Tag Archives: சுதேசி செய்தி

எல்லாம் பழங்கதை

14 Oct

மயான பூமியின் நடுகற்களா இவை?
இல்லை –
மறந்துபோன நெசவுத் தொழிலின்
மிச்ச சொச்ச அடையாளங்கள்.

ஆங்கிலேயனை மிரட்டிய
அகிம்சை ஆயுதம்
இந்த பாவுக் கற்களில் தான்
பட்டை தீட்டப்பட்டது.

நமது தாத்தாக்களும் பாட்டிகளும்
மழலைப் பருவத்தில்
இந்தப் பாவுக் கற்களில் தாவிப் பிடித்து
விளையாடி இருக்கிறார்கள்.

ஆயுத பூஜை நேரங்களில்
இக்கற்களுக்கு கற்பூர ஆரத்தி
காட்டியதும் உண்டு.

சூரியன் சுடத் தொடங்கும் முன்
கஞ்சியுடனும் நூலுடனும்
நெசவாளர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும்
இங்கு தவமாய்க் கிடக்கும்.

எத்தனை கோடி துணிகளின்
உற்பத்திக்கு உதவியவை
இந்த பாவுக் கற்கள்?

பல்லாயிரம் பேருக்கு
கஞ்சி வார்த்தவை –
கிராமப் பொருளாதாரத்தின்
கிளையாய்த் திகழ்ந்தவை –
மானம் காக்க ஆடை தந்தவை-
எல்லாம் பழங்கதை.

இன்று-
தொழில்புரட்சியின் இயந்திர மயமாதலில்
நசிந்துபோன அரிய தொழிலின்
சிதிலமான நினைவுச் சின்னங்கள்.

நாய்கள் இயற்கை உபாதைக்கு
கால்களைத் தூக்குவது
இந்தக் கற்களின் மீது தான்.
எருமைகளும் கழுதைகளும்
நமைச்சலுக்கு நாடும் இக்கற்களின்
பூர்வீகம் அவற்றுக்குத்
தெரிய நியாயமில்லை தான்.

முக்காடிட்டு தலை குனிந்திருக்கும்
பாவுக் கற்களை,
பாரதம் ‘இந்தியா’ ஆனதன்
பரிதாப விளைவு எனலாமா?

-சுதேசி செய்தி (ஜூன்- ஜூலை 2002 )
-விஜயபாரதம் (23.08.2002)
படம் பிடித்த இடம்:  பவானி, ஈரோடு மாவட்டம்.

.

Advertisements

வாழ்க திலகர் நாமம்!

31 Jul

பாலகங்காதர திலகர்
(ஜூலை 23, 1856 – ஆக. 1, 1920)

.
பாலன் என்றிட பறங்கியர் பதறுவர்!
கங்கா தரனென கயவரும் கலங்குவர்!
திலகர் என்றிட தீயவர் ஒதுங்குவர்!
அவரே அன்னையின் விலங்கை வளைத்தவர்!
.
கீதையின் ரகசியம் கீழ்மையை எதிர்ப்பது;
அடிமைத்தனமே கீழ்மையின் மறுபெயர்!
என்பது இவரது தத்துவ தரிசனம்!
அஞ்சா நெஞ்சம் திலகரின் தனிக்குணம்!
.
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என
சுள்ளென உறைக்கும் வகையினில் உரைத்தவர்!
உரிமையைப் பேணிட யாசகமா வழி?
உதையே நல்வழி என கர்ஜித்தவர்!
.
வீட்டினில் வசித்த விக்னேஸ்வரர்களும்
வீதியில் வலம் வர வித்தினை இட்டவர்!
தமிழ்க்கவி பாரதி குருவாய் ஏற்றவர்!
தாய் பாரதியின் தவத்தால் உதித்தவர்!
.

சுதேசி செய்தி (ஜூலை – 2009)

.

ஒரு துளி விஷம்

16 Jun

அந்நியத் துணிகளை எரித்த நாட்டில்
அயல்நாட்டுப் பொருட்கள் மீது
அபரிமித மோகம்.

அரையாடை காந்தியின்
அற்புதமெல்லாம் அந்தக்காலம்.
எமது அரையாடை அழகிகள்
உலகை வலம் வரும்
உற்சாகப் பறவைகள்.

முறத்தால் புலியைத் துரத்திய
கதை இனி வேண்டாம்.
நெய்ல் பாலிஷும், ஹைஹீல்சும்
சன்லோசனும் எம் கன்னியர்க்கு போதும்.

இளவட்டக் கல்லும் சடுகுடுவும்
அருங்காட்சியகப் பொருட்கள்.
கலரும் பிகரும் பார்க்கவே
காலம் போதவில்லை.

ராமாயணமும் மகாபாரதமும்
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மட்டும்.
எம்.டி.வி.யும், ‘பே’ சானல்களும்
‘டிஸ்கோதே’ கிளப்களும்
போதாதா என்ன?

வரகும் சீமையும் காணாமல் போயாச்சு.
விளைச்சல் நிலங்களை விற்றாகிவிட்டது.
‘கெண்டகி’ சிக்கன் தொண்டையில் நழுவுகிறது.

துண்டு துண்டாய் தப்பிய நினைவுகள்.
நாவின் அடி வரை கசக்கிறது
‘அயோடைடு சால்ட்’.

அன்று…
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
இன்று…
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்.

.

சுதேசி செய்தி (2001 ஜூலை)
.
.