மேற்கு இந்தியாவில் மேலாண்மை யாருக்கு?

13 Apr

நாட்டின் பொருளாதார மையமாக விளங்கும் மேற்கு இந்திய பிரதேசத்தில் குஜராத், மகாராஷ்டிரம், கோவா ஆகிய 3 மாநிலங்களும், டாமன் மற்றும் டையூ,  தாத்ரா மற்றும் நகர்ஹவேலி ஆகிய 2 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

இந்தப் பகுதிகளிலிருந்து மக்களவைக்கு 78 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குஜராத்- 26, மகாராஷ்டிரம்- 48, கோவா- 2, டாமன் மற்றும் டையூ- 1, தாத்ரா மற்றும் நகர்ஹவேலி- 1 என்ற எண்ணிக்கையில் தொகுதிகள் உள்ளன.

இவற்றில் சென்ற தேர்தலில் பாஜக 72 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் வென்றன.

2014 தேர்தல் நிலவரம்:

2014 தேர்தலில் பாஜகவின் வெற்றிப் பயணத்துக்கு மிகவும் உறுதுணையாக இருந்த பிரதேசம் இது. குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வென்றது. அப்போது மண்ணின் மைந்தர் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கியதால் குஜராத் முழுவதும் பாஜக அலை வீசியது.

அதேபோல, அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்திலும் பாஜகவின் செல்வாக்கு மிளிர்ந்தது. அங்குள்ள 48 தொகுதிகளில் பாஜக- 23, சிவசேனை-18, ஸ்வாபிமான் பக்ஷ-1 என தேசிய ஜனநாயகக் கூட்டணி 42 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ்-2, தேசியவாத காங்கிரஸ்- 4 என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 6 இடங்களில் வென்று ஆறுதல் அடைந்தது.

மற்றொரு அண்மை மாநிலமான கோவாவில் உள்ள இரு தொகுதிகளும் பாஜக வசமாயின. டாமன்- டையூ, தாத்ரா- நகர்ஹவேலி ஆகிய இரு யூனியன் பிரதேசத் தொகுதிகளிலும் பாஜகவே வென்றது.

இவற்றில் குஜராத், மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களில் பாஜகதான் தற்போது ஆட்சியிலும் உள்ளது. பாஜக} காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் மோதல் களமாக இந்தப் பிரதேசம் விளங்குகிறது.

 

குஜராத்தில் நேரடி மோதல்:

பிரதமர் மோடி முதல்வராக இருந்த மாநிலம் குஜராத். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் குஜராத் மாநிலத்தவர். எனவே அரசியல் தலைமையைப் பொருத்த வரை பாஜகவின் கரம் ஓங்கியுள்ளது. மோடி, அமித் ஷா- முதல்வர் விஜய் ரூபானி- துணை முதல்வர் நிதின்பாய் படேல் என்ற நால்வர் அணி பாஜகவுக்கு வலுவாக உள்ளது.

மூத்த தலைவர் கேசுபாய் படேல் ஒதுங்கி இருப்பதும், பாஜக முன்னாள் தலைவர் அத்வானி தேர்தலில் போட்டியிடாததும் கட்சிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும், அதனை பாஜக தலைமை சரிசெய்துவிட்டது. அத்வானி வென்ற காந்திநகர் தொகுதியில் அமித் ஷாவே போட்டியிடுவதால் அனைவரது கவனமும் திசை திரும்பியுள்ளது.

மறுதரப்பில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும் சோனியா காந்தியின் தனிச் செயலாளருமான அகமது படேல் காங்கிரஸ் கட்சியின்  பிரதானத் தலைவராக உள்ளார். உயர் ஜாதியினரான படேல்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்திய படிதார் ஆந்தோலன் தலைவர் ஹார்திக் படேல் தற்போது காங்கிரஸில் இணைந்துவிட்டார். அவரது வரவு காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வூட்டியுள்ளது. தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சியின் இன்னோர் இளம் தலைவர்.

காங்கிரஸ் கட்சியின் நேசக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸýம், பாரதிய பழங்குடியினர் கட்சியும் இம்முறை தனித்துப் போட்டியிடுகின்றன. தேசியவாத காங்கிரஸ் தலைவராக உள்ள சங்கர் சிங் வகேலா, பாஜகவிலும் காங்கிரஸிலும் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர். அவர் மாநிலத் தலைவராக இருப்பதால்தான் காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சேரவில்லை. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவராக இருந்த அல்பேஷ் தாகுர் கட்சியிலிருந்து விலகி இருப்பது அக்கட்சிக்கு தெற்கு குஜராத்தில் சறுக்கலாக உள்ளது.

2017 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பல இடங்களில் உதவிய பாரதிய பழங்குடியினர் கட்சித் தலைவர் சோட்டுபாய் வாஸவா காங்கிரஸ் கட்சித் தலைமையின் உதாசீனத்தால் தனித்துப் போட்டியிடுகிறார். கூட்டணியின்றி பாஜகவை தனித்துச் சந்திப்பது காங்கிரஸ் கட்சிக்கு பலவீனம்.

2017 தேர்தலின்போது, இம்மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 100 இடங்களிலும்,  காங்கிரஸ் கூட்டணி 81 இடங்களிலும் (காங்கிரஸ்- 72, பாரதிய பழங்குடிக் கட்சி- 2. தேசியவாத காங்கிரஸ்- 1) வென்றன; சுயேச்சைகள் இரு இடங்களிலும் வென்றனர்; 4 இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 எம்எல்ஏக்கள் விலகி அதிர்ச்சி அளித்துள்ளனர். இதன் காரணமாக 6 இடங்கள் காலியாக உள்ளன. இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.3 கோடி.

மகாராஷ்டிரத்தில் கூட்டணிகள் மோதல்:

மகாராஷ்டிரத்தில் பாஜக- சிவசேனை கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. இவ்விரு கட்சிகளும் சில ஆண்டுகளாகவே ஊடலும் கூடலுமாக உள்ளன. பால் தாக்கரே காலத்தில் மகாராஷ்டிரத்தில் சிவசேனை பெற்றிருந்த தனிப்பட்ட செல்வாக்கை இப்போது பாஜக சுவீகரித்துவிட்டது. இதனை சிவசேனையால் ஜீரணிக்க முடியாததால் அவ்வப்போது பாஜகவை கடுமையாக விமர்சிக்கிறது. எனினும், ஹிந்துத்துவ அரசியல் அடிப்படையில் இரு கட்சிகளும் இயங்குவதால், தேர்தல் தருணத்தில் வேறு வழியின்றி சமரசம் செய்து கொள்கின்றன.

பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தைச் சேர்ந்த  நிதின் கட்கரி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ளார். நாடு முழுவதும் சாலை விரிவாக்கத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதன் மூலமாக  சிறந்த அமைச்சர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் கட்கரி.

சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அதாவலே, மகாராஷ்டிரா ஸ்வாபிமான் கட்சித் தலைவர் நாராயண் ராணே ஆகியோர்  பாஜக அணியிலுள்ள முக்கியமான தலைவர்கள்.

சென்ற 2014 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஸ்வாபிமான் பக்ஷ, ராஷ்டிரீய சமாஜ் பக்ஷ கட்சிகள் இப்போது பிரிந்து சென்று விட்டன.  இவற்றில் ஸ்வாபிமான் பக்ஷ கட்சி தற்போது காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டது. பகுஜன் விகாஸ் அகாடி கட்சி, யுவ ஸ்வாபிமான் கட்சி ஆகியவையும் காங்கிரஸ் அணியில் உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் உறுதுணையாக இம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோர் காங்கிரஸ் அணியின் பிரதானத் தலைவர்கள்.  காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள் சுஷீல்குமார் ஷிண்டே,  அசோக் சவாண், பிருத்விராஜ் சவாண் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியின் முகங்கள்.

சிவசேனையிலிருந்து பிரிந்து ராஜ் தாக்கரே துவங்கிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத போதும், பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்கிறது. இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8.73 கோடி.

2017 மார்ச்சில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 186 இடங்களில் வென்றது (பாஜக- 122, சிவசேனை- 63, இந்திய குடியரசுக் கட்சி- 1). காங்கிரஸ் கூட்டணி 86 இடங்களில் வென்றது (காங்கிரஸ்- 42, தேசியவாத காங்கிரஸ்-41, பகுஜன் விகாஸ் அகாடி – 3). சிபிஎம்} 1, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை-1, ஏஐஎம்ஐஎம்-2, சுயேச்சைகள்- 7 உள்பட பிறர் 16 பேர் உள்ளனர்.

கோவாவில் இருமுனைப் போட்டி:

இரு மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பாஜகவுக்கும் காங்கிரஸýக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. வடக்கு கோவா- தெற்கு கோவா என இரு தொகுதிகளிலும் இருவேறுபட்ட அரசியல் காற்று வீகிறது. இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11.27 லட்சம்.

இம் மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் பாஜக குதிரைபேரத்தைக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இங்கு பாஜகவின் தோழமைக் கட்சியாக இருந்த மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி இப்போது காங்கிரஸ் அணிக்கு மாறிவிட்டது.

கோவாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு வித்திட்டவரான முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் அண்மையில் காலமானார். அவர்மீது மாநில மக்களுக்கு மிகுந்த அபிமானம் உள்ளது. அவரின்றி பாஜக சந்திக்கும் முதல் தேர்தல் இது. பாரிக்கர் மீதான அனுதாபம் வாக்குகளைப் பெற்றுத் தரும் என பாஜக நம்புகிறது.

பாஜக முதல்வராக பிரமோத் சாவந்த் உள்ளார். துணை முதல்வராக கோவா முன்னணிக் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் உள்ளார். முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகரும்  பாஜகவின் முக்கியத் தலைவர்.

எதிர்த்தரப்பில், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பிரதாப் சிங் ராணே, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலைவர் சுதின் தவாலிகர்,  முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவரும் இந்நாள் பாஜக எதிரியுமான கோவா சுரக்ஷா மஞ்ச் தலைவர் சுபாஷ் வெலிங்கர் ஆகியோர் உள்ளனர். சிவசேனை இங்கு பாஜக கூட்டணியில் இல்லை.

மார்ச் 2017இல் நடைபெற்ற கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணி 19 இடங்களிலும் (பாஜக-13, ம.கோ.க-3, கோ.மு.க- 3), காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களிலும் (காங்கிரஸ்- 17, தேசியவாத காங்கிரஸ்-1) வென்றன; சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றனர். சுயேச்சைகளின் ஆதரவோடு பாஜக ஆட்சியைப் பிடித்தது.

ஆனால் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவு காரணமாக பாஜக ஆட்சி ஆட்டம் கண்டபோது,  சுயேச்சை உறுப்பினர்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டனர். தவிர,  பாஜகவை மிரட்டி வந்த தோழமைக் கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் இரு உறுப்பினர்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டனர். அதனால் அக்கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியது. எனவே கோவாவில் பாஜக ஆட்சி தற்போது நூலிழைப் பெரும்பான்மையுடன் மட்டுமே உள்ளது. அணி மாறிய எம்எல்ஏக்களால் 4 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

டாமன்- டையூ,  தாத்ரா- நகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் காங்கிரஸ்-பாஜக இடையே போட்டி நிலவுகிறது. இம்மாநிலங்கள் துணைநிலை ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஆளப்படுகின்றன; இவற்றில் சட்டப் பேரவைகள் இல்லை.

மாநிலங்களில் நிலவும் பிரச்னைகள்:

குஜராத், மகாராஷ்டிர மாநிலங்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இம்மாநிலங்களில் பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கியாக இருந்த வர்த்தகர்கள் இதனால் மத்திய அரசு மீது அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. உயர் மதிப்பு ரூபாய்  நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையும் இம்மாநிலங்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

படிதார் போராட்டத்தால் மாநில அரசுக்கு எதிராக எழுந்த அதிருப்தி இன்னமும் குறையவில்லை. இது வடக்கு குஜராத், செüராஷ்டிரப் பகுதிகளில் எதிரொலிக்கும் என காங்கிரஸ் நம்புகிறது. 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 16 எம்.பி.க்களைப் பெற முடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் கணக்கு.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலும் அதிருப்தியாளர்கள் பிரச்னை நிலவுகிறது. பல தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் களமிறங்குவதும் எதிரணியை ஆதரிப்பதும் இரு கட்சிகளுக்குமே சிக்கல். இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியே.

மகாராஷ்டிரத்தில்  விவசாயிகள் நடத்திய போராட்டம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 2014 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் விவசாயிகளிடையே நிலவும் அதிருப்தி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாறுமா என்பது தேர்தலில் தெரியவரும்.

இருப்பினும், அண்மையில் மோடி அரசு  விவசாயிகளுக்கு அறிவித்த உதவித்தொகை திட்டம் தங்களுக்குக்  கைகொடுக்கும் என பாஜக நம்புகிறது. அதேசமயம், ராகுல் காந்தி அறிவித்துள்ள ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் ‘நியாய்’ உதவித் திட்ட வாக்குறுதி விவசாயிகளைக் கவரும் என்பது காங்கிரஸின் நம்பிக்கை.

விதர்பா தனி மாநிலக் கோரிக்கை, கோரேகானில் தலித் மக்கள் போராட்டம், மராட்டா மக்களின் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் ஆகியவையும் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும்.

இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணி வகித்து வந்த கோவா மாநிலம் சட்ட விரோத சுரங்கங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதனால் அரசுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தியே பாஜக ஆட்சிக்கு வந்தது. அதன்படி, மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்தபோது 2012இல் சட்டவிரோத சுரங்கங்கள் தடை செய்யப்பட்டன. இருப்பினும், அம்மாநிலத்தில் சுரங்க விவகாரம் நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கிறது.

சுற்றுலா மாநிலமான கோவாவில் கலாசாரக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்வினை எழுவதால், அவ்விஷயத்தில் பாஜக சற்று அடக்கமாகவே இருக்கிறது. இருப்பினும் பாஜகவின் தோழமை அமைப்புகள் நடத்தும் போராட்டங்களால் சிறுபான்மையினரின் ஆதரவு குறைய வாய்ப்பிருக்கிறது.

குஜராத், கோவாவில் காலியாக உள்ள பேரவைத் தொகுதிகள் சிலவும் இடைத்தேர்தலைச் சந்திக்கின்றன. குறிப்பாக கோவாவில் 3 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள் அம்மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மொத்தத்தில் சென்ற தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்கவைக்க பாஜக போராடுகிறது.  இம்மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் பாஜக இருப்பதால் மாநில அளவிலான அதிருப்தியையும் சமாளித்தாக வேண்டியுள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சியான காங்கிரஸ் புத்தெழுச்சியுடன் பாஜகவை எதிர்கொள்கிறது. இதில் வெல்லப்போவது யார்?  இதற்கான விடை காண சில வாரங்கள் காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

***

பெட்டிச் செய்தி…

மாநிலப் பேரவைகளில் கட்சிகளின் பலம்:

குஜராத்
மொத்த இடங்கள்:  182ஆளும் அணி- 101
பாஜக- 100
சுயேச்சை- 1எதிர்க்கட்சி அணி- 74
காங்கிரஸ்-70
பாரதிய பழங்குடியினர் கட்சி- 2
தேசியவாத காங்கிரஸ்- 1
சுயேச்சை- 1காலி- 7
***

மகாராஷ்டிரம்
மொத்த இடங்கள்: 288

ஆளும் அணி- 186
பாஜக- 122
சிவசேனை- 63
இந்திய குடியரசுக் கட்சி- 1

எதிர்க்கட்சி அணி- 83
காங்கிரஸ்- 42
தேசியவாத காங்கிரஸ்- 41

பிறர்- 19
விவசாயிகள், தொழிலாளர் கட்சி- 3
பகுஜன் விகாஸ் அகாடி கட்சி- 3
ஏஐஎம்ஐஎம்- 2
சிபிஎம்- 1
பாரிபா பகுஜன் மகாசங்கம்- 1
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை- 1
சமாஜ்வாதி கட்சி-1
சுயேச்சைகள்- 7
***

கோவா
மொத்த இடங்கள்: 40

ஆளும் அணி- 20
பாஜக-14
கோவா முன்னணி கட்சி- 3
சுயேச்சைகள்- 3

எதிர்க்கட்சி அணி- 16
காங்கிரஸ்-14
தேசியவாத காங்கிரஸ்- 1
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி- 1

காலி- 4

– தினமணி தேர்தல் உலா (13.04.2019)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: