தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தென்னிந்தியா

20 Apr

இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் மத்திய ஆட்சியைத் தீர்மானிப்பதாக விளங்கிவந்தது உ.பி, ம.பி.யை உள்ளடக்கிய மத்திய இந்தியா தான். ஆனால் இம்முறை வரலாறு மாறுகிறது. 132 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கவுள்ள தென்னிந்தியா இம்முறை தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

தென்னிந்தியாவில் தமிழ்நாடு (39), கேரளம் (20), கர்நாடகம் (28), ஆந்திரப் பிரதேசம் (25), தெலங்கானா (17) ஆகிய 5 மாநிலங்களும், புதுச்சேரி (1), அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் (1), லட்சத்தீவுகள் (1) ஆகிய 3 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

இத் தேர்தலில் பிரதானப் போட்டியாளர்களான பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சவாலாக விளங்கும் பிரதேசமாக தென்னிந்தியா உள்ளது.

***

2014 தேர்தல் முடிவுகள்:

சென்ற மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவில் இருந்து 39 எம்.பி.க்களை மட்டுமே ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றது. தமிழ்நாடு (2), புதுச்சேரி (1), ஆந்திரப்பிரதேசம் (17), தெலங்கானா (1), கர்நாடகம் (17), அந்தமான்- நிகோபர் தீவுகள் (1) பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. இதில் பாஜகவின் பங்கு 22.

அப்போது பாஜகவுடன் கூட்டணித் தோழராக இருந்த தெலுங்குதேசம் கட்சி தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. சென்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மற்றபடி பாஜக கூட்டணியில் பெருத்த மாற்றம் இல்லை.

சென்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நாடு முழுவதும் பெற்ற 44 இடங்களில் தென்னிந்தியாவின் பங்களிப்பு 24. கேரளம் (12), லட்சத் தீவுகள் (1), கர்நாடகம் (9), தெலங்கானா (2) பகுதிகளில் இக் கூட்டணி வென்றது. இதில் காங்கிரஸ் மட்டும் 19 இடங்களைக் கைப்பற்றியது.

சென்ற தேர்தலில் கர்நாடகத்தில் தனித்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதாதளமும், தமிழகம், புதுவையில் தனி கூட்டணியாகப் போட்டியிட்ட திமுகவும் இம்முறை காங்கிரஸ் அணியில் சேர்ந்துள்ளன. பிற மாநிலங்களில் எந்த மாற்றமும் இல்லை.

பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் 69 இடங்களில் வென்றன. அதில் தமிழகத்தின் அதிமுக (37), தெலங்கானாவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி (11), ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (8), இடதுசாரிகள் (10) ஆகியவை முக்கியமானவை. இதில் தற்போது பாஜக அணியில் அதிமுகவும், காங்கிரஸ் அணியில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்துவிட்டன. இடதுசாரிகள் தமிழகத்தில் மட்டும் திமுக} காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கூட்டணிகள் யுத்தம்:

தமிழகத்தில் அதிமுக தலைவி ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. இங்கு அதிமுக} திமுக இடையே அரசியல் போராட்டம் தொடர்கிறது. இவ்விரு கட்சிகளுமே சொந்த பலத்தை நம்பாமல் கூட்டணி அமைத்திருக்கின்றன.

அதிமுக அணியில் அதிமுக (20), பாமக (7), பாஜக (5), தேமுதிக (4), தமாகா (1), புதிய தமிழகம் (1), புதிய நீதிக் கட்சி (1), புதுவையில் என்ஆர் காங்கிரஸ் (1) கட்சிகள் போட்டியிடுகின்றன.

திமுக அணியில் திமுக (20), காங்கிரஸ் (10} புதுவை சேர்த்து), சிபிஎம் (2), சிபிஐ (2), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), மதிமுக (1), கொமுதேக (1) முஸ்லிம் லீக் (1), இந்திய ஜனநாயகக் கட்சி (1) ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

அதிமுகவிலிருந்து பிரிந்து டிடிவி தினகரன் நடத்தும் அமமுக, நடிகர் கமல்ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன. இதில் அதிமுகவின் ஆதரவு வாக்குகளை அமமுகவும், அரசுக்கு எதிரான வாக்குகளை மக்கள் நீதி மய்யமும் பிரிக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.

ஆளும் கட்சியான அதிமுக, மத்திய மாநில அரசுகள் மீதான மக்கள் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. அதற்கு கூட்டணி வலிமை பலமாக உள்ளது. திமுக தரப்பில் கூட்டணி வலிமையாக இல்லை. எனினும் அதிமுக அரசுக்கு மாற்று என்ற நம்பிக்கையுடன் பிரசாரத்தில் ஈடுபடுகிறது.

சென்ற தேர்தலில் ஜெயலலிதாவா, நரேந்திர மோடியா என்ற இரு துருவ மோதலில் அதிமுக- 37, பாஜக அணி-3 (பாஜக-1, பாமக- 1, என்ஆர் காங்கிரஸ்-1) இடங்களில் வென்றன. திமுக கூட்டணியும், தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் மோசமான தோல்வியைச் சந்தித்தன.

அதன்பிறகு 2016இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 232 தொகுதிகளில் 134 இடங்களில் வென்ற அதிமுக ஆட்சியைத் தக்கவைத்தது. இருப்பினும் திமுக-காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வென்றது. இது 2011 தேர்தலைவிட 66 இடங்கள் அதிகம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டதால் பதவி இழந்த 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளிலும் பல்வேறு காரணங்களால் காலியான 4 தொகுதிகளிலும் தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆகவே, தமிழகத்தைப் பொருத்த வரை இத்தேர்தல் பிரதமரின் நிலையை மட்டுமல்லாது மாநில முதல்வரின் நிலையையும் தீர்மானிப்பதாக உள்ளது.

காங்கிரஸ் அணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நட்சத்திரப் பிரசாரகர்கள். அதிமுக அணியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோர் நட்சத்திரப் பிரசாரகர்கள்.

திமுக வேட்பாளர் தொடர்புடைய இடங்களில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி, நலத்திட்டங்கள், புதிய ஜாதிக் கணக்கீடுகள், இதுவரை இல்லாத சமய விழிப்புணர்வு, உள்ளூர்ப் பிரச்னைகள் ஆகியவை இத்தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பவையாக இருக்கும்.

கேரளத்தில் மும்முனைப் போட்டி:

20 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றின் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

2014 தேர்தலில் காங்கிரஸ் (8), முஸ்லிம் லீக் (2), கேரள காங்கிரஸ் (1), ஆர்எஸ்பி (1) என காங்கிரஸ் அணி 12 இடங்களிலும், சிபிஎம் (5), சிபிஐ (1), சுயேச்சை (2) என இடது முன்னணி 8 இடங்களிலும் வென்றன. அப்போது மாநிலத்தில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது.

2016 பேரவைத் தேர்தலில் இடது முன்னணி வென்று ஆட்சியைப் பிடித்தது; பினராயி விஜயன் முதல்வரானார். மொத்த பேரவைத் தொகுதிகளான 140இல் இடது முன்னணி 91 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களிலும், பாஜக ஓரிடத்திலும், பாஜக ஆதரவு சுயேச்சை ஓரிடத்திலும் வென்றனர்.

இந்தியாவில் இடதுசாரிகளின் ஆதிக்கம் நிலவும் ஒரே மாநிலமாக கேரளம் உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்டுகளும் மாறி மாறி அதிகாரத்தைப் பகிர்ந்து வந்துள்ளன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் பாஜகவின் ஆதரவுத் தளம் கேரளத்தில் சிறுகச் சிறுக விரிவடைந்துள்ளது. அக்கட்சிக்கு 15 சதவீதம் வரை வாக்கு வங்கி இருந்தபோதிலும் அந்த அளவுக்கு வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. இந்நிலையை வரும் தேர்தலில் மாற்ற முடியும் என பாஜக நம்புகிறது.

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி இருப்பதால் பாஜக புத்துணர்ச்சியுடன் தேர்தலை அணுகுகிறது; காங்கிரஸ், மார்க்சிஸ்டுகளுக்கு மாற்றாக தன்னை இம்முறை முன்னிறுத்துகிறது. அக்கட்சிக்கு உறுதுணையாக வெள்ளப்பள்ளி நடேசனின் பாரத் தர்மஜன சேனா கூட்டு சேர்ந்துள்ளது. கேரளத்தில் ஈழவா ஜாதியினரிடையே செல்வாக்கு பெற்ற அமைப்பு இது. கேரள காங்கிரஸ் (தாமஸ்) உள்ளிட்ட மேலும் 13 சிறிய கட்சிகள் பாஜக தலைமையில் ஒருங்கிணைந்துள்ளன.

காங்கிரஸ் அணியில் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (மாணி), ஆர்எஸ்பி உள்ளிட்ட 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இடது முன்னணியில் சிபிஎம், சிபிஐ, மதச்சார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட 14 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சபரிமலை விவகாரத்தால் பாஜக இங்கு எழுச்சி பெற்றிருக்கிறது. இம்முறை குறைந்தபட்சம் 5 தொகுதிகளில் வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் போட்டியிடும் கும்மணம் ராஜசேகரன், திருச்சூரில் போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபி, மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னந்தானம் ஆகியோர் பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் மாநிலத்திலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இம்முறை ராகுலின் தாக்கத்தால் 20 தொகுதிகளையும் கைப்பற்றிவிட அவர்கள் திட்டமிடுகின்றனர். இதனால் மார்க்சிஸ்டு கட்சி பதற்றம் அடைந்துள்ளது. ஆளும் கட்சியாக இருப்பதும், சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்பட்டதும் இடதுசாரிகளுக்கு பலவீனமாகி இருக்கிறது.

காங்கிரஸ் தரப்பில் உம்மன் சாண்டி , ஏ.கே.அந்தோணி, சசி தரூர், வயலார் ரவி, முள்ளப்பள்ளி ராமசந்திரன் ஆகியோர் முன்னணித் தலைவர்களாக உள்ளனர். இடது முன்னணி தரப்பில் பினாரயி விஜயன், அச்சுதானந்தன், ஜெயராஜன் உள்ளிட்டோர் தலைவர்களாக உள்ளனர்.

கேரளத்தில் தொடரும் அரசியல் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அதிகரிக்கும் வேலைவாய்ப்பு பிரச்னை, ஐயப்ப பக்தர்களின் எதிர்ப்பு, சிறுபான்மையினரின் விழிப்புணர்வு ஆகியவை இத்தேர்தலில் வெற்றி} தோல்வியை நிர்ணயிப்பவையாக இருக்கும்.

கர்நாடகத்தில் இருமுனைப் போட்டி:

கர்நாடகத்தில் 2014 தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக -17, காங்கிரஸ்-9, மதச்சார்பற்ற ஜனதாதளம்- 2 தொகுதிகளில் வென்றன. இந்தக் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. அப்போது காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா முதல்வராக இருந்தார்.

2018இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக அணி 106 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 38 இடங்களிலும் வென்றன. யாருக்கும் பெரும்பான்மை கிட்டாத நிலையில், காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்தன; மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி முதல்வரானார்.

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தபோதும், இவ்விரு கட்சிகளிடையே இணக்கமான சூழல் இன்னமும் உருவாகவில்லை. பாஜக எதிர்ப்பு மட்டுமே இக்கட்சிகளை இதுவரை இணைத்து வந்திருக்கிறது. பாஜக தலைவர் எடியூரப்பாவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளால் குமாரசாமி அரசு நிலையில்லாமல் தவிக்கிறது.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால், காங்கிரஸ்} மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே தற்காலிக அமைதி நிலவுகிறது. எனினும் தொகுதிப் பங்கீட்டில் நிலவிய இறுக்கத்தால் (காங்கிரஸ்- 20, ம.ஜ.த-8) தேர்தலில் இரு கட்சியினரிடையே நல்ல தோழமை இல்லை. இது பாஜகவுக்கு சாதகமாக மாறி வருகிறது.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகர் அம்பரீஷின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி சுமலதாவை இவ்விரு கட்சிகளும் கண்டுகொள்ளாததால் மாண்டியாவில் அவர் சுயேச்சையாக பாஜக ஆதரவுடன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் பாஜகவில் சேர்ந்துவிட்டார். இவை காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை அம்சங்கள்.

மத்திய அமைச்சர் அந்தகுமார் இறந்தது பாஜகவுக்கு பெரும் இழப்பு. அக்கட்சிக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஈஸ்வரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோர் முன்னணித் தலைவர்கள். மீண்டும் முதல்வராகும் கனவுடன் காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த எடியூரப்பா தீவிரமாகக் களமிறங்கியுள்ளார்.

காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, வீரப்ப மொய்லி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் தேவே கவுடா, முதல்வர் குமாரசாமி ஆகியோர் முன்னணித் தலைவர்களாக உள்ளனர்.

கூட்டணிக்குள் குத்துவெட்டு, விவசாயிகள் பிரச்னை, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, காவிரி விவகாரம், பல மாவட்டங்களில் வறட்சி, லிங்காயத், ஒக்கலிகா சமூகத்தவரின் ஒருங்கிணைப்பு, மத்திய} மாநில ஆட்சிகள் மீதான அதிருப்தி ஆகியவை இத்தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன.

பிற பகுதிகளில் நிலவரம்:

25 தொகுதிகளைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அங்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் (175 தொகுதிகள்) இணைந்து நடத்தப்பட்டுள்ளது.

இத்தேர்தல், மாநில முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருக்கும். அவருக்குப் போட்டியாக எழுச்சி பெற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமா என்பது மே 23இல் தெரியவரும். சென்ற தேர்தலில் பாஜக அணியில் இருந்தபோது 15 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்குதேசம் கட்சி இம்முறை அவற்றைத் தக்கவைக்க முடியுமா என்பதையும் பார்க்கப் போகிறோம்.

17தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவிலும் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் 17இல் 12 இடங்களை டிஆர்எஸ் கூட்டணி வென்றது. தெலங்கானா உருவாகக் காரணமானவர் என்பது சந்திரசேகர ராவுக்கு சிறப்பம்சமாக உள்ளது.

இங்கு தெலங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர் ராவ் முதல்வராக உள்ளார். 2018இல் நடந்த பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 118 தொகுதிகளில் டிஆர்எஸ் 101 இடங்களை வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களை வென்றது. இந்தக் கூட்டணியின் செல்வாக்கு தொடருமா என்பதை இத்தேர்தல் முடிவு செய்யும்.

ஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளும் வலுவாக இல்லை. இம்மாநிலங்களில் வெல்லும் கட்சிகள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வழக்கமாக உள்ளது.

ஒரே மக்களைத் தொகுதியைக் கொண்ட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 30 இடங்கள் கொண்ட புதுச்சேரி பேரவையில் ஆளும் அணிக்கு 17 இடங்கள் உள்ளன. முதல்வராக நாராயணசாமி உள்ளார். துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் இவர்.

இங்கு 2014 தேர்தலில் பாஜகவின் தோழமைக் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் வென்றது. வரும் தேர்தலிலும் அக்கட்சி அதிமுக – பாஜக அணியில் போட்டியிடுகிறது. எதிரே திமுக ஆதரவுடன் காங்கிரஸ் களத்தில் உள்ளது.

யூனியன் பிரதேசங்களான லட்சத் தீவுகளும், அந்தமான்- நிகோபர் தீவுகளும் தலா ஒரு எம்.பி.யைத் தேர்வு செய்கின்றன. இப்பகுதிகளில் சட்டப்பேரவைகள் இல்லை. துணைநிலை ஆளுநரால் இவை நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. 2014 தேர்தலில் லட்சத் தீவுகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அந்தமான-நிகோபர் தீவுகளில் பாஜகவும் வென்றன. இம்முறையும் இங்கு பெருத்த மாற்றம் நிகழ வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

2004 தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற மாநிலங்களில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் அதைச் சரிக்கட்ட தென்மாநிலங்களில் பெறும் வெற்றி உதவும் என்பது பாஜகவின் கணக்கு. அதேபோல, கேரளமும் தமிழகமும் தனது மீட்புக்கு உதவும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இவ்விரு கட்சிகளும் அல்லாதவர்கள் வெற்றி பெறும் இடங்கள் அதிகரித்தால், 17வது மக்களவையில் அவர்களது ஆதிக்கம் அதிகமாக இருக்கும்; பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி உருவாகவும் அது வழிவகுக்கக் கூடும்.

வடக்கு வாழ்கிறது- தெற்கு தேய்கிறது என்பதெல்லாம் பழங்கதை. கல்வி, பொருளாதாரம், சமூக மதிப்பீடுகளில் தொடர்ந்து வளர்ந்து வரும் தென்னிந்திய மாநிலங்கள் அரசியல் விழிப்புணர்விலும் முத்திரை பதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி – தேர்தல் உலா (19.04.2019)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: