அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்!

23 May

அங்கிருந்து இங்கும்
இங்கிருந்து அங்கும்
அல்லாடும் பறவைகள்.
எங்கேனும் அன்பும் ஆதரவும்
கிட்டக்கூடும் என்பது
இறகுகளின் ஓசை.
.
தொழில்வயிற் பிரிந்து
ஆயிரம் காதம் தாண்டி
மூட்டை முடிச்சுக்களுடன்
நம்பிக்கைப் பயணம்-
இரவல் வாழ்க்கை.

காண்பவர்களுக்கு
வலசைப் பறவைகளாகத் தென்படலாம்.
இறகு வலிக்கப் பறக்கும்
பறவையின் உள்ளம்
தொலைதூரக் குடும்பத்திடம்
நிலைகொண்டிருப்பதை
இரை சேர்க்கும்
பறவைகளே உணர முடியும்.
.
குறைந்த கூலி-
அதிக வேலை எனும்
எதிர்மாறல் விகிதத்திலும்
நேர்மறைச் சிந்தனை
எளிதல்ல.
.
இயற்கைச் சீற்றமும்
கொள்ளை நோய்களும்
திடீர்ப் பஞ்சமும்
வானம் பார்த்த பறவைகளை
நிலைகுலையச் செய்வதுண்டு.
அகன்ற வானுக்கு அஞ்சுவதில்லை
சிறகுள்ள பறவைகள்.
அவற்றின் கவலை
மண்ணில் கட்டிய கூடு மட்டுமே.
.
எங்கோ வாழும் குடும்பத்துக்காக
தொல்லைகள் மறந்து
துயரம் மறைத்து
பட்டினி கிடந்து
நேரம் கடந்து
உழைத்ததெல்லாம்
ஊரடங்கிடில்
மாயம் தானா?
.
அலைகடல் தாண்டுவதும்
வேட்டைக்காரர்களிடம் பிழைப்பதும்
இரைக்கான போட்டியில் துடிப்பதும்
வாகன இரைச்சலில் தவிப்பதும்
என்றேனும் தாயகம் மீள்வதும்
பறவைகளே
தேடிக்கொண்ட விதி.
.
நெடுஞ்சாலைகளில் நடந்தும்
அரசு இயக்கும் சிறப்பு ரயிலேகியும்
மெலிந்த வயிற்றுடன்
வெறித்த கண்களுடன் செல்லும்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போல-
வானமெங்கும்
அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள்.
.
இனி திரும்ப வரக் கூடாது;
சொந்தக் கூட்டில் தலை சாய்ந்தால்
போதுமென்ற எண்ணம்
பறவைகளுக்கும் வருவதுண்டு-
புலம் பெயர்ந்தோர் போல.
.
ஆயினும்-
மழை பொழிந்து
குளம் நிறைந்திடுகையில்
எப்படித்தான் தெரியுமோ…
இறகு விரித்துவிடும்
இதே பறவைகள்!
.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: