Tag Archives: செம்மொழிக் கலம்பகம்

திரும்பும் சரித்திரம்…

15 May

.

ஓராண்டுக்கு முன்…
திருவிழா முடிந்த நகரம் போல
காட்சி அளிக்கிறது
போரில் வீழ்ந்த கிளிநொச்சி.
எங்கும் பரந்து கிடக்கின்றன
சிதிலமான பொருட்கள்,
உடைந்த, உருக்குலைந்த
தளவாடங்கள்.

ஓராண்டுக்குப் பின்…
போரில் வீழ்ந்த முல்லைத்தீவு போல
காட்சி அளிக்கிறது
செம்மொழி மாநாட்டுத் திடல்.
எங்கும் பரந்து கிடக்கின்றன
மக்கள் உபயோகித்து வீசிய
கழிவுப் பொருட்கள்,
பாலித்தீன் பைகள், காகிதங்கள்,
அறுந்த செருப்புக்கள்…

.

மீள்பதிவு: குழலும் யாழும் (28.06.2010)

.

காற்றுக்குமிழிகள்

12 Apr

முன்னொரு காலத்தில்
கிரேக்க வீரன் அலெக்சாண்டர்.
இடைக்காலத்தில்
சீன செங்கிஸ்கான்.
18-ம் நூற்றாண்டில்
நெப்போலியன் போனபோர்டே
70 ஆண்டுகளுக்கு முன்
ஹிட்லர், லெனின், மாவோ, ஸ்டாலின்,…

வெற்றியில் திளைத்த நேரத்தில்
உலகத் தலைவர்களாக
முடிசூடியவர்களின் பட்டியல் இன்னும் நீளம்.

காற்றுக்குமிழிகளின் வனப்பில்
உலகம் சில நேரம் அதிசயித்தது.
குறுகிய காலத்தில் எவரையும்
புதைத்து எக்காளமிடுவது வரலாறு.
காற்றுக்குமிழிகளின் வாழ்நாள்
சாற்றுவதும் அரிதோ?

ஓராண்டுக்கு முன்பு
கொல்லப்பட்ட தம்பியை மறக்க
செம்மொழியில் திளைக்கும்
செஞ்சோற்று உதியலாத நெடுஞ்செழிய
விசயாலாய, மகேந்திர வர்ம, சேரமான்
அண்ணனுக்கு வந்தனம்!

உலகத் தமிழ்த் தலைவரென்ற
பத்திரங்கள் பத்திரம்!

மீள்பதிவு: குழலும் யாழும் (25.06.2010)

.

செம்மாந்த கூட்டம்

12 Apr

செம்மொழி மாநாட்டை நோக்கி…23

.

சிங்கம் போல கிளம்பியது காண்
செந்தமிழ் இளைஞர் கூட்டம்-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நோக்கி..
வழியில் பற்பல
அரசு மதுக்கடைகளைக் கடந்து.

செம்மொழி நம்பிக்கை

உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டுக்கு
இதுவரை செலவு
அரசு கணக்கில் ரூ. 400கோடி.
அத்தனையும் ஒரு வாரத்தில்
கிடைத்துவிடும்
அரசு மதுக்கடைகளில்.

செவ்வியல் ஏற்பாடு

உலகம் முழுவதிலும் இருந்து
வந்து குவிந்த விருந்தினர்களை
உபசரிக்க முன்னேற்பாடு-
அரசு மதுக்கடைகளில்
சரக்கு குவிப்பு.

செம்முழக்கம்

செம்மொழி செம்மொழி
செம்மொழியே!
எங்கள் தீராத் தமிழ்த் தாகம் தீர்த்த
செம்மொழி வாழியவே!

.

மீள்பதிவு: குழலும் யாழும் (23.06.2010)

.

நல்ல முகூர்த்தம்

12 Apr

செம்மொழி மாநாட்டை நோக்கி…21

.
நிகழும் ஆனி மாதம்
ஒன்பதாம் நாள்,
புதன் கிழமை,
வளர்பிறை துவாதசி திதியும்
விசாக நட்சத்திரமும்
சித்த யோகமும்
கூடிய சுப தினத்தில்,
ராகு காலம், எம கண்டம் அல்லாத
சர்வ மங்கள முகூர்த்தமான
காலை 10.30 மணியளவில்,
அதாவது 2010 ஜூன் 23-இல்,
கோவையில் துவங்குகிறது
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
வாழிய செம்மொழி!
வாழிய தமிழ் மொழி!
வாழிய பகுத்தறிவே!!
.
மீள்பதிவு: குழலும் யாழும் (21.06.2010)
.

கண்கட்டு வித்தை

12 Apr

செம்மொழி மாநாட்டை நோக்கி…20

காண்க: முந்தைய பகுதி….

செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டதே – அரசியல் நோக்கம் கொண்டது தான். என்றாலும், இதனால் கோவை நகருக்கு ஏதேனும் ஆதாயம் விளையும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே! ஆயினும் – பஞ்சாங்க முறைப்படி சொன்னால் – ஆதாயத்தை விட விரயமே அதிகம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும்.

முகப்பு மாற்றங்கள்:

.
செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தின் முகப்பு மாற்றப்பட்டுள்ளது; மகிழ்ச்சி. விமான நிலைய முகப்பும் பொலிவூட்டப்பட்டுள்ளது; மிக்க மகிழ்ச்சி. அதே சமயம் உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம் பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்கள் முன்பு போலவே தொடர்கின்றன. குறிப்பாக கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பிளாட்பாரங்கள் கூட – இடிந்து கிடக்கின்றன – சரி செய்யப்படவில்லை. காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும் என்ற அறிவிப்பு காற்றோடு போய்விட்டது.

.
இதைப் பற்றியெல்லாம் எந்த பத்திரிகையாளரும் கேள்வி கேட்பதில்லை. தினசரி செம்மொழி மாநாட்டை ஒட்டி நடக்கும் வளர்ச்சிப்பணிகளை பட்டியலிடவே பத்திரிகைகளுக்கு நேரம் போதவில்லை. இதையெல்லாம் பார்க்க யாருக்கு நேரம்?
கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கட்டப்பட்டதாக கதைக்கிறார்கள். உண்மையில், அத்திட்டம் துவங்கி பல மாதங்கள் கடந்த பின்னர் தான் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டது. நல்ல வேளையாக ஒண்டிப்புதூர் மேம்பாலம் முன்னரே திறக்கப்பட்டுவிட்டது. இல்லாவிட்டால், ஆறு வருடம் கட்டிய அதையும் செம்மொழி மாநாட்டுப் பட்டியலில் சேர்த்திருப்பார்கள்.

.
ஹோப் காலேஜ் பாலம் மூன்று ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் ஒரு (வலது) புறம் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. மறுபுறம் தற்போது பணி முடியும் தறுவாயில் உள்ளது. இதையும் செம்மொழி மாநாட்டுப் பட்டியலில் சேர்த்து செய்தி வாசிக்கிறார்கள்!
நெடுஞ்சாலையில் ஏற்கனவே இருந்த விளக்குத் தூண்களை அகற்றிவிட்டு புதிய தூண்கள் நடப்பட்டுள்ளன. இப்பணியும் கூட பல இடங்களில் இதுவரை முடியவில்லை. இன்றைய நிலவரப்படி, திருச்சி சாலையில், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதிகளில் இன்னும் விளக்குத் தூண்கள் பொருத்தப்படவில்லை. அப்பகுதி இருண்டு கிடக்கிறது. அகற்றப்பட்ட விளக்குத் தூண்களின் கதியும் தெரியவில்லை.

.
செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கம் உள்ள பகுதியிலிருந்து அவிநாசி ரோடு பளபளப்பாகி உள்ளது. அது மட்டும் தான் பாராட்டும் வகையில் உள்ளது.

அவசரக் கோலம்:

.
மின்கம்பிகள் அனைத்தும் புதைவடமாக புதைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. ஆனால், கடைசி ஒரு மாதத்தில் அவசர அவசரமாக செய்யப்பட்ட மின்கம்பி மாற்றப் பணி, பல இடங்களில் கம்பியைக் காட்டி இளிக்கிறது. மிகவும் அபாயமான மின்கம்பிகளை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு செல்வதில் அலட்சியம் காட்டப்பட்டிருப்பது தெரிகிறது. பின்னாளில் ஏதும் ஆபத்து நிகழ்ந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது?

.
பல இடங்களில் தார் ரோடுகளும் கூட அவசர கதியில் விரிவாக்கம் செய்யப்பட்டதைக் காண முடிந்தது. தார் ரோடு போடும் இடத்தை தோண்டி, செம்மண்ணால் கெட்டிப்படுத்தி அதன் மீது தார் ரோடு போடுவது தான் இதுவரை வழக்கம். சமீப காலமாக, சிமென்ட் கலவையால் கெட்டிப்படுத்தி அதன் மீது தார் ரோடு போடுகிறார்கள்.அப்போது தான் மழைக்காலத்திலும் தார் ரோடு தாங்கும். ஆனால், பல இடங்களில், வெறும் மண் பரப்பின் மீதே தார் ஊற்றி அதன் மீது ரோடு அமைக்கப் பட்டுள்ளது. இப்பணியை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும், வேலை முடிந்தால் போதும் என்று காணாமல் இருக்கிறார்கள். இதன் விளைவை, பலமான மழை பெய்யும்போது தான் உணர முடியும்.

.
மறக்கப்பட்ட சின்னங்கள்

.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கி நூறாண்டு கடந்து ஓராண்டு ஆகிவிட்டது. மிக நெரிசலான இடத்தில், சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கும் இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்; அல்லது விசாலமான இடத்துக்கு இடம் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்ட போதே இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், வெளிப்புற அலங்காரங்களில் மூழ்கியிருந்த அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. கடைசி நேரத்தில், அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

.
இது தான் கலைஞரின் சாமர்த்தியம். மாநாட்டு முழக்கங்களில் இனி, ‘அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கிய நிதியே வாழி’ என்ற பாடல் ஒலிக்கலாம். செம்மொழிப் பூங்கா கதை தான்.

.
கோவையின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் எதுவும் செம்மொழி மாநாட்டுக்காக மேம்படுத்தப்படவில்லை. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி முருகநாதர் கோயில் ஆகியவை தமிழுக்கு இறையம்சம் சேர்த்த திருத்தலங்கள். கோவை வரும் வெளிமாவட்ட மக்கள் கண்டிப்பாக செல்லும் இடங்கள் இவை. முதல்வருக்கு பிடிக்காவிட்டாலும் செம்மொழி மாநாட்டுக்கு வருபவர்கள் செல்லும் இடங்களை அவரால் தீர்மானிக்க இயலாது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக வரலாற்றுச் சின்னங்களை மூடி மறைக்க முடியாது. ஆனால், இக் கோயில்களில் எந்த மேம்பாட்டுப் பணியும் – மாநாட்டை முன்னிட்டு- செய்யப்படவில்லை.
.

கலைக் கூத்து:

.
செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு, கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. இதற்கு, ‘பிறப்பொக்கும்’ தோழமை ஓட்டம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் நடத்தப்படும் மாரத்தான் போட்டிகளே உதாரணம். தமிழ் மையம் (அருள்தந்தை ஜெகத் கஸ்பார் நடத்தும் அமைப்பு) நடத்துவதாக அறிவிக்கப்படும் இந்த மாரத்தான் ஓட்டங்கள் பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவால் தான் நடத்தப்படுகின்றன. இதில் அர்த்தமின்றி ஓடுகிறார்கள் ஆயிரக் கணக்கான மாணவ மாணவிகள். இதனால் செம்மொழி எப்படி சிறப்படையும் என்பது தெரியவில்லை. ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களை தமிழுக்காக ஓடச் செய்தது தான் ஒரே பெருமை. அடுத்ததாக, செம்மொழிச் சுடர் ஏந்தி ஓடி வருகிறார்கள். இதுவும் கவர்ச்சிக்கு உதவும்; மொழிக்கு உதவுமா?

.
இப்போது மூன்று நாள் செம்மொழி கலைவிழா துவங்கி இருக்கிறது. சங்கமம் மூலமாக ஏற்கனவே தொடர்பில் உள்ள கலைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. இது கனிமொழியின் உபாயம் என்பதால் உபயங்கள் அதிகமாகவே கிடைக்கின்றன. நாட்டுப்புறக் கலைகள் வாழும் என்பதால் இதை வரவேற்கலாம். தமிழில் பள்ளிக் கல்வியை பயிலுமாறு மக்களைத் தூண்ட முடியுமானால் இதற்கு முழுமையான வெற்றி கிட்டும்.
..
-இவ்வாறாக, கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளுடன், ஆடம்பரமான அலங்காரங்களுடன் துவங்க உள்ளது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. மாநாட்டு அரங்கின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது தோரண வாயில்.

.
ஒரு லட்சம் சவுக்குப் பூட்டுகள் கொண்டு, 300 தொழிலாளர்கள் மூன்று மாதம் உழைத்து அமைத்த பிரமாண்டமான பனையோலை நுழைவாயிலை அண்ணாந்து பார்த்தபடி வியக்கிறார்கள் கோவை மக்கள். அரசியல்வாதிகள் வேண்டுவது இது தானே?

.
வெறும் ஐந்து நாள் மாநாட்டுக்கு பல கோடி செலவில் தோரணவாயில் எதற்கு என்று கேள்வி கேட்கும் விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு இத்தகைய கண்கட்டு வித்தைகள் தானே பரிசாகக் கிடைக்கும்?

மீள்பதிவு: குழலும் யாழும் (20.06.2010)

..

கண்துடைப்பு நாடகங்கள்

12 Apr

செம்மொழி மாநாட்டை நோக்கி…19

.

செம்மொழி மாநாடு கோவையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாகிவிட்டது. சென்ற ஆண்டே நடந்திருக்க வேண்டிய வேண்டிய மாநாடு இது. இலங்கைப் பிரச்னை உச்சத்தில் இருந்தபொது அறிவித்துவிட்டு, பிரபாகரன் இறந்த சமயத்தில் நடத்தவேண்டாம் என்பதனால், 2010 ஜூன் 23- க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது, மாநாடு நடக்கும் கோவை நகரை மேம்படுத்த வேண்டும்; அதற்கு கால அவகாசம் வேண்டும் என்பது தான்.

.

சாலை மேம்பாடு:

.
இதனால், கோவை நகரம் மேம்பட வாய்ப்பு கிடைத்தது என்று கோவை மக்கள் மகிழ்ந்தது உண்மை. ஆனால், செம்மொழி மாநாட்டு நிகழ்வுகள் முழுவதும், ஏற்கனவே கோவை தொழில்துறையினரால் அமைக்கப்பட்ட கொடிசியா அரங்கிலேயே நடக்கும் அன்று அறிவித்துவிட்டது அரசு. பரவாயில்லை, நகர சாலைகளேனும் மேம்படும் என்று நகர் மக்கள் திருப்தி அடைந்தனர்.

.
அதற்கேற்ப, கோவைக்கு வரும் இரு பிரதான சாலைகளான அவிநாசி ரோடு (தே.நெ. 47), திருச்சி ரோடு (தே.நெ. 45) ஆகியவை அகலப்படுத்தப்பட்டன. ஆயினும் மிக நெருக்கடி உள்ள மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, சத்தியமங்கலம் ரோடு ஆகியவை மேம்படுத்தப்படவில்லை. அவிநாசி ரோடும் திருச்சி ரோடும் கூட, செம்மொழி மாநாடு அறிவிப்புக்கு முன்னரே அகலப்படுத்த திட்டமிட்டவை என்பது பலருக்கு தெரியாது.

.
ஆகமொத்தத்தில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் செய்யப்படும் விரிவாக்கப் பணிகள், செம்மொழி மாநாட்டுக்காக நடத்தப்படுபவை போல முன்னிறுத்தப் படுகின்றன. உண்மையில், இப்பணிகளை வேகமாக நடத்தச் செய்ததைத் தவிர, மாநாட்டுக்கும் சாலை மேம்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உண்மை.

.
கோவை நகரின் பல சாலைகள் இன்னும் மோசமாகவே உள்ளன என்பது நகருக்குள் உலா வந்தால் தான் தெரியும். ஆனால், மேம்போக்கான பணிகளிலேயே கவனம் செலுத்தப் படுவதால், இவை கவனம் கொள்ளப்படவில்லை. நகரின் பொது சுவர்களுக்கு வண்ணம் பூசவும், ஓவியம் வரையவுமே நேரம் போதவில்லை. அவை தானே வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்களின் கண்களை முதலில் கவரும்?

.

பூங்காக்கள்:

.
மாநாட்டின் பேரில் நடந்துள்ள கொள்ளை என்று பூங்காக்கள் அமைப்பை சொல்லலாம். செம்மொழி மாநாட்டுக்காக 40 பூங்காக்கள் அமைத்துள்ளதாக கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. இவற்றில் பல, ஏற்கனவே அமைக்கப்பட்டவை. அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மட்டும் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

.

இதற்கான செலவினங்கள் எவ்வளவு? அந்த செலவு மாநகராட்சி சார்ந்ததா, செம்மொழி மாநாடு சார்ந்ததா? இது யாருக்கும் தெரியாது.
தவிர இந்த பூங்காக்களில் மரங்களே கிடையாது. அவசர உப்புமா போல செயற்கை புல்வெளிகள், குரோட்டன் செடிகளை கொண்டு பம்மாத்து செய்திருக்கிறார்கள். மாநாடு முடியும் வரை இந்த புல்தரைகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். அதன்பிறகு, காய்ந்து சருகாகப் போகும் இந்த பசுமையான புல்தரைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

.
மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கைச் சுற்றிலும் கூட இதே போன்ற அவசர ஒப்பனைகள் தான் செய்யப்பட்டுள்ளன. இன்னும் இந்த ஒப்பனைகள் தொடர்கின்றன. தொட்டிச் செடிகள் எங்கெங்கிருந்தோ வந்து குவிகின்றன. இவை வாடகைக்கு எடுத்து வந்தவை போலத் தான் தோற்றம் அளிக்கின்றன.

.
கோவை மதிய சிறை மைதானத்தில் பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து ஓராண்டாகி விட்டது. அதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. கடைசி நேரத்தில் யாரோ முதல்வருக்கு ஞாபகப்படுத்தி இருப்பார்கள் போல- சென்னையில் கூட்டிய கூட்டம் ஒன்றில், கோவையில் அமைய உள்ள செம்மொழிப் பூங்காவின் மாதிரி வரைபடங்களை முதல்வர் பார்வையிடுவதாக ஊடகங்களுக்கு செய்தியும் படமும், சில தினங்களுக்கு முன், செய்தி விளம்பரத் துறையால் விநியோகிக்கப்பட்டது. அதை பிரசுரித்து ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்தன.

.

உள்கட்டமைப்புக்கள்:

.
செம்மொழி மாநாடு உலகு தழுவிய அளவில் நடப்பதால், குடிநீர், தொலைபேசி, பொது அரங்குகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கொடிசியா அரங்கில் மாநாடு நடப்பதால், பொது அரங்கம் நிறைவேறாது என்பது முதலிலேயே தெரிந்துபோனது. மாநாட்டின் முழு நிகழ்வுகளும் அங்கேயே நடப்பதால், அப்பகுதிக்கே அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டன. பல லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தத் தேவையான குடிநீர்க் குழாய்கள், தொட்டிகள் கொடிசியா அரங்கை மையமாக வைத்து அமைக்கப்பட்டன. மின்சார வசதியும் அதே பகுதியில் புதுப்பிக்கப்பட்டது. தொலைதொடர்பு வசதிகளும் அங்கு தான் (இவையும் தற்காலிகமானவை) மேம்படுத்தப்பட்டுள்ளன.

.
தீயணைப்பு நிலையங்கள் 8 தற்காலிகமாக அமைக்கப்பட உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை மாநகரில் உள்ள தீயணைப்பு நிலையங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குறைந்தபட்சம், தற்காலிகமாக அமைக்கப்படும் தீயணைப்பு நிலையங்களில் பாதியை மட்டுமாவது நிரந்தமாக்கினால் கோவைக்கு பயன் கிடைக்கும்.

.
மாநாடு நடக்கும் இடம் அருகே தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நிரந்தரமான காவல் நிலையம் ஒன்று தேவை என்பது காவல்துறைக்குத் தெரியும். அவிநாசி ரோட்டில், பி.எஸ்.ஜி.கல்லூரி அருகே காவல்நிலையம் ஒன்றை அமைத்திருக்கலாம். அது காலகாலத்துக்கும் நகரின் பாதுகாப்புக்கு உதவியாக இருந்திருக்கும்.

.

எல்லாம் கண்துடைப்பு…

.
இவ்வாறு செம்மொழி மாநாட்டுக்காக நடக்கும் பணிகள் பலவும் கண்துடைப்பான (eyewash) செயலாகவே உள்ளன. கோவையில் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களாக பாரதியார் பல்கலை, வேளாண்மை பல்கலை, கோவை அண்ணா பல்கலை ஆகியவை உள்ளன. இப்பல்கலைகளில் கூட எந்த மேம்பாட்டுப் பணியும் சொல்லிக் கொள்ளும்படி நடக்கவில்லை. சொல்லப்போனால், கோவை அண்ணா பல்கலை. வாடகை கட்டடத்தில் தான் இயங்குகிறது. அதை தரம் உயர்த்த சில கோடிகளை செலவிட்டிருக்கலாம்.

.
கோவையில் உள்ள தனியார் பல்கலைகளான அமிர்தா, காருண்யா, விவேகானந்தா, அவினாசிலிங்கம், கற்பகம் ஆகிய பல்கலைகளுக்கு இம்மாநாட்டில் என்ன பணி என்று தெரியவில்லை. உயர்கல்விக்கென இருக்கும் பல்கலைகளைப் புறக்கணித்துவிட்டு, செம்மொழி மாநாடு நடத்துவதால் என்ன பயன் என்றும் தெரியவில்லை.

.
இவை அனைத்தையும் விட நகைச்சுவை, பிரதான சாலைகளில் அமைக்கப்படும் பாவுக்கற்கள் (டைல்ஸ்) பாவிய நடைபாதை அமைப்பது தான். எந்த அஸ்திவாரமும் இன்றி, மண்ணில் எழுப்பப்படும் செங்கல் தடுப்புகளுக்கு இடையே மண்ணை நிரப்பி அதன் மேல் டைல்ஸ்களைப் பாவி சிமென்ட் பூச்சு பூசி விடுகிறார்கள். அநேகமாக, மாநாடு முடியும் வரை கூட இந்த நடைபாதைகள் (பிளாட்பாரம்) தாங்காது என்று தோன்றுகிறது. பல இடங்களில் இப்போதே நடைபாதையில் பதித்த டைல்ஸ்களை காணவில்லை. மக்களின் வரிப்பணம் மண்ணாவதற்கு இதைவிட சாட்சி வேறு இருக்க முடியாது.

.

(தொடர்ச்சி உண்டு…)

.

மீள்பதிவு: குழலும் யாழும் (19.06.2010)

.

எல்லோரும் வாங்க!

12 Apr

செம்மொழி மாநாட்டை நோக்கி…18

எல்லா அமைச்சர்களும்
கோவையில் முகாம்.
எல்லா அதிகாரிகளும்
கோவையில் முடுக்கம்.
எல்லா ஊர்களிலிருந்தும்
காவலர்கள் வருகை.
எல்லா ஊர்களிலிருந்தும்
துப்புரவுப் பணியாளர்கள் விஜயம்.
எல்லா மாவட்டங்களிலிருந்தும்
பேருந்துகள் வருகின்றன.
எல்லாப் பகுதியிலும் மின்வெட்டு-
கோவை தவிர.
எல்லாப் பகுதியிலும் வறட்சி-
கோவை தவிர.
ஆகவே
செம்மொழி மாநாடு
நடைபெறும் கோவைக்கு
வாரும் ஜெகத்தீரே!
வந்து தீரணும் ஜெகத்தீரே!

– மீள்பதிவு: குழலும் யாழும்  (18.06.2010)

.

மற்றுமொரு வாய்ப்பு…

12 Apr

செம்மொழி மாநாட்டை நோக்கி…17

புதிய நடைபாதை உருவாக்குவது
தார்ச்சாலை புதுப்பிப்பது
சித்திரங்கள் வரைவது
பூங்காக்கள் அமைப்பது
விளம்பரங்கள் வைப்பது
தெருவிளக்குகளை மாற்றுவது
புத்தகங்கள் வெளியிடுவது
விருந்தாளிகளை உபசரிப்பது
பொம்மைகள் தயாரிப்பது
விளக்கக் கூட்டம் நடத்துவது
ஆய்வரங்கு கூட்டுவது….
இன்னபிற பணிகள் எல்லாமே
அமர்க்களம்.

இந்தப் பணிகள் எல்லாமே நல்வாய்ப்பு-
செம்மொழித் தமிழ் புகழ் பரப்ப.
மட்டுமல்லாது,
கழகக் கண்மணிகளுக்கும்
மற்றுமொரு வர்த்தக வாய்ப்பு.

.

மீள்பதிவு: குழலும் யாழும் (17.06.2010)

.