மேற்கு வங்கம்: காவியாகும் சிவப்பு!

11 May

இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்க மாநிலம் இன்று அதன் பிடியிலிருந்து நழுவுகிறது. மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகாரத்துக்கும் அரசியல் பகைமைக்கும் ஈடு கொடுக்க முடியாமல், மத்தியில் ஆளும் பாஜக பக்கம் மேற்கு வங்கத்தின் இடதுசாரிகள் மெதுவாக சாய்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இடதுசாரி அணிக்கு தலைமை தாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) வீழ்ச்சி பரிதாபமானது. மேற்கு வங்கத்தை 1977 முதல் 2011 வரை தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆண்ட சிபிஎம் இன்று தனது வாக்கு வங்கியையும் தொண்டர் பலத்தையும் சிறுகச் சிறுக இழந்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இழப்பு, அதன் சித்தாந்த எதிரியான பாஜகவுக்கு சாதகமாக மாறி வருவதைக் கண்டு அக்கட்சியின் தலைவர்கள் திகைக்கிறார்கள். பிரதமர் மோடி தலைமையில் புத்துணர்வுடன் களமிறங்கும் பாஜகவில் சிபிஎம் முன்னாள் நிர்வாகிகள் பலரும் இணைவதை கண்கூடாகக் காண முடிகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய ஜோதிபாசு முதல்வராக இருந்த வரை (1977} 2000) சிபிஎம் வலுவான கட்சியாக மட்டும் இருக்கவில்லை; அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே செயல்பட முடியாத நிலையும் நிலவியது.

சிபிஎம் நடத்திய அராஜகங்களை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை என்பதே அக்கட்சியிலிருந்து மம்தா பானர்ஜி வெளியேறி தனிக்கட்சி துவங்கவும் காரணமானது. உடல்நலக் குறைவால் ஜோதிபாசு தீவிர அரசியலிலிருந்து விலகி புத்ததேவ் பட்டாச்சார்யா வசம் முதல்வர் பதவியை ஒப்படைத்த பிறகு நிலைமை மாறத் துவங்கியது.

2000 முதல் 2011 வரை முதல்வராக இருந்த புத்ததேவ் காலத்தில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மக்கள் செல்வாக்குள்ள தலைவியாக உருவெடுத்தார். அதற்கு பாஜகவும் உதவியது. ஜோதிபாசுவும் 2010இல் காலமானார். சிபிஎம்மால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளும், இடதுசாரிக் கூட்டணியின் 34 ஆண்டுகால ஆட்சியால் அதிருப்தி அடைந்த மக்களும் ஒருங்கிணைந்ததன் விளைவாக 2011இல் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) ஆட்சிக்கு வந்தது; மம்தா பானர்ஜி முதல்வரானார்.

ஆட்சியை இழந்த இந்த 8 ஆண்டுகளில் சிபிஎம் பெருத்த வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2011இல் சிபிஎம் பெற்றிருந்த வாக்கு சதவீதம் 39.6 %. அது 2016 பேரவைத் தேர்தலில் 25.6 சதவீதமாகக் குறைந்தது. இத்தனைக்கும் அந்தத் தேர்தலில் இடதுசாரி முன்னணி காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டிருந்ததது.

அந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் டிஎம்சி 213 தொகுதிகளில் வென்றது. தேர்தல் உடன்பாடு மூலம் ஆதாயம் அடைந்த காங்கிரஸ் 44 தொகுதிகளில் வென்றது இடதுசாரி முன்னணி (சிபிஎம்} 26, ஆர்எஸ்பி} 3, பார்வர்டு பிளாக்} 2, சிபிஐ}1) 32 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

அந்தத் தேர்தலில் பாஜக அணி 6 தொகுதிகளில் வென்றது. அதேசமயம், 2011இல் 4.06 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு விகிதம் 2016இல் 10.8 சதவீதமாக அதிகரித்தது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 44.9 % ஆகவும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 12.25 % ஆகவும் இருந்தன.

அதற்கு முன் 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் இடதுசாரிகளின் வீழ்ச்சி தொடர்ந்தது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 44 மக்களவைத் தொகுதிகளில் டிஎம்சி 34 தொகுதிகளை வென்றது. முந்தைய தேர்தலில் (2009) அக்கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. அதேபோல, 15 தொகுதிகளில் வென்றிருந்த சிபிஎம் 2 இடங்களை மட்டுமே தக்கவைத்தது. மாறாக 2009 தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே வென்ற பாஜக 2014இல் இரு இடங்களில் வென்றது. அப்போதே சிபிஎம்மின் பாரம்பரிய வாக்காளர்கள் பாஜக பக்கம் சாய்வது தெரியத் துவங்கியது.

அந்தத் தேர்தலில் கட்சிகளின் வாக்கு விகிதத்தில் பெருத்த மாற்றம் காணப்பட்டது. டிஎம்சி }39.05 % (2009இல் 32 %), சிபிஎம் கூட்டணி }29.7 (2009இல் 42 %), காங்கிரஸ்} 9.58 (2009இல் 13.45 %), பாஜக }17.02 (2009இல் 6.14 %) என வாக்குவிகிதங்களை கட்சிகள் பெற்றன. அந்தத் தேர்தலில் டிஎம்சியும் பாஜகவும் மட்டுமே கூடுதல் வாக்குகளைப் பெற்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியும் சிபிஎம்மும் இழந்த வாக்குகளை பாஜக சுவீகரித்துக்கொண்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. மாநிலத்தை ஆளும் டிஎம்சி கட்சியின் அடாவடித்தனத்தால் திணறும் சிபிஎம், காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை நோக்கி நகர்கின்றனர். போதாக்குறைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை மட்டுமே பிரதான எதிரியாக வரித்து கடுமையாக பிரசாரம் செய்வது, பாஜகவுக்கு எதிர்மறை விளம்பரத்தை அளித்திருக்கிறது.

பாஜக நடத்த உத்தேசித்த ரத யாத்திரையைத் தடுத்து, அக்கட்சியை மேலும் பிரபலப்படுத்தி உதவினார் மம்தா. டிஎம்சி கட்சியினரின் வன்முறை அரசியலை பாஜக நேரடியாக எதிர்கொள்வதால் அக்கட்சியினர் மீது மக்களின் அனுதாபமும் பெருகியது. தவிர, மம்தாவின் சிறுபான்மையினர் ஆதரவுப் போக்கால் பெரும்பான்மை இந்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அது பாஜகவுக்கு சாதகமாக மாறுகிறது.

இந்நிலையில், நடைபெறும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் சிபிஎம்மும் மேலும் சரிவைச் சந்திக்க உள்ளதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக சிபிஎம்மின் வாக்குவிகிதம் 10 சதவீதத்துக்குள் குறைந்தால் வியக்க முடியாது என்பதே அவர்களின் கருத்து. அதற்குக் காரணம், பெருவாரியான இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் பாஜக அபிமானிகளாக மாறியிருப்பதே.

பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பிரசாரக் கூட்டங்களில் திரளும் லட்சக் கணக்கான மக்கள் எண்ணிக்கையே மாநிலத்தில் நிகழும் அரசியல் மாற்றத்துக்கு சாட்சி. சிலிகுரி, அசன்சா, போல்பூர், கொல்கத்தா என மோடி செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம் காணப்படுகிறது. இதுவரை சிபிஎம் சந்தித்திராத சரிவாக அக்கட்சியின் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் சொற்ப அளவிலேயே வருவதால் அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

டிஎம்சியையும் பாஜகவையும் சமதூரத்தில் உள்ள அரசியல் எதிரிகளாக அணுகி வந்த சிபிஎம், தனது கண்ணோட்டம் தவறு என உணரத் தலைப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் புத்ததேவ், பாஜகவில் இணையும் மார்க்சிஸ்டுகளை நேரடியாகவே எச்சரித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கும் அவர் நிலைமை கைமீறுவதை அறிந்து கட்சிக் கூட்டத்தில் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் எச்சரித்திருக்கிறார். டிஎம்சியினரின் வன்முறைக்குப் பயந்து பாஜகவை ஆதரிப்பது, கொதிக்கும் வாணலியிலிருந்து அடுப்புக்குள் குதிப்பதற்கு சமம் என்று அவர் குறிப்பிட்டார். சிபிஎம் கட்சியினரின் சுயஅழிவுப் பாதையிலிருந்து அவர்களைக் காத்தாக வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“”பிரதமர் மோடியும் முதல்வர் மம்தாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவர்கள் இருவருமே மதவாதத்தை மேற்கு வங்கத்தில் தூண்டி அரசியல் லாபம் அடைகிறார்கள். மோடியோ சந்தர்ப்பவாத முதலாளிகளின் காவலராக இருக்கிறார். எனவே பாஜகவை இடதுசாரிகள் எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்கக் கூடாது” என புத்ததேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் அவரது அறிவுரை காலம் கடந்ததாகத் தோன்றுகிறது. ஏற்கெனவே தேர்தல் களத்தில் பாஜகவுக்கு முன்னாள் மார்க்சிஸ்ட் தோழர்கள் உறுதுணையாகி இருந்து வருகிறார்கள். உதாரணமாக வடக்கு கொல்கத்தா தொகுதியில் டிஎம்சி வேட்பாளரான சுதீப் பந்தோபாத்யாயவை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ராகுல் சின்ஹாவின் பிரசார அணியில் முன்னாள் கம்யூனிஸ்டுகள் பலரைக் காண முடிகிறது.

அந்தத் தொகுதியில் உள்ள 1862 வாக்குச்சாவடிகளுக்கு கட்சி சார்பில் நிர்வாகிகளை நியமிக்க முடியாத நிலையில் பாஜக உள்ளது. அக்கட்சியால் 500 பூத்களில் மட்டுமே வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க முடிந்தது. மீதமுள்ள பூத்களில் பாஜகவுக்கு உதவியாக முன்னாள் இடதுசாரிகள் செயல்படுவதைக் கண்டு பத்திரிகையாளர்கள் வியந்தனர்.

சிபிஎம்மின் தீவிர விசுவாசியான தபன் பிஸ்வாஸ் என்ற தொண்டர் டம்டம் தொகுதியில் பாஜக வேட்பாளர் செüமிக் பட்டாச்சார்யாவுக்கு வாக்கு சேகரிக்கிறார். அவரைப் பொருத்த வரை, தேர்தல் களத்தில் தனது அரசியல் எதிரியை வெல்லும் பலம் சிபிஎம்முக்கு இல்லை; அந்த இடத்தை பாஜக நிரப்புகையில் அதை ஆதரிப்பது தவறல்ல.

“சிபிஎம் காலாவதியான கட்சியாகிவிட்டது. அக்கட்சிக்குக் கூடும் மக்கள் கூட்டம் மிகக் குறைவு. முன்னர் சிபிஎம்மில் இருந்தபோது டிஎம்சியினரின் பகையைச் சம்பாதித்திருக்கிறேன். இனி நான் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் வலிமையான கட்சியில் இருந்தாக வேண்டும்” என்று தனது தரப்பை அவர் நியாயப்படுத்துகிறார்.

இதேபோன்ற காட்சிகளை மேற்கு வங்க மாநிலம் நெடுகக் காண முடிகிறது. சிவப்புக் கொடியேந்தி கோஷமிட்ட தொண்டர்கள் பலரும் காவிக்கொடியுடன் மம்தாவை எதிர்த்து போராடுகின்றனர். இந்த வித்யாசமான காட்சியே அரசியல் செல்லும் திசையைக் காட்டுகிறது.

ஹபீப்பூர் பேரவைத் தொகுதியில் சிபிஎம் எம்எல்ஏவாக இருந்த காகென் முர்மு கடந்த மார்ச் மாதம் பாஜகவுக்கு மாறிவிட்டார். தற்போது அவர் வடக்கு மால்டா மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

இயக்க ரீதியாகவும் மக்கள் செல்வாக்கு ரீதியாகவும் சிபிஎம் பெற்றிருந்த இடத்தைக் கைப்பற்ற பாஜக முனைகிறது. மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பது பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது. மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும் திராணி பாஜகவுக்கு மட்டுமே இருப்பதாக டிஎம்சியின் அரசியல் எதிரிகள் கருதுவதால், பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் மேற்கு வங்கம் முழுவதும் பிரபலமான தலைவராகி விட்டார்.

திரிபுராவில் பாஜக நிகழ்த்திக் காட்டிய அதிசயத்தை வெகுவிரைவில் மேற்கு வங்கத்திலும் பாஜக அரங்கேற்ற வாய்ப்பிருப்பதாக தேர்தல் வல்லுநர்கள் கூறத் துவங்கியுள்ளனர். அதனால்தான் திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் மேற்கு வங்க மக்களை எச்சரித்திருக்கிறார்.

“திரிபுராவில் இடதுசாரிகள் எடுத்த தற்கொலை முடிவை மேற்கு வங்கத்தில் எடுத்துவிடக் கூடாது. திரிபுராவில் ஆட்சியைப் பிடித்த பாஜக எதிர்க்கட்சிகளை நசுக்குகிறது. அதேபோன்ற நிலை மேற்கு வங்கத்திலும் ஏற்பட அனுமதிக்கக் கூடாது” என்கிறார் அவர்.

ஆனால் மக்கள் எண்ணமும் காலமும் சிபிஎம் கட்சிக்கு அனுகூலமாக இல்லை. பாஜகவின் மூலவடிவமான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி, வங்க மாநிலத்தவர். அவரது மாநிலத்தில் அவரது வழிவந்த பாஜகவினர் வெற்றியை நோக்கிப் பயணிப்பது காலத்தின் கோலம் அல்லாமல் வேறென்ன?

 

-தினமணி- தேர்தல் உலா (10.05.2019)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: