வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டணி அரசியல்

6 Apr

இந்தியாவில் இதுவரை 6 பிரதமர்கள் கூட்டணி அரசுகளை நடத்தி இருக்கிறார்கள். கூட்டணி அரசுகளில் அதிக காலம் நீடித்தது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  (2004-2014). மிகக் குறுகிய காலம் நீடித்த அரசு ,  தேவே கவுடா பிரதமராக இருந்து ஐக்கிய முன்னணி அரசு (324 நாள்கள்).

இந்தக் கூட்டணி அரசுகளின் கதை மிக சுவாரசியமானது. 1975இல் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சி துவங்கியது. அப்போது ஸ்தாபன காங்கிரஸ், லோக்தளம், பாரதீய ஜன சங்கம்,  பிரஜா சோஷலிஸ்டு, சம்யுக்த சோஷலிஸ்டு உள்ளிட்ட 11 கட்சிகள் ஒருங்கிணைந்து ஜனதா கட்சியாக உருவெடுத்தன.

1977 தேர்தலில் அந்தக் கட்சி 298 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். இதை கூட்டணி அரசாகக் கருத முடியாது. ஆயினும் அரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான முன்னோட்டமாக தேசாய் அரசு அமைந்தது. பிறகு ஜனதா பிளவுபட்டு, காங்கிரஸ் ஆதரவுடன்  சரண் சிங் பிரதமரானார்.

ஜனதா அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திரா காந்தி 1980இல் மீண்டும் பிரதமரானார். 1984இல் இந்திரா காந்தி படுகொலையை அடுத்து நடந்த தேர்தலில் காங்கிரஸ் 426 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ராஜீவ் காந்தி பிரதமரானார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர வேண்டிய தேவை அப்போது ஏற்பட்டது.

***

இது முன்னணிகள்- கூட்டணிகள் யுகம். வலிமையான அரசியல் கூட்டணி அமைக்காவிடில் தேர்தலில் முழுமையான வெற்றியை அறுவடை செய்ய இயலாது. எனவேதான் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கின்றன.

தேர்தல் களத்தில் வெல்வது மட்டுமல்ல, தனது பிரதான எதிரி வெல்லாமல் தடுப்பதும் ஒரு வியூகமே. அந்த அடிப்படையிலேயே தேர்தல் கூட்டணிகளும் தொகுதி உடன்பாடுகளும் செய்து கொள்ளப்படுகின்றன. வாக்குகள் சிதறாமல் தடுப்பதும், பலதரப்பட்ட மக்களின் வாக்குகளை ஒன்றுசேர்ப்பதும் கூட்டணி அரசியலின் இலக்குகள்.

தற்போது 17வது மக்களவைக்கான தேர்தல் களைகட்டிவிட்டது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும்தான் பிரதானப் போட்டி.

கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இடதுசாரிக் கூட்டணி சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கிறது. பிற மாநிலங்களில் அந்தந்தப் பிரதேச நிலவரத்துக்குத் தகுந்தாற்போல காங்கிரஸ் அல்லது மாநிலக் கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைப்பது வழக்கமாக இருக்கிறது.

இவற்றில் இரு பிரதானக் கூட்டணிகளே தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தப்போகின்றன. இத்தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக கூட்டணி நிர்வாகம் இருக்கப்போகிறது. அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே முதலிடத்தில் இருக்கிறது.

2014 தேர்தலில் 29 கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பாஜக, இம்முறை 24 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அவற்றில் அகாலிதளம், சிவசேனை, ஐக்கிய ஜனதாதளம், அதிமுக, அஸ்ஸôம் கண பரிஷத், பாரத் தர்ம ஜனசேனா ஆகியவை முக்கியமான கட்சிகள்.

சென்ற தேர்தலில் தே.ஜ.கூட்டணியில் இடம்பெற்ற கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்), இந்திய ஜனநாயகக் கட்சி, கொமுதேக, மதிமுக, ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ்,  ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி (ஆர்எல்எஸ்பி), ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (ஹெச்ஏஎம்), ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா,  சுவாபிமான் பக்ஷா ஆகிய 9 கட்சிகள் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அணிக்கு மாறியுள்ளன.

இந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறிய  தெலுங்குதேசம் கட்சி ஆரம்பத்தில் காங்கிரûஸ ஆதரித்தபோதும், ஆந்திர மாநிலத்தில் தனியாகவே போட்டியிடுகிறது. கோவாவில் பாஜக நடத்திய அதிரடி அரசியலால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி இம்முறை தனித்துப் போட்டியிடுகிறது.

அதேசமயம்,  அதிமுக, ஐக்கிய ஜனதாதளம், அஸ்ஸôம் கணபரிஷத், புதிய தமிழகம், தமாகா, பாரத் தர்ம ஜனசேனா உள்ளிட்ட 6 புதிய கட்சிகள் தே.ஜ.கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளன.

கூட்டணி அமைப்பதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சாமர்த்தியமாகச் செயல்பட்டிருக்கிறார். மகாராஷ்டிரத்தில் பாஜக மீது அதிருப்தியுடன் இருந்த சிவசேனை கட்சியை கூட்டணியில் தொடர்ந்து இருக்கச் செய்ததும், அஸ்ஸôமில் அஸ்ஸôம் கண பரிஷத்தை கூட்டணியில் தொடரச் செய்ததும் அவரது முக்கியமான களப்பணி.

அதேசமயம், பாஜகவுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தும் காங்கிரஸ் கட்சி, அதற்கேற்ற வகையில் கூட்டணி முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இது அக்கட்சியின் அதீதத் தன்னம்பிக்கையா,  பிற எதிர்க்கட்சிகளின் அலட்சியமா என்பது தெரியவில்லை.

தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகிவந்த 9 கட்சிகளுடனும், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி, அஸ்ஸôமில் ஏஐயூடிஎஃப், தமிழகத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தெலங்கானாவில் தெலங்கானா ஜன சமிதி, கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலுள்ள கட்சிகளின் எண்ணிக்கை தற்போது 32 ஆக உள்ளது. இவற்றில் பல சிறிய கட்சிகள்.

எனினும், பாஜகவுக்கு எதிரான கொள்கை கொண்ட சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்குதேசம்,  திரிணமூல் காங்கிரஸ்,  ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிகளை தனது அணிக்குள் கொண்டுவர காங்கிரஸ் கட்சியால் இயலவில்லை.  இதற்கு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதே காரணம்.

நாடு முழுவதும் பரவலான அரசியல் அமைப்பும் ஆதரவும் உள்ள கட்சியாக இன்றும் இருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே. அந்த நிலையை பாஜக அடைந்ததால்தான் ஆட்சியைப் பிடிக்க இயன்றது. இந்த நிலையை பாஜக அடையக் காரணமானது அதன் கூட்டணி அரசியல் ராஜதந்திரம்தான் என்று சொன்னால் மிகையில்லை.

வாஜ்பாய்} அத்வானி காலம் துவங்கி, மோடி} அமித்ஷா காலம் வரை பல்வேறு மாநிலங்களில் வெற்றிகரமான கூட்டணிகளை உருவாக்கி அதையே தங்கள் கட்சியின் பலமாக வளர்த்தெடுப்பது தேர்தல் வியூகமாக இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் இன்னமும் காங்கிரஸ் பின்தங்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக செயல்படும் வேகத்தைக் கண்டு காங்கிரஸ் பாடம் படிக்க வேண்டும்.

2014 மக்களவைத் தேர்தலின்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 29 கட்சிகள் கொண்டதாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு பாஜக அதை சாதித்தது. 1998 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான அரசு இருந்தபோது பாஜக பெற்ற கூட்டணி அரசியல் அனுபவங்கள் அதற்கு வெகுவாக உதவின.

மாறாக, 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தனது எதேச்சதிகாரத் தன்மையால் தோழமைக் கட்சிகளை பெருமளவில் இழந்தது. 2014  தேர்தலின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் 10 கட்சிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. அவற்றிலும் தேசியவாத காங்கிரஸ்,  ராஷ்ட்ரீய ஜனதாதளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை மட்டுமே குறிப்பிடத் தக்கவை.

காங்கிரஸ் அரசு மீதான ஊழல் புகார்களும், அதற்கு வலுவான கூட்டணி அமையாததும் பாஜகவுக்கு சாதகமாகின. மோடியின் சூறாவளிப் பிரசாரமும், பாஜகவின் பலம் வாய்ந்த கட்டமைப்பும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையும் அக்கூட்டணிக்கு 336 இடங்களில் வெற்றியைத் தந்தன.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வி,  யாரும் எதிர்பாராதது. மோடி அலையில் வீழ்ந்த காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டுமே வென்று,  பிரதான எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தையும் இழந்தது. அதன் கூட்டணிக் கட்சிகள் 16 இடங்களில் வென்றன. அதன்மூலமாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பலம் 80 ஆக இருந்தது.

கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட பாதிப்பை முன்னிறுத்தியும், மோடி நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியும் பிரசாரம் செய்துவரும் காங்கிரஸ் கட்சி, இம்முறை பாஜகவை வீழ்த்தி ஆட்சியை மீட்கும் முனைப்பில் இருக்கிறது.

இன்றைய நிலையில் பாஜகவுக்கு சமமாக மோதும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அதை ஏற்கும் மனப் பக்குவம் காங்கிரஸ் தலைவர்களிடம் காணப்படவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் வருத்தம்.

உதாரணமாக, தில்லி, ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இருந்தது. ஆனால், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தக் கூட்டணி சாத்தியமாகவில்லை.  இதந் காரணமாக இம்மாநிலங்களில் ஏற்படப்போகும் மும்முனைப்போட்டி பாஜகவுக்கே சாதகமாகும்  நிலை காணப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. இங்கு முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி முன்னாள் காங்கிரஸ்காரர்தான். ஆனால்,  சென்ற சட்டசபைத் தேர்தலில் செய்த  காங்கிரஸ் கட்சி செய்த தவறை மம்தா மன்னிக்கத் தயாராக இல்லை. அங்கு நடந்த பேரவைத் தேர்தலில் தனது பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை மம்தா பானர்ஜி நம்ப மறுக்கிறார். தவிர, பிரதமர் நாற்காலி மீது அவருக்கும் ஒரு கண் இருக்கிறது.  எனவே அங்கு மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் மம்தா வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் தலைவர்களின் பேராசை காரணமாக பின்னடைந்து விட்டது. தற்போது அக்கட்சியும் தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. இதன்மூலமாக, மேற்கு வங்க மாநிலத்தில் புறக்கணிக்கப்பட்ட கட்சியாகிவிட்டது காங்கிரஸ். இத்தனைக்கும் இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 9.5 சதவீத வாக்குகள் உண்டு.

திரிணமூல் காங்கிரஸ், பாஜக,  இடதுசாரிக் கூட்டணி, காங்கிரஸ் என நான்கு முனைப் போட்டி ஏற்பட்டால் அது சிறுபான்மையினரின் வாக்குகளைச் சிதறச் செய்துவிடும். அது பாஜகவுக்கே ஆதாயம் என்று புலம்பி இருக்கிறார் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா. அதற்கேற்றாற்போல, பாஜகவின் செல்வாக்கு அம்மாநிலத்தில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இம்முறை மேற்கு வங்கத்தில் உண்மையான போட்டி மம்தாவுக்கும் மோடிக்கும் தான்.

பிகாரில் மகா கூட்டணி என்று வெகுவாகப் பேசப்பட்ட காங்கிரஸ்- ஆர்ஜேடி- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி  2015இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. ஆனால் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் குடைச்சல்களால் மனம் நொந்த முதல்வர் நிதிஷ்குமார் சில மாதங்களில் கூண்டோடு தே.ஜ.கூட்டணிக்கு மாறி பாஜக ஆதரவாளராகிவிட்டார். இங்கு பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வலிமையாக உள்ளது.

குஜராத்திலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகா கூட்டணியை காங்கிரஸ் கட்சியால் அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மாறிய சங்கர் சிங் வகேலா உபயத்தால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. அதன் பேரவைத் தேர்தல் தோழரான பாரதீய பழங்குடியினக் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் சேர மறுத்துவிட்டது. இறுதியில், மோடியின் மண்ணில்  காங்கிரஸ் தனிப்பயணியாகத் தத்தளிக்கிறது.

ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவுடன் உள்ளது. ராஜஸ்தானில் ஜாட் தலைவரின் கட்சியான ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சியுடனும், பாஜக அதிருப்தியாளர் கண்ஷியாம்  திவாரியின் கட்சியுடனும் முதல்வர் அசோக் கெலாட் முயற்சியால் கூட்டணி அமைந்திருக்கிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றதும், கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் அணி சேர்ந்ததும், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் உடன்பாடு கண்டதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனலாம்.

இருப்பினும், அதிக எம்.பி.க்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வறட்டுப் பிடிவாதத்தால், பாஜகவுக்கு எதிரான மகா கூட்டணி அமையும் வாய்ப்பு நழுவியது.  ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மனமில்லாத சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் புதிய கூட்டணியை உருவாக்கிவிட்டன. இதில் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் இடம்பெற்றுள்ளது. இங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜவாதி- 37, பகுஜன் சமாஜ்-38, ஆர்ஜேடி-3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரத் தொகுதிகளான ரேபரேலி, அமேதி ஆகியவற்றில் மட்டும் காங்கிரûஸ ஆதரிப்பதாக மாயாவதி அறிவித்தார்.

இதற்குப் போட்டியாக,  மகான் தளம், அப்னா தளம் (கோண்டா) போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். தவிர, முலாயம் சிங் குடும்பத்தினரும் மாயாவதியும் போட்டியிடும் 7 தொகுதிகள் தவிர்த்து 73  தொகுதிகளில் போட்டியிடுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் அறிவித்தார். இதனால் கோபமடைந்த மாயாவதி, காங்கிரஸ் கட்சியின் தயவு தங்களுக்குத் தேவையில்லை என்றார்; உ.பி.யில் காங்கிரஸ் கட்சி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.

இவ்வாறாக,  கூட்டணி அமைக்கும் விஷயத்தில் பாஜக ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் வீணடித்து வந்துள்ளது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது பாஜகவின் கூட்டணி முயற்சிகளுக்கு சாதகமாக உள்ளது. அந்த வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.

இந்த இரு அணிகளிலும் இடம்பெறாத தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு ஆளும் கட்சியாக வருபவரையே ஆதரிக்கும் என நம்பலாம்.

பொதுவாக, நம்பகத் தன்மை,  அரசியல் லாபம்,  எதிர்கால நன்மை, தலைமைப் பண்பு  ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே தேர்தல் கூட்டணிகள் அமைகின்றன. அந்த வகையில்,  பாஜக பலம் குறைந்த மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியிடமோ, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலோ இத்தகைய தெளிவைக் காண முடியவில்லை.

கொள்கை அடிப்படையில் அல்லாது வெற்றியை இலக்காகக் கொண்டே தேர்தல் கூட்டணிகள் அமைகின்றன. தேர்தலுக்குப் பின் கூட்டணி உடைவதும், அணி மாற்றமும் நாம் கண்டதே. வரும் மக்களவைத் தேர்தலும் அதற்கு விதிவிலக்காக இருக்கப் போவதில்லை.

***

பெட்டிச் செய்தி-1

தேசிய ஜனநாயகக் கூட்டணி:

1. பாஜக
2. அதிமுக
3. பாமக
4. தேமுதிக
5. புதிய நீதிக் கட்சி
6. புதிய தமிழகம்
7. என்.ஆர்.காங்கிரஸ்
8. தமாகா
9. பாரத் தர்ம ஜனசேனா
10. கேரள காங்கிரஸ் (தேசியம்)
11. ஆர்எஸ்பி (பி)
12. சிவசேனை
13. இந்திய குடியரசு கட்சி (அதாவலே)
14. அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்
15. அஸ்ஸôம் கண பரிஷத்
16. மணிப்பூர் மக்கள் கட்சி,
17. நாகா மக்கள் முன்னணி
18. மிசோ தேசிய முன்னணி
19. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
20. தேசிய மக்கள் கட்சி (மேகாலயம்)
21. அப்னா தளம் (சோனோவால்)
22. சிரோன்மணி அகாலி தளம்
23. ஐக்கிய ஜனதாதளம்
24. லோக் ஜனசக்தி.

***

பெட்டிச் செய்தி-2

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி:

1. இந்திய தேசிய காங்கிரஸ்
2. தேசியவாத காங்கிரஸ்
3. ஸ்வாபிமான் பக்ஷா
4. ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா
5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
6. திமுக
7. விடுதலைச் சிறுத்தைகள்
8. மதிமுக
9. இந்திய ஜனநாயகக் கட்சி
10. கொமுதேக
11. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (தமிழகம்)
12. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (தமிழகம்)
13. ராஷ்ட்ரீய ஜனதாதளம்
14. ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா
15. லோக்தந்திரிக் ஜனதாதளம்
16. ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி
17. விகாஸ் ஷீல் இன்சாப்
18. மதச்சார்பற்ற ஜனதாதளம்
19. கர்நாடகா பிராக்யவந்த ஜனதா
20.  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
21. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா
22. கேரள காங்கிரஸ் (ஜேக்கப்)
23. கேரள காங்கிரஸ் (மாணி)
24. அப்னா தளம் (கோண்டா)
25. மகான் தளம்
26. அமைதிக் கட்சி
27. தெலங்கானா ஜன சமிதி
28. திரிபுரா பூர்வகுடி மக்கள் கட்சி
29. ஏஐயூடிஎஃப், அஸ்ஸாம்.
30. சிக்கிம் ஜனநாயக முன்னணி
31. தேசிய மாநாட்டுக் கட்சி
32. சிபிஐ-எம்எல் (பிகார்).

***

பெட்டிச் செய்தி-3

இதுவரை பதவி வகித்த கூட்டணி பிரதமர்கள்…

வ.எண்  /  பிரதமர் / கூட்டணி /  காலம்

1. வி.பி.சிங்- தேசிய முன்னணி- 1989 டிச. 2 முதல் 1990 நவ. 10 வரை

2. தேவே கவுடா- ஐக்கிய முன்னணி- 1996 ஜூன்1 முதல் 1997 ஏப் 21 வரை

3. ஐ.கே.குஜ்ரால்- ஐக்கிய முன்னணி -1997 ஏப். 21 முதல் 1998 மார்ச் 19 வரை

4. அடல் பிகாரி வாஜ்பாய்- தேசிய ஜனநாயகக் கட்டணி- 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரை

5. மன்மோகன் சிங் -ஐக்கிய முற்போக்குக் கூட்டணி- 2004 மே 22 முதல் 2014 மே 26 வரை

6. நரேந்திர மோடி-  தேசிய ஜனநாயகக் கட்டணி- 2014 மே 26 முதல் தற்போது வரை.

 

-தினமணி – தேர்தல் உலா (03.04.2019)
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: