Tag Archives: சுதந்திரம்

சுதந்திரச் சங்கு

13 Aug
sangu
.
சுதந்திரம் என்பது பிறப்புரிமை – அதை
அடைந்திட யாசகம் தேவையில்லை!
சுதந்திரம் என்னது உயிராகும் – அதை
இடறிட அனுமதி எவர்க்குமில்லை!
 .
விடுதலை இல்லா மனிதன் – உலகில்
விழைந்திடும் செயல்களில் வெற்றிகளில்லை.
படிகுழி வீழ்ப்படு புலியின் – பலத்தில்
பலனெதும் இல்லை கண்டீர்!
 .
களை களைந்தால் பயிர்வளங்கள் உயர்ந்திடுதல் போல
தளை உடைந்தால் தனிப்பொலிவில் திளைத்திடுவோம் நாமே!
அதனாலே ஊதிடுவாய் சுதந்திரத்தின் சங்கை –
இதமேயினி எங்கெங்கும் என்றூதி ஆடு!
 .

மூன்றாவது சுதந்திரப் போர்

29 May

national flag 2

1857:

வியாபாரியிடம் அடகுவைக்கப்பட்ட
சுயஉரிமையை மீட்கத் துடித்த
வீரர்களின் வேகத்தால் கிளர்ந்தது
சிப்பாய்க் கலகம்.

அடிமைப்பட்டதை உணர்ந்த
நம் முதல்கணம் அது.
விட்டில்பூச்சிகளாய் அதில்
விழுந்த தியாகியர் ஆயிரம்! Continue reading

ஆபாசத்தை வேரறுப்போம்!

7 Aug
 cellsex
 .
வகுப்பறைக்குள் செல்லிடப்பேசியில் ஆபாசப்படம் பார்த்த சில மாணவிகள் மீது தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக அண்மையில் செய்தி வெளியானது. அந்த மாணவிகளின் பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள் எச்சரித்து அனுப்பினர். அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?
 .
மாணவிகளே ஆபாசப்படம் பார்க்கும் நிலையில், மாணவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கைக்கு அடக்கமான அதிநவீன செல்லிடப்பேசிகளில் இணையவசதிகள் இருப்பது, எதையும் ஆராயும் மனம் கொண்ட வளரிளம் பருவத்தினரைத் தடுமாறச் செய்கிறது.
 .
கல்லூரி மாணவ மாணவிகளின் நிலைமை இன்னும் மோசம். இணைய வசதியுடன் கூடிய செல்லிடப்பேசி இல்லாத கல்லூரி மாணவ மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். எந்த அதிநவீன வசதியும், நன்மையும் தீமையும் கலந்ததுதான். இணைய வசதியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோரை விட, கேளிக்கைக்கும், பாலுணர்ச்சித் தூண்டுதலுக்கும் பயன்படுத்துவோரே அதிகமாக உள்ளனர்.
 .
இணையதள இணைப்புடன் கூடிய செல்லிடப்பேசி இருந்தால் உலகமே நம் கையில் தான். இந்த வசதியை நாம் எவ்வகையில் பயன்படுத்துகிறோம்? இது நமது முன்னேற்றத்துக்கு உதவுவதை விட வீழ்ச்சிக்கே அதிகம் வித்திடுகிறது.
.
இங்குதான் கட்டுப்பாடுகளும் சட்டங்களும் தேவையாகின்றன. குறிப்பாக, பாலியல் வன்முறைக் குற்றங்களில் கைது செய்யப்பட்ட பலர், செல்லிடப்பேசியில் ஆபாசப்படம் பார்த்ததே குற்றமிழைக்கத் தூண்டியதாக வாக்குமூலம் அளித்துவரும் நிலையில், செல்லிடப்பேசியின் இணையப் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பது அவசியமாகியுள்ளது.
.
பாலுணர்ச்சி உயிர்களுக்குப் பொதுவானது. ஆனால் மனிதன் மட்டுமே பாலுறவை விஷமத்தனமான கேளிக்கையாக்கி இருக்கிறான். அந்தரங்கமாக நடைபெற வேண்டிய பாலுறவைப் பதிவு செய்து அதை வர்த்தகமும் செய்கிறான். இதற்கு உதவுகின்றன ஆபாச இணையதளங்கள்.
.
பாலுறவைத் தூண்டும் இலக்கியங்களும் திரைப்படங்களும் இதற்கு முன்னரும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை வயது வந்தோர் மட்டுமே, அதுவும் குற்ற உணர்ச்சியுடன் தனியே படிக்கவும் பார்க்கவும் செய்தனர். இதன் அடுத்தகட்ட வளர்ச்சியான ஆபாச விடியோ பேழைகளும் கூட ரகசியமாகவே ரசிக்கப்பட்டன.ஆனால், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட நவீன செல்லிடப்பேசிகளின் வருகை, நமது வெட்கமின்மையை வெளிப்படுத்தும் கருவியாகிவிட்டது.
.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி மூலம் தனியே பார்க்கப்பட்ட இத்தகைய தளங்கள் இப்போது பொது மைதானத்துக்கு வந்துவிட்டன. பயணிகள் சூழ்ந்த பேருந்திலும் ரயிலிலும் கூட செல்லிடப்பேசியில் ஆபாசப்படம் பார்க்கிறார்கள் சிலர்.
.
இந்த ஆபாசப்படத்தைப் பார்க்கும் ஆணின் பார்வை அங்குள்ள பெண்களின் அவயங்களை மேயாமல் என்ன செய்யும்? இதுவே அடுத்த நிலையில் பலாத்காரத்துக்கும் இட்டுச் செல்கிறது. 2012-ஆம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் பலவந்தப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயாவின் அவலத்துக்குக் காரணமான குற்றவாளி ஒருவன், தான் பார்த்த ஆபாசத்தளமே தன்னை மிருகமாக்கியது என்று சொன்னதை மறக்க முடியுமா?
.
இன்று உலக அளவில் கோடிக் கணக்கான ஆபாச இணையதளங்கள் இருப்பதாக புள்ளிவிரங்கள் கூறுகின்றன. செல்லிடப்பேசியில் இவை திறந்தவெளியில் இலவசமாகவே கிடைக்கின்றன. எனவே ஆபாசப்படங்களை முன்போல ரகசியமாகக் காண சிரமப்படத் தேவையில்லாத நிலை உருவாகி இருக்கிறது.
.
எனவேதான், கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுத்தார். மிக மோசமான 850 ஆபாச இணையதளங்களைப் பட்டியிலிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அவர், இந்தத் தளங்களால் இளைய சமுதாயம் சீரழிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து,  ‘இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமானது. இந்த விஷயத்தில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?’ என்று கடந்த ஜூலை 8-ஆம் தேதி கேள்வி எழுப்பினார். தவிர, மத்திய அரசு இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையுடன் ஆகஸ்ட் 10-இல் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டார்.
.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, மத்திய அரசு இப்போது 857 ஆபாச இணையதளங்களைத் தடை செய்துள்ளது. தொலைதொடர்புத் துறையின் கட்டளைக்கு இணங்கி, மேற்படி இணையதளங்களை இணைய சேவை அளிக்கும் நிறுவனங்கள் (ஐஎஸ்பி) முடக்கியுள்ளன. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
.
ஆபாசத்தளங்கள் கருத்துரிமையின் சின்னம் என்று சிலர் முழங்குகிறார்கள். பெண்களை போகப்பொருளாகச் சித்தரிப்பதுடன் பாலியல் குற்றங்களுக்கும் வழிவகுக்கிற ஆபாசதளங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களைப் பற்றி என்ன சொல்வது? மனித உரிமை வாதிகளும் அதீத அறிவுஜீவிகளும் வழக்கம்போல இவ்விஷயத்தில் அரசைச் சாடுகிறார்கள்.
.
உண்மையில், அரசு மிகவும் மென்மையான நடவடிக்கையையே எடுத்துள்ளது. இப்போதும்கூட சமூகக் கட்டுப்பாடுகளை மீறாத யு-ட்யூப் போன்ற தளங்கள் தடுக்கப்படவில்லை. சிலரது ஆட்சேபனைகளை ஏற்று சில இணையதளங்களின் முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தவிர மெய்நிகர் கணினி இணையத் தொழில்நுட்பம் (விபிஎன்) மூலமாக விருப்பமுள்ளவர்கள் தங்கள் வயதை உறுதி செய்து, இத்தளங்களைக் காண்பதை அரசு தடுக்கவில்லை.
.
இப்போதைய பிரச்னை என்னவென்றால், பருவ வயதை எட்டாதவர்களும் கூட மிக எளிதாக செல்லிடப்பேசியில் ஆபாசத் தளங்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றிக் காண முடிவதுதான். எனவே, அரசின் இந்த நடவடிக்கையை பெண்ணியவாதிகளும், பண்பாட்டை நேசிப்பவர்களும் ஆதரிக்க வேண்டும்.
.
பொதுத்தளத்தில் எழும் கூக்குரல்களின் எண்ணிக்கை ஆபாசத்தளங்களுக்கு சாதகமாகிவிட்டால், அரசு தனது நிலையிலிருந்து பின்வாங்கிவிடும்.
.
இப்போதும்கூட நீதிமன்ற உத்தரவால்தான் அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஆபாச தள விவகாரத்தில் அரசு விலகியிருக்க வேண்டும் என்ற கருத்து பிரசாரம் செய்யப்படும் நிலையில், எதிர்காலத் தலைமுறையினரின் நலனை விரும்பும் அனைவரும் அரசின் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும்.
 .
பிஞ்சிலேயே வெம்பிவிடும் வாலிப வயோதிக அன்பர்களாக நமது இளைஞர்கள் மாறாமல் தடுக்க வேண்டுமானால், நமது குலம் காக்கும் பெண்களின் மாண்பு காக்கப்பட வேண்டுமானால், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதையும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களையும் தடுக்க வேண்டுமானால், இது ஒன்றே வழி.
 .

தினமணி (06.08.2015)

சுதந்திரம் வாழ்வின் ஏணி

16 Aug

Dinamani Kavithai150814

சுதந்திரம் என்பது சுவாசக் காற்று
அடைத்திட முயன்றால் அயர்வே கிட்டும்!

சுதந்திரம் என்பது சுகமான ராகம்
இடறிட நினைத்தால் இடிகளும் முழங்கும்!

சுதந்திரம் என்பது பூக்களின் நேசம்
சிதைத்திடத் துணிந்தால் புரட்சி வெடிக்கும்!

சுதந்திரம் என்பது அமைதிப் பூங்கா
அழித்திட முயன்றால்அதிரடி உண்டு!

சுதந்திரம் என்பது வாழ்வின் ஏணி
பறித்திட முயன்றால் பதிலடி கிடைக்கும்!

சுதந்திரம் என்பதன் பொருள் மிக சுலபம்
சுதந்திரம் தானே சுகங்களின் உச்சம்!

– தினமணி (18.08.2014) கோவை- விளம்பரச் சிறப்பிதழ்.

 

குழந்தை ரேணுகாவின் அப்பா வருவாரா?

10 Oct

குழந்தை ரேணுகாவுக்கு செப்டம்பர் 4ம் தேதி முதல் பிறந்தநாள். அன்று மகிழ்ச்சிகரமாக இருந்திருக்க வேண்டிய அந்தக் குடும்பம், ஒப்பாரி வைத்தபடி  நடுத்தெருவில் நின்றது. காரணம் அந்தக் குழந்தையின் தந்தை முதல்நாள் தான் போலீசாரால் கொல்லப்பட்டிருந்தார். அதுவும் நான்கு நாட்கள் லாக்அப்பில் வைத்து போலீசார் நடத்திய கொடூர விசாரணையின் முடிவில். அந்த ஒரு வயதுக் குழந்தையின் அப்பா இப்போது இல்லை. அவரைத் திருமணம் செய்து மூன்று ஆண்டுகளே ஆன மனைவி கீதாவுக்கு ஆறுதல் சொல்லும் துணிவும் யாருக்கும் இல்லை.

இச்சம்பவம் நடந்தது திருப்பூரில். ஆயினும் நாம் ஜனநாயக நாடு என்று நம்மைப் பற்றிப் பெருமிதமாகச் சொல்லிக் கொள்கிறோம். ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்ற தத்துவத்தைப் பேசிக்கொண்டே இதுபோன்ற லாக்அப் மரணங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறோம்.

போலீசாரால் லாக்அப்பில் கொல்லப்பட்ட இளைஞர் மோகன்ராஜின் வயது 31. அவர் செய்த பாவம் ஏழையாகப் பிறந்தது; பைனான்ஸ் தொழில் நடத்தும் ஆளும்கட்சிப் பிரமுகர் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தது. அவர் வேறு வீட்டிற்கு மாறிய மறுநாள் வீட்டின் உரிமையாளர் கொல்லப்பட, சந்தேக வட்டம் மோகன்ராஜ் மீது விழுந்தது.

இவர் மட்டுமல்ல, 30க்கு மேற்பட்டவர்கள் போலீசால் கடுமையாக விசாரிக்கப்பட்டனர். 4 நாள் லாக்அப் சித்திரவதையின் முடிவில் களப்பலியானார் மோகன்ராஜ். தனது சாவால், போலீஸôரால் சித்திரவதை செய்யப்பட்ட மேலும் பலரைக் காப்பாற்றி இருக்கிறார் மோகன்ராஜ்.

மோகன்ராஜின் மரணம் திருப்பூரை உலுக்கி இருக்கிறது. அதன் விளைவாக, நெடுஞ்சாலையில் 9 மணிநேரம் மறியல் செய்த மக்கள் போலீஸ் அராஜகத்துக்கு எதிராகக் கோஷமிட்டனர். வேறு வழியின்றி ஒரு இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீசாரும் உடனடியாக தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்குக் காரணமான  ஏ.எஸ்.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதில் கொடுமை என்னவென்றால், போலீசால் அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனின் நிலையை அறிந்துவர காவல் நிலையம் சென்ற தம்பி ரமேஷும் போலீசால் இரண்டுநாட்கள் ‘விசாரிக்கப்பட்டார்’. அவரது உடல் முழுவதும் ரணம். இந்த ரணம் காலப்போக்கில் ஆறக்கூடும். போலீசால் அநீதி இழைக்கப்பட்ட இவர்களது குடும்பத்தின் மனப்புண் ஆறுமா? குழந்தை ரேணுகாவுக்கு அன்பான தந்தை மீண்டும் கிடைப்பாரா? அரசு அளிக்கும் நிதியுதவிகள் கீதாவுக்கு அன்பான கணவனை மீட்டுத் தருமா? பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மறைமுகமாக நிதியுதவி அளித்து அவர்கள் வாயை மூட பேரம் நடப்பதாகவும் தகவல். ஆனால் போன அப்பா திரும்ப வருவாரா?

லாக்அப் மரணங்கள் நமது நாட்டிற்குப் புதியவை அல்ல. குற்றவாளிகளை விசாரிக்க மூன்றாம்தர விசாரணை முறைகளைக் கையாள்வதும் புதிய விஷயமல்ல. லாக்அப் மரணங்கள் நிகழாத பகுதி நமது நாட்டில் இல்லை. ஆனால், எல்லா நேரங்களிலும் மக்கள் போலீசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதில்லை.

கோவையில் குழந்தைகள் ரித்திக், முஸ்கான் ஆகியோரைக் கொன்ற கொலையாளி மோகன்ராஜை (அவன் பெயரும் மோகன்ராஜ் தான்) போலீசார் போலிமோதலில் கொன்றபோது அதை மக்கள் ஆதரித்தனர். அதே மக்கள்தான், திருப்பூரில் பனியன் வியாபாரி மோகன்ராஜ் கொல்லப்பட்டதை எதிர்த்து சாலையை மறித்தார்கள். திருப்பூரில் போலீசாரின் அத்துமீறல்கள் தொடர்கதையாக இருந்ததால் தான் மக்கள் தார்மிக ஆவேசத்துடன் போராடத் துணிந்தார்கள். தடியடி நடத்தி அவர்களைக் கலைத்ததை போலீசார் பெருமையாகக் கருதிவிடக் கூடாது.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட சுப்பிரமணியம் என்ற இளைஞர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் இறந்தார். அந்த நிகழ்வை நஷ்டஈடு நாடகம் நடத்தி எப்படியோ மூடி மறைத்தனர் போலீஸôர். 2010ல் போலீஸ் இன்ஸ்பெக்டரே லஞ்சம் வாங்கியதை விடியோ பதிவு செய்த சுப்பிரமணியம் என்பவர் இதே காவல்நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டார். மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அவர் அன்று உயிர் தப்பினார்.

அதே ஆண்டு திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் அடிதடி தகராறுக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் சக்திவேலின் காலினை ‘விசாரணை’ என்ற பெயரில் உடைத்தனர் போலீசார். இன்றும் அந்த இளைஞர் நடைபிணமாகத் தான் இருக்கிறார். ÷உயர் நீதிமன்ற உத்தரவால், அவ்வழக்கில் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், சித்திரவதைக்கென்றே கட்டப்பட்டது போல, திருப்பூர் ஊரக காவல்நிலையம் நல்லூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்குதான் சக்திவேலின் கால் உடைக்கப்பட்டது; மோகன்ராஜும் கொல்லப்பட்டிருக்கிறார்.

சட்டத்தின் காவலர்களான போலீசாருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரத்தை யார் தந்தது? போலீசார் குறித்த மக்களின் அச்ச உணர்வே அவர்களுக்கு இந்த விபரீதத் துணிச்சலை அளிக்கிறது. அவர்களது பணிப்பளுவும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். எனினும், லாக்அப்பில் கதறிய மோகன்ராஜின் பரிதாபமான குரலும் கூடவா போலீசாரை சிந்திக்கச் செய்யாது? பணி முடிந்து வீடு திரும்பும் போலீசாரின் வீடுகளிலும் மனைவி, குழந்தைகள் தானே காத்திருப்பார்கள்?

இன்னொரு விஷயம், மக்களின் அறியாமை. குற்றவியல் விசாரணை சட்டப்படி, கைது செய்யப்பட்ட எவரையும் 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்ப வேண்டும். இது தெரியாததால் தான், போலீஸôர் மோகன்ராஜை இழுத்துச் சென்று விசாரித்த காவல்நிலையங்களுக்கெல்லாம் அவரது குடும்பம் தொடர்ந்து சென்றிருக்கிறது- எப்படியும் விடுவித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில். ஒரு லட்சாதிபதியாகவோ, அரசியல்வாதியாகவோ மோகன்ராஜ் இருந்திருந்தால் இந்நிலை அக் குடும்பத்துக்கு நேரிட்டிருக்குமா?

இதுபோன்ற லாக்அப் மரணங்களுக்கு கடிவாளமாக 1996ல் உச்சநீதிமன்றம் டி.கே.பாசு (எதிர்) மேற்கு வங்க அரசு வழக்கில் 11 கட்டளைகளைப் பிறப்பித்தது. கைது செய்யப்பட்டவரின் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞரை உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்பவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் லாக்அப் மரணங்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன.

உச்சநீதிமன்றம் அளித்த அந்த உத்தரவு, ‘சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாகரிக சமுதாயத்தில் மிக மோசமான குற்றம் லாக்அப் சாவு’ என்று வர்ணித்தது. நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா? அல்லது நாம் நாகரிகமான சமுதாயம் இல்லையா? குழந்தை ரேணுகா அழுதுகொண்டிருக்கிறாள். அவளது அப்பா கொல்லப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. அவளது அழுகையை நிறுத்த நமது அரசால் முடியுமா? வேடிக்கை பார்க்கும் நாம் என்ன செய்யப்போகிறோம்?

படம்: திருப்பூரில் போலீசால் கொல்லப்பட்ட  
மோகன்ராஜின் மனைவி கீதாவும் குழந்தை ரேணுகாவும் 

மீள்பதிவு: குழலும் யாழும்

.