Tag Archives: சுற்றுச்சூழல்

வென்றவனின் பிரகடனம்

13 Jun

 

ஆள்தான் பெரிய உருவம்
ஆனால், பரிதாபம்.

எதற்குத் துரத்துகிறார்கள் என்று
ஏதும் தெரியாமலே
ஓடிக் களைத்த போதில்தான்
பிருஷ்டத்தில் அந்த ஊசி பாய்ந்தது.
அடுத்த நிமிடம் என்ன நடந்தது?
மயங்கிச் சரிந்த பெரிய உருவம்
செங்கல் சூளைக்கு மண் அகழ்ந்த குழியில்
தன்னைத் தானே புதைத்துக் கொண்டது.

ஆள் தான் பெரிய உருவம்.
மனிதரின் பகுத்தறிவு சிறிதும் இல்லாத
பரிதாபத்திற்குரிய உயிரினம்.

கழுத்தில் ஒரு மின்னணுக் கருவியை மாட்டவே
துரத்துகிறார்கள் என்பது தெரியாத முட்டாள்.
துப்பாக்கியில் சுட்டது மயக்க ஊசி தான்
என்று தெரியாத ஐந்தறிவு ஜடம்.
ஓட ஓடத் துரத்துவார்கள் என்பது அறியாமல்
புவியில் பிறந்துவிட்ட அற்பப்பதர்.
ஆள் மட்டும் பெரிதாக இருந்துவிட்டால் போதுமா?

காட்டை ஆளும் லாவகம் தெரிந்தும்
நாட்டு மக்களின் அச்சம் புரியாமல்
எல்லை தாண்டிய பேராசைக்கு
சாவு தானே பரிசு?
‘அட்டகாசம்’ செய்யும் தும்பிக்கையான்
இப்போது உணர்ந்திருக்கக் கூடும்
மனிதரின் வலிமையை.

அப்பாவிகளுக்கும் பரிதாபிகளுக்கும்
மனிதரின் உலகில் என்றும் இடமில்லை.
வலிமை உடையவனுக்கே உலகம் சொந்தம்.
இது, உயிருடன் உள்ள பிற யானைகள்
புரிந்துகொள்ள வேண்டிய பாடம்.

காட்டைத் தாண்டாதே; தண்டனை உண்டு.
காட்டுக்குள் வந்தாலும் அனுமதி;
அதுவே உன் தலைவிதி.
இது வென்றவனின் பிரகடனம்.

***

 

குறிப்பு:

கோவை அருகே பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் கடந்த 2011, ஜூலை 9-ஆம் தேதி இரவு,  காட்டு யானை ஒன்றுக்கு கழுத்தில் ‘ரேடியோ காலர்’ என்ற மின்னணுக் கருவியை மாட்டுவதற்காக வனத்துறையினர் எடுத்த நடவடிக்கையின்போது மயக்க ஊசியால் யானை குழியில் விழுந்து பலியானது. அந்த யானைக்கு அஞ்சலியே இக்கவிதை.

படம்: இந்த யானைதான் வனத்துறை நடவடிக்கையில் பலியானதாக நம்பப்படுகிறது.
(பட உதவி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு, கோவை).

எழுதிய நாள்:  12.07.2011

 

 

புதிய வகை ஆக்கிரமிப்பு

11 May

seemai karuvelam

‘இளைதாக முள்மரம் கொல்க’ என்பார் வள்ளுவர். பகை சிறிதாக இருக்கும்போதே கிள்ளி எறிய வேண்டும் என்பதைக் கூற வந்த அவர் பகைக்கு முள்மரத்தை ஒப்பிட்டிருக்கிறார்.

அண்மைக்காலமாக விவசாயத்துக்குப் பகையாக மாறிவரும் சீமைக் கருவேல முள்மரங்களைக் காணும்போது, வள்ளுவரின் வாக்கு முழுமையாகப் புரிகிறது.

நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் “சீமைக் கருவேலம்’ எனப்படும் முள்செடிகள் விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் பாழ்படுத்துகின்றன. விவசாய நிலங்களின் எல்லையில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட “வேலி காத்தான்’ எனப்படும் இச்செடிகள், வேலியே பயிரை மேய்வது போல, விவசாய  நிலங்களை ஆக்கிரமித்து தரிசு நிலங்களாக்கி வருகின்றன.

‘புரசோபிஸ் ஜூலிஃபுளோரா’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இந்தத் தாவரம், மெக்ஸிகோ மற்றும் கரீபியன் தீவுகளைத் தாயகமாகக் கொண்டது. 1950-களில் பயிருக்கு வேலியாக வளர்க்க உகந்தது என்று அங்கிருந்து  கொண்டுவரப்பட்ட வேலிகாத்தான் செடிகள், மிக விரைவில் பல்கிப் பெருகிவிட்டன.

இதன் விதைகள் காற்றில் மிதந்து பரவும் தன்மையுடையவை. வறண்ட நிலத்திலும் வேரூன்றி விரைவாக வளரும் தகவமைப்பைக் கொண்டது சீமைக் கருவேலம்.

மழையே பெய்யாவிடினும், காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும் திறன் கொண்ட இந்தத் தாவரம், காற்றில் அதிகப்படியான கரியமில வாயுவை வெளியிடுகிறது.

இதன் வேர்கள் 175 அடி ஆழம் வரை மண்ணுக்குள் சென்று நீரை உறிஞ்சக் கூடியவை. இதன் காரணமாக, நிலத்தடி நீரை மிக அதிக அளவில் உறிஞ்சி விவசாயத்துக்குக் கேடு விளைவிக்கிறது சீமைக் கருவேலம்.

தவிர, தரிசு நிலங்களில் பரவி, அங்கு பயிர்ச் சாகுபடி செய்ய இயலாத நிலையையும் இந்தச் செடிகள் ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே நசிந்திருக்கும் விவசாயத்தை மேலும் மோசமடையச் செய்வதாக இந்த முள்செடிகள் காட்சியளிக்கின்றன.

குறும்புதர்ச் செடிகளாக நிலத்தை ஆக்கிரமிக்கும் இந்தத் தாவரம், 40 அடி உயரம் வரை வளர்ந்து மரமாகும் தன்மை கொண்டது. இதன் நிழலில் பிற தாவரங்கள் வளர முடியாது.

தமிழக பொதுப் பணித் துறை 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், நிலத்தடி நீரை பாதிக்கும் காரணிகளுள் சீமைக் கருவேல மரங்களின் பங்கு அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் எரிபொருளாக இது பயன்படுவதால், இதன் தீமைகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

இதன் பசிய இலைகளால் கவரப்படும் கால்நடைகள், கூடவே உள்ள கூர்மையான முள்களால் காயமடைகின்றன. தவிர, இதன் இலைகள் கால்நடைகளுக்கு நன்மையைவிட தீமையையே அதிகமாக அளிக்கின்றன.

நம் நாட்டிலேயே உள்ள தாவர வகையான கருவேல  மரங்களுக்கும் சீமைக் கருவேல மரங்களுக்கும் ஒப்பிடவே முடியாத அளவுக்கு வேறுபாடுகள் உள்ளன.

கருவேல மரம் மூலிகையாகப் பயன்படுகிறது. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பது பழமொழி. ஆனால், சீமைக் கருவேலம் ஒரு நச்சு களைத் தாவரமாகவே உள்ளது.

பல்லுயிர்ப் பரவலுக்கு வித்திடும் வனப் பகுதிகளிலும் சீமைக் கருவேலம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. மிக விரைவில் பரவும் இந்தக் களைச் செடிகள், வனத்தின் பாரம்பரியமான தாவரங்களின் இடங்களை ஆக்கிரமிப்பதுடன், வனவிலங்குகளின் வாழ்விலும் பெரும் இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றன.

சீமைக் கருவேல மரங்களால் வைகை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பை அடுத்து, இவற்றை அகற்றுமாறு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை 2014-இல் அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை.

கேரளத்தில் இந்தச் செடிகளை வேரோடு பிடுங்கி அழிக்க மாநில அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் அத்தகைய முனைப்பு காட்டப்படுவதில்லை என்பது கவலை அளிக்கும் விஷயம்.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை ஒழிக்கத் தன்னார்வ இயக்கம் 2013 முதல் செயல்படுகிறது. அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் சீமைக் கருவேலத்தை ஒழிப்பது என்பது ஒரு மாபெரும் பணி. இதுகுறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்துவதை மட்டுமே தன்னார்வ அமைப்புகளால் செய்ய முடியும்.

உண்மையில் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் சீமைக் கருவேல மரங்களை ஒழிக்கும் பணி ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். ஏதாவது ஓர் இடத்தில் இவை எஞ்சினாலும் விரைவில் பல்கிப் பெருகி விடும் தன்மை கொண்டவை.

எனவே, இதனை ஒழிக்க வேண்டுமானால், மத்திய – மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நாடு முழுவதும் நடத்தப்படும் தூய்மை இயக்கத்தின் மற்றோர் அங்கமாக சீமைக் கருவேலம் ஒழிப்பை மத்திய அரசு சேர்க்குமானால், அதனால் பெரும் பயன் விளையும்.

இதை ஒழிக்கும்போது வேறு ஏதாவது வகையில் இதைப் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்வதும் நல்லது. இதன் நார்ச்சத்தை காகித உற்பத்தியில் மூங்கிலுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியுமா என்று ஆராயலாம். கிராமப் புறங்களில் மரக்கரித் தயாரிப்பில் சீமைக் கருவேல மரம் பயன்படுகிறது. இதன் கார்பன் தன்மைகள் குறித்தும் ஆராயலாம்.

ஒவ்வோர் உள்ளாட்சியும் தங்கள் பகுதியிலுள்ள இந்தக் களைச் செடிகளை அகற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இத்துடன், சுவாச ஒவ்வாமையை ஏற்படுத்தும் பார்த்தீனியம் களைச் செடிகளையும் ஒழிக்குமாறு செய்யலாம். இதற்கு தன்னார்வ அமைப்புகள் தோள் கொடுத்து உதவலாம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்த முடியும். அதன்மூலம், தரிசாகக் கிடக்கும் பெருமளவு விவசாய நிலத்தை மீட்கவும் முடியும்.

முந்தைய காலத்தில் நிகழ்ந்த அரசியல் ஆக்கிரமிப்புகளிலிருந்து நாடு மீண்டுவிட்டது. ஆனால், புதியவகை ஆக்கிரமிப்பான இந்தக் களைச் செடிகளிடமிருந்து மீள முடியாமல் விவசாய நிலங்களும்  நீர்நிலைகளும் தத்தளிக்கின்றன.

நாட்டுக்குள் அடியெடுத்து வைத்த 65 ஆண்டுகளில், பெரும்பாலான பிரதேசங்களில் பெருகிவிட்ட இந்தக் களைச் செடி, யாரும் கண்டுகொள்ளாததால் மேலும் பல்கிப் பெருகி வருகிறது. எனவே, இதன் தீமைகளைக் கருத்தில் கொண்டு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கான அழுத்தத்தை நீதிமன்றங்கள் வாயிலாகவும், போராட்டங்கள் வாயிலாகவும் உருவாக்குவது பொதுநல அமைப்புகளின் கடமையாகும்.

-தினமணி (11.05.2015)

பரிதாபத்திற்குரியவர்கள்…

6 Oct

ஈரம் கசியும்

வெட்டப்பட்ட அடிமரத்தில்

அமர்ந்து

யாரை வெறிக்கிறது

குட்டி அணில்?

.

மரமில்லா வெற்றிடத்தை

பதைப்புடன் ஏன்

சுற்றிப் பறக்கிறது

குயில்?

.

சுட்டெரிக்கும் தரையில்

கிடக்கும் மரத்துகள்களில்

எதனை முகர்கிறது

சொறிநாய்?

.

சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட

மரத்துண்டுகளின் மீது

எந்த நம்பிக்கையில்

பயணிக்கிறது

பரிதாப ஓணான்?

.

ஓணான் பார்வை

9 Dec

முதுகுச் செதில்களை சிலுப்பியபடி
ஓரக் கண்ணால் பார்க்கும்
ஓணானின் பார்வையே
சரியில்லை…

அதன் குரல்வளை அருகில்
அசையும் தசைகளில்
ஒடுங்கிக் கிடக்கும் குரலில்
வேண்டுகோளும் இருக்கலாம்.
ஆனால்
பார்வை சரியில்லை….

மரத்தை வெட்டப் போகும் மனிதன்
பார்ப்பது போல,
வெறித்துப் பார்க்கும் ஓணானின்
பார்வை எனக்குப்
பிடிக்கவே இல்லை.

ஒருவேளை….
மரத்தை வெட்ட வந்தவன் என்று
நினைத்துவிட்டதா என்னை?

புனர் ஜென்மம்

30 Oct

அனல்காற்று வீசும் பாலைப் பெருவெளியின்
கானல் குளங்களின் ஊடே ஒற்றை ஈச்ச மரம்.
கூகைகளும் அஞ்சும் மயான வெயிலில்
முன்ஜென்ம நினைவுகளில் மூழ்கி
கண்கள் செருகுகிறது
வாயுலர்ந்த ஒட்டகம்.

*********

கானகப் பசுமையைச் சிதைத்தபடி
முன்னேறும் கோடரிக் கும்பல்களின்
தோள்களில் காயம் பட்ட மான்கள்.
ரம்பத்தின் பேரோசையில் அமிழ்ந்து போகிறது
குருதி வழியும் மான்களின் ஈனசுரம்.

*********

பாலைவனச்சோலையில் நிழல்தரும்
ஒற்றைமரம் மனிதனாகலாம்-
அடுத்த ஜென்மத்தில் ஒட்டகம் போல.
புண்ணியக் கணக்கை பாவத்தால் சரிக்கட்ட
வேறுவழி?

.