உறவின் பெருமக்களுடன் ஒரு நாள்!

17 Sep

நமது சமுதாயத்தில் பல்லாண்டுகளாக உருவாக்கி வந்துள்ள ஒவ்வொரு நடைமுறைக்கும் காரணம் இருக்கிறது. உறவுமுறைகளும் ஜாதியக் குழுக்களும் அதன் ஓர் அங்கமே. ஆயிரம் ஆண்டுகால அந்நிய ஆக்கிரமிப்பால் நமது பண்பாடு வீழ்ச்சி அடையாமல் பாதுகாத்தது இந்த சமுதாய அமைப்பு முறையே. இதனால் தீண்டாமை உள்ளிட்ட சில மோசமான விளைவுகள் நேரிட்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நமது ஜாதிய அமைப்பே, சமுதாயத்தை இதுவரை தாங்கிப் பிடித்து வந்துள்ளது.

இனக் குழுக்கள், கோத்திர அமைப்புகள், குல வழிபாடுகள் போன்றவை இதன் முக்கியமான அம்சங்கள். நவநாகரிக உலகிலும் சமுதாயத்தில் இவை இயன்றவரை கடைபிடிக்கப்படுவதால்தான், நமது குடும்பங்களில் பேரளவில் சச்சரவுகள் ஏற்படுவதில்லை. நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பேருருவுடன் ஒப்பிடுகையில் நம்மிடையே ஏற்படும் சச்சரவுகளைவிட இயல்பான தருணங்களே அதிகமாக உள்ளன.

தமிழ்நாட்டின் பண்பாட்டு வளர்ச்சியில் தொண்டை மண்டல வேளாளர் சமூகம் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. சிவனை வழிபடுபவர் எந்தச் சாதி எனினும் வழிபடத் தக்கவன் என்ற நிலையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய சேக்கிழார் பெருமான் (பெரிய புராணம்), ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நில வருவாய் மேலாண்மையை உருவாக்கிய தளவாய் அரியநாதர் (விஜயநகரப் பேரரசின் முதலமைச்சர்), நீதிக்கட்சியின் முன்னோடி பி.டி.ராஜன் ஆகியோரை இதில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழக அரசியலின் திசையைத் தீர்மானிப்பவர்களாக தொண்டை மண்டல முதலியார் சமூகத்தினர் விளங்கி இருக்கிறார்கள். தங்களிடம் அதிகாரம் இருந்தபோதிலும் கூட (உ.ம்: பக்தவத்சலம், நெடுஞ்செழியன், அன்பழகன்) தங்கள் ஜாதிக்கு அவர்கள் எந்த உதவியும் செய்துகொள்ளவில்லை என்பதே, தொ.ம.மு. சமூகத்தினரின் சிறப்பு.

ஆனால், காலப்போக்கில் அந்தணர்களைப் போலவே தொ.ம.மு. சமூகமும் ஒட்டுமொத்த சமுதாய நோக்கில் சரிவு கண்டுள்ளது. வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் அந்தணர்கள் பாதிக்கப்பட்டது போலவே (முற்பட்ட வகுப்பினர்) தொ.ம.மு. சமூகத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர, தமிழகம் முழுவதும் பரவி இருந்தாலும், ஒரே இடத்தில் மற்ற ஜாதியினர் போல குழுமி வாழாததால் இவர்களது சக்தி தற்போதைய அரசியல் வட்டாரத்தில் கண்டுகொள்ளப்படுவதில்லை. இதன் விளைவாக இந்த சமூகத்தில் ஓர் அயற்சி ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையை மாற்ற தொ.ம.முதலியார் சங்கம் என்ற சமூக அமைப்பு பாடுபடுகிறது. இது மாநிலம் முழுவதும் உள்ள இந்த ஜாதியினரை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதே நோக்கத்துடன், கோவையில் உள்ள தொ.ம.மு. சமூகம் சார்ந்த முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைக்கும் ‘டி.எம்.எஸ்.எம். ஹப்’ (தொ.ம.மு.சங்க அறிமுக மையம்) என்ற அமைப்பு மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற வட்டார போக்குவரத்து இயக்குநர் திரு. டி.சிவசுப்பிரமணியன் உள்ளார்.

கோவை மாகரில் உள்ள தொ.ம.மு. சமூகம் சார்ந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தணிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், பொறியாளர்கள், வங்கியாளர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆன்மிகவாதிகள், தொழில் முனைவோர் போன்றவர்களை ஒருங்கிணைப்பதே இதன் பணி. அவர்கள் மூலமாக தொ.ம.மு.சங்கத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களை உயர்த்துவது இறுதி இலக்கு.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, பலதுறை சார்ந்த ஆலோசனை நிகழ்ச்சிகளை ‘டி.எம்.எஸ்.எம். ஹப்’ நடத்தி வருகிறது. இதன் செயலாளராக எனது மைத்துனர் திரு. சி.சிவசங்கர் செயல்படுகிறார். அவரது அழைப்பின் மூலமாக இந்த அமைப்பின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. உண்மையிலேயே போற்றத்தக்க ஒரு பணி. வீண் ஜாதிப் பெருமை பேசாமல், சமூகத்தின் உயர்வுக்காக அந்த சமூகத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் சிந்திக்கிறார்கள் என்பதே பாராட்டப்பட வேண்டிய அரிய செயல்.

இந்த அமைப்பின் மூன்றாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கோவை, ஆர்.எஸ்.புரம், புரந்தரதாசர் மண்டபத்தில் 16.09.2018, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அண்மையில் மறைந்த சமயச் சொற்பொழிவாளர் திருமதி ஸ்வர்ணா சோமசுந்தரம் அவர்கள் குறித்து தணிக்கையாளர் திரு. என்.கிருஷ்ணகுமார் பேசினார். திருமதி. ஆ.தனுசு ராமசந்திரன் ஆன்மிக உரை நிகழ்த்தினார். கோவையின் பிரபல இருதயவியல் நிபுணர் டாக்டர் வெ.பழனிசாமி அவர்களை தமிழக வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் திரு. ச.சதாசிவம் பாராட்டிப் பேசினார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் முன்னாள் நிதித் துறை செயலாளருமான திரு. ஏ.என்.சுவாமிநாதன் (82) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உறவின் பெருமக்களுக்கு நல்லுரையும் ஆசியும் வழங்கினார்.

பட்டயக் கணக்காயர் திரு. கே.ரவி, பட்டிமன்றச் செம்மல் பேராசிரியர் பு.சி.கணேசன், அமைப்பின் தலைவர் திரு. டி.சிவசுப்பிரமணியன், சுந்தராபுரம் திரு. வெற்றிவேல், கோவை சிட்டிஸன் வாய்ஸ் அமைப்பின் நிர்வாகி திரு. ஜெயராமன் ஆகியோரும் பேசினர். இருதயவியல் நிபுணர் டாக்டர் வெ.பழனிசாமியை திரு. ஏ.என்.எஸ். அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார். டாக்டர் வெ.பழனிசாமி ஏற்புரையாற்றினார்.

விழாவின் நிறைவாக இடம்பெற்ற பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளனாகப் பங்கேற்றேன். “நாளைய நாளை நன்னாளாக்க பெரிதும் நாம் செய்ய வேண்டியது கூடி வாழ்வதா? ஓடி உழைப்பதா?’ என்ற தலைப்பு. ஓடி உழைப்பதே என்ற தலைப்பில் நான் பேசினேன். எனது அணியில் வழக்கறிஞர் திரு. வெங்கடேசன், தனியார் நிறுவனத்தின் தேசிய விற்பனை மேலாளர் திரு. மயிலப்பன் ஆகியோரும், எதிரணியில் முனைவர் திரு.தட்சிணாமூர்த்தி, திருமதி எச்.வெங்கட்நந்தினி, கல்லூரி மாணவி செல்வி இரா.மகாலட்சுமி ஆகியோரும் பேசினர். அனைவரும் நன்றாகப் பேசியதாகச் சொன்னார்கள். என்ன இருந்தாலும் உறவுமுறையினர் அல்லவா? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் முன்னாள் நிதித் துறை செயலாளருமான திரு. ஏ.என்.சுவாமிநாதன் அவர்களது உரையின் சிறு தொகுப்பு:

சேக்கிழார் பெருமானால் பெருமை பெற்ற சமூகமான தொண்டை மண்டல முதலியார் சமூகத்தினர் சுமார் 40 ஆண்டுகள் முன்னர் வரையிலும் அரசு உயர் பதவிகளை வகித்து வந்தனர். நமது சமூகத்தினர் பொறுப்புகளில் இருந்த் வரை, அரசுப் பணிகளில் இருப்போர் மீது ஒரு மரியாதை இருந்தது. அதற்கு அவர்களது நேர்மையே அடைப்படைக் காரணமாக இருந்தது.

காலப்போக்கில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் முற்பட்ட பிரிவினராக தொ.ம.மு.சமூகம் ஒதுக்கப்பட்டதால், அரசுப் பணிகளில் நம்மவரின் பங்களிப்பு குறைந்துவிட்டது. ஆனால், பிற துறைகளில் நம்மவர்கள் போராடி உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். இத்துறைகளில் அவர்கள் முதன்மை பெற வேண்டும். அது நமக்காக அல்ல- ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனுக்காக.

அரசுக்கு வழிகாட்டுவோராக தணிக்கையாளர்கள். வழக்கறிஞர்கள், இப்போதும் செயல்பட முடியும். ஜாதிரீதியாக மிக மோசமான தாக்குதல்களை தொடர்ச்சியாக எதிர்கொண்ட பிராமணர் சமூகம் சுய முயற்சியால் இன்று உலகம் முழுவதும் பரவி, உத்வேகத்துடன் எழுந்து நிற்கிறது. அதுபோல நமது சமூகத்தினரும் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

நாம் எந்தத் துறையில் பணியில் இருந்தாலும் அந்தத் துறையில் நேர்மையானவர்களாக (Professional Integrity) விளங்க வேண்டும். நமது பணியால் நாடும் மேம்பட வேண்டும். இந்த சமூக சந்திப்பு மையத்தில் உள்ல தொழில் நிபுணர்களும் வசதி மிக்கவர்களும் எளிய குடும்பத்தினருக்கு உதவவும் வழிகாட்டவும் வேண்டும். இந்த அமைப்பு மேலும் வளர எனது ஆசிகள் என்றும் உண்டு.

இவ்வாறு திரு. ஏ.என்.சுவாமிநாதன் பேசினார்.

இறுதியாக மூத்த வழக்கறிஞர் திரு. குமார் முன்னிலையில் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதுவரை இருந்த நிர்வாகிகளுடன் மேலும் நால்வர் புதிய பொறுப்பேற்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்றதன் வாயிலாக, கோவையில் உள்ள உறவின் பெருமக்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பும், திரு.ஏ.என்.எஸ். அவர்களிடம் ஆசிபெறும் பேறும் பெற்றேன். இந்த ஞாயிறு ஓர் இனிய ஞாயிறாக அமைந்தது இறைவன் திருவுளம் போலும்!

படங்கள்:

Advertisements

3 Responses to “உறவின் பெருமக்களுடன் ஒரு நாள்!”

 1. வேகநரி 23/09/2018 at 6:35 PM #

  இந்தியாவில் உள்ள ஜாதி முறை ஒழிய வேண்டும் என்பார்கள் பலர், ஆனா ஜாதி இட ஒதுக்கீடு முறை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள ஜாதி வேறுபாடு முறைகளை தொடர்ந்தும் பாதுகாத்து வருவார்கள் பெரும்பாலும் திராவிடம் பேசுபவர்கள் ,சில கம்யூனிஸ்டுகள்.
  அகற்றபட வேண்டிய தீய இந்திய ஜாதிய அமைப்பு முறைக்கு சார்பான இந்த பதிவு நீங்க இதுவரை தெரிவித்த நியாயபூர்வமான கருத்துக்களுக்கும் எதிரானது. ஏமாற்றம் (:

  • vamumurali 02/10/2018 at 3:15 PM #

   அன்பு நண்பருக்கு
   இந்தியாவில் ஜாதி முறை இருப்பதன் பலமும் பலவீனமும் குறித்து எனது பதிவில் தெளிவாகவே நான் சொல்லி இருக்கிறேன். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்பதை விட, அவற்றிடையே பேதங்கள் அகல வேண்டும் என்பதே யதார்த்தமானதாக இருக்க முடியும். ஏனெனில் இந்த சமூகத்தை ஒருவகையில் கட்டிக் காத்து வந்திருப்பதும் இந்த ஜாதி அமைப்பே. காலப்போக்கில் அனைத்து ஜாதியினரும் இணக்கமாக வாழும் காலம் வரும். முன்னதாக, ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கிடுகள் அகற்றப்பட்டாக வேண்டும்.

Trackbacks/Pingbacks

 1. உறவின் பெருமக்களுடன் ஒரு நாள்! – TamilBlogs - 17/09/2018

  […] 1 min ago பொது Leave a comment 1 […]

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: