Tag Archives: அண்ணா ஹசாரே

ஆர்எஸ்எஸ் காரரா அண்ணா ஹசாரே?

18 May

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை இயற்றப் போராடிவரும் சமூகசேவகர் அண்ணா ஹசாரே அவரது எதிரிகளால் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறார். காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்பதால், ஹசாரேவும் பொறுமையாக தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தகையவர்களின் வெறுப்புக்கு காரணம் உள்ளது. தங்களையே லோக்பால் சட்டம் குறிவைக்கிறது என்பது புரிந்திருப்பதால்தான் ஊழலில் தொடர்புடையவர்கள் ஹசாரேவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆளும்கட்சி வட்டாரத்தில், ஹசாரேவை எதிர்ப்பதற்கென்றே களம் இறக்கப்பட்டுள்ளவர் ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங். அண்ணா ஹசாரேவை வசைபாடுவதையே அவர் தினசரி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதில் முக்கியமான விமர்சனமாக திக்விஜய் சிங் முன்வைப்பது, ஹசாரே ஆர்எஸ்எஸ்.காரர் என்பது.

தன்மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாத ஹசாரே, இந்தக் குற்றச்சாட்டுக்கு மட்டுமே இதுவரை பலமுறை பதில் அளித்துவிட்டார். ஏனெனில் இந்தக் குற்றச்சாட்டின் பின்விளைவை அவர் உணர்ந்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள வலதுசாரி இயக்கங்களில் ஆர்எஸ்எஸ்சுக்கு வலிமையான பின்புலம் உண்டு. இந்து தேசியம் என்ற சித்தாந்தத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், துவக்க காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான சக்தியாக வளர்ந்து வந்துள்ளது.

இந்துத்துவத்தை முன்னிறுத்துவதால் சிறுபான்மையினருக்கு எதிரானதாக இந்த அமைப்பு சித்தரிக்கப்படுகிறது. அதேசமயம் தீவிரமான தேசபக்திக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அடையாளமாகக் கூறப்படுவதுண்டு. இயற்கைச் சீற்றங்களின்போது மக்களுக்கு தானாக முன்வந்து உதவுவதில் ஆர்எஸ்எஸ் முன்னணி வகிக்கிறது. இதை முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் உசேன் உள்பட பலர் பாராட்டி இருக்கின்றனர்.

1962ல் நடந்த சீனப்போரின் போது அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவிய ஆர்எஸ்எஸ்சைக் கண்டு நெகிழ்ந்த அப்போதைய பிரதமர் நேரு, 1963ம் வருடத்திய தில்லி குடியரசு தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் சீருடை அணிவகுப்பை இடம்பெறச் செய்தார். காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமர் நேருவால் பாராட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தான், ஹசாரேவை பலவீனப்படுத்த ஒரு கருவியாக்குகிறார் திக்விஜய் சிங்.

இந்திய அரசியலில் யாராவது ஒருவரை ஓரம்கட்ட வேண்டுமானால் அவரை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்று குற்றம் சாட்டினால் போதும் என்ற நிலை உள்ளது.  மகாத்மா காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் ஆகியவற்றுடன் இந்த அமைப்பை தொடர்புபடுத்தி பலமடங்கு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதால், ஆர்எஸ்எஸ் முத்திரை குத்தி எவரையும் நிலைகுலையச் செய்ய முடிகிறது.

அதனால்தான், தன்மீது கூறப்படும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்ற வசையை அண்ணா ஹசாரே தொடர்ந்து நிராகரித்து வருகிறார். ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஊழலுக்கு எதிராகத் திரட்டும் தனது யுத்தத்துக்கு ஆர்எஸ்எஸ் முத்திரை தடையாக இருந்துவிடக் கூடாது என்ற முன்ஜாக்கிரதை உணர்வே இதற்குக் காரணம். இதையே திக்விஜய் சிங் பயன்படுத்திக் கொள்கிறார்.

கட்டற்ற ஊழலால் கறை படிந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வேப்பங்காயாகக் கசப்பதில் வியப்பில்லை. அவரது நேர்மையான பொதுவாழ்வு, காங்கிரஸ்காரர்களால் அபாய எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.

எனவே, ஹசாரே குழுவினர் காங்கிரசைக் குற்றம் சாட்டுவதற்கு முன்னதாகவே, அவர்களை தற்காப்பு நிலைக்குத் தள்ளி விடுவதே உசிதமானது என்பது திக்விஜய் சிங்கின் கோட்பாடு.

அந்த அடிப்படையிலேயே, ஹசாரேவை ஆர்எஸ்எஸ்காரர் என்று முத்திரை குத்துவதில் அவர் தீவிரமாக முனைந்திருக்கிறார். அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இந்தப் புகாருக்கு பதில் சொல்லவே ஹசாரேவின் நேரம் சரியாக இருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இந்தச் சிக்கலை அடிக்கடி எதிர்கொள்கிறது. வலிமையான லோக்பாலுக்காக பாஜக ஒருபுறமும் ஹசாரே மறுபுறமும் தங்கள் வழிகளில் போராடுகிறார்கள். இதையே, பாஜகவுக்கு ஹசாரே உதவுகிறார் என்று காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது.

நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்வது என்ற ஹசாரேவின் முடிவையும் இந்தக் கண்ணோட்டத்தில் தான் திசைதிருப்புகிறது காங்கிரஸ். ஹசாரே நடத்திய உண்ணாவிரப் போராட்டங்களில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தாங்களாகவே பங்கேற்றதை, இவ்வாறு சதியாகவே காண்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.

ஆனால், ஒருவிஷயத்தில் ஹசாரேவுக்கு தெளிவில்லை என்றே தோன்றுகிறது. சர்வோதய இயக்கத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திராகாந்தியின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியபோது அவருடன் இயல்பாக இணைந்து போராடியது ஆர்எஸ்எஸ். அப்போது ஜெ.பியை ஆர்எஸ்எஸ் ஏஜென்ட் என்று காங்கிரஸ் வசை பாடியபோது, ‘தேசபக்தர்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்திருந்தாலும் தவறில்லை’ என்று அவர் தெளிவாக பதில் அளித்தார்.

அத்தகைய தெளிவு ஹசாரேவிடம் இல்லாததால் தான், சிறந்த சமூகசேவகரான நாணாஜி தேஷ்முக்குடனான அவரது உறவை காங்கிரசால் கொச்சைப்படுத்த முடிகிறது.

ஊழலுக்கு எதிரான போரில் சிறுபான்மையினரைப் பிளவுபடுத்த ஆர்எஸ்எஸ் அஸ்திரம் உதவும் என்று காங்கிரஸ் மனப்பால் குடிக்கிறது. இது சிறுபான்மையினரை மட்டமாக எடைபோடுவதாகும். இதையே ஹசாரே பதிலடியாகத் தர வேண்டும். அதை விடுத்து, திக்விஜய் சிங்கின் புலம்பல்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.

இறுதியாக ஒரு விஷயம். ஹசாரேவுடன் தொடர்பு படுத்துவதன் மூலமாக, ஒருவகையில் ஆர்எஸ்எஸ்சுக்கு நற்சான்றிதழையே காங்கிரஸ் வழங்குகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளும்போது, காங்கிரஸ் என்ற வார்த்தைக்கு ஊழல் அடையாளத்துடன் இழிவான பொருள் ஏற்பட்டுவிடக் கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.

மீள்பதிவு: குழலும்யாழும் (26.01.2012)

.

Advertisements

உயிர்ப்புடன் விளங்கும் பாரதத்தின் மகத்தான ஆயுதம்

15 Mar

பாரத நாட்டுக்கே உரித்தான உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஒருமுறை வென்றிருக்கிறது. கூடங்குளத்தில் அணு மின்நிலையத்துக்கு எதிராக ஆயிரக் கணக்கானோர் இருந்த தொடர் உண்ணாவிரதம், கேளாச் செவிகளுடன் இருந்த மத்திய, மாநில அரசுகளை கீழிறங்கிவரச் செய்திருக்கிறது. அறவழிப் போராட்டத்தின் சிறப்பு மீண்டும் உலக அரங்கில் பதிவாகி இருக்கிறது.
  .
உண்ணாவிரதம் என்பது பாரதத்தில் தொன்றுதொட்ட வாழ்க்கைமுறையாகவே இருந்துள்ளது. குடும்ப நலனுக்காகவும் கணவர் நலனுக்காகவும் விரதம் இருப்பது இந்தியப் பெண்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு.

அஹிம்சையை போதிக்கும் பாரதத்தில் தோன்றிய மதங்களான பெüத்தமும் சமணமும் உண்ணாநோன்பை வலியுறுத்துவன. அந்தப் பாரம்பரியத்தில் வந்ததால்தான், மகாத்மா காந்தியால் ஆங்கிலேயருக்கு எதிரான வலிமையான ஆயுதமாக உண்ணாவிரதத்தை மாற்ற முடிந்தது.

தன்னல மறுப்பே உண்ணாவிரதத்தின் அடிப்படை. உயிர் வாழ இன்றியமையாத உணவையும்கூட மறுப்பதென்பது மனவலிமையின் அடையாளம். பிறர் நலனுக்காகவோ, ஒரு பொதுநோக்கத்துக்காகவோ உண்ணாவிரதம் இருக்கும்போது, அது மகத்தான வழிமுறை ஆகிறது.

இந்த வழிமுறையால்தான், நெல்லிக்காய் மூட்டையாகச் சிதறிக் கிடந்த விடுதலைப் போராளிகளை ஒரே இலக்குடன் ஒருங்கிணைத்தார் மகாத்மா காந்தி; நாடும் விடுதலை அடைந்தது.

இன்று உலக நாடுகள் பலவற்றில் அஹிம்சைப் போராட்டம் அரசியல் ஆயுதமாக மாறி வருகிறது. கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்கள்நலனுக்கு ஊறு விளைவிக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை ஆயுதமின்றியும் வன்முறையுமின்றியும் போராடச் செய்ய முடியும் என்பதற்கு தென்ஆப்பிரிக்கா, டுனீசியா, எகிப்து நாடுகள் சாட்சியமாகி இருக்கின்றன.

ஆயினும், அஹிம்சைப் போராட்டத்துக்கு உடனடி பலனை எதிர்பார்க்க முடிவதில்லை. செருக்கு மிகுந்த ஆட்சியாளர்களுக்கு இப்போராட்டங்கள் உடனடியாகப் புரிவதில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் சில சமயங்களில் வீணாவதும் உண்டு. ஆயினும், அந்தப் போராட்டம் களத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் தொடர்ந்து ரீங்காரமிடும்.

சுதந்திர இந்தியாவில், மகாத்மாவின் வழிமுறையில் பலர் இதுவரை உண்ணாவிரதப் போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் தனி ஆந்திர மாநிலத்துக்காகக் குரல் கொடுத்த பொட்டி ஸ்ரீராமுலு. தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி மாநிலம் அமைக்கக் கோரி 1952ல் 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னை மாய்த்துக் கொண்ட ஸ்ரீராமுலுவால்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.

அவரது அடியொற்றி 2009ல் தனி தெலுங்கானாவுக்காக 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அரசால் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். தெலுங்கானா கோரிக்கை இன்னும் நிறைவேறாவிட்டாலும், கொள்கை அடிப்படையில் அது ஏற்கப்பட்டு விட்டது.

உண்ணாவிரதம் குறித்த நினைவுகள் எழும்போது தமிழீழப் போராளி திலீபனின் தியாகத்தை மறக்க முடியாது. இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை தனது இலக்கை மாற்றிப் பயணப்பட்டபோது அதை எதிர்த்து இலங்கையில் 1987ம் ஆண்டு 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார் திலீபன். அவரது கோரிக்கை அன்று ஏற்கப்படாததன் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம்.

உண்ணாவிரதம் உயிர்த்தியாகத்துடன் முடிவடைவதற்கு, கடந்த ஜூனில் உயிர்நீத்த சுவாமி நிகமானந்தா மற்றோர் உதாரணம். கங்கை மாசுபடுவதற்கு எதிராக தனியொருவராகப் போராடிய நிகமானந்தா உத்தரகாண்ட் மாநிலத்தில் 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மடிந்தார். நதிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அவரது தியாக மரணம் உருவாக்கி இருக்கிறது.

நமது அரசியல் தலைவர்களாலும் உண்ணாவிரப் போராட்டம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2006ல், மேற்கு வங்க மாநிலம், சிங்குரில் டாடா கார்த் தொழிற்சாலைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 22 நாட்கள் இருந்த உண்ணாவிரதம், தொழிற்சாலையை இடம் மாற்றியதுடன் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பியது.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமை காக்க அதிமுக தலைவி ஜெயலலிதா 1991ல் முதல்வராக இருந்தபோது 4 நாட்கள் இருந்த உண்ணாவிரதம் அப்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் கருணாநிதியும் பலமுறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால், 2009ல் முதல்வராக இருந்தபோது அவர் நடத்திய உண்ணாவிரத நாடகம் இலங்கைத் தமிழரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தலையிடக் கோரியும், இலங்கை ராணுவத்தின் போரை நிறுத்தக் கோரியுமó ஒருநாள் காலை 7 மணிக்குத் துவங்கி 9 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து புரட்சி செய்த கருணாநிதியால் உண்ணாவிரதம் கேலிப்பொருளானது. உண்ணாவிரதத்துக்கு எதிரான உண்ணும் விரதம் என்ற கிறுக்குத்தனமான முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் தமிழகத்துக்கு உண்டு.

மணிப்பூரில் பாதுகாப்புப் படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 2000த்திலிருந்து 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரோம் ஷர்மிளா, கறுப்புப் பணத்துக்கு எதிராக சென்ற ஜூன் மாதம் 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ், ஜன லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி சென்ற மாதம் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆகியோரும் உண்ணாவிரதத்தின் பெருமையை உயர்த்தியவர்கள்.

நர்மதை அணைத் திட்டத்துக்கு எதிராக 2006ல் 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூகப் போராளி மேதா பட்கர் அப்போராட்டத்தில் வெல்லாத போதும், மும்பை குடிசைவாசிகளுக்கு ஆதரவாக 2011ல் 9 நாட்கள் இருந்த உண்ணாவிரதம் வெற்றி பெற்றது. இதிலிருந்து போராட்டத்தின் நோக்கமும் முழு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டியதன் தேவை தெரிகிறது.

இந்த உண்ணாவிரதக் களத்தில் அண்மையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் குதித்தார். சமூக நல்லிணக்கத்துக்கான அவரது மூன்று நாள் உண்ணாவிரதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக சேவகர்களும் அரசியல்வாதிகளும் போராளிகளும் விரும்பும் ஆயுதமான உண்ணாவிரதம், இப்போது கூடங்குளத்தில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. பொதுநலனுக்காக தன்னை வருத்திக்கொண்டு பாடுபடும் எவரும் மானிட குலத்துக்கு நலன் விளைவிப்பவர்களே.

பாரதத்தின் மகத்தான ஆயுதம் மீண்டும் புத்துணர்வு பெற்றிருக்கிறது. இந்த வெற்றி, ஆயுதம் ஏந்திப் போராடும் குழுக்களின் மனங்களிலும் மாற்றம் நிகழ்த்தட்டும்!

 

தினமணி ( 22.10.2011)

.

திருப்பும் வாயாடிகள்… திணறுகிறது ஜனநாயகம்

12 Mar
.
.
இதுவரை காணாத மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு, புகார் கூறுபவர்களையே எள்ளி நகையாடி வருகிறது. லோக்பால் மசோதாவுக்காகப் போராடும் அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மிரட்டியது இருநாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
.
முழுமையான லோக்பால் சட்டம் கொண்டுவராவிட்டால் தில்லியில் உண்ணாவிரதம் இருப்பதாக அண்ணா ஹசாரே அறிவித்தபோது, “ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஹசாரேவுக்கும் ஏற்படும்’ என்று எச்சரித்தார் திக்விஜய் சிங். அதன்மூலமாக, ஊடகங்களின் கவனத்தை சில நாட்களுக்கு திசை திருப்பினார் அவர்.
.
இதன்மூலமாக யோகாகுரு பாபா ராம்தேவையும் அண்ணா ஹசாரேவையும் ஒப்புமைப்படுத்தினார் திக்விஜய் சிங். இவ்வாறு இருவேறு தரப்பினரை இணைத்துப் பேசுவதும், அதற்கு இரு தரப்பினரும் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதும் இவருக்கு கைவந்த கலை.
.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது 2ஜி ஊழலில் புகார் கூறப்பட்டவுடன், அதுபற்றிப் பேசாமல், சம்பந்தமே இல்லாமல் வலதுசாரி தீவிரவாதம் குறித்து எச்சரித்தார் அவர். மும்பையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை திசைதிருப்ப இந்து இயக்கங்களை வம்புக்கு இழுத்தார் திக்விஜய் சிங்.
.
சீறிவரும் காளையை துணியால் போக்குக் காட்டி திசை மாற்றும் உத்தியே இது. இப்போதைக்கு கபில் சிபல், மணிஸ் திவாரி, ஜெயந்தி நடராஜன் போன்ற பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கடைபிடிக்கும் தந்திரம் இதுவே.
.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களை மிகவும் லாவகமாகக் கையாள்வார். சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் எதிரிகளை நிந்திப்பதும், கேள்வி கேட்பவர்களையே திசைதிருப்பி திக்குமுக்காட வைப்பதும் கருணாநிதியின் தனித்திறன். அதை திமுகவின் கூட்டாளியான காங்கிரஸýம் கற்றுக் கொண்டுவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது.
.
‘சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் வழிநடத்தப்படுகிறார்’ என்ற, அமைச்சர் கபில் சிபலின் வாதமும் இதே வகையானதுதான். இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதே கபில் சிபலின் நோக்கம். ஊழலுக்கு எதிராகப் போராட ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உரிமை உண்டு என்பது தெரியாதவரல்ல கபில் சிபல். ஆனால், மதவாத முத்திரை குத்தி ஊழலுக்கு எதிரான அறப் போராட்டத்தை சிதைப்பதே அவரது திட்டம்.
.
அண்ணா ஹசாரேவும், சந்தோஷ் ஹெக்டேவும் பாஜக-வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் நன்றாகவே அறிவர். கர்நாடகாவில் எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆப்பு வைத்தவர் சந்தோஷ் ஹெக்டே. மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக- சிவசேனை கூட்டணி அரசுக்கு எதிராகப் போராடி இருக்கிறார் ஹசாரே. ஆயினும் இரு தரப்பினரையும் கள்ள உறவாளிகளாகச் சித்தரிப்பது காங்கிரஸ்காரர்களின் தொடர் முயற்சியாக உள்ளது. இதற்கு பதிலளித்து தங்கள் சக்தியை விரயம் செய்கிறார்கள் ஊழலுக்கு எதிரான போராளிகள்.
.
இந்தப் பிரித்தாளும் தந்திரத்தை தெரிந்தோ தெரியாமலோ தொலைக்காட்சி ஊடகங்களும் பின்பற்றுகின்றன. யோகாகுரு பாபா ராம்தேவ் கூறுவதுபோல,  உண்ணாவிரதம் துவங்கும் முன்னர் காங்கிரஸ் காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் அவர் சர்ச்சைக்குரியவராகத் தெரியவில்லை. பிறகே அவரது சொத்துக்கள் தோண்டப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு சமய சஞ்சீவியாக கைகொடுப்பவையாக ஆங்கில ஊடகங்கள் உள்ளன. அவற்றுக்கு தீனி போடுவது, திக்விஜய் சிங் வகையறாக்களின் வேலையாக உள்ளது.
.
ஊடக மேலாண்மை மட்டுமே போதும், ஊழல் படுகுழியிலிருந்து வெளிவந்துவிடலாம் என்று காங்கிரஸ் நம்புவதாகத் தெரிகிறது. அதற்காகவே வகுப்புக் கலவர தடுப்பு மசோதா போன்ற விபரீதமான முயற்சிகளையும் மத்திய அரசு அரங்கேற்றுகிறது. நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஊழல்புகார்களிலிருந்து அரசு தப்புவதற்கான கேடயங்களாக கர்நாடக அரசியலும், வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவும் இருக்கும் என்பது திண்ணம்.
.
பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவோ, வார்த்தை வித்தகர்களான காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லுக்கு நிற்பதிலேயே காலம் கடத்துகிறது. தன்மீதான தாக்குதலைத் தடுக்க முரட்டுத்தனமான தாக்குதல் நடத்துவது சதுரங்க விளையாட்டில் முக்கியமான தற்காப்பு உத்தி. இதையே காங்கிரஸ் செய்கிறது. இது புரியாமல், ஊழலுக்கு எதிராக பிரிந்துநின்று போராடும் பல தரப்பினரும் மேலும் பிளவுபடுகிறார்கள்.
.
“எதிர்க்கட்சிகள் மட்டும் யோக்கியமா என்ன?’ என்று அண்மையில், திருவாளர் பரிசுத்தமாகப் போற்றப்படும் நமது பிரதமர் மன்மோகன் கேட்டிருக்கிறார். அதாவது, தான் யோக்கியமில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சிகளை தம்முடன் ஒப்பிடுகிறார்.
.
ஒருவேளை பிரதமரின் இந்த வாக்குமூலம் பிரச்னையை ஏற்படுத்தினால், இருக்கவே இருக்கிறது ராகுல் புராணம். மாயாவதி, நக்ஸல் பிரச்னை, குஜராத் விவகாரம், ரயில் விபத்துக்கள் என்று ஏதாவது ஒரு பிரச்னையைப் பெரிதுபடுத்தினால், இந்த விஷயம் சிறியதாகிவிடும்.
.
நூறுகோடி மக்களின் ஜனநாயகம் இப்போது சில வாயாடிகளின் வார்த்தை விளையாட்டுக்களில் சிக்கித் தவிப்பது குறித்து நாம் அறிந்திருக்கிறோமா? நமது ஜனநாயகத்தை அண்ணா ஹசாரே, ராம்தேவ் போன்ற சாமியாடிகள் தான் மீட்க வேண்டும்.
.

தினமணி (04.08.2011)

.

.