Tag Archives: ஓம்சக்தி

பயணங்கள் முடிவதில்லை

24 Oct

ஓட்டுனர் மீதான நம்பிக்கையில்
பேருந்தில் நிம்மதியான தூக்கம்;
தண்டவாளம் மீதான உறுதிப்பாட்டில்
சுகமான ரயில் பயணம்;
விமானம் குறித்த விதிகளின் வழியே
வானில் சாகச சிறகடிப்பு;
அலைகளையும் காற்றையும் நம்பி
கடலில், கப்பலில் யாத்திரை.

நம்பிக்கைகள் மட்டுமல்ல –
பயணங்களும் பலவிதம்.
எல்லாவற்றையும் மீறி
எப்போதாவது
நடந்துவிடுகிறது விபத்து.

ஓட்டுனரின் தூக்கமும்
பெயர்ந்த தண்டவாளமும்
செயலிழக்கச் செய்த மின்னலும்
கவிழ்த்துப் போட்ட பனிப்பாறையும்
எப்போதாவது
விதிவசமாகி விடுகிறது.
அதையும் மீறி –
அதே வாகனங்களில் பயணிக்காமல்
தவிர்க்கும் வாய்ப்புண்டு.

ஆயினும் மிதிவண்டி மோதலால்
மருத்துவமனை ஏகலாம்.
எதுவும் யாரிடமும் இல்லை;
இப்போதைக்கு உறங்கு.
விழித்தால் நாளை விவாதிக்கலாம்.

.

ஓம்சக்தி- தீபாவளி மலர் 2016

.

.

Advertisements

புத்தரின் புன்னகை

9 Nov

குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.

நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி

மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.

ஓங்கி உயர்ந்த அரசமர நிழலில்

மோன நிலையில் இருக்கிறார் புத்தர்.

 

மயில் ஆடிக்கொண்டிருக்கிறது;

அமைதி எங்கும் விரிந்திருக்கிறது.

ஊர்க்கோடியில் வீற்றிருக்கும்

காவியுடைத் துறவியைக் காண கூட்டம் குழுமுகிறது; நோட்டமிடுகிறது.

வணங்கிய மக்களை வணங்கி, அமுத மொழிகளைப் பகர்கிறார் புத்தர்:

 

ஆசையை விட்டொழியுங்கள்; அகிலத்தை ஆளுங்கள்.

தர்மம் செய்யுங்கள்; தர்மப் பாதையில் செல்லுங்கள்.

சங்கம் ஆகுங்கள்; சங்கமம் ஆக்குங்கள்.

புத்தன் ஆகுங்கள்; புது உலகைக் காணுங்கள்.

கூறிய புத்தனை பணிகிறது கூட்டம்.

மலர்களைத் தூவுகின்றனர் மக்கள்.

 

தூவிய மலர்களை திருப்பி வழங்கி ஆசி அளிக்கும் புத்தனைக் கண்டு

ஒருவன் மனதில் குமுறும் கோபம்.

இத்தனை நாட்கள் கட்டிக் காத்த

ஆசைகள் பொய்யா? பூசைகள் பொய்யா?

சீறும் கோபம் சொல்லினில் தெறிக்க

நிந்தனை மொழிகளால் அர்ச்சனை செய்தான்.

கோபத்தாலே நரம்பு புடைக்க கத்திய அவனை

கருணை தவழ புத்தர் பார்த்தார்; புன்னகை புரிந்தார்.

 

பலமணி நேரம் வசைமொழி கூறியும்

புன்னகை மாறா புத்தனைப் பார்த்து,

ஓய்ந்தான் எளியவன்; புத்தர் சிரித்தார்.

மெல்லிய குரலில் உறுதியாய் ஒலித்தார்:

 

பக்தர்கள் தூவிய நறுமண மலர் போலவே

உனது குறுமொழி மலர்களை புன்னகையாலே திருப்பித் தந்தேன்;

ஆசை இல்லா உள்ளம் இருந்தால்

புகழால் போதையும், இகழால் வாதையும்

நிகழ்வது இல்லை; நித்திய உண்மை.

என்றார் புத்தர்.

எளியவன் உணர்ந்தான்.

கண்ணீர் வழிய கரங்கள் குவித்தான்.

 

புத்தரின் புன்னகை எங்கும் பரவுகிறது.

உலகில் அமைதி தவழ்கிறது.

மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் வருட

மான்கள் மருண்டோடுகின்றன.

உடன் புலிகள் விளையாடுகின்றன.

 

குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.

நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி

மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.

.

‘ஓம் சக்தி’ தீபாவளி மலர்- 2015

.

.

சித்திரையே வருக!

13 Apr
சித்திரையே வருக!
சித்திரையே வருக! எம்
நித்திரைக் கனவுகளை
நினைவாக்க வருக!
.
(சித்திரை)
.
போனதெல்லாம் போகட்டும்!
புதுவாழ்வு பிறக்கட்டும்!
எத்திசையும் நலமாக
எந்நாளும் சிறக்கட்டும்!
.
அவலங்கள் அழியட்டும்!
அன்பெங்கும் செழிக்கட்டும்!
அவனியிலே வாழுகிற
அனைவருமே மகிழட்டும்!
.
தோஷங்கள் ஒழியட்டும்!
தேசங்கள் இணையட்டும்!
தொன்றுதொட்ட இந்நாட்டு
மக்களெல்லாம் பிணையட்டும்
.
அழுக்காறு மடியட்டும்!
அமைதிப்பூ பூக்கட்டும்!
அன்பாலே ஆளுகிற
அருள்வெள்ளம் சுரக்கட்டும்!
.
சேதங்கள் குறையட்டும்!
தீண்டாமை மறையட்டும்!
எல்லார்க்கும் பொதுவாக
வேதங்கள் பறையட்டும்!
.
(சித்திரை)
.
எதிர்காலம் நமதென்று
எக்காளம் கூட்டட்டும்!
என்றென்றும் இனிதிளமை
திக்கெட்டும் நாட்டட்டும்!
.
சேறான அரசியலும்
தெளிவாகத் திருந்தட்டும்!
வேறான எண்ணங்கள்
வெளியாகா திருக்கட்டும்!
.
தோளுயர்த்தி, விடியலென
பூபாளம் பாடட்டும்!
தொன்மைக்கும் புதுமைக்கும்
புதுப்பாலம் கூடட்டும்!
.
வீரமனம் விளைய
விதிகள் பல தளிரட்டும்!
பாரதத்தின் பண்பாடு
பாங்குடனே மிளிரட்டும்!
.
இன்பத்தால், துன்பத்தால்
மனம் தளரா திருக்கட்டும்!
இனிமேலும் வருகின்ற
எதிர்காலம் எண்ணட்டும்!
.
(சித்திரை)
.
சித்திரையே வருக! எம்
நித்திரைக் கனவுகளை
நினைவாக்கி வருக!
.
ஓம்சக்தி  (ஏப்ரல் -1999)
.