Archive | முகநூல் பதிவு RSS feed for this section

மானமுள்ள தமிழரா நீங்கள்?

7 Apr

 

2009இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, அந்நாட்டு அரசுக்கு பலவகையிலும் உதவியது, மன்மோகன் சிங் தலைமையிலான அன்றைய ஐ.மு.கூட்டணி அரசு. அதன்மூலமாகவே விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவம் நிர்மூலம் செய்தது.

அங்கு இலங்கையில் வம்சாவளித் தமிழர்களை கொத்துக் குண்டுகளால் இலங்கை ராணுவம் துவம்சம் செய்து கொண்டிருந்தபோது, இங்கே நாம் மக்களவைத் தேர்தலில் ஆழ்ந்திருந்தோம். ‘இந்திராவின் மருமகளே வருக!’ என்று வரவேற்பிதழ் வாசித்துக் கொண்டிருந்தார் தமிழினத் தலைவர் மு.க.

அப்போது ஐ.மு.கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்துமாறு இந்திய அரசு இலங்கையை வலியுறுத்தவில்லை. மாறாக திரைமறைவில் பல ராணுவ உதவிகளை அளித்தது. இதனை அன்றைய இலங்கை அதிபரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷேவே அண்மையில் பெங்களூரில் தி ஹிந்து நடத்திய கருத்தரங்கில் தெரிவித்திருக்கிறார்.

காண்க: தி ஹிந்து செய்தி
https://www.thehindu.com/…/article26…/BINARY/RajapaksaSpeech

2009 மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணிக்கும் இடையிலானதாக இருந்தது. பாஜக வெல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதன் காரணமாகவே, இலங்கை ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் பலரும் மறைவிடங்களில் இருத்தப்பட்டனர். இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு (மே 16, 2009), பாஜக வெல்லவில்லை என்பது தெரிந்த பிறகே, அங்கு பிரபாகரன் கொல்லப்பட்டார் (மே 17, 2009). இதை நாம் அனைவரும் அறிவோம்.

அந்தத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்திருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரனும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்; இலங்கை உள்நாட்டுப் போரும் திசை மாறி இருந்திருக்கும்; குறைந்தபட்சம், லட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், விதி வலியது. ஈழத் தமிழருக்காக முதலைக் கண்ணீர் சிந்திய திமுகவைத் தான் ஈழத் தமிழர்கள் நம்பி ஏமாந்தார்கள். திமுகவோ, இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி செய்த மன்மோகன் சிங் அரசைத் தாங்கிக் கொண்டிருந்தது.

இலங்கையில் போர் உச்சத்தை அடைந்தபோது, தமிழக மக்கள் பதைபதைத்தனர். எந்தவித நியாய உணர்வுமின்றி விமானங்களிலிருந்து கொத்துக் குண்டுகளை வீசும் சிங்கள ராணுவத்தின் அடாவடி கண்டு தமிழ் மக்கள் ஆவேசம் அடைந்திருந்தனர். அப்போது, மக்களின் உணர்வை மடைமாற்ற திமுக தலைவர் மு.கருணாநிதி ஓர் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார்.

காண்க: கருணாநிதி உண்ணாவிரதம் (ஒன் இந்தியா இணைப்பு)
https://tamil.oneindia.com/…/tn-lankan-crisis-karunanidhi-o…

சென்னை அண்னா சமாதியில் 2009 ஏப்ரல் 27 ஆம் தேதி காலை முதல் மதியம் வரை அரை நாள் உண்ணாவிரதம் இருந்தார் அவர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர் அறிவித்தார். அதையடுத்து, அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இலங்கை அரசிடம் பேசிவிட்டதாகவும், போர் நிறுத்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். அதை ஏற்று கருணாநிதி அன்று அரைநாள் உண்ணாவிரதத்துடன் தனது கடமையை நிறைவு செய்தார். ஆனால், இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை என்பதை அவரும் அறிவார்; நாம் அனைவரும் அறிவோம். மறுநாளே ‘போரை நிறுத்துவதாக இந்திய அரசுக்கு எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை’ என்று இலங்கை அரசு அறிவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

அன்று கருணாநிதி நினைத்திருந்தால் மத்திய அரசை ஆட்டிப் படைத்திருக்கலாம். இலங்கைப் போரையும் நிறுத்தி ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். ஆனால் பதவி சுகமும், சொத்து சேர்க்கும் வேகமும்தான் திமுகவினருக்கு பெரிதாக இருந்ததே தவிர, ஈழ சகோதரத் தமிழ் மக்கள் மீது அவர்களுக்கு கிஞ்சித்தும் பாசம் இருக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியானபோதும், அமைச்சரவையில் செல்வாக்கான துறைகளைப் பெறத்தான் திமுகவினர் போராடினர் என்பதையும், பிரபாகரன் கொல்லப்பட்டதைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதையும் தமிழகம் நேரில் கண்டது.

ஆனால், தமிழினவாதம் பேசும் மூடப்பதர்கள் இன்றும் திமுகவைத்தான் மாய்ந்து மாய்ந்து ஆதரிக்கின்றனர். கேட்டால் மதவாத பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்கின்றனர். இதே மதவாத பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்பதையோ, அங்கு போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மோடியின் அரசு ஆயிரக் கணக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருவதையோ அறியாதவர்கள் போல அவர்கள் நடிக்கிறார்கள்.

இலங்கைக்கு நல்ல நோக்கத்துடன் அமைதிப்படையை அனுப்பிய அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை எதிர்த்தவர்கள்தான் இவர்கள். அமைதிப்படையின் நோக்கம் திசை மாறி விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாக மாற்றப்பட்டது- இலங்கை அரசின் சூழ்ச்சியால். அந்த அபத்த நாடகத்தில் அநியாயமாக பலியானார் ராஜீவ்.

அன்றெல்லாம் காங்கிரஸ் கட்சியை விஷமாக வெறுத்தவர்கள் இன்று ராஜீவின் மகன் தலைமை வகிக்கும் காங்கிரஸுக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆக, இவர்களது இனமானம், மொழிப்பற்று என்பதெல்லாம் வெறும் வெளிவேஷம்.

இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் உறுதியான அரசு அமைந்துவிடக் கூடாது என்பது மட்டுமே இவர்களது கவலை. அவர்களது பகல் கனவுக்கு முட்டுக்கட்டையாக மோடி இருப்பதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் இவர்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறார்கள்.

இன்று இலங்கை அரசுடன் இந்திய அரசு நேசமாக இருப்பதுடன், தனது பிரதேச மேலாண்மையையும் நிரூபித்து வருகிறது. அதனால்தான் கடந்த ஐந்தாண்டுகளில் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் பெருமளவில் சுட்டுக் கொல்லப்படவில்லை. மோடி அரசு பதவியேற்ற பிறகான இந்த ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு மீனவர் மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார். ஐ.மு.கூட்டணி ஆட்சி நிலவிய 2004-20014 வரையிலான காலத்தில் இலங்கை ராணுவம் எல்லை கடக்கும் தமிழக மீனவர்களை எப்போது வேண்டுமாயினும் சுட்டுக் கொல்லும் நிலை இருந்ததை மறக்க முடியாது. அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் இருக்கும்.

காண்க: தமிழக_மீனவர்கள்_மீது_இலங்கை_கடற்படையின்_தாக்குதல்கள் (விக்கி இணைப்பு)

https://ta.wikipedia.org/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%A….

ஆக, இலக்கைத் தமிழர் விவகாரமோ, தமிழக மீனவர்கள் விவகாரமோ, எதுவாயினும் தமிழகத்தில் உள்ள தமிழினப் போலிகள் நடத்தும் நாடகங்களே பெருமளவிலான சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளன. இவர்கள் அனைவரும் ஆதரிக்கும் திமுக- காங்கிரஸ் கூட்டணியால் என்ன வகையான மாற்றங்களை நிகழ்த்த முடியும்?

வரலாற்றிலிருந்து படிப்பினை பெறாதவர்களுக்கு உலகம் தொடர்ந்து படிப்பினையை அளித்துக் கொண்டே இருக்கும். அனுபவம்தான் நமது ஆசான். இதை உணராதவர்கள் பகுத்தறிவுவாதி என்றோ, முற்போக்காளர் என்றோ கதைப்பதில் பொருள் இல்லை.

தன்மானமுள்ள தமிழின உணர்வாளர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

அரை நாள் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியா? குஜராத்தில் பிறந்தவராயினும் இலங்கைத் தமிழருக்கு வீடுகள் கட்டித் தரும் மோடியா? யார் உண்மையானவர்?

எந்தப் பக்கம் நீங்கள் நிற்கப் போகிறீர்கள்?
தமிழினப் படுகொலை நிகழ்த்தியவர்களை ஆதரிப்பவர்களையா?
இலங்கையில் சிதைக்கப்பட்ட தமிழர்தம் வாழ்வை மீட்க முயற்சிப்பவர்களையா?

உங்கள் சகோதரர்களின் எதிகாலம் உங்கள் கையில்!

 

-முகநூல் பதிவு (07.04.2019)

Advertisements

முதுமையிலும் தளரா செயல்வீரர்

14 Feb

திரு. ஜி.வீரப்பிரகாசம்

(1937- 2019 பிப். 14)

குடும்ப நண்பரும், பொறியாளருமான திரு.வீர.ராஜமாணிக்கத்தின் தந்தையார், திரு. ஜி.வீரப்பிரகாசம் (82) அவர்கள் இன்று காலை (14.02.2019) இறைவனடி சேர்ந்தார். காந்திய நெறியாளரான அவர், தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் மாநிலத் தலைவராக 1994 முதல் 1997 வரை பதவி வகித்தவர். Continue reading

வாழ்க நீ எம்மான்!

30 Jan

வாழ்நாளெல்லாம் சத்தியசோதனை செய்த,
எனது வாழ்வே எனது செய்தி என்று சொன்ன,
மக்களிடமிருந்தே தனது போராட்ட வழிமுறைகளை உருவாக்கிக்கொண்ட,
தனது தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்காத,
அதிகாரபீடம் மீது என்றும் ஆசை கொள்ளாத,
மாமனிதரின் நினைவுநாள் இன்று.

மகாகவி பாரதியால் ‘வாழ்க நீ எம்மான்’ என்று பாடப்பட்ட அந்த மகத்தான மனிதருக்கு,
மகாத்மா காந்திக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

அவரது அனைத்துக் கருத்துகளுடனும் அனைவரும் உடன்பட முடியாமல் போகலாம். ஆனால், அவர் தனக்கென எதையுமே சொல்லவில்லை என்பது முற்றிலும் உண்மை. அதனால்தான் அவரை மகாத்மா என்கிறோம்.

காந்தியின் மரணம் அவரது பிம்ப வீழ்ச்சியைத் தடுத்தது; காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்த தொடர் வெற்றியத் தந்தது. அவரது சகிப்புத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் கொள்கைரீதியாக எதிர்த்தவர்கள் கட்டம் கட்டப்பட்டார்கள். நாதுராம் கோட்சே அவரைக் கொல்லாமல் இருந்திருந்தால், சரித்திரம் வேறு திசையி்ல் பயணித்திருக்கும். இந்தியாவின் விதி வலியது போலும்.

காந்தியின் உண்மையான வாரிசுகள் எவரும் பதவிமோகத்திலோ, ஆட்சி சுகத்திலோ இதுவரை -அவரது பெயரைப் பயன்படுத்தி- திளைக்கவில்லை. ஆனால், காந்தி குடும்பத்துக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு குடும்பம் – நேருவின் குடும்பம்- காந்தி என்ற பெயரைப் பயன்படுத்தி நாட்டை ஆண்டிருக்கிறது. இன்றும் ஆளத் துடிக்கிறது. இதுவே காந்தி கொலையால் விளைந்த விபரீதம்.

இந்திய வரலாற்றில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற மாவீரர், தியாகத் தழும்பேறிய மகான் வீர சாவர்க்கர் காந்தி கொலையில் தொடர்புபடுத்தப்பட்டு கைது ஆனார். அதன் விளைவாக அவரது நற்பெயர் குலைந்தது. நேருவுக்கு மாற்றாக வந்திருக்க வேண்டிய ஓர் ஆளுமை காந்தி கொலையால் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டது.

இன்று, முகநூல் பதிவுகளில் கோட்சேவின் செயலை- காந்தி படுகொலையை- நியாயப்படுத்தும் பதிவுகள் பலவற்றை ஹிந்து அபிமானிகள் சிலர் செய்வதைக் கண்டேன். அதற்கு சற்றும் சளைக்காமல் காந்தி கொலையாளிகள் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தூற்றும் பதிவுகளையும் கண்டேன். இவ்விரு தரப்பினருமே, காந்தியையோ, சரித்திரத்தையோ புரிந்து கொள்ளாதவர்கள்.

கொல்லப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கூட ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு வந்தவர் மகாத்மா காந்தி. அவரைக் கொன்ற கோட்சேவே, எனக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தொடர்பில்லை என்று சொல்லி இருக்கிறார். அவரது நீதிமன்ற வாக்குமூலம் தனி நூலாகவே கிடைக்கிறது. ஆனாலும், காந்தி கொலையின் தீராப் பழி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தொடர்கிறது. இது புரியாமல் ஹிந்து அபிமானிகள் சிலரும் காந்தி கொலையை நியாயப்படுத்தி வருவது முட்டாள்தனம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொடர்புக்கு வரும் முன் எனக்கும் மகாத்மா காந்தி மீதும், அவரது அஹிம்சைக் கோட்பாடு மீதும் அதிருப்தி இருந்தது. சங்கத் தொடர்பால்தான் நான் காந்தி குறித்த தெளிவை அடைந்தேன். அவர் நிச்சயமாக மகாத்மா தான். எனவேதான் தினமும் காலையில் பாடும் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் (பிராதஸ்மரனம்)
காந்தியின் பெயரை லட்சக் கணக்கான சங்க ஸ்வயம்சேவகர்கள் பாடி வருகின்றனர். இதனை ஏற்பாடு செய்த சங்க முன்னோடிகள் அறியாதவர்கள் அல்ல.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காந்தி போன்ற தலைவர்கள் தோன்றுவர். அவரது முடிவுகளில் பல பிழையானவையே. நேதாஜிக்கு எதிரான அவரது பிடிவாதம் அதில் ஒன்று. முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்த அவரது புரிதல் தவறானது. அவரும் மனிதரே. ஆனால், நேருவுடன் அவரை சமன்வைக்க முடியாது; கூடாது..

ஹிந்த் ஸ்வராஜ், ராமராஜ்யம், அஹிம்சை, சத்யாகிரஹம் ஆகிய கருத்தாக்கங்கள் சாதாரணமானவை அல்ல. இன்று காந்தியின் பெயரை வெளிப்பார்வைக்கு உச்சரிக்கும் பலரும் அவரது ஹிந்துத்துவ ஆழத்தை அறியாதவர்கள் அல்ல. ஆனால், இன்று வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஹிந்துத்துவ சித்தாந்தத்தைத் தடுக்கவே, அரை மனதுடன் காந்தி பெயரை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதை ஹிந்து அபிமானிகள் முதலில் உணர வேண்டும்.

மகாத்மா காந்தி ஓர் இணையற்ற ஹிந்து.
அதைவிட மிகச் சிறந்த தேசபக்தர்.
அதைவிட மிகச் சிறந்த மனிதர்.
உலகம் தழுவிய அதிமானுடர் அவர்.
ஹிந்துத்துவத்தின் உண்மையான பிரதிபலிப்பு அவர்.

அவரைத் தூற்றுவோருக்கும் சேர்த்து,
அவர் பெயரால் அரசியல் எண்ணத்துடன் பிறரைத் தூற்றுவோருக்கும் சேர்த்து,
எனது அஞ்சலியை மகாத்மாவுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.

வாழ்க நீ! எம்மான்,
இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!

சத்தீஸ்கரில் படுதோல்வி ஏன்?

13 Dec

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்- எனது பார்வை-2

நாட்டின் இரு பிரதானக் கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதும் மாநிலங்கள் ஹிந்தி பேசும் ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கர், உ.பி, இ.பி, உத்தர்கண்ட், ஹரியாணா ஆகியவை. இம்மாநிலங்களில் வேறு கட்சிகளுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக செல்வாக்கு இல்லை. இந்த மாநிலங்களில் வெல்ல வாய்ப்புள்ள கட்சியே நாடாளுமன்றத் தேர்தலில் வாகை சூட முடியும்.

அந்த வகையில் இந்த 7 மாநிலங்களும் இதுவரை பாஜகவின் ஆளுகையில் இருந்தன. தற்போது உ.பி, இபி, உத்தர்கண்ட், ஹரியாணா தவிர்த்து, இதர மூன்று மாநிலங்களை பாஜக இழந்திருக்கிறது. இந்த 3 மாநிலங்களிலிருந்து 65 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்ற 2014 தேர்தலில் இவற்றில் 62 தொகுதிகளை பாஜக வென்றது.
தற்போது, சட்டசபைத் தேர்தல்களில் கடுமையாகப் போராடியபோதும், இம்மாநிலங்களின் ஆட்சியை பாஜக இழந்துள்ளது.

வெற்றிக்கு ஆயிரம் தந்தையர்; தோல்வி ஒரு அநாதை என்ற பழமொழி உண்டு. தோல்விக்கான காரணங்களை ஆராயும்போது பட்சபாதமோ, விருப்பு வெறுப்போ, நாயக புராணமோ குறுக்கிட அனுமதிக்கக் கூடாது. அப்போதுதான் எதிர்காலத்தில் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

எனது கண்ணோட்டத்தில் இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக உண்மையில் படுதோல்வி அடைந்திருப்பது சத்தீஸ்கர் மாநிலத்தில் தான். இதுகுறித்து மட்டுமே தனி ஆய்வு தேவை. Continue reading