Tag Archives: உலகம்

ஹெச்1பி விசாவுக்கு கட்டுப்பாடு:  இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? 

8 May
 
 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு, இப்போது உலக அளவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் பணிபுரிய தாற்காலிகமாக அனுமதிக்கப்படும் பிற நாட்டு திறன்மிகு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவை ஏப்ரல் 3 முதல் நிறுத்திவைத்து அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
 .
அமெரிக்கக் குடிமக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவே இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
 .
 இந்த உத்தரவால் இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஆனால், டிரம்ப் ஆணையால் உண்மையில் அமெரிக்காவுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும்; இந்தியா சமாளித்துக் கொள்ளும் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

Continue reading

நடுநிசி நாய்கள்

19 Oct

ஒன்றை ஒன்று மோப்பம் பிடித்தபடி,
ஒன்றை ஒன்று உறுமியபடி,
வாலைக் குழைத்தபடி,
அங்கும் இங்கும் அலைகின்றன தெருநாய்கள்.

இருபுறமும் வெறிக்கப் பார்த்தபடி
தலையைச் சொறிந்துகொண்டு நடக்கும்
பித்தனைக் கண்டு காதை விரைக்கும் நாய்களை
கல்லெடுத்து விரட்டுகிறாள்
இடுப்பில் கை வைத்தபடி நிற்கும் அரவாணி.

மிதிவண்டியை உந்திச் செல்லும்
கூர்க்காவின் தடிவீசலுக்கு
பயந்து பம்முகின்றன
சிரங்கு பீடித்த தெருநாய்கள்.

ஒதுக்குப்புறமாய் கோணி விரித்துப் படுத்திருக்கும்
பிச்சைக்காரியை நோட்டமிடும்
மர்ம ஆசாமியைக் கண்டு குரைக்கிறது
ஜோடி கிடைக்காத தெருநாய் ஒன்று.

சற்றுத் தள்ளி இருக்கும் கடைத் திண்ணையில்
சுருண்டு கிடக்கும் தொழுநோயாளியின்
இருமல் சத்தம் எங்கும் எதிரொலிக்கிறது;
அருகில் படுத்திருந்த தெருநாய்
விருட்டென எழுந்து வேறிடம் நகர்கிறது.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது.
தெரு விளக்குகள் மந்தமாக எரிகின்றன.
நகரமே தூங்குகிறது தெருநாய்களைத் தவிர.

போர்வை போர்த்தியது போல
இருளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது
லேசான நடுநிசிப்பனி.

இரவு ரோந்தை சபித்தபடி
தெருமுனையில் நாற்காலியில் அமர்ந்து
பூனைத் தூக்கத்தில் இருக்கும் காவலரை
நெருங்கி முகர்ந்துவிட்டு நகர்கிறது
இன்னொரு தெருநாய்.

இரவுத் தொழிலாளிகளுக்காக
பீடியும் தேநீரும் கொண்டு செல்லும்
இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் விரட்டிவிட்டு
மூச்சிரைக்கத் திரும்புகின்றன தெருநாய்கள்.

திடீரென்று எங்கோ ஒரு நாய் குரைக்கிறது.
தொடர்கிறது இதர நாய்களின் குரைப்பு.
பத்து நிமிடத்திற்குப் பிறகு அமைதி.

விடியும்வரை தொடரும்
நாய்களின் ராஜாங்கத்தில்
நிம்மதியாகத் தூங்குகிறது நகரம்.

சாக்காட்டில் ஆழ்ந்துவிட்ட நகரின் உயிர்த்துடிப்பாக
முன்னங்கால்களை முன்னே பரப்பி
இருளைக் கிழித்தபடி ஊளையிடுகிறது,
கைவிடப்பட்ட ஜாதிநாய்.

வேசை வார்த்தைகளால் ஏசியபடி
கம்பெடுத்து துரத்துகிறான்
கோயில் வாசல் பிச்சைக்காரன்.

.

ஞானோதயம்

15 Mar

அவலம் பேரவலம் தான்.
இதை –
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
கவிதைகளால் கண்டிக்க முடியாது.
மாநாடுகளால் மறைக்க முடியாது.

பேரவலம் என்பது நிகழ்வதல்ல-
நிகழ்வதைக் கண்டுகொண்டிருப்பது;
கண்டும் காணாமல் இருப்பது.
கண்மூடி முகம் திருப்புவது.
இதற்கு –
சலுகைகளால் சமாதி கட்ட முடியாது.

பேரவலம் தவிர்க்க முடியாததல்ல.
அதிகார பீடங்கள் உண்மையை மறுப்பது;
ஆணவக்காரர்கள் ஆர்வத்தில் விளைவது.
-இதனால்
அமைதியை நிலைநாட்ட முடியாது.

பேரவலங்கள்
மறைக்க முடியாதவை;
மறுக்க முடியாதவை;
மன்னிக்க முடியாதவை.
அலங்கார அறிவிப்புகளால்
மனப்புண்ணை ஆற்ற முடியாது.
உபதேசங்களால் யாரையும்
திருத்தவோ, திருந்தவோ செய்ய முடியாது.
இதனை –
எழுதுவதாலும் யாரும்
நிம்மதி பெற்றுவிட முடியாது…

மீள் பிரசுரம்: ஈழக் கவிதைகள்

.

கிரிக்கெட்டில் அரசியல் கலக்கலாமா?

11 Mar
அரசியலில் மதத்தைக் கலக்கக் கூடாது; மதத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது என்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு. மொழியையும்கூட அவ்வப்போது இப்பட்டியலில் சேர்த்துக் கொள்வோருமுண்டு. இரண்டுமே உணர்ச்சிகரமானவை என்பதே அதற்குக் காரணம்.
.
அந்தப் பட்டியலில் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக, கிரிக்கெட் போட்டியையும் அரசியலையும் கண்டிப்பாகக் கலக்கக் கூடாது என்று, போட்டி விதிமுறைகளிலேயேகூடச் சேர்க்கலாம் என்றே தோன்றுகிறது.
.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு உள்ள முக்கியத்துவம் வேறெந்த விளையாட்டுக்கும் இல்லை. கிரிக்கெட் வீரர்களைக் கனவு நாயகர்களாக வழிபடும் இளைஞர் கூட்டமும் இங்குண்டு. அதனால்தான், கிரிக்கெட் போட்டிகளுக்கு ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்நிலையில் 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, ரசிகர்களின் களமாக மட்டுமல்லாது, அரசியல்வாதிகளின் தளமாகவும் மாறியிருந்தது கூர்ந்த கவனத்துக்குரியது.
.
பிரபல அரசியல்வாதிகள் பலரும் தன்னை கிரிக்கெட் அபிமானியாகவும், தேசப்பற்றுள்ள குடிமகனாகவும் காட்டிக்கொள்ள இந்தக் கிரிக்கெட் போட்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.
.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, முன்னாள் அமைச்சர் சசி தரூர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என இந்திய அரசியல் பிரபலங்கள் பலரையும் மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் காணமுடிந்தது.
.
திரைத்துறையினரும் இதில் சளைக்கவில்லை. ஐபிஎல் அணிகளை நடத்துவதில் போட்டியிடும் அரசியல்வாதிகளும் திரைத்தாரகைகளும் உலகக்கோப்பை போட்டிகளைக் காணாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம்.
.
கிரிக்கெட் போட்டியை ரசிக்கவும் ஆராதிக்கவும் சாதாரண ரசிகர்களுக்குள்ள அதே உரிமைகள் அரசியல்வாதிகளுக்கும் திரைத்தாரகைகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால், தங்கள் மைதான இருப்பால் கிரிக்கெட் போட்டிக்கே உரித்த தனிப்பண்பை இவர்கள் மடை மாற்றுவதைத்தான் ரசிக்க முடியவில்லை.
.
இல்லங்களுக்கே கிரிக்கெட் போட்டியைக் கொண்டுவந்து சேர்க்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள், போட்டியை ரசிக்கும் பிரபலங்களை அடிக்கடி காட்டுகின்றன. அதன் விளைவாகவே, ‘கிரிக்கெட் சிண்ட்ரோம்’ என்று அழைக்கத்தக்கதாக, புதிய காட்சிகள் அரங்கேறுகின்றன.
.
கோவைக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ளும் தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடங்கத் தாமதமானதற்கும் கிரிக்கெட் போட்டியே காரணமானது. கிரிக்கெட் போட்டியை மைதானத்திலோ, வீட்டிலிருந்தபடியோ ரசிக்காத அரசியல் தலைவர், திறமையான தலைவரே அல்ல போலிருக்கிறது.
.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக, நாட்டின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதிலும் அரசின் பங்காளியாகி இருக்கிறது கிரிக்கெட். அண்டைநாடான பாகிஸ்தானுடன் நிலவிவரும் உரசல்போக்கை மாற்றக் கிடைத்த அரிய வாய்ப்பாக, இந்திய- பாக். அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியை மாற்றினார் பிரதமர் மன்மோகன் சிங். அவரது அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மொஹாலி வந்து போட்டியை ரசித்துச் சென்றிருக்கிறார்.
.
எதிர்பார்த்தது போலவே, ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி இருநாட்டு உறவுகளும் மலர்ந்ததாக மகிழ்ந்தன. ஒரு கிரிக்கெட் போட்டியை இருநாட்டுப் பிரதமர்களும் அருகருகே அமர்ந்து ரசித்ததால், மும்பைத் தாக்குலுக்கும் நாடாளுமன்றத் தாக்குதலுக்கும் உதவிய பாகிஸ்தானின் பழைய சரித்திரத்தை மாற்றிவிட முடியாது. ஆனால், அமைதிக்கான நல்ல தொடக்கம் என்று இரு நாட்டு அரசியல்வாதிகளும் முழங்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கிரிக்கெட்.
.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இரு நாடுகளிடையே பேருந்துப் பயணத்தைத் தொடங்கியபோதும், இதேபோல அமைதிப் பிரசாரம் உச்சத்தை எட்டியது. அதன்பிறகே இந்தியா மீது பல மறைமுகத் தாக்குதல்களை பாகிஸ்தான் தொடுத்தது என்பதை நாடு மறந்துவிடாது.
.
இறுதிப்போட்டியில் இலங்கை அணியை மும்பையில் சந்தித்தது இந்திய அணி. அதில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. இப்போட்டியைக் காண குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், இலங்கை அதிபர் ராஜபட்சவும் வந்திருந்தனர். இரு நாடுகளிடையிலான சிறப்பான உறவை மேலும் மேம்படுத்த இந்தப் போட்டி உதவும் என்று நம்பியது நமது வெளியுறவுத்துறை.
.
இந்த அரசியல் விளையாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டுக்குப் பெருமை சேர்வதாகப் பலர் கருதலாம். உண்மையில் மதமோ, மொழியோ, கலைத்துறையோ, விளையாட்டோ எதுவாயினும் அரசியல் அதனுடன் சேர்ந்தால் அரசியலுக்குத்தான் லாபம் சேரும்.
.
உடனிருந்து கொல்லும் வியாதியாகவே இதுவரை அரசியல் இருந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் சுயநல விளையாட்டில் கிரிக்கெட் “கிளீன் போல்டு’ஆகிவிடவே வாய்ப்புகள் அதிகம். சுயலாபத்துக்காக தன்மீது சவாரி செய்பவர்களை, எஜமானர்களாகக் கருதும் குதிரையாக கிரிக்கெட் இருந்துவிடக் கூடாது.
.

– தினமணி (15.04.2011)

.

நம்மை நாம் அறிவோம்!

10 Mar

அண்மையில் நடந்த உலக சரித்திர நிகழ்வுகளில் எகிப்து மக்களின் புரட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. 20 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய எகிப்து அதிபர் முபாரக், மக்கள் நடத்திய தொடர் போராட்டத்துக்குப் பணிந்து பிப். 11-ல் பதவி விலகினார்.

அதன் எதிரொலி டுனீசியா, லிபியா, அல்ஜீரியா, ஜோர்டான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும், ஏமன், ஒமான் போன்ற அரபு நாடுகளிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரமும் ஊழலும் பெருகியுள்ள வேறு பல நாடுகளிலும் எகிப்து அமைதிப் புரட்சியின் செல்வாக்கு பரவத் தொடங்கியுள்ளது.

இதன் தாக்கம் இந்திய அரசியல்வாதிகளின் பேச்சிலும் வெளிப்படுகிறது. பலரும், எகிப்துபோல தங்கள் பகுதியில் மாற்றம் வரும் என்று ஆரூடம் கூறத் தொடங்கியுள்ளனர்.

எகிப்து அதிபர்போல விரைவில் மாயாவதி தூக்கி எறியப்படுவார் என்று கூறியிருக்கிறார் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ். ஏற்கெனவே முலாயமைத் தூக்கி எறிந்த மக்கள் யாரைப் பார்த்து அவ்வாறு செய்தார்களாம்?

எகிப்தைப்போலவே காஷ்மீரில் மக்கள் எழுச்சி இயக்கம் நடப்பதாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா குறிப்பிட்டிருக்கிறார். பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானியும்கூட, காஷ்மீரில் நடப்பது எகிப்து மக்களின் போராட்டம் போன்றதுதான் என்று
கூறியிருக்கிறார். எகிப்துக்குள் மக்கள் புரட்சி வெடிக்க எந்த அண்டைநாடும் தூண்டுகோலாக இருக்கவில்லை என்பது இவர்கள் இருவருமே சொல்லாதது.

அகில இந்திய இடதுசாரித் தலைவர் ஒருவரும் எகிப்து மக்களை முன்னோடிகளாகக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். செஞ்சீனாவின் தியானென்மன் சதுக்கத்தில் ஜனநாயகத்தை மீட்கப் போராடி பலியான மாணவர்களை அவர் வசதியாக மறந்துவிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக.வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், எகிப்து புரட்சியிலிருந்து மத்திய அரசு பாடம் கற்க வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார். எகிப்தில் அரசு சொத்துகளைக் கபளீகரம் செய்த முபாரக்போலவே கர்நாடகா மாநிலத்தில் தங்கள் கட்சியைச் சார்ந்த முதல்வர் செயல்பட்டதை அவர் நினைவில் கொள்ளாதது “செலக்டிவ் அம்னீஷியா’வாக இருக்கக்கூடும்.

தமிழக மேடைகளிலும்கூட எகிப்து முக்கிய உதாரணப் பொருளாகியிருக்கிறது. அமெரிக்காவில் ஒபாமா அதிபரானதையே தமிழக அரசியல் மேடைகளில் நெக்குருக முழங்கியவர்கள், எகிப்து விஷயத்தை விடுவார்களா? முபாரக்கையும் தமிழக முதல்வரையும் இணையாக ஒப்பிடும் காட்சிகளுக்குக் குறைவில்லை. .

இவர்களுக்குப் போட்டியாக ஆளும் தரப்பினரும், அதே முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியை முன்னாள் முதல்வருடன் ஒப்பிட்டு தமிழக அரசியலை கேலிக்கூத்தாக்குகின்றனர். இரு தரப்பினருமே சொல்ல மறந்த விஷயம், ஹோஸ்னி முபாரக்குக்கு தமிழக அரசியல்வாதிகள்போல அந்தர்பல்டி அடிக்கத் தெரியவில்லை என்பது.

அரசியல்வாதிகள் போதாதென்று திரைத்தாரகைகளும் எகிப்தைப் ‘பார்க்க’ ஆரம்பித்திருப்பது புல்லரிக்கச் செய்கிறது. எகிப்தில் புரட்சியால் மக்கள் மாற்றம் கண்டதுபோல மாணவ சமுதாயம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக வேண்டும் என்று கல்லூரி விழா ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

இலங்கைப் பிரச்னையை ஊர்தோறும் முழங்குபவரும், மீனவர்கள் நலனுக்காக திடீரென களத்தில் குதித்திருப்பவரும்கூட, உலக அரசியலுடன் தமிழக அரசியலை ஒப்பிட்டுத் தங்கள் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதுவரை ஜாதி அரசியல் பேசியவர்களையும் உலகளாவிய பார்வையுடன் பேசச் செய்திருக்கிறது எகிப்து. அந்நாட்டு மக்களுக்கு நன்றி.

உண்மையில் எகிப்து மக்களின் அரசியல் புரட்சிக்கு அடிப்படைக் காரணம், அது கடும் வன்முறைகள் இன்றி அமைந்திருந்ததுதான். நூறு ஆண்டுகளுக்கு முன், எகிப்து இடம்பெற்றுள்ள அதே ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடியில் தென்ஆப்பிரிக்காவில் இந்தியர் ஒருவர் நிகழ்த்திக்காட்டிய போராட்ட முறை அது. அதே வழிமுறையால்தான் இந்தியாவும் விடுதலை பெற்றது. பல நாடுகளின் தளைகளை அறுக்க உத்வேகம் அளித்த அதே அஹிம்சை முறை, இன்று எகிப்தில் மீண்டும் வென்றிருக்கிறது; மக்களின் சத்திய ஆவேசம் வென்றிருக்கிறது.

கொடுங்கோலாட்சி நடத்திய முபாரக்கின் அதிகாரத்துக்கு இணங்க மறுத்து, சர்வாதிகார அரசுக்கு ஒத்துழைக்க மறுத்து, ராணுவ பலத்துக்கு அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்தி, எகிப்தில் ஆண்களும் பெண்களும் 18 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தியது வீர வரலாறு; சந்தேகமில்லை. இதற்கான கருவை அவர்கள் பெற்றது மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிமுறைகளிலிருந்துதான்.

நமது சரக்கையே எகிப்து புதுப்பித்திருக்கிறது. அது புரியாமல், நமது கருவூலத்தை அறியாமல், நாம் யாரைப் பின்தொடர்கிறோம்? எப்போது நம்மை நாமே பார்க்கப் போகிறோம்?

– தினமணி (05.03.2011)

.