Tag Archives: ஆன்மிகம்

முருகன் பெருமை!

13 Nov

முருகா உன் புகழ்தனையே பாட முடியுமா?
  முத்தமிழின் முதல்வா, என் குறையைப் போக்க வா!
சருகானேன் உனையெண்ணி சண்முகநாதா!
  சங்கடத்தைத் தீர்த்திடவே சடுதியில் வாராய்!

(முருகா)

திருக்கயிலை வாசனுடைய குருவாய் ஆனாய்!
  தினையுண்ணும் குறத்திக்கு கணவனும் ஆனாய்!
கருநீலக் கண்ணனுடைய மருகன் ஆனாய்!
  கந்தா உன் தத்துவத்தை விளக்க முடியுமா?

(முருகா)

நான்முகனின் கர்வத்தைக் குட்டி ஒழித்தாய்!
  நாசஉரு அரக்கர்களை நடுங்கிடச் செய்தாய்!
வேண்டியவர் குறை நீக்க வேலைத் தாங்கினாய்!
  வேதங்களும் புகழுகின்ற முருகா! முருகா!

(முருகா)
எழுதிய நாள்: 28.06.1988
Advertisements

கவிதா!

18 Oct

கவிதா வாணீ, கலைகளின் ஆழி!
பவிதாம்பிகையே, பங்கயச்செல்வி!
வீணாதரணீ, வித்தக தேவி!
ஞானாம்பிகையே, நல்லருள் தருவாய்! 

 

பாரத சிங்கத்தின் கர்ஜனை

11 Sep

‘உலகை மாற்றி அமைத்த உரைகள்’ என்ற பட்டியலில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரைகளுக்குப் பேரிடம் உண்டு. 1893, செப்டம்பர் 11}இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் கூடிய சர்வ சமயப் பேரவையில் அவர் நிகழ்த்திய உரை, உலக சமய வரலாற்றில் முக்கியமான ஒன்றாக இடம்பெற்றுவிட்டது. சமயங்களின் அடிநாதம் மக்களை மேம்படுத்துவதே என்பதுதான் அவரது பிரகடனம்.

உலகிலுள்ள சமயங்கள் அனைத்திலும் இணக்கம் காணும் முயற்சியில் சிகாகோவில் அந்தப் பேரவை கூடியிருந்தது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு சமயங்களின் பிரநிதிகள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து அதில் கலந்துகொண்டனர். அவர்கள் பலரும் தத்தமது சமயத்தின் சிறப்பை முன்வைப்பதையே கடமையாகச் செய்த நிலையில், பாரதத்தின் இளஞ்சூரியனாக அங்கு சென்றிருந்த சுவாமி விவேகானந்தர், சமயம் கடந்த பேருண்மையை நிலைநாட்டினார். Continue reading

இறைமை – 5 கவிதைகள்

1 May

மூதாட்டியின் தோல்சுருக்கம்

காதலியின் கண்ணிமைகள்

இளஞ்சிசுவின் பூங்கன்னம்

தந்தையின் தலை வழுக்கை

இளைஞனின் புஜவலிமை

எதிலும் உள்ளது

இறைமை.

இல்லை என்பது மடமை.

***

 

நிமிர்ந்து நிற்கும் நெடுங்குன்றம்;

ஆழ்கடலின் வேக அலைகள்;

அலைகளில் ஊடுருவும் எடையற்ற படகு;

ஆவேசமாய் ஆடும் மரக்கிளைகள்;

கொம்பைப் பிடிக்கத் தாவும் கொடி;

காலையில் வீசும் பூவின் சுகந்தம்;

பூக்களில் புரளும் மகரந்தத் தேனீ;

தத்தி நடக்கும் சிசுவின் சிரிப்பு…

அனைத்திலும் இருக்கிறது

இறைமை.

இல்லை என்பது மடமை.

***

நம்பி வணங்கலாம்.

நம்பாமல் மறுக்கலாம்.

பொதுவானது இறைமை.

***

இல்லாதது இல்லையென

மறுப்பதற்கேனும்

இருந்தாக வேண்டும் இறைமை.

***

ஞானம் – அஞ்ஞானம்

இயற்கை – செயற்கை

வலிமை – எளிமை

பேரழகு – குரூரம்

புயல் – தென்றல்

நன்மை- தீமை

பகுத்தறிவு – பட்டறிவு…

இரட்டைகளின் நடுவே

ஒருகால் தூக்கி

நடமிடுகிறது

இறைமை.

 

 

.