வடகிழக்கில் வெற்றி யாருக்கு?

28 Mar

மனையடி சாஸ்திரத்தில் வடகிழக்கு திசை ஈசானியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் ஈசானியமாக 8 வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன. அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய 7 மாநிலங்கள் ‘வடகிழக்கு சகோதரிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இத்துடன், 1975இல் இந்தியாவுடன் இணைந்த சிறு நாடான சிக்கிம் எட்டாவது மாநிலமாக உள்ளது.

இப்பகுதியில் நிலவும் விசேஷமான மக்கள் பரவலும், இனக்குழுக்களிடையிலான வேற்றுமையும், பாரதத்தின் பிற பகுதி மக்களால் கவனிக்கப்படுவதில்லை. இப்பகுதியின் மொத்த மக்கள் தொகை 4.6 கோடி (2011 நிலவரம்). இதில் அருணாச்சல பிரதேசமும், அஸ்ஸாமும் மட்டுமே பெரிய மாநிலங்கள். பழங்குடி மக்களின் பிரதேசமாக வர்ணிக்கப்படும் வடகிழக்கு இந்தியாவில் 220 தனி இனக்குழுக்கள் உள்ளன. எனவே அவற்றிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. எனவே, சிறு மாநிலங்கள் அங்கு உருவாக்கப்பட்டன.

இதிலும் அருணாச்சல பிரதேசம் நிலப்பரப்பில் பெரிய மாநிலமாக இருந்தாலும் மக்கள் அடர்த்தி குறைவு. இங்கிருந்து 2 எம்.பி.க்கள் மட்டுமே தெந்தெடுக்கப்படுகின்றனர். அஸ்ஸாம்- 14 எம்.பி.க்களைத் தேர்வு செய்கிறது. மணிப்பூர்-2, மேகாலயம்- 2, மிஸோரம்- 1, நாகாலாந்து-1, திரிபுரா-2, சிக்கிம்- 1 மாநிலங்களின் பிரதிநிதிகள் உள்பட வடகிழக்கு இந்தியா 25 எம்.பி.க்களைத் தேர்வு செய்கிறது.

பொதுவாகவே, வடகிழக்கு இந்திய மாநில மக்களுக்கு பாரதத்தின் ஏனைய பகுதிகளுடன் தொடர்பு குறைவாக உள்ளது. போக்குவரத்து வசதியின்மை, தகவல் தொடர்பில் சிரமம் ஆகியவை அப்பகுதியை துண்டித்து வைத்திருந்தன. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களாலும், நவீன வசதிகளாலும், வடகிழக்கு மாநிலங்களும் பிரதான நீரோட்டம் நோக்கி நகர்ந்து வந்துள்ளன.

மத்தியில் ஆளும் கட்சியின் தோழமைக் கட்சிகளாக இருப்பதையே வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகள் விரும்புவது வழக்கம். சிறு மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தமே அதற்குக் காரணம். எனவே, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் அக்கட்சியே வென்று வந்தது. திரிபுராவில் மட்டும் மார்க்சிஸ்ட் கட்சி வென்று வந்தது.

இந்நிலை அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மாறியது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் வடகிழக்கில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தன. அப்போது, கூண்டோடு காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறிய கெகாங் அபாங் மூலமாக, அருணாச்சல பிரதேசத்தில் 2003இல் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைத்தது.

2003இல் வடகிழக்கு மாநில மேம்பாட்டு அமைச்சகத்தை வாஜ்பாய் துவக்கினார். அதன்மூலமாக, அப்பகுதி மக்களின் பிரத்யேகச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டது. இதுவே பாஜகவை நோக்கி வடகிழக்கு மாநிலக் கட்சிகள் ஈர்க்கப்படவும் காரணமானது. கூடவே காங்கிரஸ் அதிருப்தியாளர்களும் பாஜகவில் சங்கமிக்கத் துவங்கினர்.

2013இல் வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணியை பாஜக உருவாக்கியது. அதில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி} என்டிபிபி, நாகா மக்கள் முன்னணி}என்பிஎஃப் (நாகாலாந்து), தேசிய மக்கள் கட்சி}என்பிபி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி}யுடிபி (மேகாலயம்), மணிப்பூர் மக்கள் கட்சி}எம்பிபி, மணிப்பூர் ஜனநாயக மக்கள் முன்னணி}எம்டிபிஎஃப் (மணிப்பூர்), மிசோ தேசிய முன்னணி (மிஸோரம்), அருணாச்சல் மக்கள் கட்சி (அருணாசல பிரதேசம்), அஸ்ஸாம் கண பரிஷத், மலைப்பகுதி மக்கள் ஜனநாயகக் கட்சி} ஹெச்எஸ்பிடிசி, போடோலாந்து மக்கள் முன்னணி (அஸ்ஸாம்), திரிபுரா பூர்வ குடிமக்கள் தேசியக் கட்சி}ஐபிஎஃப்டி (திரிபுரா) உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன.

ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட கட்சிகள்கூட பாஜகவின் முயற்சியால் ஒரே அணியில் இணைந்தனர். இந்த முன்னணி 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக உருவெடுத்தது. அந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 25இல் 10 இடங்களை வென்றது. காங்கிரஸ் 8 இடங்களையும், சிபிஎம்- 2, சிக்கிம் ஜனநாயக முன்னணி-1, ஏஐயூடிஎஃப்-3, சுயேச்சை-1 என பிறர் 7 இடங்களிலும் வென்றனர்.

2014இல் பிரதமராகப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தினார். அருணாச்சல் எம்.பி.யான கிரண் ரிஜிஜுவை உள்துறை இணை அமைச்சராக அவர் நியமித்தது பலரையும் வியக்கச் செய்தது. தவிர, வடகிழக்கு மாநிலங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அவர் அதீத கவனம் செலுத்தினார்.

வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணி 2016 மே மாதத்தில் வடகிழக்கு ஜனநாயக கூட்டணியாக விரிவாக்கம் கண்டது. சிக்கிம் ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் இதில் இணைந்தன. இதன் அமைப்பாளராக, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மா பொறுப்பேற்றார். காங்கிரஸ் இல்லாத வடகிழக்கு பாரதம் என்பதே இலக்கு என்று அவர் முழங்கினார். அஸ்ஸôமில் பாஜக ஆட்சி அமைய அவர் வகுத்த வியூகங்களே காரணம்.

அதன் 2014க்குப் பிறகு நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவும் அதன் தோழமைக் கட்சிகளும் வென்று வடகிழக்கு மாநில அரசியல் வரைபடத்தை மாற்றி அமைத்துள்ளன. சிக்கிமில் மட்டும் 1994 முதல் 25 ஆண்டுகளாக பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசு நீடிக்கிறது. இங்கு தற்போது மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 27 இல் நடைபெற உள்ளது.

அஸ்ஸாம் (மே 2016), மணிப்பூர் (மார்ச் 2017), மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா (மார்ச் 2018), மிஸோரம் (டிசம்பர் 2018) ஆகிய மாநிலங்களில் நடந்த பேரவைத் தேர்தல்களில் பாஜகவும், வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் வென்று ஆட்சி அமைத்தன.

2014இல் அருணாச்சலில் நடந்த தேர்தலில் 60இல் 42 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி உள்கட்சிப் பூசலால் ஆட்சியை இழந்தது. அங்கு நடந்த அரசியல் குழப்பங்களின் இறுதியில், பாஜகவுக்கு கூண்டோடு கட்சி மாறிய பெமா காண்டு தலைமையில் 2016இல் பாஜக அரசு அமைந்தது. இப்போது அங்கு பாஜக கூட்டணி (பாஜக-36, தேசிய மக்கள் கட்சி- 16) ஆள்கிறது. இங்கும் வரும் ஏப்ரல் 11இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

திரிபுராவில் 2018 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் 25 ஆண்டுகளாக அங்கு ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்தது. இவ்வாறாக, வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்குக் கொடி உயர்ந்துள்ளது. (காண்க: பெட்டிச் செய்த-3).

தற்போது, அருணாச்சல பிரதேசத்தில் பெமா காண்டு (பாஜக), அஸ்ஸாமில் சர்வானந்த சோனோவால் (பாஜக), மணிப்பூரில் பீரேன் சிங் (பாஜக), திரிபுராவில் பிப்லப் குமார் தேவ் (பாஜக) ஆகியோர் முதல்வராக உள்ளனர். மேகாலயத்தில் கொன்ராட் சங்மா (தேசிய மக்கள் கட்சி), நாகாலாந்தில் நெய்பியூ ரியோ (நாகா மக்கள் முன்னணி), மிஸோரத்தில் ஸோரம் தங்கா (மிசோ தேசிய முன்னணி) ஆகியோர் பாஜக கூட்டணி அரசுகளின் முதல்வர்களாக உள்ளனர்.

பாஜக கூட்டணிக்கு பிரதமர் மோடியின் தலைமையும், அவரது அரசு வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொண்ட நலத்திட்டங்களும் பலமாக அமைந்துள்ளன. அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் சாலை அமைத்தது, வடகிழக்கு மாநிலங்களை ரயில் சேவையில் இணைத்தது, புதிய விமான நிலையங்களை அமைத்தது என மோடி அரசு பல முனைப்பான திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

இருப்பினும், கூட்டணியில் இருந்தாலும் தனித்தனியே நட்புரீதியில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளால் பாஜகவின் வாய்ப்பு குறைகிறது. என்றபோதும், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம் மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத யார் வென்றாலும் அது பாஜகவுக்கு உறுதுணையாகவே இருக்கும்.

அதேபோல, திரிபுராவில் பூர்வ குடிமக்கள் கட்சியுடனும், அஸ்ஸாமில் அஸ்ஸாம் கண பரிஷத்துடனும் பாஜகவுக்கு இருந்துவந்த உரசல் சென்ற மாதம் தான் சரியானது. சிக்கிமில் சிக்கிம் கிராந்தி மோர்ச்சா கட்சியுடன் பாஜக செய்துள்ள உடன்பாடு பலன் தருமா என்பது தேர்தலில் தெரியவரும்.

பாஜக இவ்வாறு துடிப்பாகச் செயல்படும் நிலையில், ஒருகாலத்தில் இங்கு ஏகபோகமாக வென்று வந்த காங்கிரஸ் கட்சி நிலைகுலைந்து காட்சி தருகிறது. அஸ்ஸாமில் பாஜக கூட்டணியை வெல்ல முடியாது என்பதைப் புரிந்துகொண்ட காங்கிரஸ், அங்குள்ள ஏஐயூடிஎஃப் என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. மெüலானா பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான இந்தக் கட்சியால் அஸ்ஸாமில் மத வன்முறைகள் பெருகுவதாக புகார் உள்ளது.

இப்போதைக்கு மிஸோரம், நாகாலாந்து, மேகாலய மாநிலங்களிலுள்ள கிறிஸ்தவப் பெரும்பான்மை வாக்காளர்களையே காங்கிரஸ் நம்பியுள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற மிஸோரம் பேரவைத் தேர்தலில் கிறிஸ்தவர்களை வசீகரிக்க ராகுல் காந்தி பலவகைகளில் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிர்க்கட்சிதான் வென்றது.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதானால், 2019 மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக முன்னணி தயாராக இருக்கிறது. சென்ற தேர்தலில் வென்ற இடங்களைத் தக்கவைத்தாலே போதும் என்ற நிலையில் காங்கிரஸ் தத்தளிக்கிறது; அதன் தோழமைக்கட்சிகளும் வலுவாக இல்லை.

வீடு கட்டும்போது வடகிழக்குத் திசையான ஈசானிய மூலையில்தான் பூமிபூஜை செய்வார்கள். அதேபோல, இந்த மக்களவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப்போவது யார் என்பதை வடகிழக்கு மாநிலங்களில் கிடைக்கும் தேர்தல் முடிவுகளும் தீர்மானிக்கும்.

***

பெட்டிச் செய்தி-1:

குடியுரிமை திருத்த சட்டத்தின் தாக்கம் இருக்குமா?

வடகிழக்கு மாநிலங்களில் அமலிலுள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் (ஏஎஃப்எஸ்பிஏ} 1958) அங்கு தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை விலக்க மறுப்பதில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஒன்றுபோலவே செயல்படுகின்றன. இந்தச் சட்டத்தை ரத்து செய்தால், பல்வேறு இனக்குழுக்கள், பிரிவினைவாதக் குழுக்கள் ஆயுதமேந்தி கலகத்திலும் மோதல்களிலும் ஈடுபடலாம் என்பதே மத்திய அரசின் எச்சரிக்கை உணர்வுக்குக் காரணம்.

இதனை ரத்து செய்யுமாறு கோரியே இரோம் ஷர்மிளா மணிப்பூரில் 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதரப் போராட்டத்தை நடத்தினார். ஆயினும் மணிப்பூரில் பாஜக வென்றது. எனவே ஏஎஃப்எஸ்பிஏ சட்டம் அங்கு தேர்தல் விவகாரமாக இல்லை.

அதேசமயம், அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பாஜகவின் தோழமைக் கட்சிகளாக இருந்தபோதும், சில மாநிலப் பேரவைகளில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மக்களவைத் தேர்தலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

***

பெட்டிச் செய்தி-2:

2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்:

வ.எண் / மாநிலம் / மொத்தத் தொகுதிகள்/ பாஜக கூட்டணி / காங்கிரஸ் / பிற கட்சிகள்

1 / அருணாச்சல பிரதேசம் / 2 / பாஜக-1 / காங்கிரஸ்- 1/ }

2 / அஸ்ஸாம் / 14 / பாஜக- 7 / காங்கிரஸ்- 3 / ஏஐயூடிஎஃப்-3, சுயேச்சை-1

3 / மணிப்பூர் / 2 / பாஜக-0/ காங்கிரஸ்-2 / }

4 / மேகாலயம் / 2 / தேசிய மக்கள் கட்சி- 1 / காங்கிரஸ்- 1/ }

5 / மிஸோரம் / 1 / பாஜக- 0 /காங்கிரஸ்- 1 / –

6 / நாகாலாந்து / 1 /பாஜக- 0 / காங்கிரஸ்-1 / }

7 / சிக்கிம் / 1 / பாஜக-0 / காங்கிரஸ்-0 / சிக்கிம் ஜனநாயக முன்னணி-1

8 / திரிபுரா / 2 / பாஜக-0 / காங்கிரஸ்-0 / சிபிஎம்-2

மொத்தம் / 25 / பாஜக கூட்டணி-10 / காங்கிரஸ்- 8/ பிறர்- 7

***

பெட்டிச் செய்தி-3:

சட்டப்பேரவைகளில் நிலவரம்

1. அருணாச்சல பிரதேசம்
மொத்த இடங்கள்: 60

பாஜக அணி: 52
பாஜக- 36,
என்பிபி- 16

காங்கிரஸ்- 6
சுயேச்சை- 2

*
2. அஸ்ஸாம்
மொத்த இடங்கள்: 126

பாஜக அணி: 86
பாஜக-60
அசாம் கண பரிஷத்-14
போடோலாந்து மக்கள் முன்னணி} 12

காங்கிரஸ்- 26
ஏஐயூடிஎஃப்- 13
சுயேச்சை- 1

*
3. மணிப்பூர்
மொத்த இடங்கள்: 60

பாஜக அணி: 40
பாஜக- 31
என்பிஎஃப்-4
என்பிபி-4
லோக் ஜனசக்தி-1

காங்கிரஸ்- 19
சுயேச்சை- 1

*

4. மேகாலயம்
மொத்த இடங்கள்: 60

பாஜக அணி: 34
என்பிபி- 19
யுடிபி- 6
பாஜக- 2
ஹெச்எஸ்பிடிபி- 2
பிடிஎஃப்- 4
கேஹெச்என்ஏஎம்- 1

காங்கிரஸ்- 21
சுயேச்சை- 3
என்சிபி-1
காலி- 1

*
5. மிஸோரம்
மொத்த இடங்கள்: 40

பாஜக அணி: 35
மிசோ தேசிய முன்னணி- 26
ஜோராம் மக்கள் இயக்கம்- 8
பாஜக- 1

காங்கிரஸ்-5

*
6. நாகாலாந்து
மொத்த இடங்கள்: 60

பாஜக அணி: 34
என்டிபிபி-18
பாஜக- 12
ஐ.ஜ.தளம்- 1
என்பிபி- 2
சுயேச்சை- 1

என்பிஎஃப்-26

*
7. சிக்கிம்
மொத்த இடங்கள்: 32

திரிபுரா தேசிய முன்னணி-22

திரிபுரா கிராந்தி மோர்ச்சா-10

*

8. திரிபுரா
மொத்த இடங்கள்: 60

பாஜக அணி: 44
பாஜக- 36
ஐபிஎஃப்டி-8

சிபிஎம்- 16

 

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: