என்னவளின் அன்னை!

9 Dec

வை.பாக்கியலட்சுமி

வை.பாக்கியலட்சுமி

(தோற்றம்: 1940 ஜூன் 23- மறைவு: 2018 நவ. 24)

 

சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் அதிர்ச்சி அளிக்கும் அந்தத் தகவல் தெரிய வந்தது. எனது மாமியாரின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வயிற்று வலிக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திசுப் பரிசோதனையில், அவரது வயிற்றில் புற்றுக்கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது.

வேறு இரு மருத்துவமனைகளில் மறு ஆய்வு செய்தபோதும், புற்றுநோய் உறுதியானது. இதை அவரது இரு மகன்களும் மூன்று மகள்களும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. குணப்படுத்த முடியாத இறுதி நிலையை எட்டிவிட்டதாகவும், இதற்கான சிகிச்சை அளிக்கும் பின்விளைவுகளுடன்  ஒப்புநோக்கினால், சிகிச்சையை விட வலியில்லாமல் அவரைப் பார்த்துக் கொள்வதே நல்லது என்றும், மூன்று மருத்துவர்களும் கூறிவிட்டனர். இடி விழுந்தது போலானது.

ஆனால், இதை அவரிடமோ, தங்கள் அப்பாவிடமோ சொல்ல முடியாத நிலை. வேறெந்த உறவினருக்கும்கூட இத்தகவல் தெரியாது. எப்படியேனும் தகவல் பரவி அம்மாவின் காதுகளை எட்டிவிடக் கூடாது என்பதே ஐவரது கவனமும். அதனால், அவர் முன்னால் இயல்பாக இருப்பதுபோல நடித்தார்கள்; தனிமையில் கண்ணீர் வடித்தார்கள். அவரது மூன்றாவது மகள் ராதிகாவின் கணவன் என்ற முறையில் இதையெல்லாம் நான் சோகமான  சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் என்ன உணவு உட்கொண்டாலும் உடனே வாந்தியாகிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக அவர் உணவு கொள்வது குறைந்தது. திட உணவு மாறி திரவ உணவு உட்கொண்டாலும், உடனே வெளித்தள்ளிவிடும். வலியால் துடிப்பார்;  மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்பார். உடனே கிளம்பி விடுவார்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனையில் சேர்ப்பதும் வீடு திரும்புவதுமாக நாட்கள் ஓடின. ஆரம்பத்தில் தனது நோய் குணமாகிவிடும் என்றே எனது அத்தை (மாமியார்) நம்பினார். கடைசி இரண்டு வாரங்களில்தான், மீள முடியாத திசையில் தனது உடல்நிலை இருப்பதை அவர் உணர்ந்தார்; உடல் வற்றியது; அவரது பேச்சும் குறைந்தது.

இந்த மூன்று மாதங்களும் கொடுமையான நாட்கள். எனது அத்தைக்கு உடலில் வலி. அவரது மகன்கள், மகள்களுக்கோ மனதில் வலி. இன்னும் மூன்று மாதங்கள்தான் இருப்பார் என்று மருத்துவர்கள் நாள் குறித்துக் கூறிய நிலையில், ஒவ்வொரு நாள் விடியலும் போராட்டமாக மாறிவிட்டது. எல்லாம் நவ. 24 வரை. அன்றுடன் என்னவளின் அன்னை தனது வாழ்க்கைக் கணக்கை முடித்துக் கொண்டார். உண்மையில் அவரது கஷ்டம் கண்டு, அவர் நல்லபடியாக இறைவன் திருவடியை அடையட்டுமே என்று நான் வேண்டியிருக்கிறேன். புற்றுநோயைக் குணமாக்கும் சஞ்சீவினி மருந்தை நமது மருத்துவ விஞ்ஞானிகள் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். இது எங்கள் அனைவரது பிரார்த்தனை.

தோன்றி அழிவது வாழ்க்கை. இது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், நமக்கென ஒரு துயரம் முன்வந்து நிற்கும்போது அதை ஏற்க மனம் மறுக்கிறது; மயங்குகிறது; மருகுகிறது. பட்டினத்தாரும் சங்கரருமே அன்னையின் இறப்புக்கு புலம்பினர் என்றால், சாதாரணர்களின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. அதிலும் நிறைவாழ்வு வாழ்ந்து மூன்று தலைமுறை கண்ட அன்னை ஒருவர் காலமாகும்போது, அவரது இழப்பை யாராலும் சமாதானம் செய்ய இயலாது.

இன்று அவர் மறைந்து 16 நாட்கள் முடிந்து நீத்தார் கடன்கள் செய்யப்பட இருக்கின்றன. அவரது வாழ்வின் சுருக்கத்தை, அவர் தான் வாழ்ந்த வாழ்க்கை மூலம் சொல்லிச் சென்ற சேதியை உறவுகளுக்கு நினைவூட்டுவதும், அன்பர்களுக்குத் தெரியப்படுத்துவதும் மட்டுமே இப்போதைக்கு சற்றேனும் நிம்மதி அளிக்க முடியும்.

குடும்பத்தின் ஆணிவேராக நிலைத்து நிற்கும் தலைவியாகவும், தன்னை சார்ந்த உறவினர்களைக் கட்டுப்படுத்தும் விழுதாகவும் விளங்கியவர் எனது அத்தை. அவர் அதிர்ந்து பேச மாட்டார். சாந்தமான முகம். நெற்றியில் திருநீற்றுக் கீற்றும் குங்குமமும். மூக்குத்தி மின்னும் மெல்லிய புன்னகை. யார் வந்தாலும் “வாங்க” என்பார். சமையல்கட்டு சென்றுவிடுவார். சிறிது நேரத்தில் காபி வந்துவிடும்.

அவர் யாரையும் குறை கூறியோ, கடிந்து பேசியோ நான் கேட்டதில்லை. பாசமே அவரது ஆயுதம். அதன்முன் உறவினர்கள் அனைவரும் செயலிழந்து நின்றாக வேண்டும்.

அவரது நிதானமான அணுகுமுறை கண்டு வியந்திருக்கிறேன். அவரது வைராக்கியமும், தைரியமும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவரது மூன்று மகள்களிடமும் அதே குணங்கள் இருக்கின்றன. நூலைப்போல சேலை. ஆனாலும், அவர் மறைந்த அன்று மூவரையும் கட்டுப்படுத்துவது மிகக் கடினமாகவே இருந்தது. ஏனெனில் அவர் தனது மகளுக்கு தாயாக மட்டுமல்ல, தோழியாகவும் இருந்தார்.

திருமணத்துக்கு முன் கவிதை நடையில் நான் என்னவளுக்கு எழுதிய கடிதத்தை தனது அம்மாவிடம் காட்டியிருக்கிறாள். அதேபோல கவிதை நடையில் பதில் கடிதம் எழுதுமாறு அவர் கூற என்னவளும் கவிதாயினி ஆனாள். இதை எனது மனைவியே பின்னாளில் கூறினாள். அத்தைக்கும் அவரது தோழிகளான மகள்களுக்கும் இடையிலான மேம்பட்ட உறவை இதற்கு மேல் விளக்க முடியாது.

அவர் அறியாத குடும்ப ரகசியம் கிடையாது. ஆனால் அதை அவர் எப்போதும் வெளிக்காட்டியதில்லை. தனது மகள்கள்- மகன்களின் இன்பங்களில் அவர் மிகுதியாக மகிழ்ந்ததும் இல்லை;  கஷ்டங்களில் அவர் துவண்டதுமில்லை.

கோவையில் வையாபுரி முதலியார்- ருக்மணி அம்மாள் தம்பதியின் நான்காவது மகளாக 1940 ஜூன் 23 –இல் அவர் பிறந்தார். அவருக்கு மூன்று மூத்த சகோதரர்கள்; மூன்று இளைய சகோதரர்கள். பெரிய குடும்பம். தாராபுரத்தில் புகுந்த வீட்டிலோ கட்டிய கணவர் ச.அனந்தசுப்பிரமணியம் குடும்பத்தின் மூத்த வாரிசு. அவருக்கு மூன்று தம்பிகள், ஒரு தமக்கை. இவ்வாறு உறவுகள் சூழ வாழ்வது பெரும் பேறு. அதிலும் சகோதரர்கள் புடைசூழ, கணவரின் உடன் பிறந்தோரையும் அரவணைத்து நடுத்தரக் குடும்பத்தில் வாழ்வது இமாலய பணி. தனது அமைதியான குணத்தால், பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் திருவிளக்காக, குடும்பத்தில் தலைமகளாக மிளிர்ந்தார் என் அத்தை.

கணவரின் அரசுப் பணி (கிராம மணியம்) திடீர் அரசு உத்தரவால் பறிபோனபோதும், அவரது நிலையற்ற வருவாயில் சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, இரு மகன்கள், மூன்று மகள்களை ஆளாக்கி, அவர்களுக்கு மணம் செய்வித்து, அவர்களின் வாரிசுகளையும் தனது நெஞ்சில் தாங்கி, அவர் செய்திருப்பது ஓர் அசுர சாதனை. 2 பேரன்கள், 5 பேத்திகள்- இவர்கள் அனைவரும் எனது அத்தையின் கரங்களில் தவழ்ந்தவர்கள்.

எனது மனைவியின் இரு பேறுக் காலங்களிலும் பிரசவ அறைக்கு வெளியே தனது சஞ்சலத்தை வெளிக்காட்டாமல் துடிதுடிக்கும் இதயத்துடன், என்னுடன் காத்திருந்த அத்தையின் முகத்தை நினைத்துப் பார்க்கிறேன். இதுதான் தவம். பாரதப் பெண்கள் ஒவ்வொருவருமே தவ யோகினிகள்தான்.

தனது சகோதரனின் மகளை மூத்த மகனுக்கு மணம் முடித்தவர், இளைய மகனுக்கு வெளியூரில் மதுரையில் பெண்ணெடுத்தார். ஆயினும், அவரைப் பொருத்த மட்டிலும் இரு மருமகள்களுமே சமமானவர்கள். அதேபோல மூன்று மகள்களுக்கு மட்டுமல்ல, மூன்று மருமகன்களுக்கும் அவர் சமமாகவே மதிப்பளித்தார். கணவர் மட்டுமே அவருக்கு மற்ற அனைவரையும்விட முக்கியம். அவரும் மணிக்கொரு தரம் மனைவியை அழைத்துக் கொண்டிருப்பார்.

எனக்கும் தீவிர திமுக அனுதாபியான எனது மாமாவுக்கும் அரசியல்ரீதியாக கடுமையான கருத்து மாறுபாடுகள் உண்டு. வயதில் பெரியவர் என்பதால் அவருடன் விவாதிப்பதை நான் தவிர்த்து விடுவேன். திருமணமான புதிதில், பாஜகவை கடுமையாக அவர் விமர்சிக்கும்போது நான் கையறு நிலையில் தவிப்பேன். இதை எப்படியோ உணர்ந்துகொண்ட என் அத்தை தனது கணவரை தனியே கடிந்து கொண்டார். அதன்பிறகு அவர் கடுமையான விமர்சனங்களைக் குறைத்துக் கொண்டார். எனது அத்தை அரசியல் தெரியாதவரல்ல; அதே சமயம், அரசியல் அவருக்குத் தேவையும் இல்லை.

தனது கணவரின் சகோதரர்களது குடும்பங்களிலும், தனது சகோதரர்களின் குடும்பங்களிலும் அவர் ஓர் ஆதார சக்தியாக இருந்தார். எங்கள் அனைவரது வாழ்விலும் அன்பான தென்றலாக அவர் திகழ்ந்தார்.

அவரது மறைவு பெரும் வெற்றிடத்தை உருவாக்கி இருப்பது உண்மையே. ஆனால், எங்கள் அனைவருக்கும் அவரை நினைந்து மகிழவும் கண்ணீர் உகுக்கவும் எண்ணற்ற நிகழ்வுகள் இருக்கின்றன. அந்த அனுபவங்கள் எங்களை வழிநடத்தட்டும்! அவரது ஆன்மா சாந்தி பெறட்டும்!

ஓம் சாந்தி!

 

Advertisements

One Response to “என்னவளின் அன்னை!”

  1. வேகநரி 09/12/2018 at 4:18 PM #

    மிகவும் வருத்தமாக இருந்தது ஆழ்த இரங்கல்கள்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: