கர்மயோகி நெல் ஜெயராமன் காலமானார்!

6 Dec


பாரம்பரிய நெல் விதைகளை மீட்கும் இயக்கத்தை தனியொருவனாக முன்னின்று நடத்திவந்த கர்மயோகி திரு. நெல்.ஜெயராமன் (50) இன்று (06.12.2018) காலை சென்னையில் காலமானார்.

சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த ஜெயராமன் இன்று தேசம்முழுவதும் அறிந்த விவசாயியாக உள்ளார். யார் இந்த ஜெயராமன்?

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடுவில் 1968, ஏப்ரல் 15-இல் பிறந்தவர் ஜெயராமன். 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார்.

நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003 இல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் இயற்கை விவசாய ஆர்வலர் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உள்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறு உற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுவே ஜெயராமனின் வாழ்க்கையை மாற்றியது.

அந்த 7 வகை விதை நெல்லை வாங்கி கொண்ட ஜெயராமன், முதல்கட்டமாக அதை வைத்து 2004-2005ஆம் வருஷம் சாகுபடி செய்தார். விளைச்சல் நல்ல பலன் தந்தது. உடனே கூடுதலான விதைநெல்லை மறு உற்பத்தி செய்தார். இந்த விதை நெல்லை விதைத்தால் இவ்வளவு விளைச்சல் என்பதை கண்முன்னாலேயே பார்த்தார் ஜெயராமன். அவற்றை சக விவசாயிகளிடம் பரப்பினார்.

அன்றுமுதல் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் பயணத்தை ஜெயராமன் தொடங்கினார். இதுவரை 174 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார்.

வீரிய ரக வித்துகள், செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல் இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை விளைவிப்பதன் மூலமாக, ஆரோக்கியமான, நோய் எதிர்ப்பாற்றல் மிகுந்த சுவையான அரிசியைப் பெற முடியும் என்று நெல் ஜெயராமன் நிரூபித்தார். இவற்றின் விளைச்சலும் அற்புதமானதாக இருந்தது. அவரைப் பின்பற்றி பல விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு மாறினர். அதனால், அழியும் தறுவாயில் இருந்த பல நெல் ரகங்கள் காக்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர் திரு. நரசிம்மன் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், பாரம்பரிய நெல் மையத்தை ஜெயராமன் உருவாக்கினார். இந்த மையம் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஆய்வு மையமாகத் திகழ்கிறது.

இவர் பாரம்பரிய நெல்விதைகள் குறித்த விவரங்களை தரவுகளாக்கினார் விதைப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை உள்பட்ட வேளாண்மை விழிப்புணர்வுப் பிரசாரங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.

நம்மாழ்வாரைப் பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்கப் போராடினார். தான் மீட்டெடுத்த பாரம்பரிய நெல்விதைகளை கடந்த 12 ஆண்டுகளாக மறு உற்பத்தி செய்து 37,000 விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாறச் செய்துள்ளார்.

மரபணு மாற்றப் பயிர்களை எதிர்த்து ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்தவர் ஜெயராமன். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் இயற்கை விவசாயத்தை பரப்பியுள்ளார்.

ஆண்டுதோறும் ஆதிரங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ஆம் ஆண்டு முதல் நடத்திவந்தார். இந்த நிகழ்வு மே மாசம் 30, 31-ம் தேதிகளில்தான் நடத்தப்படும். முதல் தனக்குத் தெரிந்த ஒரு விவசாயியின் பண்ணை வீட்டில் எளிய முறையில் நடத்தினார். இதில் 147 விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது ஓர் உறுதிமொழியை ஜெயராமன் பெற்றார்.

இயற்கை விவசாயம் அந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு 2 கிலோ விதைநெல் கொடுக்கப்படும். அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து அவற்றை பரவச் செய்ய வேண்டும். அதற்கு முறையான இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு இதே திருவிழாவுக்கு வரும்போது, விளைந்த நெல்லிலிருந்து 4 கிலோ விதை நெல்லை திருப்பி ஜெயராமனிடமே தர வேண்டும். இதுதான் உறுதிமொழி.

இதன்மூலமாக 2 நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. ஒன்று, 147 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருவிழாவில் இப்போது 5,000க்கும் அதிகமான விவசாயிகள் கலந்துகொள்ளத் துவங்கினர். இவ்வாறு நெல் விதைகளைை மீட்பதை ஓர் இயக்கமாக ஜெயராமன் மாற்றிக் காட்டினார்.

பாரம்பரிய நெல் விதைகளைக் காப்பாற்றியதற்காக ஜெயராமன் தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம் ஆகிய அமைப்புகளை நடத்தி வந்தார்.

இந்திய அரசின் கிருஷ்டி சம்மான், தமிழக அரசின் சிறந்த இயற்கை விவசாயிகளுக்கான விருது, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரால் கிரிஷிரத்னா விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இவருக்கு மனைவி, 11 வயதில் மகன் உள்ளனர்.

அமரர் நம்மாழ்வாருக்குப் பிறகு இயற்கை விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கிவந்த திரு. நெல் ஜெயராமன் புற்றுநோய் பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இறுதியில் காலதேவன் அவரை அழைத்துக் கொண்டான்.

கர்மயோகி திரு. நெல் ஜெயராமன் இன்று இறந்திருக்கலாம். ஆனால், அவர் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் வித்துகள் உள்ளவரை அவரது புகழ் என்றும் நிலவும்.

அவர் விட்டுச் சென்ற பாரம்பரிய விதை மீட்புப் பணிகளை இயற்கை விவசாய அன்பர்கள் தொடர வேண்டும். அதுவே அவருக்கான சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

 

முகநூல் பதிவு

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: