Tag Archives: சங்கரர்

பாரதம் எழுதிய முதல்வோன்

5 May

.

நமது நாட்டில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு பல முதன்மைகள் உண்டு. மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை மகரிஷி வியாசர் சொல்லச் சொல்ல எழுதிய முதல் எழுத்தாளர் இவரே. பல லட்சம் சுலோகங்கள் கொண்ட மகாபாரதம், விநாயகரின் உடைந்த தந்தத்தால் எழுதப்பட்டது என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் விநாயகப் பெருமானை வணங்கித் துவக்குவது நமது மரபு. திரிபுர அரக்கர்கள் மீது போர் தொடுத்த ஈசன், விநாயகரை மறந்ததால் அவரது தேரச்சு முறிந்த கதையை விநாயக புராணம் கூறுகிறது. இன்றும் “பிள்ளையார் சுழி’யுடன் கணக்குப் பதிவேடுகள் துவங்குவதைக் காண்கிறோம்.

இந்து மதத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டிலும் வழிபடப்படும் பிரிய தெய்வமாகவும் விநாயகர் விளங்குகிறார். சைவக் கோவில்களில் கணபதியாக வீற்றிருக்கும் விநாயகர், வைணவக் கோவில்களில் தும்பிக்கை ஆழ்வாராக அருள்பாலிக்கிறார். தனது வாஞ்சையான தரிசனம் மூலமாக, இருமதப் பிரிவினரையும் அரவணைப்பது கணநாதரின் சிறப்பு.

விநாயகரின் திருவிளையாடல்கள் குறித்த கதைகள், அவர்மீதான அபிமானத்தால் எழுந்தவை. தமிழ்க்கடவுள் குமரனின் அண்ணனாகவும், சிவ- சக்தி மைந்தனாகவும், மால் மருகனாகவும் கருதப்படுவதால்தான் சமய ஒருமைப்பாட்டை இவரால் எளிதாகக் கொண்டுவர முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அறுசமய வழிபாடாக ஆதிசங்கரரால் வழிபாட்டு முறைகள் தொகுக்கப்பட்டபோது, “கணாபத்யம்’ என்ற முறையை அதில் இணைத்தார். இதிலிருந்து, இவ்வழிபாட்டு முறையின் பழமை தெரிய வருகிறது. கணபதியை முதற்கடவுளாக வழிபடுவதே கணாபத்யம் ஆகும். இன்றும், தமிழகத்தின் எந்த ஊருக்குச் சென்றாலும், பிள்ளையார் கோவிலைக் காண முடியும்.

ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் காட்சிக்கு எளியவராக வீற்றிருக்கும் விக்னேஸ்வரரையே குழந்தைகள் கடவுளாக முதலில் அறியத் துவங்குகின்றன. மழலைகள் விரும்பும் யானைமுகம் கொண்டிருப்பதே அவரை நோக்கி புதிய பக்தர்களை ஈர்ப்பதாக உள்ளது.

குடகிலிருந்து தமிழகம் நோக்கி ‘காவிரி’ நதியைப் பாயவிட்டவர் கணேசனே என்று புராணம் கூறும். காக்கையாய் வந்து தமிழ்முனிவர் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து மக்களின் தாகம் தீர்த்தவர் விநாயகர்.

நாட்டில் விநாயகப் பெருமானுக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், கணேச உற்சவத்தை முன்னெடுத்து அதன்மூலமாக மக்களை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்தார்.  அவரது வெற்றியைத் தொடர்ந்தே, தனது அரசியல் இயக்கத்தை ஆன்மிக அடிப்படையில் அமைத்தார், மகாத்மா காந்தி. “கணபதி ராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- குணம் உயர்ந்திடவே, விடுதலை கூடி மகிழ்ந்திடவே” என்று, திலகரின் சீடர் மகாகவி பாரதி பாடி மகிழ்ந்தார்.

கொழுக்கட்டையும் தோப்புக்கரணமும் கணபதிக்குப் பிரியமானவை. இவ்விரண்டுமே பக்தர்களின் உடல்நலனை மேம்படுத்த வல்லவை. கணபதிக்கு அர்ச்சிக்கப் பயன்படுத்தப்படும் அருகம்புல்லும் வெப்பம் குறைக்கும் அரிய மூலிகை.

இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில், அந்தத் தூயவனை வணங்கி, நாடு நலம்பெற பிரார்த்திப்போம். கணநாதர் அருள் இருந்தால் தடைகள் அகலும்; தன்னம்பிக்கை பெருகும். வினைகள் ஒழியும்; நம் வாழ்வும் ஒளிரும்.

.

நன்றி: தினமணி – கோவை (விநாயக சதுர்த்தி சிறப்பிதழ்- 2011)

.

எல்லோர்க்கும் எளியவர் பிள்ளையார்

1 Mar
கொஞ்சம் மஞ்சள்பொடி அல்லது பசுஞ்சாணத்தில் நீரைக் குழைத்துப் பிடித்துவைத்தால் பிள்ளையார் தயாராகி விடுவார் அருள்பாலிக்க. எதுவும் கிடைக்கவில்லையா? களிமண் போதும். சிறிது வெல்லமும் அருகம்புல்லும் படைத்தால் போதும், இந்த யானைமுகக் கடவுளுக்கு. இது தான் விநாயகரின் பெருமை.
.
இவருக்கு மாபெரும் கோயில் கட்ட வேண்டியதில்லை. ஆற்றங்கரையோரமும் அரச மர நிழலிலும் வீற்றிருக்கும் தூயவர், குழந்தைமனம் கொண்ட பிள்ளையார். வெள்ளெருக்கு மாலை போதும், இவரை மகிழ்விக்க. காட்சிக்கு எளியவராகவும், பூசிக்க இனியவராகவும் இருப்பதால் தான், பாரதம் முழுவதும் முழுமுதற்கடவுளாக இவர் வணங்கப்படுகிறார்.
.
கணபதி வழிபாடு பாரதத்தில் பன்னெடுங்காலம் தொட்டே இருந்துவருகிறது. இதனை ‘கணாபத்தியம்’ என்ற வழிபாட்டுமுறையாக முறைப்படுத்தியவர், கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர். அதற்கு முன்னரே கணபதி வழிபாடு இருந்தமைக்கு பழமையான கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் கட்டியம் கூறுகின்றன.
.
தமிழ்க் கடவுளான முருகனுக்கு எழுந்த கந்தபுராணத்தில், குன்றக் குமரனின் காதல் கைகூட அவரது தமையனான கணேசன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் அழகாக வர்ணிக்கப்படுகின்றன.
.
தமிழின் முதல் இலக்கண நூலான ‘பேரகத்தியம்’ நூலை எழுதிய குறுமுனி அகத்தியருடன் சிறுகுழந்தையாக கணேசன் நிகழ்த்திய தீராத விளையாட்டு, காவிரி நதியின் மூலத்துக்கு காரணமானது.
.
சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் முப்புரம் எரிக்கக் கிளம்பியபோது, அவரது தேரச்சு முறித்து விளையாட்டு காட்டியவர் கணபதி. சிவன் கோயில்களில் என்றும் விக்னேஸ்வரனுக்கே முதல் மரியாதை அன்று முதல் இன்று வரை வழங்கப் படுகிறது. அதுபோலவே, மால்மருகனாக இருப்பதால், வைணவக் கோயில்களிலும் தும்பிக்கை ஆழ்வாராக கஜமுகக் கடவுள் வீற்றிருக்கிறார்.
.
மீனவ குலத்தில் தோன்றிய வியாச மகரிஷி சொல்லச் சொல்ல, தனது தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி கணநாதர் எழுதியது தான், பல லட்சம் கவிதைகளைக் கொண்ட மகாபாரதம். இது பாரதம் முழுவதும் நிலவிவரும் நம்பிக்கை. எந்த ஒரு அரிய செயலானாலும், கணபதியை வணங்கிய பிறகே துவங்குவது என்ற மரபுக்கு இதுவும் காரணம்.
.
மனித வாழ்க்கை போராட்டம் நிரம்பியது; இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது. இன்பம் வரும்போது இறைவன் அருள் என்றும், துன்பத்தை இறைவன் அளிக்கும் சோதனை என்றும் ஏற்கும் பக்குவத்தை ஆன்மிகமே நமக்கு வழங்குகிறது. வாழ்க்கை என்னும் கடலில் மனிதஓடம் தறிகெடாமல் நிலைநிறுத்தும் நங்கூரமாகத் திகழ்வது இறைபக்தி. இதற்காகவே புராணங்கள் உருவாக்கப்பட்டன.
.
கடவுளர்களின் உருவகங்கள் அனைத்திலும் அடிப்படையான அம்சம் மானிட மேம்பாடாகவே திகழ்கிறது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் யானையின் முகத்துடன் அருளுவதால் அனைவருக்கும் அவரைப் பிடித்துப் போகிறது.
.
துயரத்தில் உழலும்போது மனிதர்களுக்கு ஒரு பற்றுக்கோடு தேவைப்படுகிறது. தங்கள் கஷ்டத்தைச் சொல்லி அழுது முறையிட ஒரு தாயுள்ளம் தேவைப்படுகிறது. நீரில் மூழ்கியவனுக்கு தற்காப்புக்கு உதவும் மரக்கட்டை கிடைத்தாலே முழுபலத்துடன் போராடி உயிர் தப்புகிறான். அவனுக்கு மகிழ்ச்சி தருபவரே ஆறுதலைத் தர முடியும். அந்த வகையில் தான், வினைகள் நீக்கும் விநாயக வழிபாடு, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து வருகிறது.
.
விடுதலைப் போராட்டக் காலத்தில், மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைத்தவர் மகாத்மா காந்தி. அவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர், மகாராஷ்டிரத் தலைவர் பால கங்காதர திலகர். அவர்தான், வீட்டு வழிபாடாக இருந்த கணபதி உற்சவத்தை நாட்டு உற்சவமாக்கியவர்.
.
‘சர்வஜனிக் கணேஷோத்சவம்’ என்ற பெயரில் களிமண் பிள்ளையார்களை தெருக்களில் பிரதிஷ்டை செய்து, ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்தார் திலகர். இன்று விநாயக சதுர்த்தி மக்கள் விழாவாகக் கொண்டாடப்பட திலகர் தான் ஆதர்ஷமாகத் திகழ்கிறார்.
.
அந்நாளில் இறைபக்தியும் கூட, நாட்டுவிடுதலைக்கு உரமூட்டும் கருவியாகவே திகழ்ந்தது. ”விடுதலை கூடி மகிழ்ந்திடவே கணபதிராயன் காலைப் பிடித்திடுவோம்” என்று தமிழகத்தின் மகாகவி பாரதி பாடியது அதனால்தான். நாமும் அந்தத் தும்பிக்கையானைத் தொழுதேத்தி, நமது துயர் களைவோம். நாடு நலம் பெற, அந்த ஐந்துகரத்தனை வணங்குவோம்; கவலைகள் நீங்க, கரியமுகத்தவனின் கழல் பணிவோம்!
தினமணி (கோவை-11.09.2010)
அருள்புரிவாய் கணநாதா- விநாயகர் சதுர்த்தி விளம்பரச் சிறப்பிதழ்
.

இறைவனை வழிபடு!

24 Feb

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!
மறைபல மனனம் செய்வதனாலுன்
மாரகம் தவிர்ந்து போய்விடுமா?

பொருள் மிக விரும்பும் மூடா, மூடா!
பொதியெனும் ஆசை அகற்றிவிடு!
தருமமுரைக்கும் கடமையினைச் செய்
தடைந்திடும் பொருளில் மகிழ்வுறுக!

மங்கையர் தனமும் நாபியும் கண்டு
மதியினை இழந்து பதறாதே!
அங்கம் முழுதும் மாமிச வடிவம்
என்பதை மனதில் எண்ணிடுக!

தாமரை இலைமேல் தண்ணீர் போல
சஞ்சலமின்றி வாழ்ந்திடுக!
பூமியை ஆளும் துயரும் நோயும்
புன்மையும் முழுதும் உணர்ந்திடுக!

செல்வம் சேர்கையில் அண்டும் சுற்றம்,
சேவகனாகப் பணியாற்றும்!
வல்லமை குன்றி மூப்படைந்தாலோ
வார்த்தை கூறவும் ஆளில்லை!

பிராணன் உடலில் உள்ள வரைக்கும்
பிரியம் இருக்கும் உன் மீது!
பிரேதமாக நீ சாய்ந்து விட்டாலோ
பிரிய மனைவியும் தள்ளி நிற்பாள்!

அன்புறு மகனை பகையாய் மாற்றும்
அம்சம் பொருளின் இயல்பன்றோ?
பொன்னும் பொருளும் என்றும் துன்பம்,
இன்பம் மெய்யாய் ஒன்றுமில்லை!

பாலகன் ஆசை விளையாட்டின் மேல்,
பதினென் வயதில் கன்னியர் மேல்!
காலம் கடந்த கிழவனின் ஆசை
கவலையில்; கடவுளைப் பிடித்தவர் யார்?

யாருன் மனைவி? யாருன் பிள்ளை?
யாரிடமிருந்து நீ வந்தாய்?
சாரும் மானிட வாழ்க்கை விந்தை
தத்துவ மிதனை எண்ணிப் பார்!

நல்லவர் நட்பால் நலியும் பற்று,
பற்றற்றவர்க்கு மயக்கமில்லை!
வல்லவர் அவர்க்கே வாய்மை விளங்கும்,
வழியது ஒன்றே முக்திக்கு!

செல்வம் இன்றேல் சுற்றம் இல்லை,
தண்ணீர் இன்றேல் குளமில்லை!
பொல்லாக் காமம் முதியோர்க்கில்லை,
தத்துவ மறிந்தால் வினையில்லை!

செல்வம், பந்தம், இளமைச் செழிப்பால்
செருக்கினை அடைந்து ஆடாதே!
எல்லாம் காலன் முன்னால் சாம்பல்,
எனவே இறையை எண்ணிடுக!

பகலும் இரவும் தினமும் மாறும்,
பருவம் பலமுறை மாறிவரும்!
அகலும் ஆயுள்; இகழும் காலம்;
ஆசைப் பிணைப்பு போவதில்லை!

இன்னருள் சங்கர பகவத்பாதர்
இருளில் உழன்ற பண்டிதனை
நன்னிலை அடைய பன்னிரு பாவால்
பண்ணிய மாலையை அருளினரே!

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!

குறிப்பு:
ஆதிசங்கரர் இயற்றிய “பஜகோவிந்தம்“- த்வாதச மஞ்சரிகா ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் இது.
– விஜயபாரதம் (1999), வேதமுரசு.
.