Tag Archives: கல்வி

அன்றுபோல் இன்று இல்லை

31 Mar

தமிழ்நாட்டிலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இரு பருவத் தேர்வு (செமஸ்டர்) முறையை 1977-இல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், கற்பித்தலில் கல்லூரி ஆசிரியர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் அந்த முறை கொண்டுவரப்பட்டது.

செமஸ்டர் முறையில் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கு ஒதுக்கப்பட்டன. தவிர ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுத வேண்டி வந்தது. அதற்கு மாநிலம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

எந்த ஒரு புதிய முறை அறிமுகமாகும்போதும் அது குறித்த சந்தேகங்கள் எழுவது இயல்பு. அப்போது தமிழ்நாட்டில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் செ.அரங்கநாயகம். அதிமுக ஆட்சியைப் பிடித்த ஆரம்பகாலம் அது. மாணவர்களின் போராட்டத்தால் அரசுக்கு சங்கடமான சூழல் உருவாகி இருந்தது. Continue reading

Advertisements

அளவுக்கு மிஞ்சினால்…

27 Jun
anna univty

அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை

தங்க முட்டையிடும் வாத்தினை அறுத்துப் பார்த்த பேராசைக்காரனின் நிலை எப்படி இருந்திருக்கும்? தமிழகத்தில் அதீத ஆர்வத்துடன் அவசரமாகத் துவக்கப்பட்ட பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய நிலையைக் காணும்போது தங்க முட்டை வாத்துக் கதை தான் நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் 550. இவற்றில் கணிசமானவை தனியார் பொறியியல் கல்லூரிகள். 2005-ஆம் ஆண்டிலிருந்து மாணவர்களிடையே பெருகிய பொறியியல் கல்வி மோகத்தைப் பயன்படுத்திக்கொள்ள விழைந்து துவக்கப்பட்ட கல்லூரிகள் பல.

கிராமப்புறங்களில் பல ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பிவிட்டால் போதும் என்ற மனநிலையில், அரசியல்வாதிகளும்கூட இந்தக் களத்தில் குதித்தனர்.

நமது அரசுகள் உயர் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இந்நிலையில், உயர் கல்வி தனியார் வசமாவதையும் வணிகமயமாவதையும் அரசால் தடுக்க முடிவதில்லை. புற்றீசல் போல கிளம்பிய பொறியியல் கல்லூரிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசுகள் வேடிக்கை பார்த்ததற்கு இதுவே காரணம்.

தவிர, நாட்டில் எங்கும் நிலவும் ஊழல் கல்வித் துறையையும் விட்டுவைக்கவில்லை. எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத வெற்றுக் கட்டடங்களும்கூட பல இடங்களில் பொறியியல் கல்லூரிகளாக அங்கீகரிக்கப்பட்டன. பொறியியல் கல்லூரிக்குப் பெருகிய மதிப்பைக் கண்டு ஒரே வளாகத்தில் வெவ்வேறு பெயர்களில் பல கல்லூரிகள் இயங்க அனுமதி பெற்ற நிறுவனங்களும் உண்டு.

குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை அடைந்த அதிவேக வளர்ச்சியை அடுத்து, பல கல்லூரிகளில் ஐ.டி. படிப்புகளும் அதற்கான சேர்க்கை இடங்களும் அதிகரிக்கப்பட்டன. இது ஒருவகையில் வெற்றிபெறும் குதிரை மீது பந்தயம் கட்டுவது போலத்தான்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டதால், இத்துறைக்கான வரவேற்பு மங்கிவிட்டது. இந்தியாவை பி.பி.ஓ. சேவை மையமாகப் பயன்படுத்திவந்த அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெருத்த சவாலானது. அதன் விளைவாகப் பல ஐ.டி. நிறுவனங்கள் ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் இறங்கின. அதன் தொடர்ச்சியாக இந்தப் படிப்பு மீதான கவர்ச்சி குறைந்தது.

அது மட்டுமல்ல, கல்லூரிகளில் முறையான கட்டமைப்பு வசதிகள் இன்மை, தகுதி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஆரம்பக் கல்வியின் தரவீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பொறியியல் கல்வியின் தரமும் வீழ்ச்சி அடைந்தது. சொல்லப்போனால், கலை, அறிவியல் துறைகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதன் தாக்கம் பொறியியல், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதி. இதன் காரணமாகவே, பொறியியல் பட்டதாரிகள் பெரும்பாலோர் பணிக்கேற்ற தகுதி உடையவர்களாக இல்லை என்று வேலை அளிக்கும் நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அதாவது, பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை தரத்துடன் இல்லை என்பதும், அவற்றிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளின் தரம் மெச்சும்படியாக இல்லை என்பதும்தான் முக்கியமான தகவல்கள். அதன் அதிர்ச்சிகரமான விளைவுகள், கல்லூரிகள் மூடப்படும் நிகழ்வுகளாகத் தென்படத் துவங்கியுள்ளன.

தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் சதவீத அடிப்படையில் இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல், கல்லூரிகளின் பயிற்றுவித்தல் திறன் சரிவையும் மாணவர்களின் தர வீழ்ச்சியையும் ஒருசேரக் காட்டின. ÷

இதற்கு நமது பெற்றோரின் சுயநலமும் ஒரு காரணம். தங்கள் குழந்தைகளின் திறனையும் விருப்பத்தையும் புரிந்துகொள்ளாமல், எல்லோரும் படிக்கும் படிப்பையே அவர்களிடமும் திணிக்க நினைக்கும் பெற்றோரே இத்தகைய கல்லூரிகள் பெருகக் காரணம் என்பதும் உண்மை.

ஆனால், சாயம் விரைவில் வெளுத்துவிட்டது. 2014-இல் மொத்தமிருந்த 546 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 135 கல்லூரிகளில் பல பாடப்பிரிவுகளில் சேர மாணவர்களே இல்லை. சென்ற கல்வியாண்டில் மொத்தமிருந்த 2.87 லட்சம் இடங்களில் சுமார் 1.25 லட்சம் இடங்கள் காலியாக இருந்தன. நடப்புக் கல்வியாண்டில் இந்த நிலை மேலும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த முன்யோசனையும் இல்லாமல், அதிகமான கல்லூரிகளையும், புதிய பாடப்பிரிவுகளையும் துவங்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்ததே இந்த வீக்கத்துக்குக் காரணம்.

அரசுகள், பொறியியல் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுகொள்ளாமல் வாளாயிருந்ததன் விளைவு, இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் தரமற்ற கல்வி பயின்று எப்படியோ தேர்ச்சி பெற்று பட்டங்களுடன் வேலைவாய்ப்பின்றிக் காத்திருக்கிறார்கள். இவர்களால் சொந்தக் காலிலும் நிற்க முடிவதில்லை.

திறமை படைத்த மாணவர்கள் எந்தக் கல்லூரியில், எந்தப் படிப்பில் படித்தாலும் சாதித்து விடுவார்கள். அவர்களைப் பார்த்து நகலெடுக்க முயன்றதன் விளைவு ‘கல்விப் போலிகள்’ எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இவர்களால் தகுதி படைத்த மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

‘கல்வி வள்ளல்கள்’ தங்க முட்டையிடும் வாத்தினை அறுத்தவர்கள் என்றால், அதற்கு வித்திட்டவர்கள் ‘மந்தை’ மனப்பான்மையுடன் போய் விழுந்த மாணவர்களும் பெற்றோரும் தான். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள்?

.

-தினமணி (26.06.2015)

.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்

13 May

Madras University

ஒரு நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றுபவை பல்கலைக்கழகங்கள். பல துறைகளிலும் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளைக் கொண்டிருப்பதுடன், அவற்றுக்கான முழுமையான  உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பது பல்கலைக்கழகத்தின் இலக்கணமாகும்.

பாரத நாடு செல்வத்திலும் கல்வியிலும் சிறப்புற்று விளங்கிய காலகட்டத்தில் இங்கிருந்த நாளந்தா பல்கலைக்கழகமும் தட்சசீலப் பல்கலைக்கழகமும் உலக மாணவர்களை ஈர்த்தன என்பதை வரலாற்றில் படிக்கிறோம். தமிழகத்தின் காஞ்சிபுரம் பல்கலைக்கழக நகரமாகவே விளங்கியது.  அவை  பழங்கதைகளாகிவிட்டன.

இப்போது காலத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் உலகின் சவால்களை வெல்லக் கூடிய மாணவர்களை உருவாக்க வேண்டுமானால், அவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.  எண்ணிக்கை மட்டுமல்லாது அவற்றின் கல்வித் தரமும், ஆராய்ச்சித் திறமும் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் நிலை பற்றி சில அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வது, உயர்கல்வித் துறையில் நமது பலத்தை உணர்த்தும்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) இணையதளத்திலுள்ள விவரங்களின்படி, தற்போது நாட்டில் 45 மத்திய பல்கலைக்கழகங்களும், மாநில அரசுகளால் நடத்தப்படும் 322 பல்கலைக்கழகங்களும், 128 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், 192 தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. மொத்தமாக, 687 பல்கலைக்கழகங்கள் நமது நாட்டில் உள்ளன.

இவற்றில், மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களை அதிக அளவில் கொண்டதாக குஜராத் (24), உத்தரபிரதேசம் (24) மாநிலங்கள் விளங்குகின்றன. அதையடுத்து, கர்நாடகம் (23), தமிழ்நாடு (22), மகாராஷ்டிரம் (20), ஆந்திரபிரதேசம் (20) மாநிலங்கள் திகழ்கின்றன. நாடு முழுவதும் 322 மாநில அரசு பல்கலைக்கழகங்கள் நடந்து வருகின்றன.

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழு  (UGC) நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை முறைப்படுத்தும் பணியைச் செய்துவருகிறது. இதன் அனுமதியுடன் நாட்டில் 192 தனியார் பல்கலைக்கழகங்கள்  இயங்குகின்றன. தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் எதுவும் இல்லை. இப்பட்டியலில் ராஜஸ்தான் (39), உத்தரப்பிரதேசம் (23), குஜராத் (17) ஆகியவை முன்னணியில் உள்ளன.

நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்று நாடு முழுவதும் 128 கல்வி நிறுவனங்கள் நடைபெறுகின்றன. தமிழகம் இதில் 28 நிகர்நிலை பல்கலைக் கழகங்களுடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் (21), கர்நாடகம் (14)  ஆகியவை  அடுத்த நிலையில் உள்ளன.

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மத்திய பல்கலைக்கழகங்களில் உத்தரபிரதேசம் (5) முதலிடத்தில் உள்ளது.  தெலங்கானா (3) தமிழகம் (2) ஆகியவை அடுத்த நிலையிலும் உள்ளன.  மகாராஷ்டிரம்,  அசாம்,  ஜம்மு காஷ்மீர்,  மணிப்பூர் மாநிலங்களிலும் தலா இரு மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. நாட்டிலுள்ள பெரும்பாலான  மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்கள்: 2

1. மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்

2. கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை

மாநில பல்கலைக்கழகங்கள்: 22

1. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

2. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

3.அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்

4. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

5. பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

6. சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

7. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை

8. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி

9. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்

10. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

11. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை

12. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை

13. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை

14. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை

15. தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை

16. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை

17. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

18. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை.

19. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்

20. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்

21. தமிழ்நாடு இசை, கவின்கலை பல்கலைக்கழகம், சென்னை

22. தமிழ்நாடு சட்டப்பள்ளி, திருச்சி

தமிழக நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்: 28

1. ஏஎம்இடி, சென்னை

2. அமிர்த விஸ்வவித்யாபீடம், கோவை

3. அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் பல்கலைக்கழகம், கோவை

4. பாரத் பல்கலைக்கழகம், சென்னை

5. பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகம், வண்டலூர்

6. சென்னை கணித இன்ஸ்டிட்யூட், சென்னை

7. செட்டிநாடு கல்வி, ஆராய்ச்சி அகாதெமி (கேர்), காஞ்சிபுரம்.

8. ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், சென்னை

9. கலசலிங்கம் பல்கலைக்கழகம், விருதுநகர்

10. காருண்யா பல்கலைக்கழகம், கோவை

11. எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட், சென்னை

12. மீனாட்சி உயர்கல்வி, ஆராய்ச்சி அகாதெமி, சென்னை

13. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம்

14. பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

15. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், சென்னை

16. சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை

17. சவீதா பல்கலைக்கழகம், சென்னை

18. சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

19. ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா, காஞ்சிபுரம்.

20. ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை

21. புனித பீட்டர் பல்கலைக்கழகம், சென்னை

22. வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை

23. வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர்

24. விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம், சேலம்

25. நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், தக்கலை

26. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம், ஸ்ரீபெரும்புதூர்

27. வேல்டெக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை

28. கற்பகம் பல்கலைக்கழகம், கோவை

-தினமணி மாணவர் மலர்-2015

பல மொழிகள் தெரிந்திருந்தால் நீங்கள் தான் நாயகன்!

12 May

language_skills

இன்று உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. இணையம் வாயிலான கருத்துப் பரிமாற்றங்களால் விநாடிக்குள்  உலகின் எந்தப் பகுதியையும் தொடர்பு கொள்ள முடிகிறது. அதிவேகமான உலகம், திறமையுள்ள மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.

இத்தகைய போட்டி மிகுந்த உலகில் இன்றைய இளைஞர்கள் வெல்ல வேண்டுமானால், வழக்கமான தொழில் சார்ந்த படிப்புகள் மட்டுமல்லாது, சில பிரத்யேகத் திறன்களையும் பெற்றிருப்பது அவசியமாகிறது.

தகவல் தொடர்புத் திறன் (Communication Skill) மிகுந்தவர்கள் எந்தத் துறையிலும் கோலோச்ச முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்கு அடிப்படையாக பிறமொழி அறிவு உள்ளது. எனவே தாய்மொழி, உலகப் பொதுமொழியான ஆங்கிலம் தவிர்த்து பிற உலக மொழிகள் சிலவற்றையும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகியுள்ளது.

முதலாவதாக மாணவர்கள் ஒவ்வொருவரும் தனது தாய்மொழியில் பிழையின்றிப் பேசவும், எழுதவும், பேசவும் தெரிந்திருப்பது இன்றியமையாததாகும். சொந்த மொழியை அலட்சியம் செய்பவர்களால் பிற மொழிகளில் சாதனை படைத்துவிட முடியாது.

பிற மொழிகளில் நீங்கள் திறன் படைத்திருந்தாலும் உங்கள் வேர்கள் நிலைகொண்டுள்ள தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் பற்றிய புரிதலும் பெருமிதமும் இருப்பது அவசியம். அது நீங்கள் பிற மொழிகளில் நடத்தும் கருத்துப் பரிமாற்றங்களில் வெளிப்படும்போது உங்களுக்கு தனி மரியாதை கிட்டும்.

தாய்மொழியைத் தொடர்ந்து, தேசிய மொழியாக உள்ள ஹிந்தியிலும் மாணவர்கள் திறன் படைத்திருப்பது நல்லது. படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்புக்காக நாடு முழுவதும் செல்லும்போது, அங்குள்ள மக்களுடன் விரைவாகப் பழகவும், உரையாடவும் ஹிந்தி மொழி அறிவு அத்தியாவசியம்.

நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி புழங்கினாலும், ஹிந்தியும் ஆங்கிலமும் தெரிந்திருந்தால் நீங்கள் எங்கு சென்றாலும் சரளமாக உரையாடவும் எளிதாக மக்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும்.

அடுத்ததாக, உலகப் பொதுமொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்திலும் படித்தல், எழுதுதல், பேசுதல் ஆகிய மூன்று திறன்களையும் மாணவர்கள் பெற்றிருப்பது முக்கியம். பிழையின்றி சரளமாக எழுதுதல், சரியான உச்சரிப்பு, இயல்பாக திணறலின்றி உரையாடும் திறன் ஆகியவையே
மொழி ஆளுமையாகக் கருதப்படுகின்றன. ஆங்கில நூல்கள் வாசிப்பு உங்கள் ஆங்கில ஆளுமையை மேம்படுத்தும்.

தாய்மொழி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுடன், வேறு ஏதாவது ஒரு உலக மொழியிலும் மாணவர்கள் பாண்டித்தியம் பெறுவது சிறப்பான தகுதியாகக் கருதப்படுகிறது.

வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டால் அந்த மொழி பேசும் நாட்டிற்குச் சென்றுதான் பணிபுரிய வேண்டும் என்றில்லை. இந்தியா தற்போது உலக நாடுகள் அனைத்தும் வந்துசெல்லும் நாடாக மாறிவிட்டது. எனவே உள்நாட்டிலுள்ள பிறநாட்டு நிறுவனங்களின கிளைகளிலேயே நல்ல வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

உலகமயமாக்கலும் பொருளாதார மயமாக்கலும் பரவலான பிறகு, எந்த நாடும் பிற நாடுகளில் தொழில் துவங்குவது எளிதாகியுள்ளது. ஸ்வராஜ் பால், மிட்டல் போன்ற இந்தியத்  தொழிலதிபர்களே பல வெளிநாடுகளில் பெருந்தொழில்களை நடத்தும் காலம் இது. அத்தகைய நிறுவனங்களுக்கு பல மொழிகளில் ஆளுமை வாய்ந்த நிபுணர்கள் தேவைப் படுகிறார்கள்.

குறிப்பாக, சீனம், ஜெர்மன், பிரெஞ்ச், ரஷியன், லத்தீன், ஜப்பானிஷ், கொரியன், அரபு மொழிகளைக் கற்றவர்களுக்கு பிற நாடுகளிலும் நம் நாட்டிலும் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த மொழிகளைப் படிப்பவர்களுக்கு, மொழிபெயர்ப்பாளர், விளக்க உரையாளர், மொழி ஆசிரியர், மொழியியல் வல்லுநர், தகவல் தொடர்பாளர் உள்ளிட்ட பணி வாய்ப்புகள் உள்ளன.

வெளிநாட்டு மொழிகளில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு, சுற்றுலாத் துறை, பொழுதுபோக்கு துறை, மக்கள் தொடர்புத் துறை, தூதரகங்கள், பதிப்புத் துறை, போன்றவற்றில் பலவிதமான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

உலகமொழிகளை படிப்புகளாக வழங்கும் சில கல்வி நிறுவனங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவை சில உதாரணங்கள் மட்டுமே. ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிறமொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகள் தேடிவரும்.

சீனம்:
தில்லி பல்கலைக்கழகம்: எம்.ஃபில்.
கொல்கத்தா பல்கலைக்கழகம்: டிப்ளமோ
சைனிஸ் லேங்குவேஜ் இன்ஸ்டிடியூட்: டிப்ளமோ

பிரெஞ்ச்
தில்லி பல்கலைக்கழகம்: பி.ஏ.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: சான்றிதழ்
அலையான்ஸ் பிரான்சிஸ்: டிப்ளமோ, சான்றிதழ்
பெரியார் பல்லைக்கழகம்: சான்றிதழ்

ஜெர்மன்
கொல்கத்தா பல்கலைக்கழகம்: டிப்ளமோ
தில்லி பல்கலைக்கழகம்: சான்றிதழ்

லத்தீன்
இத்தாலியன் கல்சுரல் இன்ஸ்டிட்யூட்: டிப்ளமோ, சான்றிதழ்
சென்னை பல்கலைக்கழகம்: சான்றிதழ்
தில்லி பல்கலைக்கழகம்: டிப்ளமோ, எம்.ஏ, எம்.பில், பி.எச்டி.

ஜப்பானிஷ்
தில்லி பல்கலைக்கழகம்: டிப்ளமோ, எம்.ஃபில்
அமெரிக்கன் கல்லூரி, மதுரை: சான்றிதழ்
சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்: சான்றிதழ்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், தில்லி: சான்றிதழ்

ஸ்பானிஷ்
சென்னை பல்கலைக்கழகம்: டிப்ளமோ, சான்றிதழ்
தில்லி பல்கலைக்கழகம்: டிப்ளமோ

அரபு மொழி:
சென்னை பல்கலைக்கழகம்: எம்.ஏ, எம்.ஃபில், சான்றிதழ், டிப்ளமோ.
தில்லி பல்கலைக்கழகம்: பி.ஏ.
கோழிக்கோடு (காலிகட்) பல்கலைக்கழகம்: பி.ஏ.

எந்த மொழியைக் கற்றாலும், மொழி அறிவுக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் மட்டும் கற்காமல், அந்த மொழியிலுள்ள இலக்கிய வளத்தைச் சுவைக்கும் தன்மை கொண்டவர்களாகவும் மாணவர்கள் இருந்தால் அவர்களது அறிவு மேம்படும்.

தமிழகம் வரும் வெளிநாட்டவர் ஒருவர் திருக்குறளில் தனது ஆர்வத்தையும் திறனையும் தமிழில் வெளிப்படுத்தினால் தமிழக மக்கள் இயல்பாகவே அவரால் கவரப்படுவர். அதேபோலத் தான், ஷேக்ஸ்பியரை நன்கு அறிந்த இந்தியரால் பிரிட்டனில் வெகு எளிதாக செயலாற்ற முடியும். தவிர, பிற நாட்டு இலக்கிய அறிவு நமது அறிவை விசாலமாக்குவதுடன், நம்மைப் பண்படுத்துவதாகவும் அமைகிறது.

– தினமணி மாணவர் மலர்- 2015