ஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா!

25 Apr

நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களான பிகார் (40), ஜார்க்கண்ட் (14), மேற்கு வங்கம் (42), ஒடிசா (21) ஆகியவற்றில் மொத்தமாக 117 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இவற்றில் பிகாரில் பாஜகவின் தோழமைக் கட்சியான ஐக்கிய ஜனதாதளமும், ஜார்க்கண்டில் பாஜகவும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளமும் ஆட்சி செய்கின்றன.

கிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் பரபரப்புக்குள்ளாகி இருக்கும் மேற்கு வங்கம், இம்முறை தேர்தலில் ஆச்சரியமான முடிவுகளைத் தரும் என்று அரசியல் உலகம் எதிர்பார்க்கிறது.

பிகாரில் இருமுனைப் போட்டி:

2014 தேர்தலில் பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) , ராஷ்டிரீய லோக் சமதா கட்சி (ஆர்எல்எஸ்பி), ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றிருந்தன. எதிரணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சிகள் இணைந்தும், ஐக்கிய ஜனதாதளம் தனித்தும் போட்டியிட்டன.

அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி (பாஜக-22, எல்ஜேபி- 6, ஆர்எல்எஸ்பி- 3) 31 தொகுதிகளில் வென்றது. ஐக்கிய ஜனதாதளம்-2, காங்கிரஸ்- 2, தேசியவாத காங்கிரஸ்- 1, ஆர்ஜேடி- 4 ஆகியவை இதர இடங்களில் வென்றன.

அப்போது பிரதமர் பதவிக்கு பாஜகவால் முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்தார் பிகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார். அதன்காரணமாகவே ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது.

அதன்பிறகு 2015இல் பிகாரில் 243 தொகுதிகளுக்கு 2015 டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஐக்கிய ஜனதாதளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாகட்பந்தன் என்ற பிரமாண்டமான கூட்டணி பாஜக கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக ஜென்ம வைரிகளாக இருந்த லாலு பிரசாத் யாதவும், நிதிஷ்குமாரும் கைகோத்து பாஜகவுக்கு எதிராக மேடையேறினர்.

அந்தத் தேர்தலில் மகாகட்பந்தன் (ஐ.ஜ.த- 71, ஆர்ஜேடி}80, காங்கிரஸ்-27) 178 தொகுகளில் வென்று கூட்டணி ஆட்சி அமைத்தது. பாஜக (53) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 58 தொகுதிகளில் மட்டுமே வென்றது. சுயேச்சைகள் உள்ளிட்ட 7 பேர் இதர இடங்களைப் பகிர்ந்து கொண்டனர்.மாநில முதல்வராக நிதிஷும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பொறுப்பேற்றனர்.

அதன்மூலமாக தேசிய அளவில் பாஜகவின் செல்வாக்குக்கு முட்டுக்கடை போடப்பட்டது. ஆனால், லாலு பிரசாத் குடும்பத்தினரின் இடையூறுகள் மற்றும் ஆர்ஜேடி கட்சியினரின் ஊழல்களால் விரக்தி அடைந்த முதல்வர் நிதிஷ்குமார், 2017 ஜூலை 27ஆம் தேதி இரவு திடீரென கூட்டணி மாறினார். தன்னுடன் ஆட்சியில் பங்கு பெற்றிருந்த ஆர்ஜேடி கட்சியை விலக்கிவிட்டு பாஜகவுடன் கைகோத்தார் அவர். அதன்மூலமாக பாஜகவுடனான் தனது நீண்டகால நட்புறவை அவர் புதுப்பித்துக்கொண்டார்; பாஜகவின் சுஷீல்குமார் மோடி துணை முதல்வரானார்.

லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறைப்பட்டதால் ஏற்கெனவே நிலைகுலைந்திருந்த ஆர்ஜேடி கட்சி இந்த அதிரடியால் வெலவெலத்துப்போனது. நிதிஷ்குமார் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக அக்கட்சி புலம்பியது.

அதேசமயம், பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவும், உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எல்எஸ்பி கட்சியும் மிக விரைவில் அதிருப்தி அடைந்து வெளியேறின; அவை ஆர்ஜேடி அணியில் சங்கமித்தன. எல்ஜேபி பாஜக கூட்டணியில் தொடர்கிறது.

இந்த மக்களவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ், ஆர்எல்எஸ்பி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. எதிர்த் தரப்பிலோ ஆளும் கட்சிக் கூட்டணி வலிமையான தலைமைகளுடன் பலமாகத் திகழ்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முதல் பிரசாரம் வரை சரியான இணக்கம் காணப்படவில்லை.

இங்கு பாஜகவின் முன்னாள் நட்சத்திரப் பிரசாரகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாட்னாசாகிப் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது மனைவி பூனம் சின்ஹா சமாஜ்வாதி கட்சியில் இணைந்து உ.பி.யின் லக்னெü தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜகவின் முன்னாள் எம்.பி.யும் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத்தும் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி ராகுலையும், யாதவர்கள்} முஸ்லிம்கள்- தலித் மக்களின் வாக்குகளையும் நம்பி இருக்கிறது. பாஜக கூட்டணி, பிரதமர் மோடியின் பிராபல்யம், நிதிஷ்குமாரின் நற்பெயர் ஆகியவற்றை நம்பி இருக்கிறது. 7 கட்டமாக நடக்கும் தேர்தலில் பிகார் மக்கள் வாக்களிக்கின்றனர்.

ஜார்க்கண்டில் இரு கட்சிகள் மோதல்:

பிகாரில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலம், பழங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இயற்கை வளங்களும் வனப்பகுதியும் மிகுந்த இந்த மாநிலத்தை பாஜக ஆள்கிறது.

இங்கு 2014 மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக 12 இடங்களையும், காங்கிரஸ் அணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2 இடங்களையும் வென்றன.

2014 டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பாஜக கூட்டணி (பாஜக- 43, ஏஜேஎஸ்யூ-4) 47 இடங்களில் வென்றது. பாஜகவின் ரகுவர்தாஸ் முதல்வரானார்.

எதிரணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (19), காங்கிரஸ் (9), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (2), சிபிஐ}எம்எல் (1) என 31 இடங்களிலும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பிறர் 3 இடங்களிலும் வென்றன.

இம்மாநிலத்தில் ஹார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு பழங்குடி மக்களிடையே செல்வாக்கு உள்ளது. நக்ஸல் அபாயம் மிகுந்த மாநிலம் இது. ஜேஎம்எம் கட்சித் தலைவர்கள் சிபு சோரன், அவரது மகன் ஹேமந்த் சோரன், முன்னாள் பாஜக முதல்வரும் இன்னாள் எதிரியுமான பாபுலால் மராண்டி, பாஜக தலைவர் அர்ஜூன் முண்டா ஆகியோர் முக்கியத் தலைவர்கள்.

பழங்குடியினர் பிரச்னை, நக்ஸல் விவகாரம், இயற்கை வளங்கள் சுரண்டல், ஜேஎம்எம் கட்சியினரின் முறைகேடுகள், மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி ஆகியவை இத்தேர்தலில் பிரதான இடம் வகிக்கின்றன. மூன்று கட்டமாக இம்மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

இம்மாநிலத்தைப் பொருத்த வரை, பாஜக, ஜேஎம் எம் கட்சியினரிடையே தான் நேரடிப் போட்டி. பாஜகவின் தோழமைக் கட்சியாக இருந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் பிரிந்துசென்று, இத்தேர்தலில் லோக்ஜனசக்தியுடன் சேர்ந்து போட்டியிடுவது பாஜகவுக்கு பலவீனம். பிரதமர் மோடியின் பிரசாரம் இதை மாற்றிவிடும் என பாஜக நம்புகிறது.

கலவரக் களமான மேற்கு வங்கம்:

அதிரடி அரசியலுக்குப் பெயர்பெற்ற மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மாநிலம் மேற்கு வங்கம். 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியிலிருந்த இடதுசாரிகளைத் தோற்கடித்து இருமுறை சட்டப் பேரவைத் தேர்தலில் தொடர்ந்து வென்றிருப்பவர் அவர். இந்த மாநில அரசியல் மம்தாவைச் சுற்றியே சுழல்கிறது.

2014 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் 34 இடங்களை வென்றது. காங்கிரஸ் (4) பாஜக (2), சிபிஎம் (2) ஆகியவை இதர இடங்களில் வென்றன. தமிழகம் போலவே இங்கும் மோடி அலையால் 2014இல் சாதிக்க முடியவில்லை.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 2016இல் நடந்த தேர்தலில் 213 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் முதல்வரானார் மம்தா பானர்ஜி. எதிர்த்தரப்பில் காங்கிரஸ் (42), சிபிஎம் (26), பாஜக (3) உள்ளிட்ட கட்சிகள் 81 இடங்களில் வென்றன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் இணைந்த கூட்டணியால் மம்தாவை வெல்ல முடியவில்லை.

தொடர் வெற்றிகளாலும், எதிர்க்கட்சிகளுக்கு சிம் சொப்பனமாக இருப்பதாலும் மம்தா தனிப்பெரும் தலைவியாக உருவெடுத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை தனது அணியில் சேர்க்க அவர் மறுத்துவிட்டார். சிபிஎம் கட்சியும் கூட்டணி பேரத்தால் களைத்து இம்முறை காங்கிரஸ் கட்சியைக் கைகழுவிவிட்டது. பாஜகவும் தனியே போட்டியிடுகிறது. இதன்காரணமாக இம்மாநிலத்தில் நான்குமுனைப் போட்டி உருவாகி இருக்கிறது.

கடந்த ஓராண்டில் மேற்கு வங்கத்தில் பலத்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பாரம்பரியமாக காங்கிரஸ், சிபிஎம் ஆதரவாளர்களாக இருந்த பலர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரின் வன்முறையை எதிர்கொள்ள இயலாமல் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர். அதன்மூலமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பிரதான எதிரியாக பாஜக உருவெடுத்திருக்கிறது. காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் அடுத்தநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

வன்முறை அரசியல், மதக் கலவரங்கள், மம்தாவின் சிறுபான்மையினருக்கு ஆதரவான போக்கு ஆகியவை இம்மாநிலத்தை கலவரக் காடாக்கி இருக்கின்றன. இங்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. மாநிலத்தில் பெருமளவில் வாழும் இஸ்லாமியர்களும் வங்கதேசத்திலிருந்து இந்தியா வந்த அகதிகளும் தேர்தலில் தங்கள் சக்தியை பிரதிபலிப்பார்கள்.

மாநில முதல்வர் மம்தாவா, பிரதமர் மோடியா என்பதே தேர்தல் களத்தில் பிரதானக் கேள்வி. பிற எதிர்க்கட்சியினரின் வாக்குகளைக் கவரும் மையமாக பாஜக மாறியிருப்பதும் மோடி} அமித் ஷா இணையின் தீவிரப் பிரசாரமும், நான்குமுனைப் போட்டியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன.

குறைந்தபட்சம் 15 தொகுதிகளை வெல்ல இலக்கு நிர்ணயித்து பாஜக போராடுகிறது. அதேசமயம் தனது கோட்டையில் எதிர்க்கட்சிகள் வெல்வதைத் தடுக்க அனைத்துவிதமான உபாயங்களிலும் திரிணாமூல் காங்கிரஸ் ஈடுபடுகிறது.

இதனால் மாநில தேர்தல் களத்தில் பல வன்முறை நிகழ்வுகள் அரங்கேறி இருக்கிறன. வாக்கு வங்கி அரசியலா, தேசபக்தி அரசியலா என்ற கேள்வியை எழுப்பி மேற்கு வங்கத்தில் சூறாவளிப் பிரசாரம் செய்கிறார் மோடி. அந்தக் கூட்டங்களுக்கு வரும் மக்கள் திரள் வியப்பூட்டுவதாக உள்ளது. எனவே இத்தேர்தல் முடிவு ஆச்சரியம் அளித்தால் வியக்க ஏதுமில்லை.

இரு ஆளுமைகளின் மோதல்:

ஒடிசாவில் முன்னாள் தோழர்கள் இருவரிடையிலான களமாக இந்தத் தேர்தல் மாறி இருக்கிறது. மேற்கு வங்கம் போலவே இங்கும் காங்கிரஸ் வகித்த பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தை பாஜக விரைவில் சுவீகரித்துவிட்டது.

இங்கு மாநில முதல்வராக உள்ள நவீன் பட்நாயக்கிற்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான ஆளுமை மோதலாக தேர்தல் காட்சிகள் காணப்படுகின்றன. ஒருகாலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பிஜு ஜனதாதளத்தை கடுமையாகத் தாக்க முடியாமல் பாஜக திணறுகிறது. நவீன் பட்நாயக்கும் பாஜகவை கடுமையாக விம்ர்சிப்பதில்லை.

மாநிலத்தில் ஊழலற்ற அரசு} செயல்திறன் மிகுந்த அரசு என நவீன் பட்நாயக்கின் அரசு பெருமை கொள்கிறது. அதேபோல மத்தியில் ஊழலற்ற அரசு} செயல்திறன் மிக்க அரசை நடத்திய கட்சியாக தன்னை முன்னிறுத்துகிறது பாஜக. இத்தகைய வித்தியாசமான காட்சியை ஒடிசாவில் மட்டுமே காண முடியும்.

2014 மக்களைத் தேர்தலில், மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பிஜு ஜனதாதளம் 20 இடங்களிலும் பாஜக ஓரிடத்திலும் வென்றன. காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

அத்தேர்தலின்போது, 147 பேரவைத் தொகுதிகள் கொண்ட ஒடிசா சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடந்தது. அதில் பிஜு ஜனதாதளம் 117 இடங்களில் வென்று நான்காவது முறையாக முதல்வரானார் நவீன் பட்நாயக். காங்கிரஸ் (16), பாஜக (10), பிறர் (4) ஆகியோர் பிற இடங்களை வென்றனர்.

ஒடிசாவைப் பொருத்த வரை நீண்டகாலமாக முதல்வராக இருப்பதால் நவீன் பட்நாயக் மீது மக்களிடையே சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும், அதனால் தேர்தலில் பெருமளவில் பாதிப்பு இதுவரை ஏற்பட்டதில்லை. அதற்கு வலிமையான எதிர்க்கட்சி இல்லாததும் ஒரு காரணம். தற்போது பாஜக அந்தச் சவாலைக் கொடுக்கத் துவங்கி இருக்கிறது.

2019 மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இம்மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நல்ல தலைவர் என்ற பிம்பமும், பெருமளவில் குறைகள் இல்லாத ஆட்சியும் பிஜு ஜனதாதளத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடும் என நவீன் நம்புகிறார்.

ஆனால் மோடியின் பிரசாரக் கூட்டங்களில் கூடும் மாபெரும் கூட்டம் திகைப்பை ஏற்படுத்துகிறது. இத்தேர்தலில் பாஜக மாநில ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் கணிசமான தொகுதிகளில் வெல்லும் என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் ஒடிசா மாநில மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.

 

-தினமணி – தேர்தல் உலா (24.04.2019)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: