Tag Archives: அஞ்சலி

உரங்களின் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதை

4 Apr

வசந்த் ஆர். கோவாரிக்கர்

விவசாயத்தின் முக்கிய இலக்கு உணவு உற்பத்தியை அதிகரிப்பதே. அதற்கு உதவும் காரணிகளில் முக்கிய இடம் வகிப்பவை உரங்கள். அதிலும் செயற்கையாக உருவாக்கப்படும் ரசாயன உரங்களின் தேவை மிகுந்துள்ளது.

அந்த வகையில், நாம் பயன்படுத்தும் உரங்களின் தன்மைகள் குறித்த முழுமையான விவரங்களின் தொகுப்பு, ஆராய்ச்சி மாணவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், விவசாயிகளுக்கும் உதவி புரியக்கூடியதாக இருக்கும்.

அதற்காகவே, உலகில் முதல்முறையாக, 4,500 உரவகைகளின் விவரணத் தொகுப்பை கலைக்களஞ்சியமாக உருவாக்கினார், இந்திய விஞ்ஞானியான வசந்த் ரஞ்சோட் கோவாரிக்கர். அவரது தலைமையிலான குழுவினர் பல ஆண்டுகள் பாடுபட்டுத் தொகுத்த ‘உரங்களின் கலைக்களஞ்சியம்’ என்ற நூல் (Fertilizer Encyclopedia- 2008), வேதியியல் துறை மாணவர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்கிறது.

இந்நூலில், 4,500 உர வகைகளின் தயாரிப்பு முறைகள், அவற்றிலுள்ள ரசாயனக் கலப்புப் பொருள்கள், அதன் சமன்பாடுகள், அவற்றின் பிரத்யேகப் பயன்பாடுகள், உரங்களால் ஏற்படும் சூழல் பாதிப்புகள், மண்ணில் ஏற்படுத்தும் உயிரியல் மாற்றங்கள், விளைச்சல்- பொருளாதார விளைவுகள் உள்ளிட்ட பல அம்சங்களைத் தொகுத்துள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியியலாளரான நார்மன் போர்லே, “உரங்களின் கலைக்களஞ்சியம் நூல், கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் விலைமதிப்பற்ற ஆவணமாகும்” என்று புகழ்கிறார்.

இதனை உருவாக்கிய விஞ்ஞானி வசந்த் கோவாரிக்கர், விண்வெளியியல் விஞ்ஞானி என்பது குறிப்பிட வேண்டிய தகவல். ராக்கெட் இயக்கத்துக்குத் தேவையான திட எரிபொருளை உருவாக்கியவர்; இந்திய பருவமழைக் கணிப்புக்கான 16 அம்சப் பரிசோதனை முறையை உருவாக்கியவர்; மக்கள்தொகைப் பெருக்கத்தை சாதகமாக மாற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சியை (Skill Development) துவக்கியவர் எனப் பல முகங்களைக் கொண்ட மேதை அவர். Continue reading

நீர்மங்களின் வேதிப்பண்பை ஆராய்ந்தவர்

7 Mar
சாருசீதா சக்கரவர்த்தி

சாருசீதா சக்கரவர்த்தி

அமெரிக்காவில் வசதியான குடும்பத்தில் பிறந்தபோதும், இயல்பாகக் கிடைத்த அமெரிக்கக் குடியுரிமையை நிராகரித்து, இந்தியா வந்து கல்வி கற்று, வேதியியல் துறையில் சாதனை படைத்த பெண் விஞ்ஞானி, சாருசீதா சக்கரவர்த்தி. கோட்பாட்டு வேதியியல் (Theoretical Chemistry) விஞ்ஞானியான அவரது திடீர் மறைவு, இந்திய அறிவியல் துறைக்கு மாபெரும் இழப்பாகும்.

அமிலம், காரம், உலோகம், வாயுக்கள் போன்ற பொருள்களிடையிலான வேதியியல் மாற்றத்தை ரசாயனக் கலப்பில் நேரடியாக ஆய்வு செய்வதே வழக்கமான ஆய்வு நடைமுறை. அதையே வேதியியல் மாதிரி கணினிப் படிநிலையாக்கல் மூலமாக ஆராய்வது நவீன முறையாகும். இதன்மூலம், கணினித் திரையிலேயே ரசாயன மாற்றங்களை அனுமானிக்க முடிகிறது.

“குவான்டம் மான்டே கார்லோ முறை’ எனப்படும் இந்த ஆய்வில் சாருசீதா நிபுணராவார். குறிப்பாக, திரவங்களில் நிகழும் வேதி மாற்றங்களை அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். Continue reading

நோபல் பரிசு பெற்ற சகோதர நாட்டின் விஞ்ஞானி

15 Feb
abdus-salam1

முகமது அப்துஸ் சலாம்

இந்திய துணைக் கண்டம் உலகுக்கு அளித்த விஞ்ஞானிகளுள், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துஸ் சலாம் குறிப்பிடத் தக்கவர். நோபல் பரிசு பெற்ற முதல் பாகிஸ்தானியர், முதல் இஸ்லாமிய விஞ்ஞானி, உலகு தழுவிய பார்வையுடன் குவான்டம் இயற்பியலை வளர்க்க முயன்றவர், தனது தாய்நாட்டை அணு ஆயுத நாட்டாக்கியவர் எனப் பல பெருமைகளுக்கு உரியவர் முகமது அப்துஸ் சலாம்.

அவர் சார்ந்த சிறுபான்மை மதப்பிரிவான அஹமதியாக்கள் பாகிஸ்தான் அரசால் சிறுமைப்படுத்தப்பட்டபோதும், அவரது ஆராய்ச்சி முயற்சிகளுக்கு உள்நாட்டில் பலவித தடைகளைச் சந்தித்தபோதும், தனது தாய்நாடு அறிவியல் ஆராய்ச்சியில் உயர்வதற்கான பணிகளை விடாமுயற்சியுடன் செய்தவர் சலாம். அவரை  ‘பாக். விஞ்ஞான உலகின் தந்தை’ என்று இப்போது பாராட்டி மகிழ்கின்றனர். Continue reading

கடமை தவறாத கலங்கரை விளக்கம்

22 Jan
akraychaudhuri

அமல்குமார் ராய் சௌத்ரி

இந்திய விஞ்ஞானிகளில் சத்யேந்திரநாத் போஸ், ஜெகதீச சந்திர போஸ், சர். சி.வி.ராமன், மேகநாத் சாஹா, ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். முன்னேர்களான இவர்களைப் பின்பற்றியே பின்னேர்களாக இளம் விஞ்ஞானிகள் படை உருவானது. அத்தகைய முன்னேர்களில் இடம்பெறத் தக்க தகுதி கொண்டிருந்தும் தேசிய அளவில் கவனம் பெறாது போனவர், கோட்பாட்டு இயற்பியல் மற்றும் அண்டவியல் விஞ்ஞானி அமல்குமார் ராய் சௌத்ரி.

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் (General Relativity Theory) விடுபடாத புதிர்களைப் போக்கும் விதமாக ராய் சௌத்ரி உருவாக்கிய சமன்பாடு, கோட்பாட்டு இயற்பியலில் முக்கிய இடம் பெறுகிறது. அதற்கு ராய் சௌத்ரி சமன்பாடு (Raychaudhuri Equation) என்றே பெயர்.

பொது சார்பியல் கோட்பாட்டில் ஒருமைகள் (Singularities) எழுவதைத் தவிர்க்க முடியாது என்ற அவரது கருத்து, பென்ரோஸ்- ஹாக்கிங் ஒருமைத் தேற்றத்தை நிரூபிக்க உதவுகிறது. பெருவெடிப்பு, ஈர்ப்பு விசையை விஞ்சும் கிரகங்களின் சுழற்சி உள்ளிட்ட வியப்பான அண்டவியல் (Cosmology) யூகங்களை தெளிவடையச் செய்வதாக இச்சமன்பாடு கருதப்படுகிறது. Continue reading

நுண்ணலைகள் ஆய்வின் முன்னோடி

22 Nov
ராஜேஸ்வரி சட்டர்ஜி

ராஜேஸ்வரி சட்டர்ஜி

இந்திய நவீன அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் சர் சி.வி.ராமனை, முதுநிலைப் பட்டம் படித்து முடித்த அந்த இளம்பெண் சென்று சந்தித்து தன்னை இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎஸ்) ஆராய்ச்சியாளராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர் கணிதம் படித்திருந்ததால் ராமன் தவிர்த்துவிட்டார். இயற்பியலில் பட்டம் பெற்றவரே தேவை என்றார் ராமன்.

அதனால், அந்த இளம்பெண் தளர்ந்துவிடவில்லை. தனகே உரிய மன உறுதியுடன், அதே கல்வி நிறுவனத்தின் மின்னியல் துறையில் 1943-இல் ஆராய்ச்சியாளராக இணைந்த அவர், பிற்காலத்தில் பல சாதனைகளை நிகழ்த்தினார்.

கர்நாடகத்தில் முதல் பெண் பொறியாளர், இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி ஆகிய பெருமைகளுக்கு உரிய அந்தப் பெண்மணி, ராஜேஸ்வரி சட்டர்ஜி. நுண்ணலைகள் (microwave engineering), உணர் பொறியியலில் (antennae engineering) முன்னோடியான ஆராய்ச்சிகளை அவர் நிகழ்த்தி இருக்கிறார். Continue reading