட முடியாது.

இந்த விஷயத்தில் எனது கருத்து, சில கடுமையான நிபந்தனைகளுக்கு உள்பட்டு இந்த எழுவரையும் விடுவிக்கலாம் என்பதே. மீள மீள இந்த விஷயத்தை பிரசாரப்படுத்தி தமிழகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்ற தொடர்ந்து சதிகள் நடந்தேறி வருகின்றன. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாக மத்திய அரசு முடிவெடுக்கலாம்.

இவர்கள் எழுவரும் கருணை அடிப்படையில் ஆளுநரால் விடுதலை செய்யப்பட்டால், இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக் கூடாது என்பது கடுமையான முதல் நிபந்தனையாக விதிக்கப்பட வேண்டும்.

இவர்களை தியாகியாக கௌரவித்து அரசியல் நடத்த சில சதியாளர்கள் முனையக்கூடும். அதற்கு இந்த எழுவரும் உடன்படக் கூடாது என்ற இரண்டாவது நிபந்தனையும் விதிக்கப்பட வேண்டும். சிறையிலிருந்து விடுவிக்கப்படுவோர் கொலையாளிகள் என்பதை மறந்து அவர்களைக் கொண்டாடுவோரை அரசு கண்டிக்கவும் தண்டிக்கவும் வேண்டும்.

நளினி, முருகன் போன்றவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பிருக்கிறது. அங்கு சென்ற பின் அவர்களை நமது அரசால் கண்காணிக்க முடியாது. எனவே விடுதலையாகும் கொலையாளிகள் இந்தியாவிலேயே அரசின் கண்காணிப்பில் வாழ சம்மதம் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இந்த எழுவரும் பேச்சுரீதியாகவோ, எழுத்துரீதியாகவோ, சிந்தனைரீதியாகவோ, இயக்கரீதியாகவோ, தங்கள் சிறை வாழ்க்கையை அரசியல் ஆயுதமாக்க முயன்றால், அடுத்த நிமிடமே மீண்டும் சிறைவாசம் என்று எச்சரிக்கப்பட வேண்டும். அதற்கான உறுதியை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலமாக அரசு பெற வேண்டும்.

இந்த வழக்கை முன்மாதிரியாகக் கொண்டு நாளை பிற பயங்கரவாதிகளும் மதத் தீவிரவாதிகளும் (கோவை குண்டுவெடிப்பு வழக்கு நினைவில் வருகிறது) விடுதலை கோர வாய்ப்புள்ளது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதற்குமே என்று இதே உச்ச நீதிமன்றம்தான் கூறியுள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என்று நான் நம்புகிறேன். அதுவரை, எழுவரின் விடுதலையை விரும்பும் அனைவரும் ஆளுநரை நிர்பந்தம் செய்ய வேண்டாம் என்று கூறவும் விழைகிறேன். மனிதநேயமும் கருணையும் உயர்ந்த சொற்கள். அவற்றை தக்கள் விருப்பத்துக்கு யாரும் வீணாக்கக் கூடாது.

 

-முகநூல் பதிவு (10.09.2018)

 

4 Responses to “எழுவர் விடுதலை: எது நியாயம்?”

 1. Manickam Mani 10/09/2018 at 8:49 PM #

  தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன். நீதி மன்றங்களும் அரசியல்வாதிகள்போல் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்கின்றன. தேவையில்லா வழக்குகளில் அதிதீவிரமாகவும் தேவையான வழக்குகளில் மெத்தனமாகவும் செயல்படுகின்றன. உதாரணமாக ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு மிகத்தாமதமாகத் தீர்ப்பு வெளியானது. எனவே நீதிமன்றத்தால் குற்றவாளி என்று கருதப்பட்டவருக்கு தேசியக் கொடி போர்த்தி இறுதிச் சடங்கு நடந்தது.

  Like

 2. Johan Arunasalam 11/09/2018 at 5:43 PM #

  “அவரை மிரட்டி மீன் பிடிக்கலாம்” என்பது அமைச்சர் ஜெயக்குமாரின் பின்புலத்தை உறுத்துகிறது. இதை அமைச்சர் பார்ப்பாரோ தெரியவில்லை. ஆனால் நமக்கு அழகல்ல! மற்றும் படி எல்லாம் நாயத்துடனா? நம் நாட்டில் நடக்கிறது. இல்லாதவனிடமே அதைத் தேடுவதே நம்மியல்பு.

  Like

 3. வேகநரி 15/09/2018 at 7:22 PM #

  விளக்கமான நல்லதொரு பதிவு. தமிழர்கள் என்றால் சொந்த நாட்டு பிரதமரையும் கொலை செய்யலாம் தப்பேயில்லை, விமானத்தில் கூச்சலிடலாம், எல்லைகள் தாண்டி சென்றும் மீன்கள் பிடிக்கலாம் என்கின்ற ஆபத்தான போக்கு ஊக்கிவிக்கபடுகிறது. இதை பயன் படுத்திய ஜெயலலிதா தான் பொது சொத்தை கொள்ளையடித்து சொத்து சேர்த்ததை நியாயபடுத்துவதற்காக எழுவரை விடுதலை செய்து உத்தரவிட்டு தமிழர் தலைவியாக முயற்சித்தார். இதை எல்லாம் பார்த்த ராகுல் காந்தியும் இப்போது இலங்கை எல்டிடிஈ தலைவர் கொல்லபட்ட போது நானும் அழுதிட்டேன் என்கிறார்.
  தண்டணை காலத்திற்கும் அதிகமாக இவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யலாம். நீங்க சொன்ன மாதிரி நாட்டு விரோத நடவடிக்கைகள் பிரசாரங்கள் செய்யமாட்டோம் என்ற கடுமையான நிபந்தனைகளுடன்.இலங்கை எல்டிடிஈ தலைவரின் அம்மா மலேசியா, கனடா, இலங்கையில் சிறந்த மருத்துவ வசதிகள் பெற்று கொள்ளும் வசதிகள் இருந்த போதும் அவரை எப்படியாவது தமிழகத்திற்கே கொண்டுவர வேண்டும் என்ற வைகோ போன்றவர்களது வேண்டுகோளும், நாட்டு விரோத அரசியல் பிரசார தீய நோக்கம் கொண்டவை.அதற்கு கலைஞர் சம்மதிக்கவில்லை. அதனால் கலைஞர் தமிழர் துரோகியாக்கபட்டார்.அது போன்ற நோக்கம் அவர்களுக்கு இங்கேயும் இருக்கலாம்.

  Like

Trackbacks/Pingbacks

 1. எழுவர் விடுதலை: எது நியாயம்? – TamilBlogs - 10/09/2018

  […] 1 min ago பொது Leave a comment 1 […]

  Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: