சத்தீஸ்கரில் படுதோல்வி ஏன்?

13 Dec

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்- எனது பார்வை-2

நாட்டின் இரு பிரதானக் கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதும் மாநிலங்கள் ஹிந்தி பேசும் ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கர், உ.பி, இ.பி, உத்தர்கண்ட், ஹரியாணா ஆகியவை. இம்மாநிலங்களில் வேறு கட்சிகளுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக செல்வாக்கு இல்லை. இந்த மாநிலங்களில் வெல்ல வாய்ப்புள்ள கட்சியே நாடாளுமன்றத் தேர்தலில் வாகை சூட முடியும்.

அந்த வகையில் இந்த 7 மாநிலங்களும் இதுவரை பாஜகவின் ஆளுகையில் இருந்தன. தற்போது உ.பி, இபி, உத்தர்கண்ட், ஹரியாணா தவிர்த்து, இதர மூன்று மாநிலங்களை பாஜக இழந்திருக்கிறது. இந்த 3 மாநிலங்களிலிருந்து 65 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்ற 2014 தேர்தலில் இவற்றில் 62 தொகுதிகளை பாஜக வென்றது.
தற்போது, சட்டசபைத் தேர்தல்களில் கடுமையாகப் போராடியபோதும், இம்மாநிலங்களின் ஆட்சியை பாஜக இழந்துள்ளது.

வெற்றிக்கு ஆயிரம் தந்தையர்; தோல்வி ஒரு அநாதை என்ற பழமொழி உண்டு. தோல்விக்கான காரணங்களை ஆராயும்போது பட்சபாதமோ, விருப்பு வெறுப்போ, நாயக புராணமோ குறுக்கிட அனுமதிக்கக் கூடாது. அப்போதுதான் எதிர்காலத்தில் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

எனது கண்ணோட்டத்தில் இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக உண்மையில் படுதோல்வி அடைந்திருப்பது சத்தீஸ்கர் மாநிலத்தில் தான். இதுகுறித்து மட்டுமே தனி ஆய்வு தேவை.

இந்த மாநிலத்திலுள்ள் மொத்த சட்ட சபை தொகுதிகளின் எண்ணிக்கை-90. 2013 தேர்தலில் பாஜக -49, காங்கிரஸ் -39, பிறர்- 2 இடங்களில் வென்றிருந்தனர். அந்தத் தேர்தலில் பாஜக 41 %, காங்கிரஸ் 40.3%, பிறர் 18.7 % வாக்குகளைப் பெற்றனர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டசபை தொகுதிகள் வாரியாகக் கணக்கிட்டால், பாஜக-72, காங்கிரஸ்- 18 தொகுதிகளில் முதலிடத்தில் இருந்தன. அவற்றின் வாக்கு சதவிகிதம் பாஜக- 49.7%, காங்கிரஸ்- 39.1%, பிறர்- 11.3%.

தற்போதைய சட்டசபைத் தேர்தலில் பாஜக- 15 (32.9%), காங்கிரஸ்- 68 (43.2%), பிறர்- 7 (23.9%) இடங்களைக் கைப்பற்றியுள்ளன. 2013 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34 இடங்களையும் 2014 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் 57 இடங்களையும் பாஜக இழந்துள்ளது. இந்த இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகி உள்ளது.

இந்தத் தோல்விக்குக் காரணங்கள்:

1. 15 ஆண்டுகளாக ரமண் சிங் தலைமையிலான பாஜக அரசு சத்தீஸ்கரில் உள்ளது. இதனால் ஆட்சி மீதான அதிருப்தி நிலவியது வெளிப்படை. ரமண் சிங் அரசு ஊழல் கறை படியாததாக இருந்தபோதும், ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் அவரது உறவினர்கள் மீது சில முறைகேடு புகார்கள் கூறப்பட்டன. அதை ராகுல் பிரசாரத்தில் நன்கு பயன்படுத்தினார். பெரு நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி கடன் அளித்து வெளிநாடு தப்பிச் செல்ல (அது உண்மையா என்பது வேறு பிரச்னை) மோடி அரசு அனுமதித்துவிட்டது என்ற அவரது பிரசாரத்துக்கு நல்ல பயன் கிடைத்திருக்கிறது.

2. மாநிலத்தில் நிலவும் நக்ஸல் பிரச்னை மக்களுக்கு கடும் சிரமத்தை உருவாக்கி இருக்கிறது. நக்ஸல்கள் பாஜகவைத் தோற்கடிக்க கங்கணம் பூண்டு பணி புரிந்தனர். அவர்களுக்கு கிறிஸ்தவ சமய நிறுவனங்களும் உதவின. மதம் மாறிய பழங்குடியினர் அதிகம் வாழும் மாநிலமாக சத்தீஸ்கர் மாறி வருகிறது. சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகளை ஓரணியில் குவிக்க, பாஜகவின் ஹிந்துத்துவ இமேஜைப் பயன்படுத்திக் கொண்டனர். மாறாக ஹிந்துக்கள் சமயரீதியில் வாக்களிக்கவில்லை.

3. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அஜித் ஜோகியின் புதிய கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் செய்துகொண்ட கூட்டணி, பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் ஓட்டை போட்டுவிட்டது. பழங்குடியினரும் தலித் மக்களும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவை அதிக அளவில் ஆதரித்து வந்தனர். அவர்கள் ஜோகி தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது, பாஜகவின் வாக்குவிகிதத்தைக் குறைத்துவிட்டது. ஜோகியின் அணி காங்கிரஸுக்கே பாதகமாகும் என்று பாஜக மனப்பால் குடித்தது, அக்கட்சிக்கே எதிர்மறையாகிவிட்டது. ஜோகி- மாயா கூட்டணி கிட்டத்தட்ட 17 % வாக்குகளைப் பெற்றுள்ளது.

4. மத்திய அரசின் கடந்த 4.5 ஆண்டுகால ஆட்சி மீதான அதிருப்திக்கும் இந்தத் தோல்வியில் பெரும் பங்குண்டு. முதல்வராக இருந்த ரமண் சிங் பெருந்தன்மையாக இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்கலாம். இத்தேர்தல் முடிவு மத்திய அரசு மீதான அதிருப்தியின் பிரதிபலிப்பல்ல என்று ராஜ்நாத் சிங் கூறலாம். ஆனால், சத்தீஸ்கர் தோல்விக்கு மத்திய அரசு மீதான அதிருப்தியும் ஒரு காரணமே. ராகுல் காந்தியின் பிரசாரத்தில் மத்திய அரசின் திட்டங்களைத் தாக்கியே பேசினார் என்பதை நாம் கவனித்தோம். குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு- சேவை வரி விதிப்பு ஆகிய இரண்டும் ஊரகப் பகுதி- நகர்ப் பகுதி இரண்டிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. அவை அற்புதமான பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் என்பதை மக்கள் அறிய இன்னும் காலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பில் வீழ்ச்சி, பொருளாதார முடக்கம் ஆகியவை பெரும் அதிருப்த்யை ஏற்படுத்தியுள்ளன.

5. ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் பாஜக அடைந்திருப்பது கௌரவமான தோல்வி. (அது குறித்து நாளை காண்போம்). ஆனால், சத்தீஸ்கரில் பாஜகவினர் அடைந்திருப்பது காங்கிரஸ்காரர்களே நம்ப முடியாத தோல்வி. மாபெரும் அதிருப்தி மக்களிடையே நிலவாத வரை இப்படி ஓர் அமைதிப் புரட்சி சாத்தியமில்லை. இதைக் கணிக்க பாஜக தவறிவிட்டது.

6. நகர்ப்புறத்திலும் பாஜக தோல்வியுற வர்த்தகர்களின் அதிருப்தி மிக முக்கியமான காரணம். இதுவரை முறையான கணக்கின்றி வியாபாரம் செய்துவந்தவர்கள் வர்த்தகர்கள். அவர்களே பாஜகவின் ஆதாரவாளர்களாகவும் இருந்தார்கள். மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் உடனுக்குடன் பாதிக்கப்பட்டோர் அவர்களே. எனவே அவர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டனர். தலைநகர் ராய்ப்பூரில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் 6 தொகுதிகளை வென்றிருப்பதில் இருந்து இந்தப் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது.

7. மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை. ஆதேசமயம், பாஜகவிடம் அதிகமாக எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு முழுமையாகப் பூர்த்தி ஆகாதபோது, வேறு வழியின்றித்தான் காங்கிரஸ் கட்சியை அவர்கள் ஆதரித்துள்ளனர். இதற்கு மோடி மீதான அளவுகடந்த எதிர்பார்ப்பும் காரணமாக இருக்கலாம்.

8. ராஜஸ்தானுக்கும் ம.பி.க்கும் கொடுத்த கவனத்தை சத்தீஸ்கருக்கு பாஜக மத்தியத் தலைமை கொடுக்கவில்லை என்பதும் உண்மை. இல்லாவிட்டால், இன்னும் 10 தொகுகளிலேனும் பாஜக வென்றிருக்க வாய்ப்புள்ளது.

-மக்கள் திரளின் மனப்பாங்கை ஆராய்வதென்பது வானத்து விண்மீன்களை எண்ணுவது போன்றது. அதேசமயம், மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால், அவர்களின் அபிப்பிராய பேதங்கள் உடனுக்குடன் கட்சிகளுக்குத் தெரிய வரும். பாஜகவின் மக்களுடனான தொடர்பு வலையில் எங்கோ பிசகு இருப்பதைத் தான் சத்தீஸ்கர் முடிவுகள் காட்டுகின்றன.

One Response to “சத்தீஸ்கரில் படுதோல்வி ஏன்?”

  1. chidambaram ulaganathan 18/12/2018 at 10:00 PM #

    I fully agree with you

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: