Archive | மதிப்புரை RSS feed for this section

சித்தர்கள் குறித்த அறிமுகம்

10 Mar

சித்தத்தை அடக்கியதன் மூலமாக அரிதினும் அரிய சித்துகளைப் பெற்றவர்கள் சித்தர்கள். தமிழ் மண்ணுக்கே உரித்தான பாரம்பரியச் சிறப்பாக சித்தர்களைச் சொல்லலாம். “சிந்தை உடையவர்கள் சித்தர்கள். முக்திக்கு மூலமாக விளங்குபவர்கள்; எப்போதும் சிவத்தன்மையுடன் இருப்பவர்கள்” என்று சித்தர்களுக்கு திருமூலர் இலக்கணம் வகுத்திருக்கிறார்.

பதினெண் சித்தர்கள் என்ற வழக்கலாறு பொதுவாக இருந்தாலும், அந்தச் சித்தர்களை குறிப்பிட்டு வகைப்படுத்துவதில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருவரது பட்டியலில் சில சித்தர்கள் விடுபடுவதும், மற்றொருவர் பட்டியலில் வேறு சில சித்தர்கள் விடுபடுவதும் இயல்பாக உள்ளன. சித்தர்களின் எண்ணிக்கை 18க்கு மேல் என்பதே அதற்குக் காரணம். இதனை நூலாசிரியர் தெளிவாக முன்னுரையிலேயே கூறிவிடுகிறார். Continue reading

விவேகானந்த- பாரதி ஆய்வுக்கு வரப்பிரசாதம் – 2

15 Feb

கவிஞரும் பத்திரிகையாளருமான மகாகவி பாரதி,   சகோதரி நிவேதிதையை தனது குருவாக வரித்துக் கொண்டவர். நிவேதிதையின் குருநாதர் சுவாமி விவேகானந்தர். எனவே, சுவாமி விவேகானந்தர் குறித்த மிக உயர்ந்த அபிமானம் கொண்டவராக பாரதி விளங்கினார்.

தான் நடத்திய பத்திரிகைகளிலும் பணிபுரிந்த பத்திரிகைகளிலும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விவேகானந்தரைப் போற்றி மகிழ்கிறார் பாரதி. “காலஞ்சென்ற விவேகானந்தப் பரமஹம்சமூர்த்தியே இந்திய சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் இட்டவர் என்பதை உலகம் அறியும்” என்று இந்தியா பத்திரிகையில் (1908 ஜூன் 6) குறிப்பிட்டிருப்பார் பாரதி. Continue reading

விடுதலை வீரரின் காவியம்

4 Nov

விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).

சட்டம் படிக்க லண்டன் சென்ற இடத்தில், ஆங்கிலேய அரசுக்கு எதிராக ‘இந்திய சுதந்திர சங்கம்’ என்ற புரட்சிகர இளைஞர் குழுவைத் திரட்டி, இந்திய சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்தவர் அவர். லண்டனில் அவர் தங்கியிருந்த இந்தியா ஹவுஸ் விடுதி விடுதலை வீரர்களின் பாசறையாக விளங்கியது. அங்கு இருந்தவர்தான் தமிழகத்தின் வ.வே.சு.ஐயர். Continue reading

திருக்குறளில் பொருளாதாரம்

29 Apr

திருக்குறளின் அமைப்பிலேயே அறம், பொருள், இன்பம் என்ற படிநிலைகள் உள்ளன. அறவழியில் பொருளீட்டி அதன்மூலம் இன்பம் துய்ப்பதே நல்வாழ்க்கை என்பதுதான் திருவள்ளுவர் வகுத்த சாசனம்.

இன்று பொருளாதார சிந்தனையாளர்கள் கூறும் பெரும்பாலான கருத்துகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் சொல்லிச் சென்றிருக்கிறார். அந்தக் கருத்துகளை உள்வாங்கி இந்நூலைப் படைத்திருக்கிறார், தமிழக மின்வாரியத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சீனி.வரதராஜன். Continue reading

அரவிந்தரின் கவிதை நாடகம்

27 Mar

விடுதலைப் போராட்ட வீரரும் புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது பலரும் அறியாத தகவல். வங்கம், ஹிந்தி. சமஸ்கிருதம் மட்டுமின்றி, ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் அவர். புதுவையில் வசித்தபோது அவரது எழுத்தாற்றல் வடிவம் பெற்றது. அவர் எழுதிய கவிதைகள், நாடகங்கள், உரைநடை நூல்கள், காவியங்கள், தத்துவ விளக்கங்கள், கடிதங்கள் போன்றவை அவரது மேதைமையை வெளிப்படுத்துகின்றன.

அரவிந்தர் எழுதிய ‘எரிக்’ என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது.  இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் இதுவென்பது நாடகத்திலிருந்து தெரிய வருகிறது.

இதனை, அழகுத் தமிழில், இனிய யாப்புச் செய்யுள்களில் அரவிந்தரின் மூலத்துக்கு தகுந்த வகையில்,  ‘எரிக்கன்’ என்ற கவிதை நாடகம் ஆக்கி இருக்கிறார் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த சிவ.சூரியநாராயணன். அரவிந்தரின் ஆங்கில நடையில் தனது மனதைப் பறிகொடுத்த எழுத்தாளர், அதனை உள்வாங்கி தமிழுக்கேற்ற செம்மாந்த நடையிலும், நமது பண்பாட்டுக்கேற்ற இன்சொற்களிலும், மூலமா, மொழிபெயர்ப்பா என்று  புலப்படாதவாறு தமிழாக்கி இருக்கிறார். Continue reading

நம்மைச் செதுக்கும் மனிதர்கள்!

30 Jul

வாழ்க்கைக்கு வழிகாட்டும்  கருத்துகளை எளிமையாகவும்,  தெளிவாகவும் கட்டுரையாக்குவதில் வல்லவர் ஐஏஎஸ் அதிகாரியான வெ.இறையன்பு. அவர் மங்கையர் மலர் இதழில் எழுதிய கட்டுரைகள், கோவை விஜயா பதிப்பகத்தால் நேர்த்தியான நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

வாழ்வில்  ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அவர்களிடமிருந்து நாம்  கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது என்கிறார் இறையன்பு. “ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் என்ற உண்மை நமக்குப் புரியும்” என்கிறார் அவர். தான் சந்தித்த அத்தகைய மனிதர்கள் குறித்த சிறு குறிப்புகளை இலகுவான வாசிப்புக்கு ஏற்ற நடையில், ஆங்கிலத்தில் இனிய மேற்கோள்களுடன் 50 கட்டுரைகளாக அவர் வடித்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.

இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும், நம்மை வியக்கச் செய்கிற, விம்மச் செய்கிற, நம்மை நாமே பரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிற பலரைச் சந்திக்கிறோம். போகிற போக்கில் தனது மனதை உறுத்திய சில நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சாதாரண மனிதர்களிடமும் நாம் அறிய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

“நாமாகப் படித்துக் கற்றவை சொற்பம். கேட்டும், கவனித்தும், கற்றுக்கொண்டவையே அதிகம். மனிதர்களில் சிலர் புத்தகமாக இருக்கிறார்கள். ஒருசிலர் நூலகமாக இருக்கிறார்கள். நம்முடைய  தன்முனைப்பை நடராஜர் முயலகனை அமுக்குவதைப்போல அமுக்கிவைத்தால் சந்திப்புகளின்போது பேரண்ட நடனம் சாத்தியம். காதுகளைத் திறந்துவைப்பதும், இதழ்களை மூடி வைப்பதும் சந்திப்பைச் செம்மையாக்கும்… நம் சந்திப்பில் ஏழைகள், எளிய மனிதர்கள் அதிகம் இருக்கும்போது நம் புரிதல் இன்னும் கூர்மையாகிறது” என்று நூலின் இறுதியில் இறையன்பு குறிப்பிடுகிறார்.

படிக்க விறுவிறுப்பாகவும், படித்து முடித்தவுடன் புதிய தெளிவை அளிப்பதாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது. சக மனிதர்களுக்குப் பரிசளிப்பதற்கு ஏற்ற நூல் இது.

 

***

 

சந்தித்ததும் சிந்தித்ததும்

வெ.இறையன்பு

280 பக்கம், விலை: ரூ. 200.

விஜயா பதிப்பகம், 
20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-641 001.

தொலைபேசி: 0422- 2382614. 

புதிய சித்தார்த்தன்

2 Jul

இந்திய தத்துவ ஞான மரபை அடித்தளமாகக் கொண்டு, வாழ்வின் நான்கு நிலைகளைப் பரிசீலிக்கும் வகையில், அதன் கடைசியில் வாழ்வின் இறுதி உண்மையை உணர்த்தும் விதமாக, ஜெர்மானிய எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய உலகப்புகழ் பெற்ற புதினம் சித்தார்த்தன்.

நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸே, கீழைத் தத்துவ விசாரத்தில் நாட்டம் மிகுந்தவர். அவரது ‘கீழ்நோக்கும் பயணம்’ என்ற நூல் அவரது பாரதப் பண்பாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்துவதாகும். அந்தக் கருத்துகளையே புதிய வடிவில் அனைவரும் எளிதில் ஏற்கும் வண்ணமாக இப்புதினமாக ஹெஸ்ஸே படைத்திருக்கிறார். Continue reading

அம்பேத்கருக்கு காந்தியர்களின் மறுப்பு

22 May

நாட்டின் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய மகாத்மா காந்திக்கும், தலித் மக்களின் விடுதலைக்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கருக்கும் இடையிலான மோதல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெறுவதாகும். அது, தனிப்பட்ட தலைவர்களிடையிலான மோதல் மட்டுமல்ல.

தலித் (பட்டியலின) மக்கள் முன்னேறாமல் விடுதலை சாத்தியமில்லை என்று உணர்ந்திருந்த காந்தி, ஹரிஜன முன்னேற்றத்தை காங்கிரஸின் ஓர் அடிப்படைக் கொள்கையாகவே கொண்டிருந்தார். ஆனால் நாட்டு விடுதலையைவிட தலித் மக்களின் விடுதலையே முதன்மையானது என்பது அம்பேத்கரின் கொள்கை. Continue reading

மதமேறிய வரலாறு

6 Feb

 

nool4c

உலக வரலாறு நெடுகிலும் இறை நம்பிக்கைக்காக ரத்தம் சிந்திய கொடிய அத்தியாயங்கள் நிறைந்துள்ளன. தான் நம்பும் மதத்தைப் பரப்ப ஆயுதமேந்திய அரசுகளால் மானுடம் அடைந்த துயரம் அளவிட முடியாதது. அதிலும், இந்தியாவின் கோவாவில் போர்த்துக்கீசிய கத்தோலிக்க மிஷனரிகள் நடத்திய கொடூரமான சித்ரவதைகள், காலத்தால் அழிக்க இயலாத வடுக்களாகவே உள்ளன.

கொங்கனி பேசும் அமைதியான மக்கள் வாழ்ந்த அந்தப் பிரதேசத்தில் 15-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் போர்ச்சுக்கீசியர்கள் கால் பதித்தனர். ஆயுத பலத்துடன் புதிய பகுதியில் ஆளப் புகுந்த போர்ச்சுக்கல் மன்னரின் பிரதிநிதிகள், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் நல்லாதரவுக்காக மதப் பரப்புரையை கடமையாகவே செய்தனர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகளை நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும். Continue reading

இளைஞர்களுக்கான முன்னுதாரண வாழ்க்கை

3 Oct

 

nool2c

 

வாழ்வில் திட்டமிட்டு உழைத்து, உயர்ந்த சிகரங்களை எட்டியவர்களின் தன்வாழ்க்கை வரலாற்று நூல்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குபவை. அந்த வகையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமசந்திரனின் வாழ்வில் இடம்பெற்று அதனாலேயே உலகப்புகழ் பெற்ற அமெரிக்கா வாழ் இந்தியரான டாக்டர் பழனி ஜி. பெரியசாமியின் வாழ்க்கை மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.

நாமக்கல்லில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கல்வி வேட்கையால் உந்தப்பட்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்ற பெரியசாமி, அங்கேயே கல்வியாளராக மாறினார். இருந்தபோதும் தாய்மண் மீதான பாசம் விட்டுப் போகாமல், நாமக்கல்லில் பிஜிபி கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்; நட்சத்திர விடுதிகள், சர்க்கரை ஆலை ஆகியவற்றை அமைத்து தொழிலதிபராகவும் உயர்ந்தார்.

அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது, தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆருடனான சந்திப்பு. அவர் உடல்நலம் குன்றி சிறுநீரக நோயால் அவதிப்பட்டபோது,  அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிறப்பான சிகிச்சை பெறச் செய்தவர் பெரியசாமி. அவரது சுயசரிதையில் இடபெற்றுள்ள அந்தக் காலகட்ட நிகழ்வுகளைப் படிக்கும்போது, மிகுந்த வியப்பேற்படுகிறது.

இன்று அமெரிக்கா செல்வதும், மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வதும் சாதாரணமாகிவிட்டது. 1960-களில் வெளிநாடு செல்வதே ஒரு சாதனை. அத்தகைய கல்விப் பயணத்துக்கு அடிகோலிய முதல் தலைமுறை மாணவர் என்பது மட்டுமல்ல, தனக்குப் பிறகு அமெரிக்கா வந்த பலருக்கு நிழல் தரும் மரமாகவும் இருப்பவர் பழனி ஜி.பெரியசாமி. இந்த நூலின் முன்னுரையில் பெரியசாமி “எனது அனுபவங்கள் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக, வழிகாட்டியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவற்றைச் சொல்லி இருக்கிறேன்” என்று கூறியிருப்பது முற்றிலும் பொருத்தம்.

இந்நூலில் பெரியசாமியின் வாழ்க்கை மட்டுமல்லாது, சமகாலத்திய அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளும் பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக, எம்.ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற காலம் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு காலகட்டம். அதை நிதானமான எழுத்து நடையுடன், பக்குவப்பட்ட பண்பாட்டுடன் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார் பி.ஜி.பி.

தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது பிரமிப்பாக உணர்வதாக  நூலாசிரியரே ககூறும்போது, அதைப் படிக்கும் நமக்கு ஆச்சரியம் ஏற்படுவது இயல்பானதே. அவரது நேர்மை, காலம் தவறாமை, திட்டமிட்ட அணுகுமுறை, செயல் நேர்த்தி, மொழிப்புலமை, கல்வித்திறம் ஆகியவையும், பெற்றோரால் அவரிடம் விதைக்கப்பட்ட ஒழுக்கமும் தான், அவரை சிறந்த அமெரிக்க இந்தியராக உருவாக்கி இருக்கின்றன எனில் மிகையில்லை.

அவரது தன்வரலாறு, வண்ணமயமான நினைவுப் படங்களின் பதிவுகளுடன்,  வானதி பதிப்பகத்தால் மிகவும் அழகான வடிவில் நூலாக்கப்பட்டிருக்கிறது. வாழ்வில் உயர விரும்பும் ஒவ்வொரு இளைஞனும் படிக்க வேண்டிய அற்புதமான நூல் இது.

***

இதய ஒலி- என் வாழ்க்கை அனுபவங்கள்

-பழனி ஜி.பெரியசாமி

420 பக்கங்கள், விலை: ரூ. 350.00

 

வானதி பதிப்பகம்,

23, தீனதயாளு தெரு,

தியாகராய நகர்சென்னை- 600 017,

போன்: 044- 24342810

 

 

%d bloggers like this: