அறிவியல் படிப்பு: தேவைகள், பிரிவுகள், வாய்ப்புகள்…

22 May

அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேறியுள்ள நாடுகளே இன்று உலக அரங்கில் வளர்ந்த நடுகளாக உள்ளன. இதிலிருந்தே அறிவியல் படிப்புகளின் முக்கியத்துவம் புரியும்.

ஆனால் பள்ளிக் கல்விக்குப் பிறகு கல்லூரிக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பெரும்பாலோரிடையே அறிவியல் படிப்பு குறித்த ஒவ்வாமை, அச்சம், அக்கறையின்மை காணப்படுகிறது.

மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், வணிகப் படிப்புகளுக்கு அடுத்த நிலையில் மட்டுமே தற்போது அறிவியல், கலை படிப்புகள் கவனம் பெறுகின்றன. அதேசமயம், அறிவியல் பட்டதாரிகளுக்கு நாட்டில் தேவை கூடியுள்ளது. அதேபோல, அறிவியல் படிப்புகளின் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

வளரும் நாடு என்ற நிலையிலிருந்த இந்தியா பொருளாதா முன்னேற்றத்தால் முன்னேறிய நாடு என்ற நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன்காரணமாக பல துறைகளிலும் சீரான வளர்ச்சி காணப்படுகிறது. இந்த வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டுமானால், அறிவியல் சார்ந்ததாக இருக்க வேண்டும்; நமது திட்டங்களும், செயல்முறைகளும் அறிவியல்பூர்வமானதாக இருக்க வேண்டும். அதைப் பூர்த்தி செய்ய நாட்டில் அறிவியல் வல்லுநர்களின் தேவை அதிகமாக உள்ளது.

கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், அரசு சார்பு அமைப்புகளில் அறிவியல் பட்டதாரிகளின் தேவை மிகுந்து வருகிறது. இதற்கு அடிப்படைப் படிப்பான இளநிலை அறிவியல் (பி.எஸ்சி.) படிப்பை மாணவர்கள் தேர்வு செய்வது அவர்களது எதிர்காலத்துக்கு உதவும்.

பி.எஸ்சி. படிப்பும் வகைப்பாடுகளும்…

பிளஸ் 2 (அறிவியல் பிரிவு) முடித்த பின்னர், அதிக செலவில்லாமல் உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு மிகச் சிறந்த வாய்ப்பு பி.எஸ்சி. படிப்பு.

நான்காண்டு பட்டப் படிப்பான பி.எஸ்சி. ஹானர்ஸ், கல்வியுடன் கூடுதல் அறிவு, செய்முறைப் பயிற்சி, ஆய்வுத்திறன் மிக்கதாகும். இப் படிப்பு சில குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டுமே உள்ளது.

பொதுவாக, மூன்றாண்டு பயிலும் பட்டப் படிப்பான பி.எஸ்சி.யில் 150க்கு மேற்பட்ட படிப்புகள் உள்ளன. அடிப்படை அறிவியல், கணிதம், மருத்துவம் சார்ந்த அறிவியல், பொறியியல் சார்ந்த அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் என பல வகைப்பாடுகள் இதில் உண்டு.

இவற்றில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல், புவியியல், நிலவியல், கணினி அறிவியல், வேளாண்மை அறிவியல், தோட்டக்கலை போன்றவை பிரதானமானவை.

இவையல்லாது, நர்ஸிங், மனோவியல், உயிரி அறிவியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், உடலியல், மரபியல், உணவு அறிவியல் போன்ற மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. படிப்புகள் உள்ளன.

தொழிலக அறிவியல், தொழிலக வேதியியல், மின்னணுவியல், சூழியல் அறிவியல், கடல்சார் அறிவியல், விண்வெளி அறிவியல் போன்ற பொறியியல் சார்ந்த பி.எஸ்சி. படிப்புகளும், மீன்வளம், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், தடய அறிவியல், குற்றவியல், மல்டி மீடியா, திரைப்படவியல், பேஷன் தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பி.எஸ்சி. படிப்புகளும் உள்ளன.

உயிரி மருத்துவ அறிவியல், மின்வேதியியல், புவி அறிவியல், புவி அமைப்பியல் போன்ற தனித்துவமான பி.எஸ்சி. படிப்புகளும் சில கல்லூரிகளில் உள்ளன.

மாணவர்கள் தங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்ற அடிப்படையில், இந்தப் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். அடிப்படை அறிவியல் படிப்புகள் பெரும்பாலான அரசுக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. சிறப்பு அறிவியல் படிப்புகள் எங்கு உள்ளன என்பதை இணையம் மூலமாக அறியலாம்.

எந்தப் படிப்பைத் தேர்வு செய்தால் எந்த வகையான வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்பதற்கும் இணையம் வழிகாட்டுகிறது. அந்த அடிப்படையிலும் மாணவர்கள் அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.

பி.எஸ்சி. படிப்புக்கு அப்பால்…

இளநிலை அறிவியல் பட்டப் படிப்பை முடித்தோருக்கு கீழ்க்கண்ட மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன.

1. முதுநிலை அறிவியல் படிப்பு (எம்.எஸ்சி.)
2. கல்வியியல் படிப்பு (பி.எட், எம்.எட்.)
3. கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்பு (எம்.ஃபில், பிஎச்.டி.)
4. தகுதியை உயர்த்தும் சான்றிதழ் படிப்புகள்.
5. மேலாண்மைக் கல்வி (எம்.பி.ஏ.) உள்ளிட்டவை.
6. ஆராய்ச்சி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் மேற்படிப்பு (ஸ்காலர்ஷிப்)
7. வெளிநாடுகளில் உதவித் தொகையுடன் ஆய்வுப் படிப்பு (ஃபெல்லோஷிப்).

-இவை அனைத்துக்கும் தனிப்பட்ட முயற்சிகளும், தேடுதல்களும் அவசியம்.

இளநிலைப் பட்டப் படிப்பு முடித்தோர் மத்திய- மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள், குடிமைப்பணித் தேர்வு, வாரியத் தேர்வுகளுக்கு தகுதி பெற்றவர்கள். பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவோரால் இந்தத் தேர்வுகளில் எளிதில் வென்று அரசுப் பணியில் சேர முடியும்.

பி.எஸ்சி. உடன் பி.எட், எம்.எட். பட்டம் பெற்றவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிய முடியும். எம்.ஃபில், பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றலாம். கல்லூரிகளில் பணியாற்ற ஸ்லெட், நெட் போன்ற தகுதித் தேர்வுகளை எழுத வேண்டும்.

தங்கள் துறைகளில் உயர் ஆராய்ச்சி செய்ய விரும்புவோருக்கும் பெருமளவில் வாய்ப்புகள் உள்ளன. ஐஐஎஸ்சி, இஸ்ரோ, டிஐஎஃப்ஆர் போன்ற அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் நடத்தும் பெருநிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆய்வு உதவியாளர், விஞ்ஞானி, ஆய்வுப் பகுப்பாளர், ஆராய்ச்சியாளர் எனப் பல நிலைகளில் பணியாற்றவும், வேலை செய்துகொண்டே தொடர் ஆய்வுகளில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளன.

இவை அல்லாது தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு அடிப்படைத் தரமாக இளநிலைப் பட்டம் கருதப்படுகிறது.

எனவே, எல்லோரும் ஓடும் திசையிலேயே ஓடாமல், புதியன காணும் ஆர்வத்துடன், தன்னம்பிக்கையுடன் படிப்போருக்கு இளநிலை அறிவியல் படிப்பு அற்புதமான வாய்ப்பாகும்.

புதியன விரும்பும் இளம் தலைமுறையே உலகில் மாற்றங்களை உருவாக்கும். இன்றைய நவீன உலகம் அறிவியலின் வளர்ச்சியால்தான் சாதனைச் சிகரத்தை எட்டி இருக்கிறது. புதிய சாதனை புரியத் துடிப்போருக்காக அறிவியல் உலகம் காத்திருக்கிறது.

-தினமணி மாணவர் மலர்- 2019

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: