Tag Archives: கலாச்சாரம்

ஒரு துளி விஷம்

16 Jun

அந்நியத் துணிகளை எரித்த நாட்டில்
அயல்நாட்டுப் பொருட்கள் மீது
அபரிமித மோகம்.

அரையாடை காந்தியின்
அற்புதமெல்லாம் அந்தக்காலம்.
எமது அரையாடை அழகிகள்
உலகை வலம் வரும்
உற்சாகப் பறவைகள்.

முறத்தால் புலியைத் துரத்திய
கதை இனி வேண்டாம்.
நெய்ல் பாலிஷும், ஹைஹீல்சும்
சன்லோசனும் எம் கன்னியர்க்கு போதும்.

இளவட்டக் கல்லும் சடுகுடுவும்
அருங்காட்சியகப் பொருட்கள்.
கலரும் பிகரும் பார்க்கவே
காலம் போதவில்லை.

ராமாயணமும் மகாபாரதமும்
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மட்டும்.
எம்.டி.வி.யும், ‘பே’ சானல்களும்
‘டிஸ்கோதே’ கிளப்களும்
போதாதா என்ன?

வரகும் சீமையும் காணாமல் போயாச்சு.
விளைச்சல் நிலங்களை விற்றாகிவிட்டது.
‘கெண்டகி’ சிக்கன் தொண்டையில் நழுவுகிறது.

துண்டு துண்டாய் தப்பிய நினைவுகள்.
நாவின் அடி வரை கசக்கிறது
‘அயோடைடு சால்ட்’.

அன்று…
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
இன்று…
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்.

.

சுதேசி செய்தி (2001 ஜூலை)
.
.

மரத்துப் போய்விட்டனவா நமது வெட்க நரம்புகள்?

14 Mar

மனித உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் நரம்புகள் நம்மிடையே மரத்து வருகின்றனவோ என்ற சந்தேகம், அண்மையில் ஒரு பேருந்துப் பயணத்தின்போது எழுந்தது. இதற்குக் காரணம், அந்தப் பேருந்தில் ஒளிபரப்பப்பட்ட ஒரு திரைப்படக் காட்சி.

பேருந்து நிறைய பயணிகள் கூட்டம். பணிகளுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள், கல்வி பயிலச் செல்லும் மாணவ மாணவிகள், குழந்தைகள், முதியவர்கள் என மக்கள் கூட்டம் பேருந்தில் அடைந்திருந்தது. நிற்கவே இடமற்ற அந்தப் பேருந்தில்தான் ஒளிபரப்பானது கற்பழிப்புக் காட்சி.

ஒரு பெண்ணை நான்கு முரடர்கள் பலவந்தப்படுத்தும் காட்சி. பேருந்தில் அனைவருக்கும் உச்சஸ்தாயியில் கேட்கிறது அந்தப் பெண்ணின் கதறல். முந்தைய காலங்களில் இத்தகைய நிகழ்வுகளை நாசூக்கான காட்சியமைக்கில் வக்கிரமின்றி சுருக்கமாக முடித்துக் கொள்வார்கள். இந்தப் படத்திலோ, யதார்த்தம் என்ற பெயரில் பல நிமிடங்களுக்கு இந்த வல்லுறவுக் காட்சி நீண்டது.

பேருந்தில் பயணித்த பெண்கள் நெளிந்தார்கள். ஆண்களும் கூட இதைக் காண சகிக்காமல் தத்தளித்தார்கள். ஆயினும் சில இளைஞர்கள் எந்தக் கூச்சமும் இன்றி இக்காட்சியை ரசித்தபடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். பேருந்தின் நடத்துநரோ இவை எதையும் கண்டுகொள்பவராக இல்லை.

இதை எதிர்த்துக் கேட்கவும் திராணியின்றி, கேட்டால் யாரேனும் தவறாகக் கருதி விடுவார்களோ என்ற அச்சத்தில் பலர் வேடிக்கை பார்க்க, ஒரேயொரு மூதாட்டி திடீரென கர்ஜித்தார்.

“பொம்பளைங்க இந்த பஸ்சில் வர்றதா, வேண்டாமா? இங்கு யாருக்குமே புத்தி இல்லையா?’ என்ற அவரது ஆவேசம், அடுத்த சில நிமிடங்களில் பேருந்தில் ஒளிபரப்பான திரைப்படக் காட்சியை நிறுத்தியது.

சுமார் 80 பேர் பயணித்த பேருந்தில் ஒரேயொரு பயணிக்குத் தான் அந்தத் தார்மிக ஆவேசம் வந்திருந்தது. ஏன் பிறருக்கு அந்த நியாயமான கோபம் வரவில்லை? சிந்தித்துப் பார்த்தால் நமது கலாச்சார வீழ்ச்சியின் அபாயம் புரிகிறது.

வெட்கம், நாணம், கூச்சம் போன்றவை ஆறறிவு படைத்த மனிதருக்கே உரித்தானவை. பிற உயிரினங்கள் இவற்றை வெளிப்படுத்துவதில்லை. மனிதரின் பண்பாட்டுயர்வு தீய செயல்களுக்கு நாணுவதில் தான் வெளிப்படுகிறது.

அதேபோல, இருட்டில் நடக்க வேண்டிய இல்லற நிகழ்வுகளை பொது இடங்களில் வெளிப்படுத்தத் தயங்கும் கூச்சமும் வெட்கமும், மனிதரின் உன்னத நிலையாக விளங்கி வந்திருக்கின்றன. இவைதான் அண்மைக்காலமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படங்கள் தணிக்கைத்துறையின் கண்டிப்புக்கு அஞ்சி பல காட்சிகளை வெட்டியதுண்டு. இன்றோ, வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய திரைப்படங்கள் கூட  ‘யு-ஏ’ சான்றிதழ்களுடன் வெளியிடப்படுகின்றன. அது எப்படி இருவித பிராயத்தினருக்கும் ஏற்றதாக ஒரு படம் சான்றிதழ் பெற முடியும்? இதைத் தட்டிக் கேட்க, வெட்க நரம்புகள் வேலை செய்யும் ஒருவர்கூட திரைப்படத் தணிக்கைத் துறையில் இல்லை.

வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய “ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை இரவு 11.00 மணிக்கு மேல் தான் தொலைக்காட்சிகளில் திரையிட முடியும். ஆனால், இந்த “யு-ஏ’ சான்றிதழ்க் கோளாறு காரணமாக, இத்தகைய பாலியல், வன்முறை கலந்த படங்கள் பகல் நேரத்திலேயே நமது வீடுகளில் வலம் வருகின்றன.

இத்தகைய அனுபவமே, பேருந்தில் நிகழ்ந்த அத்துமீறலை பலரும் பொறுத்துக் கொண்டதற்கான காரணம் என்று தோன்றுகிறது. இரவுநேர சல்லாபங்களின் விரக தாபங்களையும், உணர்ச்சியோலங்களையும் பாடல்களில் புகுத்தும் நமது இசையமைப்பாளர்களைக் கண்டிக்காமல், திரையிசைப் பாடல்களை நாம் கூச்சமின்றிக் கேட்டு மகிழவும் இதுவே காரணம்.

பொது உபயோகத்துக்கான பேருந்துகளில் ஒளிபரப்பு சாதனங்களின் பயன்பாட்டுக்கு வரையறை உள்ளது. இத்தகைய உண்ர்ச்சிகளைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்புவது, விபத்துக்கும் குற்றங்களுக்கும் வழிவகுக்கலாம். ஆனால் இதை ஆய்வு செய்து கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளிடமும், வெட்க நரம்புகள் வேலை செய்வதில்லை.

சமுதாயத்தில் பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரிக்க, நாணமற்ற தன்மையே காரணமாக உள்ளது என்கின்றனர் மனோவியல் வல்லுநர்கள். உண்மையில் நாணமும் வெட்கமும் நம்மைக் காக்கும் கவசங்கள்; அவை நம்மை பிற்போக்குத்தனத்தில் தள்ளுபவை அல்ல. ஆனால், நமது வெகுஜன ஊடகங்களும் கருத்துருவாக்கும் முற்போக்கு அறிவுஜீவிகளும் கட்டற்ற நுகர்வு கலாசாரமே சிறந்தது என்று கருதுகிறார்கள். அதையே சாமானியரும் தொடர்கிறார்கள்.

மொத்தத்தில், இங்கு யாருக்கும் வெட்கமில்லை. நமது கலாச்சாரம் வீழ்ச்சியுற்றாலும், சொந்த சகோதரர்கள் துயரத்தில் மாய்ந்தாலும், ஊழல் வெள்ளம் தலைக்கு மேல் பாய்ந்தாலும், யாருக்கும் கவலையில்லை.

ஆபாசச் சுவரொட்டிகளை எந்தத் துணுக்குறலும் இன்றிக் கடக்கும் மனநிலையே எங்கும் தொடர்கிறது. தார்மீக ஆவேசத்துக்கும், வெட்க நரமóபுகளுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகவே தெரிகிறது.

நமது பண்டைய இலக்கியங்கள் அகம்- புறம் என்றும், களவு- கற்பு என்றும் பாகுபடுத்திய மனித வாழ்க்கையின் சிறப்பு, கலாச்சாரச் சீரழிவால் காணாமல் போகிறது. இனியும் நமது வெட்க நரம்புகள் வேலை செய்யாவிட்டால், சமுதாயமே நரம்புத் தளர்ச்சியால் நலிந்துபோகும் வாய்ப்பிருக்கிறது.

தினமணி  (09.09.2011)

.

%d bloggers like this: