Tag Archives: அம்பேத்கர்

அண்ணலை அறியும் வழி!

10 Nov

Ambedkar 2

அந்தச்  சிறுவனை கட்டைவண்டியிலிருந்து இறக்கிவிட்ட

பெரிய மனதுக்காரர் அறிந்திருக்க மாட்டார்,

தான் ஒரு மாபெரும் தலைவரின் உருவாக்கத்துக்கு

அடிப்படைக் காரணம் என்று.

 

ஆரம்பப் பள்ளியில் அனைவரும் மரப்பலகைகளில் அமர,

தான் மட்டும் வீட்டிலிருந்து கோணிப்பை கொண்டுவரும்

நிர்பந்தத்தின் அவசியத்தை அறியாப் பாலகன் அறிந்தபோது

அவன்  கண்கள் உகுத்த கண்ணீரின் காரணத்தை  மட்டுமல்ல-

பேராசிரியர்களின் பேராசானாக, சட்ட வல்லுநராக

அவன்  வருங்காலத்தில் மலரப் போவதையும்

அந்த ஆசிரியர்கள் அறிந்திருக்கவில்லை.

 

அந்த மாணவனுக்கு வகுப்பு இடைவேளையில்

குனிந்து நின்று இரு கைகளை ஏந்தச் செய்து

தண்ணீர் ஊற்றிய பள்ளி உதவியாளருக்குத் தெரியாது,

தீண்டாமையால் அவதிப்படும் அந்த மாணவன்

எதிர்காலத்தில்  ‘சாதியை ஒழிக்கும் வழி’யைக் கண்டறிவான் என்று.

 

கல்லூரியில் அந்த இளைஞரை மட்டும் கீழ்த்தரமாக நடத்திய

சக மாணவர்களுக்குத் தெரிந்திருக்காது,

பொருளாதாரம், சட்டம், அரசியல் அறிவியல், தத்துவம், வரலாறு

எனப் பல துறைகளில் அவன் பின்னாளில்

மாபெரும் நூல்தொகையைப் படைப்பான் என்று.

 

மன்னரின் விருப்பத்தால் பரோடா அரண்மனையில்

பணியில் சேர்ந்த அந்த ஊழியரை விடாது துரத்திய

அதிகாரபீட ஈனர்களுக்குத் தெரியாது,

அவன் உலகம் முழுவதும் வரவேற்கப்படப் போகும்

ஒளிமயமான நிகழ்வு.

 

பந்தர்பூர் கோயிலுக்கு யாத்திரை செல்ல எண்ணிய

பிரிய மனைவி ரமாவின் இறுதி ஆசை மரணித்தபோது

அந்த இளம் கணவன் எடுத்த சபதம் போல,

பின்னாளில் புதிய யாத்திரைத் தலமாக 

நாகபுரியில்  ‘தீக்‌ஷா பூமி’யை உருவாக்குவான் என்று

அந்தக் கோயிலின் வைதீகர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

 

தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியுரிமை கோரி

வட்டமேஜை மாநாட்டின்போது காந்தியுடன் மோதிய

அந்த இளம் தலைவரை கடுமையாக விமர்சித்த

சாதி அரசியல்வாதிகள் அறித்திருக்க நியாயமில்லை,

மகாத்மாவே அவரை சுதந்திர இந்தியாவில்

சட்ட அமைச்சராக்கப் பரிந்துரைப்பாரென்று.

 

எருமைகளும் பன்றிகளும் கும்மாளமிடும் மஹாத் குளத்தில்

கீழ்சாதி என்பதால் நீரெடுக்க மறுக்கப்பட்ட

தன் மக்களுக்காக சத்தியாக்கிரஹம் செய்த

அந்த நாயகனைத் தாக்கத் துடித்த

மேல்சாதி இந்துக்களுக்குத் தெரியாது,

அவர் மிக விரைவில் அனைவருக்கும் பொதுவான

‘புதிய மனு ஸ்மிருதி’யை உருவாக்கப் போகும் வரலாறு!

 

பணமும், பதவியும், ஆதரவும் நல்கி,

காயங்களுக்கு மருந்திட்டு விலைபேசி,

அவரை எப்படியேனும் தங்கள் வலைக்குள்

வீழ்த்தத் துடித்த அயல்மத நேயர்கள் அறிய நியாயமில்லை,

அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த தேசபக்தியின் அனல்.

 

எந்த மக்களால் அவமதிக்கப்பட்டாரோ,

எந்த மக்களால் புறக்கணிக்கப்பட்டாரோ,

எந்த மக்கள் தீட்டுக்காக முகம் சுழித்தார்களோ,

அதே மக்களின் நலனுக்காக-

அவர்களும் வாழும் தேசத்தின் ஒருங்கிணைந்த நலனுக்காக-

அவர் படைக்கப் போகும் அரசியல் சாசனத்தை

பரிதாபத்துக்குரிய அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை.

 

படித்து பட்டங்கள் பெற்று,  உயர் பதவிகள் அடைந்தபோதும்

அவரை அங்கீகரிக்க மறுத்து அடம் பிடித்த

மரத்துப்போன சமூகத்துக்கு அவர் தந்த

பௌத்த மதமாற்ற சவுக்கடியின் வலி

இன்னமும் கூட உணரப்படவில்லை.

 

அவரது கண்களில் சுடர்ந்த ஒளியை தரிசித்தவர்கள் சிலரே.

நமது நன்றிக்குரிய அவர்களும் இல்லாதிருந்தால்

இந்த நாடு என்னவாகி இருக்கும்?

அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும்கூட,

இந்தக் கேள்வியை ஏளனமாகப் பார்ப்பவர்களுக்குப் புலப்படாது

அந்த மகத்தான தலைவரின் தொலைநோக்குச் சிந்தனை.

 

பாரதத்தில் மறக்கப்பட்ட மகான் புத்தரை

தனது நவயாண மார்க்கத்தால் புத்தெழுச்சி கொள்ளச் செய்த

அந்த நவீன போதிசத்துவரின் பெருமையை

பகுத்தறிவாளர்களோ, மதவாதிகளோ, அறிவுஜீவிகளோ

ஜீரணிக்க முடியாது.

 

ஒடுக்கப்பட்ட சகோதரர்களின் வீழ்ச்சியைத் தடுக்க

22 அம்ச உறுதிமொழித் திட்டம் அளித்தவர்;

எழுதுகோலை ஆயுதமாக்கியதால்,

முரண்பட்டவர்கள் ரத்தம் சிந்துவதைத் தவிர்த்தவர்;

தேசப் பிரிவினையை எதிர்த்தவர்;

காஷ்மீர விசேஷ அந்தஸ்தை மறுத்தவர்;

இட ஒதுக்கீட்டுக்கு காலக்கெடு விதித்தவர்;

புராணக் கொடுமைகளை எதிர்த்தது போலவே

பிற மதங்களின் சீரழிவையும்  விளக்கியவர்;

ஏக்கப் பெருமூச்சுடன் தவித்த தோழர்களுக்கு

கல்வியே உயர்வுக்கு வழி என்று

வாழ்வனுபவத்துடன் போதித்தவர்;

மத்திய ரிசர்வ் வங்கி உருவாகக் கருவானவர்;

தீண்டாமைக் கொடுமையை சட்டரீதியாக வென்றவர்;

பாகுபாடுகளுக்கு எதிரான குரல்களுக்கு முகமானவர்…

அவரது பன்முக ஒளிவீசும் ரத்தின ஜாலத்தை

இன்னமும் முழுமையாக நாம் உணர்ந்தோமில்லை.

 

அவரைப் போல ஒடுக்கப்பட்டால்,

அவரைப் போல நசுக்கப்பட்டால்,

அவரைப் போல புறக்கணிக்கப்பட்டால் மட்டுமே

அவரது தாபம் புரியும்.

ஆனாலும் அவற்றை மீறி வென்ற-

சிரத்தையின், ஒழுக்கத்தின், விடாமுயற்சியின்

வெளிப்பாடான அவரது ஞானமும்,

சீறியெழுந்த ஆற்றலின் உத்வேகமும் புரிய,

நீங்கள் அண்ணலாக வேண்டும்.

 

ஈசனை அறிய வேண்டுமானால், ஈசனாவதே வழி.

அம்பேத்கரை அறிய வேண்டுமாயினும்

அதுவே வழி!

.

விஜயபாரதம் தீபாவளி மலர்- 2015

.

மீண்டும் வேண்டும்…

18 Aug

This slideshow requires JavaScript.

மீண்டும் வேண்டும் காந்திஜி –
மதவாதிகளிடமிருந்து
மக்களைக் காக்க…
அராஜகவாதிகளிடமிருந்து
அரசியலை மீட்க…

மீண்டும் வேண்டும் நேதாஜி –
வெளிநாட்டு மோகத்தை
வேருடன் கிள்ளி எறிய…
வெற்றிபெறும் உத்வேகத்தை
நாட்டுக்கு அளிக்க…

மீண்டும் வேண்டும் திலகர் –
தேசபக்தி நறுமணம்
எங்கும் பரவ…
வேஷமிடும் சதியாளர்கள்
நடுங்கியோட…

மீண்டும் வேண்டும் அம்பேத்கர் –
ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம்
விரைவில் அமைய…
எல்லோரும் எல்லாமும்
எங்கேயும் பெற…

மீண்டும் வேண்டும் பாரதி –
சுதந்திரத்தின் சுகத்தை
அனைவரும் உணர…
அடிமைத்தனத்தின் எச்சங்கள்
அலறியோட…

மீண்டும் வேண்டும் சுதந்திரம் –
உயர்வைத் தடுக்கும்
ஊழல் அரக்கனிடமிருந்து…
சுயநலமே பிரதானமான
அதிகாரிகளிடமிருந்து…
நாட்டை அழிக்கும்
நாசகாரர்களிடமிருந்து…

– தினமணி (விளம்பரச் சிறப்பிதழ்), கோவை (15.08.2012)

.

ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளி

14 Apr

ஆயிரம் ஆண்டுகாலம் அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சில் தன்னம்பிக்கையும், துணிவும் தந்த மகத்தான தலைவர், அண்ணல் அம்பேத்கர் என்று அனைவராலும் புகழப்படும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர். சுதந்திர பாரதத்தின் வடிவமைப்பில் பேரிடம் வகிக்கும் சிந்தனைகளில்  அம்பேத்கரின் தத்துவங்களுக்கு தலையாய  இடமுண்டு.
.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப். 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்..

பீமாராவ்  தனது இளம்வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்துவிட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது. அனைவரும் நீர் எடுக்கும் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததையும் அவர் கண்டார். அந்த சம்பவங்கள் பீமராவின் உள்ளத்தில் அநீதிக்கு எதிராகப் போராடும் குணத்தை விதைத்தன.

.
ஆரம்பப் பள்ளியில் பயின்றபோது தன்னை மிகவும் ஊக்குவித்து உதவிய மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியரின் மீது ஏற்பட்ட பற்றால், தன் பெயரை பீமாராவ் அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார். 1907 ல் தனது மெட்ரிக் படிப்பை முடித்த அம்பேத்கர், மும்பை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் ‘தீண்டத் தகாத மாணவர்’ அவர் தான் என்பது குறிப்பிடத் தக்கது.அதனைக் கொண்டாட நடந்த விழாவில், அவரது ஆசிரியர் கிருஷ்ணாஜி அர்ஜுன் கேலுஸ்கர் அம்பேத்கருக்கு புத்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப்  பரிசளித்தார். பின்னாளில் ஹிந்து மதத்தின் குருட்டுததனமான தீண்டாமைக்கு எதிராக புத்த மதத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் மதம் மாறுவதற்கு புத்த மதம் காட்டிய சமதர்ம நெறியே காரணமானது.
 .
டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். மும்பை  பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம்,   அரசியல் அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்ற அவர்,  பரோடா மன்னர் ஷாயாஜி ராவ்  உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சனை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். பிறகு பாரிஸ்டர் பட்டமும் பயின்றார்.
 .
தன்னைப் படிக்க வைத்த பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே அம்பேத்கர் ராணுவ செயலாளராக 18  மாதங்கள் பணிபுரிந்தார். எனினும் அங்கும் தீண்டாமையால் பாதிக்கப்பட்டார். மன்னர் அவர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தாலும், அங்கிருந்த ஊழியர்கள் அவரை தீண்டத் தகாதவராகவே பார்த்தனர். அதன் விளைவாக, அப்பதவியை உதறிவிட்டு வெளியேறினார். பிறகு ஆசிரியர், கணக்காளர், முதலீட்டு ஆலோசகர் போன்ற பணிகளில் ஈடுபட்டார். ஆனால், தீண்டாமை காரணமாக அவரால் எங்கும் சோபிக்க முடியவில்லை.
 .
1918 ல் மும்பையிலுள்ள சைடன்ஹம் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கு அவரது திறமை வெளிப்பட்டபோதும், சக ஆசிரியர்களால் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானார். அவற்றுக்கு எதிராக போராடினார்.  சிறந்த அறிஞர் என்ற முறையில், 1919 ல் சௌத்போரோ குழுவில் இந்திய அரசுக்கான முன்னோடிக் கருத்துகளை முன்வைக்குமாறு ஆங்கிலேய அரசு அம்பேத்கரை கேட்டுக் கொண்டது. அங்குதான், தாழ்த்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு என்ற கருதுகோளை அவர் முதன்முதலாக பரிந்துரைத்தார்.
 .
1920 ல் கோலாப்பூர் சாஹு மகாராஜுடன் இணைந்து ‘மூக் நாயக்’ (அமைதியின் தலைவர்) என்ற பத்திரிகையை அம்பேத்கர் நிறுவினார். அதில் ஜாதி ஹிந்துக்களின் வன்கொடுமைகளை எதிர்த்து கடுமையான கட்டுரைகளை அவர் எழுதினார்;  பழமைவாத அரசியல் தலைவர்கள் பலர் அம்பேத்கரின் கண்டனங்களுக்கு ஆளாயினர். பேராசிரிய பணியிலிருந்து விலகிய அம்பேத்கர் லண்டன் சென்று சட்டம் பயின்று திரும்பினார். பிறகு, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் துவங்கினார்.
 .
வெற்றிகரமான வழக்கறிஞராக விளங்கிய அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக, ‘பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா’ என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலமாக, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றம், உரிமைகள் மீட்புப் பணிகளில் அவர் ஈடுபட்டார். 1927 ல் அவரது போராட்டங்கள் கூர்மை அடைந்தன. பொதுக் கிணறுகளில் தாழ்த்தப்பட்டோரும் நீரிறைக்கும் உரிமை, ஹிந்து ஆலயங்களில் வழிபாட்டுரிமை ஆகியவற்றிற்காக மக்களைத் திரட்டிப் போராடினார். மகாத் என்ற இடத்தில் அம்பேத்கர் நிகழ்த்திய சத்யாக்கிரகம் அவரது புகழை நாடறியச் செய்தது.
 .
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.
 .
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
 .
காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒப்புக் கொள்ளப்பட்டன.
 .
வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல்  கருத்துக்களை முன்வைத்த அம்பேத்கர், சுதந்திர தொழிலாளர்  கட்சியை 1936  ல் நிறுவினார். அந்தக் கட்சி மறு ஆண்டே தேர்தலில் போட்டியிட்டு, மும்பை மாகாண சட்டசபைக்கு  15 உறுப்பினர்களை அனுப்பியது.  அதே ஆண்டு ‘ஜாதி முறையை ஒழிப்பது எப்படி?’ என்ற நூலை அவர் எழுதினார். பின்னாளில் அவர் இந்திய குடியரசுக் கட்சியை நிறுவினார்.
 .
தனது ‘யார் சூத்திரர்கள்?’ என்ற நூலின் மூலம், ஹிந்து சமயத்தின் வருணாசிரமக் கொள்கைகளைக் கண்டித்த அவர், ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?’ என்ற நூலின் வாயிலாக காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்தார். 1941 முதல் 1945 வரை அவர் பல அற்புதமான நூல்களை  எழுதினார். ‘பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள்’ என்ற நூலில், முஸ்லிம் லீகின் பிரிவினை கோஷத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார். தேசப்பிரிவினைக்கு எதிராக அவர் தொடர்ந்து வாதிட்டு வந்தார்.
 .
இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின்  தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். தனது அர்ப்பண மயமான முயற்சியால் அரிய சமூக ஆவணமாக இந்திய அரசியல் சாசனத்தை அவர் உருவாக்கினார்.  1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது, பிரதமர் நேருவுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால்,  அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.
 .
தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடி களைத்த நிலையில், இந்து மதத்தின் பழமைவாதிகளுக்கு எதிராக, புத்த மதத்தைத் தழுவப்போவதாக அவர் அறிவித்தார். இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தபோதிலும், ‘பாரத பாரம்பரியத்துடன் கூடிய புத்த மதத்தில் சேரவே  விரும்புவதாக’ அவர் அறிவித்தார். அதன்படி, நாகபுரியில் 1956 , அக். 14 ல் நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் புத்த மதத்திற்கு மாறினார். அவர் எழுதிய ‘புத்தரும் அவரது தர்மமும்’ நூல் அவரது மறைவுக்குப் பின் வெளியானது.
  .
சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர்,  பாபா சாகேப் என்று போற்றப்படுகிறார். அவர்  1956 டிச. 6-ல் காலமானார். அவருக்கு 1990 ல் பாரத  ரத்னா விருது வழங்கி இந்திய அரசு பெருமை பெற்றது.   ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளியாக விளங்கிய அம்பேத்கர், சிறந்த சமூக சீர்திருத்தச் செம்மலாகப் போற்றப்படுகிறார். இந்திய அரசியலில் ‘தலித்’ எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திட்டவர் அம்பேத்கர். அவரை நாடு என்றும் நன்றியுடன் நினைவில் இருத்தி வாழ்த்தும்.

.

தேசமே தெய்வம் வலைப்பூ (06.12.2010)

.