Archive | பிற RSS feed for this section

சுதேசி இணைக் கணினியை உருவாக்கிய விஞ்ஞானி

13 Dec

 

ரோத்தம் நரசிம்மா

ரோத்தம் நரசிம்மா

இந்தியாவின் விண்வெளியியல் சோதனைகளுக்குத் தேவையான இணைக் கணினித் தொழில்துட்பத்தை (Parellel Computing) அளிக்க வல்லரசு நாடுகள் முன்வராதபோது, அதை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, தேசிய விண்வெளி ஆய்வகம் 1986-இல் ஃப்ளோசால்வர் எம்கே1 (Flowsolver MK 1) என்ற சுதேசி வன்பொருளை வடிவமைத்தது. அந்தப் பணிக்கு தலைமை வகித்தவர் ரோத்தம் நரசிம்மா.

விண்வெளி விஞ்ஞானியும், திரவ இயக்கவியல் (Fluid Dynamics)  நிபுணருமான ரோத்தம் நரசிம்மா, இத்துறைகளில் 250 ஆய்வறிக்கைகளையும், 15 நூல்களையும் எழுதியுள்ளார். Continue reading

இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி

28 Jun
எம்.ஜி.கே.மேனன்

எம்.ஜி.கே.மேனன்

இந்தியாவின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் அணுவியல் மேதையான ஹோமி ஜஹாங்கீர் பாபா. அவரது அடியொற்றி, தேசத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு துணை புரிந்தவர், மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன். சுருக்கமாக, எம்.ஜி.கே.மேனன்.

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைக் கணக்கில் கொள்வார்கள்; ராஜதந்திரிகள் அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொள்வார்கள். அதுபோல, உடனடி அறிவியல் சாதனைகளைவிட, அடுத்தடுத்த தலைமுறை சாதனைகளுக்கு வித்திடுபவரை அறிவியல் ராஜதந்திரி எனலாம்.  அத்தகையவர் தான் எம்.ஜி.கே.மேனன். Continue reading

அனுபவக் கதைகளின் கோவை

22 Feb

nool5c

முதுபெரும் எழுத்தாளரான வாதூலன், தினமணிக்கதிர், அமுதசுரபி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய 18 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் அடக்கமான முன்னுரை நூலுக்கு கணம் சேர்க்கிறது.

உறவுகளிடையே நிலவும் பொய்மைகள், பொறாமைகள், மனப்போராட்டங்களை விளக்கும்  ‘கலிபோர்னியா திராட்சை’  கதைதான் நூலின் தலைப்பாக உள்ளது. உறவினரின் உயர்வால் மனம் புழுங்கி தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் சுந்தர மாமாவின் படைப்பில், மனித உணர்வுகளை எடைபோடும் கதாசிரியரின் திறம் வெலிப்படுகிறது.

தந்தைக்கு சிரார்த்தம் செய்யப்போன இடத்தில் வசதிக்குறைவுகளால் சங்கடப்பட்டு, பின்னர் அதனால் மனக்கிலேசமடையும் மகாதேவனிடம் சராசரி மனிதனைக் காண்கிறோம் (அப்பாவுக்காக).

எதையும் காலம் கடந்து செய்தால் பயனில்லை என்பதை நெரிசல் மிகுந்த பேருந்திலிருந்து இறங்கப்போகும் தருணத்தில் கிடைத்த இருக்கையால் பெற்ற ஞானோதயம் மூலம் உணரும் கிருஷ்ணமூர்த்தி, தனது மகனுக்கு இருசக்கர வாகனம் வாங்கத் தீர்மானிப்பதை இயல்பாக உணர முடிகிறது (கூட்டத்தின் நடுவே).

வசதியின்மையால் குறைபாடுள்ள மணமகனை ஏற்கத் தயாராகும் செஞ்சுலட்சுமியின் தோல் அரிப்புக் குறைபாட்டைக் காணுகையில் வாழ்வின் யதார்த்தம் சுடுகிறது (சோப்புத்தூளும் மெக்கானிக் ஷாப்பும்).

பெரும்பாலான கதைகளின் களம் கோவையாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நூலை அனுபவக் கதைகளின் கோவை எனலாமா?

.

***

கலிபோர்னியா திராட்சை…

வாதூலன்

208 பக்கங்கள், விலை: ரூ. 90.

அல்லயன்ஸ் பதிப்பகம்,
ப.எண்: 244, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர், சென்னை- 600 004,
தொலைபேசி: 044- 2264 1314.

.

ஐன்ஸ்டீனின் நண்பரான இந்திய விஞ்ஞானி

17 Nov
SatyenBose

சத்யேந்திரநாத் போஸ்

மிகவும் நுண்ணிய அணுக்கள் இணைந்தே நாம் காணும் உலகம் உருவானது என்று அறிவியல் கூறுகிறது. இந்த அணுவுக்குள் 16 வகையான நுண்துகள்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அவற்றுள் முக்கியமானவை எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை. இந்த அணுக்களுக்கு எடையை அளிக்கும் நுண்துகள் உள்ளது என்பதற்கான கோட்பாட்டை (போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல்) கண்டறிந்தவர் ஓர் இந்திய விஞ்ஞானி.

அவரது பெயர் சத்யேந்திரநாத் போஸ். அதன்காரணமாக, பின்னாளில் கண்டறியப்பட்ட அந்தப் புதிய துகளுக்கு “போஸான்’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.

வங்க மாநிலத்தில் நாடியா மாவட்டம், பாரா ஜாகுலியா கிராமத்தில் 1894 ஜனவரி 1-இல் பிறந்த சத்யேந்திரநாத் போஸ், சிறு வயதிலேயே கணிதத்திலும் இயற்பியலிலும்  தீவிர ஈடுபாடு கொண்டார். அங்குள்ள மாநிலக் கல்லூரியில்  பயன்பாட்டுக் கணிதத்தில் போஸ் முதுநிலை பட்டம் பெற்றார். அந்தக் கல்லூரியில் அவருக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஜெகதீச சந்திர போஸும் பிரஃபுல்ல சந்திர ராயும். கல்லூரியில் அவருக்கு சக மாணவராக இருந்தவர் பின்னாளில் பிரபல விஞ்ஞானியான மேகநாத் சஹா.

பட்டப்படிப்பு முடிந்தவுடன், 1916 முதல் 1921 வரை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய சத்யேந்திரநாத் போஸ், கல்விப் பணியுடன் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். அப்போதுதான் ஜெர்மனி நாட்டு  இயற்பியல் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு (THEORY OF RELATIVITY) உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.

அதை அறிவதற்காகவே, ஜெர்மானிய மொழியைக் கற்ற போஸ், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகுக்கு அளித்தார். அன்றுமுதல் ஐன்ஸ்டீனுடன் போஸுக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது. அப்போது துகள் இயற்பியல் (Quantum
Physics), துகள் பொறியியல் (Quantum Mechanics) ஆகிய துறைகளில் அவரது கவனம் சென்றது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு (1918) பெற்ற ஜெர்மனி விஞ்ஞானியான மாக்ஸ் பிளாங்கின் மின்காந்தக் கதிர்வீச்சு தொடர்பான பிளாங்கின் விதி (Max Plank ‘s Law)  பற்றியும், ஒளித்துகள் கோட்பாடு (Light Quantum Hypothesis) பற்றியும்  ஓர் ஆய்வுக் கட்டுரையை ஐன்ஸ்டீனுக்கு போஸ் 1924-இல் அனுப்பினார். அது அவரது வாழ்வில் திருப்புமுனையானது. அதை ஜெர்மனியில் தானே மொழிபெயர்த்து வெளியிடச் செய்தார் ஐன்ஸ்டீன். அன்றுமுதல் அவரை  தனது குருவாக வரித்துக் கொண்டார் போஸ்.

அதேபோல, ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாட்டை விளக்கி போஸ் எழுதிய கட்டுரையில் அவர் கையாண்டிருந்த கணித அணுகுமுறை ஐன்ஸ்டீனை பெரிதும் கவர்ந்தது. அந்த முறையை ஐன்ஸ்டீனும் பின்பற்றத் தொடங்கினார்!

போஸுக்கு புகழ் பெற்றுத் தந்தது, துகள் புள்ளியியலில் (Quantum Statistics) அவர் 1924-25-இல் அளித்த வரையறைக் கோட்பாடாகும். அதை பின்னாளில் ஐன்ஸ்டீன் மேலும் வளர்த்தெடுத்தார். எனவே இது ‘போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல்’ (Bose-Einstein Statistics) என்று பெயர் பெற்றது.

1925-இல் ஜெர்மனியில் ஐன்ஸ்டீனும் போஸும் இணைந்து இயற்பியல் குளிர்விப்பு கருதுகோளை வெளியிட்டனர். அடர்த்தி குறைந்த வாயுவை அதீத குளிர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லும்போது அதன் அணுக்கள் தன்னிலை மாறுவது குறித்த அந்தக் கருதுகோள், ‘போஸ்- ஐன்ஸ்டீன் செறிபொருள்’ (Bose-Einstein Condensate) என்று பெயர் பெற்றது. இவை பின்வந்த துகள் இயற்பியல் துறையின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தன.

அடுத்து பிரான்ஸ் சென்ற போஸ், கதிரியக்கம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மேரி கியூரியைச் சந்தித்தார். அவரது நட்புறவு கதிரியக்கம் தொடர்பான ஆராய்ச்சியிலும் போûஸச் செலுத்தியது. கியூரியின் சோதனைச்சாலையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல, அணுவின் உள்ளமைப்பை விளக்கிய பிரபல டச்சு விஞ்ஞானியான நீல்ஸ் போஹ்ர்  என்பவருடனும் போஸ் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.

போஸுடன் அக்காலத்தில் பணியாற்றிய வெளிநாட்டு விஞ்ஞானிகள் அனைவருமே அவரது மேதைமையை ஏற்றனர். அவர்களில் பலர் நோபல் பரிசையும் பெற்றனர். ஆனால், அடிமை நாட்டைச் சேர்ந்தவராக இருந்ததால் சத்யேந்திரநாத் போஸுக்கு நோபல் குழு உரிய மதிப்பை அளிக்கத் தவறியது.

ஐன்ஸ்டீனின் பரிந்துரையால், டாக்கா பல்கலைக்கழகத்தில் 1926-இல் பேராசிரியராகி, 30 ஆண்டுகள் போஸ் பணிபுரிந்தார். இவரது விஞ்ஞான சாதனைகளைப் பாராட்டி பாரத அரசு 1954-இல் பத்மவிபூஷண் விருது வழங்கி கௌரவித்தது.

அறிவியலை தாய்மொழியான வங்கத்தில் கற்பிக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் போஸ். அவர் பிரெஞ்ச், லத்தீன், ஜெர்மன், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இசையிலும் மிகவும் திறன் பெற்றவராக விளங்கினார். நேதாஜியின் நண்பராகவும் இருந்திருக்கிறார். சக விஞ்ஞானியான மேகநாத் சஹாவுடன் இணைந்து வெப்ப இயக்கவியலில் அவர் உருவாக்கிய கோட்பாடு நிலைவின் சமண்பாடு (Equation of State) என்று அழைக்கப்படுகிறது.

தனது வாழ்நாள் முழுவதும் இயற்பியலின் ஒரு பிரிவான துகள் இயற்பியலுக்காகப் பணியாற்றிய சத்யேந்திரநாத் போஸ் 1974, பிப்ரவரி 4-இல் மறைந்தார். அவரது பெருமையை இன்னமும் இந்திய மாணவர்கள் அறியவில்லை என்பதே, நாம் அறிவியலில் ஏன் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறது.

***

ஹிக்ஸ் போஸானும் போஸும்…

250px-CERN_LHC_Tunnel1

ஆட்ரான் மோதுவி இயந்திரம்

நேர்மின்னூட்டம் கொண்ட புரோட்டான்களை ஒளிவேகத்தில் எதிரெதிர்த் திசையில் மோதச் செய்யும்போது, அணுக்களுக்கு எடையை அளிக்கும் ‘போஸான்’ துகள்கள் பிரியும் என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் பிரபஞ்சத்தின் தோற்ற ரகசியத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதற்காக ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகத்தால் (CERN) ஜெனீவா அருகில், தரைக்கடியில் அமைக்கப்பட்ட 27 கி.மீ. நீளமுள்ள வட்ட வடிவிலான பிரமாண்டமான குழாயில் அமைக்கப்பட்ட மாபெரும் ஆட்ரான் மோதுவி இயந்திரத்தில் (Large Hadrton Collidar) 2012 ஜூலை 5-இல் இந்தத் துகள் பிரிக்கப்பட்டது.

இதை விஞ்ஞானிகள் அறிவித்தபோது, புதிய துகளுக்கு “ஹிக்ஸ் – போஸான்’ என்று
பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வு வருங்கால அறிவியலின் திசையைத் தீர்மானிப்பதாக இருக்கும். இந்த சாதனைக்கு வித்திட்டவர்களுள் இந்தியரான சத்யேந்திரநாத் போஸும் ஒருவர் என்பது நாம் பெருமிதம் கொள்ள வேண்டியதாகும்.

.

-தினமணி- இளைஞர்மணி- 17.11.2017

.

ஆச்சியின் நேர்காணல்…

18 Oct
achi manorama article - vm murali

விஜயபாரதம் தீபாவளி மலர்- 2010

.

படத்தின் மீது சொடுக்கினால், பெரிதாக்கிப் படிக்கலாம்!

.