தனிக்காட்டு ராஜாங்கம் நீடிக்குமா?

24 Mar

(குஜராத்தில் பாஜகவின் நிலை குறித்த அலசல்)

இந்திய அரசியலில் குஜராத் மாநிலம் ஆரம்ப காலத்திலிருந்தே பிரதான இடம் வகித்து வந்துள்ளது. விடுதலைப் போராட்டக் காலத்தில் சியாம்ஜி கிருஷ்ண வர்மா, மகாத்மா காந்தி, வல்லபபாய் படேல் ஆகியோரின் தலைமையை நாடறியும். சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்திலும், காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தவர் மொரார்ஜி தேசாய்.

இன்றும் குஜராத் மாநிலம்தான் இந்திய அரசியலின் மையப் புள்ளி. அங்கு 4 முறை முதல்வராக இருந்த நரேந்திர மோடி இன்று நாட்டின் பிரதமர் ஆனதுடன், இந்திய அரசியலையே தன்னைச் சுற்றிச் சுழலக் கூடியதாக மாற்றி இருக்கிறார். மோடியின் எழுச்சிக்கு குஜராத் மாநிலம் அடித்தளம் அமைத்தது எனில் மிகையில்லை.

அந்த மாநிலத்தில் மோடி மேற்கொண்ட நலத் திட்டங்களும், சீர்திருத்தங்களும், பரிசோதனை முயற்சிகளும்தான் அவரை தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்தன. சென்ற மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக அதீத வாக்கு வித்தியாசத்துடன் வென்றது. அந்த வகையில் மோடி தலைமையிலான பாஜக இதுவரை காணாத வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை அறுவடை செய்ய வித்திட்டது குஜராத் மாநிலமே.

ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் தேசத்தை சோதனைக்குள்ளாக்கிய பல நடவடிக்கைகளையும், பயனளிக்கும் பல திட்டங்களையும் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இப்போது மீண்டும் தேர்தலில் மறுவாய்ப்பு கேட்கிறது பாஜக. இன்று மோடி குஜராத்தில் இல்லாதபோதும், இப்போதும் அவர்தான் அந்த மாநிலத்தில் கதாநாயகன். என்ன இருந்தாலும் மண்ணின் மைந்தன் என்ற பாசம் குஜராத்தியர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக வென்று வாகை சூடுமா? மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த பாஜக மீண்டும் பீடுநடை போடுமா?

வரும் ஏப்ரல் 23ம் தேதி மூன்றாம் கட்டமாக மக்களவைத் தேர்தல் குஜராத்தில் நடைபெறுகிறது. சுமார் 4.47 கோடி வாக்காளர்கள் தங்கள் தேர்வைத் தெரிவிக்கக் காத்திருக்கிறார்கள்.

குஜராத்தின் அரசியல் வரலாறு…

குஜராத் மாநிலம் மகாத்மா காந்தியின் மாநிலமாக இருந்தபோதும், ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளின் கோட்டையாகவும் இருந்து வந்திருக்கிறது. பம்பாய் மாகாணத்தில் அப்போது குஜராத் அங்கம் வகித்தது. அப்போதே இரண்டாவது தேர்தலில் மொத்தமுள்ள 66 தொகுதிகளில் (ஒட்டுமொத்த பம்பாய் மாகாணம்) காங்கிரஸ் கட்சியால் 38 இடங்களில் மட்டுமெ வெல்ல முடிந்தது. பாரதீய ஜன சங்கம் (பாஜகவின் முந்தைய வடிவம்), பிரஜா சோஷலிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சுயேச்சைகள் உள்ளிட்டோர் மீதமுள்ள இடங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தனிமாநிலம் கோரி நடந்த போராட்டத்தின் விளைவாக, 1960-இல் குஜராத் மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது. அதையடுத்து நடந்த 3வது மக்களவைத் தேர்தலில் (மொத்தம்: 22 தொகுதிகள்) காங்கிரஸ் கட்சி 6 இடங்களை எதிர்க்கட்சிகளிடம் இழந்தது. (காண்க: பெட்டிச் செய்தி-1). சுதந்திரா கட்சி அந்த இடங்களில் வென்றது.

அடுத்த 1967இல் நடந்த தேர்தலில் (மொத்தம்: 24 தொகுதிகள்) 13 இடங்களை சுதந்திரா கட்சியிடம் பறிகொடுத்தது. 1971இல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்ட நிலையில், இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் கட்சி குஜராத்தில் பழைய காங்கிரஸ் வசம் 11 தொகுதிகளை இழந்தது.

1977இல் குஜராத் மாநில மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 26 ஆனது. அந்தத் தேர்தலில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய ஜனதா கட்சி 16 தொகுதிகளைக் கைப்பற்றியது. எனினும் ஜனதா அரசின் வீழ்ச்சிக்குப் பிந்தைய 1980 தேர்தலில் இந்திரா காங்கிரஸ் 25 தொகுதிகளில் வென்று மீண்டது. காலப்போக்கில் இந்திரா காங்கிரஸ் கட்சியே முழுமையான காங்கிரஸ் கட்சியாகிவிட்டது. காமராஜர், நிஜலிங்கப்பா உள்ளிட்ட பெரும் தலைவர்கள் கோலோச்சிய பழைய (ஸ்தாபன) காங்கிரஸ் கரைந்து மறைந்தது. எனினும் அதில் இருந்த பலர் ஜனதாவாக இயங்கினர்.

இந்திரா காந்தி படுகொலையை அடுத்து 1984இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஜனதா படுதோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் ஜனதா ஓரிடத்திலும் புதிதாக உருவான பாஜக ஓரிடத்திலும் வென்றன. 24 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது அதுவே முதலும் கடைசியுமாக அமைந்தது. மாநிலத்தில் மாதவ்சிங் சோலங்கி முதல்வராக இருந்த காலம் (1990) வரை, காங்கிரஸ் வசமே சட்டசபையும் இருந்தது.

இடைக்காலத்தில் ஜனதாவின் அடுத்த அவதாரமான ஜனதாதளம் எழுச்சி பெற்றபோது, 1990இல் ஜனதாதளம் (70), பாஜக (67) கூட்டணி அமைச்சரவை குஜராத்தில் அமைந்தது. காங்கிரஸ் 33 இடங்களில் வென்றது. இதுவே பாஜகவின் வெற்றிப் பயணத்துக்கு அடிகோலிய நிகழ்வு. பாஜகவின் கேசுபாய் படேலும், ஜனதாதளத்தின் சிமன்பாய் படேலும் இணைந்து இந்த வெற்றியைச் சாத்தியமாக்கினர்.

ஆனால், குறுகிய காலத்தில் பாஜகவின் முதுகில் குத்தினார் சிமன்பாய் படேல். கூட்டணி முறிந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்தார் அவர். இந்த துரோகத்துக்கு எதிராக கேசுபாய் நடத்திய போராட்டமே  பாஜகவின் எழுச்சிக்கு அடிப்படையானது. சிமன்பாய் படேல் அரசு மீதான ஊழல் புகார்களும், காங்கிரஸின் செல்வாக்கு வீழ்ச்சியும் இணைந்து, 1995இல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமையக் காரணமாயின (பாஜக-121, காங்கிரஸ்- 45). கேசுபாய் படேல் முதல்வர் ஆனார்.

எனினும் பாஜகவில் நேரிட்ட உள்கட்சிப் பூசலால் பாஜக அட்சி கவிழ்க்கப்பட்டது. சங்கர் சிங் வகேலா துவங்கிய ராஷ்ட்ரீய ஜனதா கட்சிக்கு பின்புலத்தில் இருந்து கைகொடுத்த காங்கிரஸ், பாஜக அரசை வீழ்த்தியது. இடைக்காலத்தில் சுரேஷ் மேத்தா, திலீப் பாரிக் ஆகிய பாஜக முதல்வர்களையும் குஜராத் கண்டது.

மோடியின் மாநில அரசியல்…

1998இல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 117 தொகுதிகளில் வென்றது. (காங்கிரஸ் -53). கேசுபாய் படேல் மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால் உள்கட்சிக் குழப்பங்கள் தொடர்ந்தன. புன்ச் நிலநடுக்கத்தால் நேரிட்ட பேரழிவைத் தொடர்ந்த மீட்புப் பணிகளில் கேசுபாய் சிறந்த முறையில் செயல்படவில்லை என்பதே அதிருப்தியாளர்களின் புகார். அந்தச் சிக்கலான நேரத்தில் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் குஜராத் அனுப்பி வைக்கப்பட்டார் நரேந்திர மோடி. அப்போது அவர் தில்லியில் தேசியச் செயலாளராக இருந்தார்.

1998இல் குஜராத் வந்த மோடிக்கு அந்த மாநிலம் சொந்த மாநிலம் மட்டுமல்ல, மாவட்ட வாரியாக பயணித்து களப் பணி புரிந்த சொந்த அனுபவமும் மிகுதி. அது அவருக்குக் கைகொடுத்தது. அதிருப்தியாளர்களை சரிக்கட்டினார்; அனைத்து கோஷ்டிகளையும் ஒருங்கிணைத்தார். அவர் முதல்வரான பிறகு நடந்த கதைகளை அனைவரும் அறிவர்.

இதனிடையே, கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டி எரிக்கப்பட்டதை அடுத்து வெடித்த மதக்கலவரம் மோடி அரசுக்கு கரி பூசுவதாக அமைந்தது. கலவரக்காரர்களை முதல்வரே ஊக்குவித்தார் என்பது குற்றச்சாட்டு. பிரதமர் வாஜ்பாயே முதல்வர் மோடியை ராஜதர்மத்தைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். ஆயினும் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானியின் ஆதரவால் அவரது பதவி தப்பிப் பிழைத்தது. எனினும், 2002-இல் தனது அரசைக் கலைத்து புதிய தேர்தலைச் சந்தித்தார் மோடி. 122 தொகுதிகளில் வென்று மீண்டும் முதல்வர் ஆனார் மோடி. 2007இல் நடந்த தேர்தலிலும் (117), 2012இல் நடந்த தேர்தலிலும் (115) அவரே வென்று முதல்வராகத் தொடர்ந்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் நர்மதை அணை கட்டுமானத்தை கடும் எதிர்ப்புகளை மீறி நடைமுறைப்படுத்தியதன் வாயிலாக வறண்ட வட குஜராத் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டுவரச் செய்தார். இலவசங்கள் அளிக்கும் கவர்ச்சி அரசியலை நாடாமல் உள்கட்டமைப்பு மேம்பாடு, சூரிய மின் திட்டங்கள், ஊழலற்ற நிர்வாகம், தொழில் துறை வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தியதால் குஜராத் மாநிலம் அவரது தலைமையில் முன்னேறியது. குஜராத்தை ஹிந்துத்துவ அரசியலின் சோதனைச்சாலை ஆக்குகிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் மீது தொடர்ந்து புகார் கூறின. ஆனால், மக்கள் அவரையே தொடர்ந்து தேர்வு செய்தனர்.

இதனிடையே, முன்னால் முதல்வர் கேசுபாயும், சங்கர் சிங் வகேலாவும் மோடி அரசுக்கு எதிராக பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியுற்றனர். கேசுபாய் குஜராத் பரிவர்த்தன் கட்சியைத் துவங்கி தோல்வியுற்றார். அவர் இறுதியில் பாஜகவில் மீண்டும் ஐக்கியமானார். வகேலா காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்து, 2017இல் அதிலிருந்தும் விலகினார். பிறகு அவர் ஜன விகல்ப் மோர்ச்சா துவங்கி, ஓர் ஆட்டம் ஆடி அடங்கி இருக்கிறார்.

1989 முதல் 2009 வரை குஜராத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக – காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி மாறுபாடே மத்தியில் ஆளும் அரசை சுட்டிக்காட்டுவதாகவும், குஜராத் மாநில அரசியலின் திசையைக் காட்டுவதாகவும்  அமைந்திருந்தது. பாஜக-12, ஜனதாதளம்-11, காங்கிரஸ்-3 (1989), பாஜக-20, காங்கிரஸ்-6 (1991), பாஜக-16 , காங்கிரஸ்- 10 (1996), பாஜக-19, காங்கிரஸ்-7 (1998), பாஜக-20, காங்கிரஸ்-6 (1999), பாஜக-14, காங்கிரஸ்-12 (2004), பாஜக-15, காங்கிரஸ்-11 (2009), பாஜக- 26, காங்கிரஸ்-0 (2014). அதாவது, தேசிய அரசியலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்ற காலங்களிலும்கூட பாஜக குஜராத்தில் படுதோல்வி அடையவில்லை.

மோடியின் தேசியப் பயணம்…

இங்கிருந்து 2014இல் தேசிய அரசியலுக்கு மோடி சென்றபோது குஜராத் மாநிலம் அவரது தலைமையை இழந்தது. அப்போது ஆனந்திபென் படேலை முதல்வர் ஆக்கிச் சென்றார் மோடி. பிறகு  பிரதமரும் ஆனார். அதேசமயம், குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக சவால்கள் தொடர்ந்து எழுந்தன. குறிப்பாக, உயர் வகுப்பினரான படேல் ஜாதியினர் இதர பிற்பட்ட வகுப்பில் தங்களைச் சேர்க்குமாறு கோரி ஹார்த்திக் படேல் என்னும் படேல் இன இளைஞர் தலைமை தாங்கி நடத்திய பதிதார்களின் போராட்டம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியான படேல் ஜாதியினரை கட்சியிடமிருந்து பிரித்தது. உனாவ் என்னுமிடத்தில் தலித் குடும்பம் தாக்கப்பட்டதை அடுத்து ஹரிஜன மக்களின் போராட்டத்தை ஜிக்னேஷ் மேவானி என்ற இளைஞர் முன்னெடுத்தார். அவரை காங்கிரஸ் கட்சி தன்னுடன் சேர்த்துக் கொண்டது. பாஜகவில் மீண்டும் கோஷ்டிப்பூசல் தலையெடுத்தது.

இதன் விளைவாக 2017 டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிவிகிதம் சரிந்தது. 99 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டாலும், காங்கிரஸிடம் பெருவாரியான தொகுதிகளை பாஜக இழந்தது. அந்தத் தேர்தலில் 81 தொகுதிகளில் வென்று மீண்டு வந்தது காங்கிரஸ். இதற்கு ராகுலின் பிரசாரமும், ஜிக்னேஷ் மேவானி, ஹார்த்திக் படேல், சோட்டுபாய் வாஸவா போன்ற பாஜக எதிர்ப்பாளர்களின் கூட்டுறவும் காரணமாகின. ஒருவேளை வகேலா தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கவும் வாய்ப்புகள் இருந்தன.

இப்போதைக்கு பாஜக குஜராத்தில் ஆட்சியில் இருந்தாலும், மோடி முதல்வராக இருந்தபோது பெற்றிருந்த செல்வாக்கை பெருமளவு இழந்துவிட்டது என்பதே உண்மை. முதல்வர் விஜய் ரூபானியும், துணை முதல்வர் நிதின் படேலும் பாஜகவின் செல்வாக்கைத் தக்கவைக்கப் போராடுகிறார்கள். இதனிடையே, தங்கள் மாநிலத்தைச் சார்ந்த பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் மீதான மதிப்பீடுகளும் அம்மாநில மக்களை யோசிக்க வைத்திருக்கின்றன.

இதுவே இன்றைய கள நிலவரம். 2014இல் குஜராத்தில் நிலவிய மாபெரும் ஆதரவுப் பெருக்கு இன்று பாஜகவுக்கு இல்லை என்பது அக்கட்சியினரே உணர்ந்ததுதான். இருப்பினும் மோடிக்கு ஆதரவான நிலைப்பாடு குஜராத்தில் இன்னமும் மங்கிவிடவில்லை என்பதும் நிதர்சனம். என்ன இருந்தாலும் குஜராத் மாநிலத்தின் கௌரவச் சின்னமாகவே நரேந்திர மோடி கருதப்படுகிறார். அதனால்தான் தோல்வியின் விளிம்பில் இருந்த பாஜகவை 2017இல் மீண்டும் ஆட்சியில் அமர்த்த மோடியால் இயன்றது. அவரது சூறாவளிப் பிரசாரம் பேரவைத் தேர்தலின் முடிவையே மாற்றியது.

தவிர, பாஜகவின் தேசியத் தலைவராக உள்ள அமித் ஷாவும் குஜராத்தியர். தேர்தல் வியூகம் வகுப்பதிலும், அரசியல் ராஜதந்திரத்திலும் நிபுணர் என்று பெயர் பெற்றுள்ள அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இணைந்த ஜோடி, தேசிய வரைபடத்தை சில ஆண்டுகளில் காவிமயமாக மாற்றிக் காட்டியது. அண்மைக்காலத் தேர்தல்களில் பெற்ற இழப்புகளால்தான் பாஜக தற்போது தன்னிலைக்கு வந்திருக்கிறது. இவ்விருவர் மீதான அபிமானம் குஜராத்தில் தொடர்கிறது என்பதுதான் கள யதார்த்தம், இந்த அபிமானம் வாக்குகளாக மாறுமா? சென்ற தேர்தலில் பெற்ற நூறு சதவிகித வெற்றியை இம்முறையும் பாஜகவால் அறுவடை செய்ய முடியுமா? இவையே இப்போதைய கேள்விகள்.

எதிர்த்தரப்பில் அகமது படேல் என்ற ராஜதந்திரியின் தலைமையில் காங்கிரஸ் களமாடுகிறது. ‘மிஸன்-50%’ என்ற இலக்குடன், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் அதீத கவனம் கொடுத்து காங்கிரஸ் களப்பணி ஆற்றுகிறது. பதிதார் போராட்ட நாயகன் ஹார்த்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி அண்மையில் ஆமதபாத்தில் நடைபெற்றதற்குக் காரணம், குஜராத்தை மையப்படுத்திய அதன் அரசியல் பார்வையே. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்று காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது. ஊரகப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்குள்ள செல்வாக்கை விரிவுபடுத்துவதன் மூலமாக இழந்த தொகுதிகளை மீட்கலாம் என்பதே காங்கிரஸ் கட்சியின் செயல் திட்டம்.

2015இல் நடந்த மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றி அக்கட்சிக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளிலும், 55 நகராட்சிகளில் 41இலும் பாஜக வென்றபோதும் (காங்கிரஸ்-12), மாவட்ட ஊராட்சிகள், ஒன்றிய ஊராட்சிகளில் பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 31 மாவட்ட ஊராட்சிகளில் 23ஐக் கைப்பற்றியது காங்கிரஸ். முந்தைய தேர்தலில் 22 மாவட்ட ஊராட்சிகள் பாஜக வசம் இருந்தன. அதேபோல ஒன்றிய ஊராட்சிகளில் 230 இடங்களில் 151 இடங்களை (பாஜக-77) வென்றது காங்கிரஸ்.

அதையடுத்து நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டபோதும், பாஜகவின் செல்வாக்கு முழுமையாக இல்லை என்பதே அந்தத் தேர்தல் முடிவுகள் சொன்ன பாடம்.

பலமும் பலவீனமும்…

குஜராத் மாநில பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதே பாஜகவின் மிகப் பெரிய பலம். அதேபோல, வாக்குச்சாவடி வரை கட்சியின் தொண்டர்படை இருப்பது பாஜகவுக்கு கூடுதல் பலம். மாறாக சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு பலம். படேல் ஜாதியினரின் ஆதரவு முழுமையாக கிடைக்காவிட்டாலும், அதில் பெரும்பகுதி காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க வாய்ப்பிருப்பதும் அக்கட்சிக்கு கூடுதல் பலம்.

சென்ற சட்டசபைத் தேர்தலில்,பாஜக 49.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 41.4 சதவிகித வாக்க்குகளைப் பெற்றது.  இரு கட்சிகளிடையிலான வேறுபாடு 8.8 சதவிகிதம். இந்த வேறுபாட்டைக் குறைக்க முடிந்தால் காங்கிரஸ் நினைத்தது நடந்தேறும். அது இயலுமா என்பதே கேள்வி.

குஜராத் மாநில மக்கள் தொகையில் கோலி, தாக்குர் உள்ளிட்ட இதர பிற்பட்ட சமூகத்தினர் 40 சதவிகிதம் உள்ளனர். பழங்குடியினர் 15.5 சதவிகிதமும், தலித் மக்கள் 7 சதவிகிதமும் உள்ளனர். முற்பட்ட வகுப்பினர் 27 சதவிகிதம் உள்ளனர். இவர்களில் படேல் வகுப்பினர் மட்டும் 15 சதவிகிதம் உள்ளனர். முஸ்லிம்கள் 9.7 சதவிகிதம் உள்ளனர். இந்த சமூகக் கணக்கீடுகள் எப்படி கூட்டணி சேரும் என்பதைப் பொருத்தே தேர்தலின் முடிவுகள் அமையும்.

இப்போதைக்கு படேல்கள் தங்களிடமிருந்து விலகுவதை அடுத்து இதர பிற்பட்ட ஜாதியினரை அரவணைப்பதில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. ஜெயின் சமூகத்தைச் சாரந்த விஜய் ரூபானியை முதல்வர் ஆக்கியதே அதன் அடையாளம்தான். தவிர, பழங்குடியினப் பகுதிகளிலும் பாஜகவின் செல்வாக்கு குறையவில்லை. நகர்ப்புறங்களில் பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து பெருகியே வருகிறது.

அதேசமயம், கிராமங்கள் மிகுந்த ஊரகப் பகுதிகளில் அதிகமான சட்டப்பேரவை உறுப்பினர்களை காங்கிரஸ் கொண்டிருக்கிறது. கிராம வாக்காளர்களே காங்கிரஸ் கட்சியின் இலக்கு. இதை பாஜக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொருத்தே 2014இல் பெற்ற வெற்றியை மீண்டும் பாஜக பெற முடியுமா என்று சொல்ல முடியும்.

ஆனால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது பிரசாரத்தில் தொடர்ந்து தவறு செய்து வருகிறது. பாகிஸ்தானின் பாலாக்கோட் பகுதிக்குள் ஊடுருவி இந்திய விமானப்படை நடத்திய துல்லியத் தாக்க்குதல் காரணமாக எல்லைப்புற மாநிலமான குஜராத்தில் தேசியப் பெருமிதம் உருவாகி உள்ளது. அதை கீழ்த்தரமாக விமர்சிப்பதன் மூலம் வாக்காளர்களை தனக்கு எதிராக காங்கிரஸ் கட்சியே மாற்றிக் கொள்கிறது என்பது முக்கியமான புகார்.

அதேபோல, தங்கள் மாநிலத்தைச் சார்ந்த மண்ணின் மைந்தரான பிரதமர் மோடி மீது அநாவசியமாக காங்கிரஸ் தலைவர்கள் கக்கும் விஷமப் பிரசாரம் அக்கட்சிக்கே எதிராக மாறக் கூடும்.

இவை அனைத்தையும் விட, மோடியின் சூறாவளிப் பிரசாரம் இனிமேல் தான் துவங்க உள்ளது. தனது அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பயன்பாடுகள், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம், உள்கட்டமைப்புப் பணிகள், ஊழலற்ற நிர்வாகம் உள்ளிட்டவற்றை அவர் எவ்வாறு பிரசாரம் செய்யப் போகிறார் என்பதும் முக்கியமானது. எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களை தனக்கு சாதகமாக்கிக் கொள்வதில் அவர் கைதேர்ந்தவரும்கூட.

ஆக மொத்தத்தில் நரேந்திர மோடி- அமித் ஷா- விஜய் ரூபானி, நிதின் படேல்  ஆகியோர் அடங்கிய ஆளும் கட்சிப் படை ஒருபுறம். ராகுல் காந்தி, அகமது படேல், ஹார்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் அடங்கிய எதிர்த்தரப்பினர் மறுபுறம்.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 59.1 %. காங்கிரஸ் பெற்ற வாக்ககு விகிதம் 32.9 %. கிட்டத்தட்ட, எட்ட இயலாத வித்தியாசம். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த விகிதம் மாறியது (49.1 %- 41.4 %). எனினும் மக்களவைத் தேர்தலுக்கு ஒருவகையிலும் பேரவைத் தேர்தலுக்கு ஒருவகையிலும் மக்கள் வாக்களிப்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

குஜராத்தின் கௌரவமா- மதச்சார்பின்மையா? என்பதே குஜராத் மாநிலத்தில் தேர்தல் களத்தின் மையக் கேள்வியாக இருக்கும். குஜராத்தியர்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டார்கள்; நம்பினால் அவ்வளவு சீக்கிரம் கைவிடவும் மாட்டார்கள் என்பதே வரலாறு கூறும் உண்மை.

***

பெட்டிச் செய்தி-1

மக்களவைத் தேர்தல் முடிவுகள்- இதுவரை:

தேர்தல் ஆண்டு /  வென்ற கட்சிகள்

(மொத்த இடங்கள்: 26)

1962 / சுதந்திரா-4 / காங்கிரஸ்-16 (மொத்த இடங்கள்: 22)

1967 / சுதந்திரா-12 / காங்கிரஸ்-11 (மொத்த இடங்கள்: 24)

1971 / சுதந்திரா-2, ஸ்தாபன காங்கிரஸ்-11 / காங்கிரஸ்-11 (மொத்த இடங்கள்: 24)

1977 / ஜனதா- 16 / காங்கிரஸ்-10 (மொத்த இடங்கள்: 26)

1980 / ஜனதா- 1, / காங்கிரஸ்- 25

1984 / ஜனதா-1 பாஜக-1 / காங்கிரஸ்- 24

1991/ பாஜக-20 / காங்கிரஸ்- 6

1996 / பாஜக-16 / காங்கிரஸ்-10

1998 / பாஜக-19 / காங்கிரஸ்- 7

1999 / பாஜக-20 / காங்கிரஸ்-6

2004 / பாஜக-14 / காங்கிரஸ்-12

2009 / பாஜக- 15 / காங்கிரஸ்-11

2014 பாஜக-26 / காங்கிரஸ்-0

***

பெட்டிச் செய்தி- 2

குஜராத் சட்டப் பேரவை தேர்தல்கள்

(மொத்த இடங்கள்: 182)

தேர்தல் ஆண்டு / வென்ற கட்சிகள்

1985 / பாஜக-9, ஜனதா-21 / காங்கிரஸ்- 141

1990 / ஜனதா தளம்-70, பாஜக-67 / காங்கிரஸ்- 33

1995 / பாஜக- 121 / காங்கிரஸ்- 45

1998 / பாஜக- 117 / காங்கிரஸ்- 53

2002 / பாஜக- 127 / காங்கிரஸ்- 51

2007 / பாஜக- 117 / காங்கிரஸ்- 59

2012 / பாஜக-115 / காங்கிரஸ்-61

2017 / பாஜக-99 / 81

***

நட்சத்திரத் தொகுதிகள்

இந்த முறை குஜராத்தின் நட்சத்திர வேட்பாளரான லால் கிருஷ்ண அத்வானி தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவரான அமித் ஷாவே களம் காண்பது பாஜகவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

அதேபோல, சென்ற முறை மோடி போட்டியிட்டு வென்றபின் பதவி விலகிய வதோதரா தொகுதியும் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது. வாராணசியை பிரதமர் மோடி தனது பிரதானத் தொகுதியாக மாற்றிக் கொண்டபோதும், தனது இரண்டாவது தொகுதியாகவே வதோதராவைக் கருதி வந்திருக்கிறார். பாஜக அரசு வதோதராவுக்கு அளித்து வந்துள்ள முக்கியத்துவம், அந்தத் தொகுதியின் வளர்ச்சியில் வெளிப்படையாகவே புலப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஹார்திக் படேல் போட்டியிட வாய்ப்புள்ள அம்ரேலி தொகுதியும் இம்முறை தேசிய அளவில் கவனம் ஈர்க்க வாய்ப்புள்ளது.

 

-தினமணி- தேர்தல் உலா (24.03.2019)

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: