வடக்கு இந்தியாவில் வலிமை யாருக்கு?

10 Apr

 

பொதுவாக வட இந்தியா என்று நாம் அழைக்கும் பகுதியில் தக்காணத்துக்கு வடக்கே உள்ள அனைத்துப் பகுதிகளும் அடங்கி இருப்பதாக நினைக்கிறோம். உண்மையில் வட இந்தியா என்பது 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அடங்கிய நிலப்பகுதி ஆகும்.

நமது நாட்டை சீராக நிர்வாகம் செய்ய வசதியாக, 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது, இந்தியக் குடிமைப் பணி ஆட்சியாளர்களின் நிர்வாகத்துக்காக 5 பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. அவை: வட இந்தியா, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, தென் இந்தியா. இவை அல்லாது, 1971இல் உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களின் கூட்டமைப்பும் ஒரு பிரதேசமாக தற்போது கருதப்படுகிறது.

29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள்:

இந்தப் பிரதேசங்களில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விவரம்:

வட இந்தியா: சண்டிகர் (யூ.பி), தில்லி (யூ.பி), ஹரியாணா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான்.

மேற்கு இந்தியா: கோவா, குஜராத், மகாராஷ்டிரம், டாமன்– டையூ (யூ.பி), தாத்ரா- நகர்ஹவேலி (யூ.பி)

மத்திய இந்தியா: சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம்.

கிழக்கு இந்தியா: பிகார், ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம்.

தென் இந்தியா: ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி (யூ.பி) தமிழ்நாடு, தெலங்கானா, லட்சத் தீவுகள் (யூ.பி), அந்தமான் நிகோபார் தீவுகள் (யூ.பி).

வடகிழக்கு இந்தியா: அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயம், மிஸோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா.

தேர்தலில் பிரதேச மாறுபாடுகள்:

இந்தியா மாபெரும் மக்கள்தொகை கொண்ட தேசம். இதன் பிரதேசங்களும் புவியியல் ரீதியாக பல்வேறு மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. பல வகையான மொழிகள், இனக்குழுக்கள்,  வழிபாட்டு முறைகள், அரசியல் அபிலாஷைகள் கொண்ட மக்களின் ஒருங்கிணைந்த வடிவமே இந்தியா என்ற நாடாக இருக்கிறது.

இருப்பினும், கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலான, விடுதலைக்குப் பிந்தைய அரசியல் வரலாறு நமது நாட்டை எண்திசைகளிலும் ஒன்றுபடுத்தி, பண்படுத்தி இருக்கிறது. பலகட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தல் மூலமாக ஜம்மு-காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரையிலும், அருணாச்சலப் பிரதேசம் முதல் குஜராத் வரையிலும், நமது ஒருமைப்பாடு மேலும் உறுதியாகிறது.

எனினும், பலவிதமான அரசியல் நிலைப்பாடுகளை ஒவ்வொரு பகுதியிலும் காண முடிகிறது. மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே தேர்தல் நடைமுறை தொடர்கிறது. தற்போது நாடு எதிர்கொள்ளும் 17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் பிரதேச வாரியாக நிலவும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அலசுவது தற்போதைய தேவையாக உள்ளது. முதலாவதாக வட இந்திய மாநிலங்களில் நிலவும் அரசியல் கள நிலவரத்தைக் காணலாம்.

இரு கட்சிகளுக்கு இடையிலான களம்:

வட இந்திய மாநிலங்களைப் பொருத்த வரை, காங்கிரஸ், பாஜக என்ற இரு தேசியக் கட்சிகளுக்கு நேரிடையான போட்டி நிலவுகிறது. இதில் அண்மைக்காலமாக ஆம் ஆத்மி கட்சியும் இணைந்திருக்கிறது. இப்பிரதேசத்தில் உள்ள சண்டிகர் முழுமையான யூனியன் பிரதேசம். அங்கு சட்டப் பேரவை இல்லை..

நாட்டின் தலைநகரான தில்லி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அங்கு சட்டப் பேரவை உண்டு. வட மாநிலங்களில் 6 சட்டப் பேரவைகள் உள்ளன. இவற்றில் தற்போது தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆள்கிறது. ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் ஆள்கின்றன. ஜம்மு காஷ்மீர் மட்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது.

இந்த 6 சட்டப் பேரவைகளில் மொத்தமுள்ள பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 632. இவற்றில் காங்கிரஸ் 240 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 223 தொகுதிகளிலும் (பாஜக- 203, அகாலிதளம்- 18, ஜ.கா.ம.கட்சி-லோனே- 2) வெற்றி பெற்றுள்ளன. ஆம் ஆத்மி கட்சி-85, மக்கள் ஜனநாயகக் கட்சி – 28, தேசிய மாநாடு- 15, இந்திய தேசிய லோக்தளம்- 18 உள்பட பிற கட்சிகள் வசம் 169 தொகுதிகள் உள்ளன.

சென்ற 2018 டிசம்பரில் ராஜஸ்தானில் நடந்த பேரவைத் தேர்தலிலும், 2017இல் பஞ்சாபில் நடந்த பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வென்றது. 2014இல் இமாச்சலில் நடந்த பேரவைத் தேர்தலிலும் 2017இல் ஹரியாணாவில் நடந்த தேர்தலிலும் பாஜக வென்றது. 2015இல் நடந்த பேரவைத் தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி வென்றது.

2014இல் ஜம்மு காஷ்மீரில் நடந்த பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் முதலிடம் பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சியும் (28), இரண்டாமிடம் பெற்ற பாஜகவும் (25) இணைந்து 2016இல் ஆட்சி அமைத்தன. மெஹபூபா முஃப்தி முதல்வரானார். பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், கொள்கை மாறுபாடுகளால் அந்த அரசு 2018 ஜூனில் கவிழ்ந்தது. தற்போது அங்கு மத்திய ஆட்சி நடைபெறுகிறது.

தலைவர்களின் செல்வாக்கு:

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் முதல்வராக உள்ளார். இங்கு பாஜகவின் விஜய் கோயல், ஹர்ஷவர்த்தன், ஆகியோரும், காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித்தும் முன்னணித் தலைவர்கள்.

ஹரியாணாவில் பாஜக முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத் தக்க தலைவர் இல்லை. இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஊழல் வழக்கில் சிரையில் இருக்கிறார்.

இமாச்சலில் பாஜகவின் ஜெய்ராம் தாக்குர் முதல்வராக உள்ளார். இங்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் வீரபத்ர சிங் உள்ளார். ஊழல் வழக்குகள் காரணமாக அவரது செயல்பாடுகள் முடங்கி உள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவி மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பாஜக தலைவர் நிர்மல் குமார் சிங், ரவீந்தர் ரெய்னா, ராம் மாதவ், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மங்கத்ராம் சர்மா ஆகியோர் முன்னணித் தலைவர்கள்.

பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்து பாஜக எம்.பி. ஆகி காங்கிரஸ் கட்சிக்குச் சென்ற நவ்ஜோத் சிங் சித்து பிரதானத் தலைவராக உருவெடுத்திருக்கிறார். பாஜக சார்பில் கமல் சர்மாவும், சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் சார்பில்  முன்னாள் முதல்வரான பிரகாஷ் சிங் பாதல், அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் ஆகியோரும் முன்னணித் தலைவர்கள்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் உள்ளனர். இங்கு முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா பாஜகவின் முன்னணித் தலைவர். பாஜகவில் இருந்து விலகிய ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங், கண்ஷ்யாம் திவாரி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டனர்.

மொத்தமுள்ள 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் தற்போது பாஜக -3 (இமாச்சல், ஹரியாணா, சண்டிகர்), காங்கிரஸ்- 2 (ராஜஸ்தான், பஞ்சாப்), ஆம் ஆத்மி கட்சி- 1 (தில்லி), பிறர் (ஜம்மு காஷ்மீர்) ஆகியோரின் செல்வாக்கு அதிகமாக உள்ளது.

2014 தேர்தல் நிலவரம்:

இந்தப் பிரதேசத்தில் மொத்தமுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 66. சென்ற 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவற்றில் 53 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியது. காங்கிரஸ் 4, ஆம் ஆத்மி கட்சி- 4, இந்திய தேசிய லோக்தளம்- 2, மக்கள் ஜனநாயகக் கட்சி- 3 ஆகியவை மீதமுள்ள இடங்களில் வென்றன.

அந்தத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக 3 இடங்களில் வென்ற பாஜக 34.4 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது. சண்டிகர் (1), தில்லி (7/7), இமாச்சல் (4/4), ராஜஸ்தான் (25/25), ஹரியாணா (7/10) பஞ்சாப் (6/13) ஜம்மு காஷ்மீர் (3/6) என பாஜக கூட்டணியின் வெற்றி அமைந்திருந்தது.

காங்கிரஸ் கட்சி ஹரியாணா (1/10), பஞ்சாப் (3/13) என 4 இடங்களில் மட்டுமே வென்றது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் மட்டும் (4/13) வென்றது. இ.தே.லோக்தளம் ஹரியாணாவிலும் (2/10), மக்கள் ஜனநாயகக் கட்சி ஜம்மு காஷ்மீரில் (3/6) இடங்களிலும் வென்றன.

இந்த முறை இரு சட்டப் பேரவைத் தேர்தல்களில் வென்று ஆட்சியை மீட்டுள்ள காங்கிரஸ் கட்சி புத்துணர்வுடன் போராடுகிறது. ராஜஸ்தானில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதும், அசோக் கெலாட் தலைமையும், பாஜகவில் நிலவும் அதிருப்தியும் காங்கிரஸ் கட்சியின் பலங்கள்.

மோடியின் தலைமையைக் கூறி முந்தைய எண்ணிக்கையை விட அதிக இடங்களில் வெல்ல பாஜக வியூகம் வகுக்கிறது. இம்முறை ராஜஸ்தானில் இக்கட்சி லோக் தந்திரிக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பஞ்சாபில் அமரீந்தர் சிங், ஆம் ஆத்மி கட்சிகள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி பாஜக- அகாலிதளம் கூட்டணிக்கு உதவும் என அக்கூட்டணி நம்புகிறது. ஹரியாணா, சண்டிகர், இமாச்சலில் பாஜகவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எனினும் இமாச்சலில் மாநில ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை சாதகமாக்க காங்கிரஸ் துடிக்கிறது.

தலைநகர் தில்லியில் சென்ற பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்த அமோக வரவேற்பும் செல்வாக்கும், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அடாவடிச் செயல்பாடுகளால் குறைந்திருக்கின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகக் காணப்பட்ட அதேபோன்ற ஆதரவு நிலை மீண்டும் திரும்புகிறது. எனவேதான் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது.

ஜம்மு காஷ்மீரைப் பொருத்த வரை, அந்த மாநிலத்தின் அரசியலை ஜம்மு, லடாக், காஷ்மீரப் பள்ளத்தாக்கு என்று மூன்றாகப் பிரித்துக் காண வேண்டியுள்ளது. காஷ்மீரப் பள்ளத்தாக்கில் உள்ள 3 தொகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அங்கு மக்கள் ஜனநாயகக் கட்சியோ, தேசிய மாநாடு கட்சியோ தான் வெல்ல முடியும். அதேபோல, ஜம்மு (2), லடாக்கில் (1) காங்கிரஸ் அல்லது பாஜக வெல்ல முடியும். ஒருகாலத்தில் ஜம்முவில் பிரபலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சிறுத்தைகள் கட்சி இப்போது செல்வாக்கை இழந்துவிட்டது. தற்போது இம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிப்பதும் இத்தேர்தலில் எதிரொலிக்கும்.

முக்கிய பிரச்னைகள்:

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நிகழ்த்தும் வன்முறை பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதனை ம.ஜ.கட்சியும், தே.மா.கட்சியும் கண்டிப்பதில்லை. தே.மா.கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு கண்டுள்ளது. கல்லெறி சம்பவங்களும், ராணுவ ஆதிக்கமும் இத்தேர்தலில் அதிக அளவில் பேசப்படும். மாநிலத்தின் சுய ஆட்சிக்கான 370வது ஷரத்து நீக்கம், முஸ்லிம் பெண்களின் முத்தலாக் விவகாரம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியனவும் தேர்தலில் பிரதான இடம் வகிக்கின்றன.

ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் விவசாயிகளின் கடன் பிரசனை பெரிதாகப் பேசப்படுகிறது. மத்திய அரசு அறிவித்த விவசாயிகளுக்கான உதவித் திட்டம் பாஜகவுக்கு ஓரளவு சாதகமாக உள்ளது. ஹரியாணாவில் ஜாட்களின் போராட்டம், ராஜஸ்தானில் குஜ்ஜார்களின் இட ஒதுக்கீடு போராட்டம் ஆகியன முக்கிய பிரச்னைகள். பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் பெரும் விவகாரமாகி இருக்கிறது. தலைநகர் தில்லியில் மாநிலத்துக்கு கூடுதல் வழக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட வாய்ப்பு இருக்கிறது.

இத்தனை பிரச்னைகள் இருந்தாலும், பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதி மாநிலங்களாக இருப்பதால், இந்திய அரசின் ராணுவ நடவடிக்கைகள் பாஜகவுக்கு சாதகமாக மாற வாய்ப்புகள் உள்ளன.

அண்மைக்காலமாக சரிவடைந்து வந்த பாஜகவின் செல்வாக்கு, பாலகோட் தாக்குதல், பொருளாதாரரீதியாக இட ஒதுக்கீடு ஆகிய நடவடிக்கைகளுக்குப் பிறகு மீண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஜனநாயகத்தில் வாக்காளர்களே எஜமானர்கள். அவர்களின் வாக்க்குகள் எப்படி மாறும் என்பது மே 23ஆம் தேதி தெரிந்துவிடும்.

***

பெட்டிச் செய்தி:

சட்டப் பேரவைகளில் கட்சிகள் நிலவரம்

  1. தில்லி

மொத்த இடங்கள்: 70

ஆம் ஆத்மி கட்சி- 66

பாஜக- 4

காங்கிரஸ்- 0

 

  1. ஹரியாணா

மொத்த இடங்கள்: 90

பாஜக- 52+1

காங்கிரஸ்- 17

இ.தே.லோக்தளம்- 18

பிறர்- 2

 

  1. இமாச்சலப் பிரதேசம்

மொத்த இடங்கள்: 68

பாஜக- 46

காங்கிரஸ்- 21

சிபிஎம்- 1

 

  1. ஜம்மு- காஷ்மீர்

மொத்த இடங்கள்: 87

மக்கள் ஜனநாயகக் கட்சி- 28

தேசிஅ மாநாடு கட்சி- 15

பாஜக- 25 +2

காங்கிரஸ்- 12

சிபிஎம்-1

பிறர்- 4

 

  1. பஞ்சாப்

மொத்த இடங்கள்: 117

காங்கிரஸ்- 78

பாஜக-3

அகாலிதளம்- 14

ஆம் ஆத்மி கட்சி- 19

பிறர்- 3

 

  1. ராஜஸ்தான்

மொத்த இடங்கள்: 200

காங்கிரஸ்- 112

பாஜக- 73

பக்ஜன் சமாஜ் கட்சி- 6

சிபிஎம்- 2

பிறர்- 7.

 

-தினமணி – தேர்தல் உலா (09.04.2019)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: