முதுமையிலும் தளரா செயல்வீரர்

14 Feb

திரு. ஜி.வீரப்பிரகாசம்

(1937- 2019 பிப். 14)

குடும்ப நண்பரும், பொறியாளருமான திரு.வீர.ராஜமாணிக்கத்தின் தந்தையார், திரு. ஜி.வீரப்பிரகாசம் (82) அவர்கள் இன்று காலை (14.02.2019) இறைவனடி சேர்ந்தார். காந்திய நெறியாளரான அவர், தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் மாநிலத் தலைவராக 1994 முதல் 1997 வரை பதவி வகித்தவர்.

திருவாரூரில் 1937இல் பிறந்த திரு. வீரப்பிரகாசம், தொழில் நிமித்தமாக 1970-இல் திருப்பூருக்கு வந்தவர். தமிழ்நாடு சர்வோதய சங்கத்தில் 1963-இல் இணைந்த அவர், அதில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார். அதன் மாநிலத் தலைவராக 1994இல் பொறுப்பேற்ற அவர் 1997 வரை அப்பொறுப்பில் இருந்தார்.

தனது பணிக் காலத்தில், சர்வோதய சங்கத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் பல முக்கிய மாற்றங்களை அவர் செய்தார். குறிப்பாக, சர்வோதய சங்கத்தில் பட்டு விற்பனைப் பிரிவை அவர்தான் முதன்முதலில் படியூரில் அறிமுகப்படுத்தினார். பிறகு பட்டு விற்பனைப் பிரிவு அனைத்துக் கிளைகளிலும் விஸ்தரிக்கப்பட்டது. மரச்சாமான்கள் விற்பனைப் பிரிவையும் அவர் துவக்கினார்.

திருப்பூர், வித்யாலயம் பகுதியில் உள்ள காந்தி வித்யாலயம் பள்ளி அவரது முயற்சியால் துவக்கப்பட்டதாகும். அதேபோல, சித்த மருந்துகள் விற்பனைப் பிரிவு சர்வோதய சங்கத்தில் துவங்கவும் காரணமாக இருந்தார். மகாத்மா காந்தியின் கடிதங்கள் உள்ளிட்ட அவரது அனைத்து எழுத்துகளையும் தொகுக்கும் குழுவிலும் அவர் பணிபுரிந்துள்ளார்.

சர்வோதய சங்கம் மூலமாக காந்தி விழா, பாரதி விழா ஆகிய விழாக்களை ஆண்டுதோறும் நடத்தி வந்தார். எளிமையான வாழ்க்கையே காந்தியத்தின் இலக்கணம் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தார்.

பூதான இயக்கத்தை நடத்திய ஆச்சார்ய வினோபா பாவேயின் நூற்றாண்டை 1995இல் மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட அவர் ஏற்பாடு செய்தார். அப்போது தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, பூமிதானம் கொடுத்த பெரியோரை நேரில் சந்தித்து கௌரவித்தார்.

பணி ஓய்வுக்குப் பின், ஆன்மிகப் பணிகளில் அவர் ஈடுபட்டார். சைவநெறியில் நாட்டம் கொண்ட அவர் சிவதீட்சை பெற்றவர். திருப்பூர் சிவன் கோயில் அன்னாரது குடும்பத்தினரின் தினசரி வழிபாட்டுத் தலம். அவரது மனைவி திருமதி பெண்ணரசியும் பக்தி நாட்டம் மிக்கவர். இவர்களது மகன் ராஜமாணிக்கம், மகள்கள் ஜானகி, சண்முகப்பிரியா. அனைவருமே தேசியம், தெய்வீகத்தில் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதுடன், உண்மையான ஹிந்துக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணமாக விளங்குகின்றனர்.

2011இல் காந்தியவாதி திரு. அண்ணா ஹஸாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின்போதுதான், திரு. ராஜமாணிக்கமும், அவரது தந்தை திரு. வீரப்பிரகாசம் அவர்களும் எனக்கு பழக்கமானார்கள். ஹஸாரே இயக்கத்தில் நாங்கள் இணைந்து ஈடுபட்டோம். அப்போது ஒத்த சிந்தனையுடைய நண்பர்கள் ஒருங்கிணைந்து திருப்பூரில் பெயரில்லாத அமைப்பாக உருவானோம். அதன்மூலம், ‘திருப்பூர் சுதந்திர தின விழா கொண்டாட்டக் குழு’ என்ற பெயரில் 2012இல் சுதந்திர தின விழாவை ஒருநாள் திருவிழாவாக நடத்தினோம். அதில் தினமணி ஆசிரியர் திரு.கி.வைத்தியநாதன் அவர்கள் பங்கேற்று நிறைவுரையாற்றினார். இந்த விழாவின் வெற்றியில் திரு. வீரப்பிரகாசம் அவர்களுக்கு பெரும் பங்குண்டு. அவர் மட்டுமே சுமார் 400 பேரை நேரில் சந்தித்து விழா அழைப்பிதழைக் கொடுத்தார். அந்த ஆண்டு சுதந்திரத் திருநாள் முழுவதும் திருப்பூர் டவுன்ஹாலில் தேசிய முழக்கம் கேட்டது.

அந்த விழாவின் வெற்றியால் உந்தப்பட்டு 2012-இல் அறம் அறக்கட்டளையை நண்பர்கள் இணைந்து நிறுவினோம். அதன்மூலம் இன்று பல சேவைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அறம் அறக்கட்டளையின் எழுத்தறிவித்தல் விழா, காந்தி ஜெயந்தி விழா, சுதந்திர தின விழாக்களில் முதல் வருகையாளராக அவர் இருந்தார். திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் நடைபெறும் (இதுவரை 7 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது) எழுத்தறிவித்தல் விழாக்களில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு அவர்தான் சிலேட், பல்பம், புத்தகங்களைக் கொடுப்பார். இந்த ஆண்டுதான் உடல்நலமின்மையால் எழுத்தறிவித்தல் விழாவுக்கு அவர் வரவில்லை.

அவரது வீட்டுக்கு உரிமையுடன் செல்லும் குடும்ப உறுப்பினராக நான் இருந்து வருகிறேன். எனது சகாவான அவரது மகன் ராஜமாணிக்கத்தைக் காண அடிக்கடி நான் செல்கையில் பலமுறை அவரிடம் உரையாடி இருக்கிறேன். அதிகம் பேச மாட்டார். தனது பழைய அனுபவங்களைச் சொல்லி அவர் என்றும் அறுத்ததில்லை. நிறைகுடம் தளும்புவதில்லை.

ஜெயமோகன் வாசகர் வட்ட நண்பர், பாஜக பிரமுகர், கட்டுமானப் பொறியாளர் எனப் பல பரிமாணங்களை உடைய நண்பர் வீர.ராஜமாணிக்கம் எப்படி இவ்வளவு தீவிரமாக இயங்க முடிகிறது என்று நான் வியந்ததுண்டு. அதற்கு அடிப்படைக் காரணம் அவரது குடும்ப வலிமையும், தந்தை வழிவந்த தேசபக்தியும் தான் காரணம் என்பது புரிகிறது. அவரிடம் பலமுறை நான் முரண்பட்டிருக்கிறேன்; உரிமையுடன் கோபப்பட்டிருக்கிறேன். ஆனால், எங்கள் நட்பு இன்றும் தொடர்வதற்கு அவரது குடும்பமே காரணம்.

காந்தியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அன்னாரது மறைவு, காலத்தின் கட்டாயத்தால் நேரிட்டதே. முதிய வயதிலும் செயல்வீரராகத் திகழ்ந்த முன்னுதாரண மனிதர் அவர். அவரை இழந்து வாடும் எனது நண்பரின் குடும்பத்தினருக்கு,  தோளோடு தோள் நின்று ஆறுதல் சொல்வதொன்றே இன்று என்னால் செய்யக் கூடியது.

அவரது ஆன்மா சிவலயப்படட்டும்!

ஓம் சாந்தி!

 

முகநூல் பதிவு (14.02.2019)

 

 

One Response to “முதுமையிலும் தளரா செயல்வீரர்”

Trackbacks/Pingbacks

  1. அஞ்சலி : வீரப்பிரகாசம் - 15/02/2019

    […] முதுமையிலும் தளரா செயல்வீரர் […]

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: