Tag Archives: தமிழகம்

யாருக்கு மெத்தை?

25 May

‘கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை’-
குழந்தைப் பிராயத்தில்
நெக்குருகச் செய்த
அதே சரண கோஷம்
துணுக்குறச் செய்கிறது.
மனக்கண்ணில்
நிழலாடுகின்றன
முள்வேலி முகாம்கள்.

விரதமிருந்து நடந்த
அதே பம்பைப் படுகை
முள்ளி வாய்க்காலாய்
தென்படுகிறது. Continue reading

பெய்யாமல் பெய்யும் மழை

9 Apr

உரைநடையைக் கூட
உருப்படியில்லாமல்
எழுதித் தவிப்பவரா நீங்கள்?
கவலை வேண்டாம்-
கவிஞராகி விடுங்கள்!

அரைக்கால் புள்ளிகளும்
ஆச்சரியக் குறிகளும்
கேள்விக் குறிகளும்
தொடர் புள்ளிகளும் கொண்டு…

இரண்டிரண்டு வரிகளாய்
பிரித்து எழுதினால்,
எதை எழுதினாலும்
கவிதையாகி விடும்-
நீங்கள் ஒரு
தலைவராக இருக்க வேண்டும்.
அவ்வளவு தான்.

Continue reading

தெய்வீகமே தமிழகம்!

27 Mar

சிவனே தலைமை வகித்த
சிந்தனைக்களம்.

ஆதிபகவன் முதலென்ற
வள்ளுவரின் புலம்.

ஒளவைக்கு கனி தந்த
குமரனின் குன்றம்.

Continue reading

என்னைப் போல் ஒருவன்!

8 Mar
திமுக பொதுச்செயலாளர் திரு. க.அன்பழகன் வெள்ளிக்கிழமை (மார்ச் 7, 2020) காலமானபோது, எனது முகநூல் பக்கத்தில் ஓர் அஞ்சலிக் குறிப்பை (கவிதை அல்ல) பதிவு செய்திருந்தேன். அதற்கு வந்த சில பின்னூட்டங்களே இந்தப் பதிவுக்குக் காரணம்.
.
நீங்கள் ஏற்காவிட்டாலும் திரு. அன்பழகன் தமிழக அரசியலில் சுமார் 70 ஆண்டுகள் முக்கிய பிரமுகராக இருந்திருக்கிறார். அவரது வாதங்கள் பொய்யாக இருந்திருக்கலாம்; பிரசாரம் குதர்க்கமாக இருந்திருக்கலாம். அவரது செய்கைகள் உங்களைப் புண்படுத்தி இருக்கலாம். ஆனால், தமிழக அரசியலில் திராவிட அரசியலின் முக்கியத்துவத்தையோ, அதற்கு அன்பழகன் அவர்களின் பங்களிப்பையோ யாரும் மறைக்க முடியாது. அவரது கருத்துகளுடன் முற்றிலும் முரண்படுபவன் நான் என்பதை என்னை அறிந்தவர்கள் அனைவரும் அறிவார்கள். அது தனிக்கதை. ஆனால், அவர் இறந்தபோது, அவரது ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்க ஓர் இந்துவாக எனக்கு உரிமை இருக்கிறது. அவரது பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவன் அவருக்கு நியாயம் வழங்கட்டும். ஆனால், அவரது உயிர் பிரிந்த சமயத்தில் அவரை வசை பாடுவது ஏற்புடையதல்ல.

Continue reading

யாருக்கும் வெட்கமில்லை

7 Mar
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம்
ஒவ்வொரு மனத்திலும் பலநூறு சிந்தனை.
ஒவ்வொரு சிந்தனையும் வெளிப்படுகிறது
முலாம் பூசப்பட்ட வார்த்தைகளில்.
எந்த வார்த்தையும் புலப்படுத்தாது
மனம் போகும் திசைகளை.
.
நேற்று வரை நம்பகமான நண்பன்
இன்று எனக்கு பகைவன்.
நேற்று வரை கரித்துக் கொட்டிய துரோகி
இன்று எனக்கு கூட்டாளி.
எதிரிக்கு எதிரி நண்பனாகலாம்.
துரோகியை கட்டியணைத்து
கண்ணீர் விடலாம்.
எல்லாம் சாத்தியம்- அரசியலில்.

Continue reading

ராசராசேச்சுவரத்துக்கு நல்வணக்கம்!

5 Feb
.
அரிதினும் அரிதாம் இந்த
  மானுடப்பிறவி தன்னில்
பெரிதினும் பெரிதாய்ச் செய்யப்
  பிறந்தவன் ராசராசன்!
விரிந்திடும் கடலைப் போல,
  விளைந்திடும் பூமி போல,
எரிந்திடும் கதிரைப் போல,
   ஏற்றமாய்க் கோயில் கண்டான்!
.
திண்ணிய நெஞ்சம் கொண்டோர்
  திறமைகள் பெருக்கிவிட்டால்
எண்ணிய செயல்க ளெல்லாம்
  எளிதினில் கூடுமென்று
நண்ணிய புலவனுக்கு
  நல்லதோர் சான்றாய் நின்று
விண்ணியற் கோயில்தன்னை
  விளைத்தவன் ராசராசன்!
.
அருமறை ஆடல்வல்லான்
  அவைதனில் ஒளிந்திருந்த
திருமுறை தொகுக்கச் செய்தான்
  தீந்தமிழ்ப் புரந்த வள்ளல்!
செறுபகை வீழ்த்தி வென்றான்!
  செம்மையாய் ஆட்சி செய்தான்!
அறமுறை பிறழ்ந்திடாமல்
  அனைவரின் துணையும் ஆனான்!
.
குடிகளைக் காத்த தோழன்!
  குவலயம் வென்ற சோழன்!
விடியலின் பரிதியைப் போல்
 விதியினை மாற்ற வந்தோன்!
மடியிலா மன்னவர்க்கு
  மரணமே இல்லையென்னும்
அடிகளை மண்ணில் நாட்ட
  அவதாரம் புரிந்து சென்றான்!
.
எல்லையைப் பெருக்கி வைத்தான்!
  எதிரியர்க் கெமனுமானான்!
வல்லமை கொண்ட நாடே
  வளமுற வாழும் என்றான்!
அல்லவை தேய ஈசன்
 அடிமையாய்ப் பூசை செய்தான்!
நல்லவன் ராசராசன்
  நாட்டினான் பெரிய கோயில்!
.
பி.கு: (தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழா இன்று (05.02.2010)  நடைபெறுவதை ஒட்டி எழுதப்பட்டது) முகநூலில் வெளியானது.

இந்நாளில் அன்று…

28 Nov

1997 ஆம் ஆண்டு நவம்பர் 28 இல்
கோவை- உக்கடத்தில் நடந்தது போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை. கொன்றவர்கள் அல்உம்மா பயங்கரவாதிகள். அப்போது நடந்தது திமுக ஆட்சி.

ஒரே இருசக்கர வாகனத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் மூவர் வந்ததைக் கண்டித்ததே அவர் செய்த ‘குற்றம்’! பரபரப்பான சாலை நடுவே பிற காவலர்கள், மக்கள் கண்ணெதிரில் அவர் கொல்லப்பட்டார்.

செல்வராஜ் படுகொலையை அடுத்து, ‘காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா? எங்கள் கைகளைக் கட்டாதீர்’ என்ற முழக்கத்துடன் கோவை மாநகரில் காவல் துறையினர் குடும்பங்களுடன் போராட்டம் நடத்தினர்.

 

இதையடுத்து நடந்த -காவலர்களும் இணைந்து நடத்திய – கலவரத்தில் இஸ்லாமிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அதற்கு பதிலடியாகவே, 1998 பிப்ரவரி 14இல் கோவையில் பாஜக தலைவர் அத்வானி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டப் பகுதி உள்பட 13 இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி 58 பேரைக் கொன்றனர்; அவற்றில் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

அதன்பிறகு கோவை மாநகரம் மீள 10 ஆண்டுகளுக்கு மேலானது. இன்னமும்கூட 1997க்கு முந்தைய இரவு நேர சுதந்திரமான கோவையைக் காண முடியவில்லை.

திமுக அரசின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கு கோவை மாநகரம் கொடுத்த விலை இது. அதன் தொடர்ச்சியாக லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பலத்த அடி வாங்கியது. வரலாறு கற்பிக்கும் பாடங்களை மறந்தவர்களுக்கு என்றும் மீட்சி இல்லை.

அன்று அல்உம்மா அமைப்பில் இருந்த பலரும், அந்த அமைப்பு அரசால் தடை செய்யப்பட்ட பிறகு வேறு பெயர்களில் அரசியல் கட்சிகளாக இயங்குகிறார்கள். அவர்களுடன் திராவிட, இடதுசாரி, முற்போக்குவாதிகள் குலவுகிறார்கள்.

சரித்திரம் மறப்பதும்
காயங்களை மறைத்து நடிப்பதும்
ஆபத்து. ஆபத்து.
இதை நினைவுபடுத்துவது
கோவை குடிமகனின் கடமை!

Continue reading

புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு: கொடுமணல்

23 Nov

கொடுமணலின் நுழைவாயிலில் வரவேற்கும் கல் பதுக்கை.

”கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்
சாய்அறல் கடுக்கும் தாழ்இரும் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரைஅகம் நண்ணிக் குறும்பொறை நாடி…’’

-சங்க இலக்கியமான எட்டுத்தொகையில் ஒன்றான பதிற்றுப்பத்தில் 74வது பாடலில் வரும் வரிகள் இவை. புலவர் அரிசில்கிழார், சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய பாடல் இது.

“வேதங்களைச் சொல்லக்கேட்டு அதற்கான விரதங்களை இடைவிடாமல் கைக்கொண்டு வேள்விகளைச் செய்து முடித்த மன்னவனே! நுண்ணிய கருமணலைப் போன்ற, கீழே தாழ்ந்து இறங்கிய கரிய கூந்தலைக் கொண்ட திருமகளான லட்சுமியிலும் சிறந்த மற்றொரு திருமகளாகிய உன் மனைவிக்காக கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் வேலைப்பாடு மிகுந்த அரிய அணிகலன்களையும், பந்தல் என்ற ஊர் தந்த புகழ்பெற்ற முத்துக்களையும் கொண்டு வந்தவனே…” என்று செல்கிறது இக்கவிதை.

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் கொடுமணம்தான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, தொல்லியல் சின்னங்கள் நிறைந்த கொடுமணல். தொல்லியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சியில், சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே, கொடுமணலில் மிகப் பெரும் அணிகலன் உற்பத்தி மையம் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. Continue reading

அழையா விருந்தாளிகள்

16 Sep

கொடுமைக்காரி மாமியார்,
சபலிஸ்ட் மாமனார்,
சின்னப்புத்தி மைத்துனர்,
சின்னவீடு மைனர் அத்தான்,
கல்லூரியில் காதலிக்கும் தங்கை,
அழுமூஞ்சி அக்கா,
சாடிஸ்ட் சகலை,
வஞ்சம் தீர்க்கும் மருமகள்,
மனதில் கருவும் ஓரகத்தி,
சைக்கோ மருமகன்,
பழி வாங்கும் அண்ணி,
பல்லைக் கடிக்கும் மாமா,
சாபம் விடும் சம்பந்தி,
போதையேற்றும் தம்பி,
கோபக்கார அத்தை,
பரிதாப தாத்தா,
வாயாடி பாட்டி,
கள்ளக்காதலி அம்சா,
திருட்டு நண்பன் கம்சா…

எல்லோரும் 
எல்லோர் வீட்டுக்கும் 
அனுமதியின்றி வருகிறார்கள்-
தொலைக்காட்சி 
நெடுந்தொடர்களில்…
.

தமிழக அரசின் கடமை!

20 Jul

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரைத் தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் குவிவதால் அரசு தடுமாறுகிறது. இது வரை கூட்ட நெரிசலில் காரணமாக உடல்நலம் குன்றி 6 பக்தர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட சில பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க வர வேண்டாம் என்ற தொனியில் ஒரு விளம்பரத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இன்று (20.07.2019) பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார். இத்தனை பக்தர்களின் திரளை அரசாலும் காவல் துறையாலும் சமாளிக்க முடியவில்லை என்பதை, அரசு வெளியிட்டுள்ள விளம்பரம் வெளிப்படுத்துகிறது.

சொல்லப்போனால், இது அரசின் கையாலாகாத்தனம் மட்டுமே. இத்தகைய விளம்பரத்தை வெளியிடவே அரசு வெட்கப்பட்டிருக்க வேண்டும். அரசால் கோயில் நிர்வாகத்தையும் மக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்த இயலாவிடில் அறநிலையத் துறையும் காவல் துறையும் எதற்காக?

இதைவிட பல மடங்கு – சுமார் 5 கோடி மக்கள் திரண்ட கும்பமேளாவை எந்தச் சிக்கலும் விபத்துகளும் இன்றி உ.பி. அரசு அண்மையில் நடத்திக் காட்டவில்லையா? தேவை அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட அரசு நிர்வாகம் தானே தவிர, இத்தகைய விளம்பரம் அல்ல.

அரசால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்றால் ஆன்மிக அமைப்புகள், சேவை அமைப்புகள், இந்து அமைப்புகளின் உதவியைப் பெறலாமே? இப்போதேகூட சேவாபாரதி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வரதர் கோயிலில் பக்தர்களுக்கு உதவும் பணியில் சத்தமின்றி ஈடுபட்டுக் கொண்டுள்ளனரே. அவர்களை கூடுதலாக இப்பணியில் ஈடுபடுத்தலாமே?

//தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோர் அத்திவரதரைத் தரிசிக்கும் நிகழ்வினைத் தவிர்க்குமாறு// மாவட்ட நிர்வாகம் இந்த விளம்பரத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

உண்மையில், அத்திவரதரை அவசியமாக தரிசிக்க வேண்டியவர்கள்- //தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள்// தானே?  அவர்கள் எளிதாக அத்தி வரதரை சேவிக்க ஏற்பாடு செய்து தருவதுதானே அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்?

அதை விடுத்து, அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள், காவல் துறையினர், பணபலம் மிக்கவர்கள், அதிகார வர்க்கத்தினர், திரைத் துறையினர் போன்றவர்கள் எளிதாக அத்தி வரதரை சேவிக்க அறநிலையத் துறை படாத பாடு படுகிறது. அவர்கள் எந்தச் சிரமமும் இன்றி அரை மணி நேரத்தில் இறைவனை சேவிக்கின்றனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் அர்ச்சகர்கள் மகிழ்கின்றனர். இதேபோல, //தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு// அரசு முன்னுரிமை கொடுத்து சிறப்பு வழியை ஏன் ஏற்படுத்தக் கூடாது?

தேவை கோயிலுக்கு யார் வரக் கூடாது என்று அரசு வேண்டுகோள்/ அறிவுரை விடுப்பது அல்ல; பக்தர்களின் சிரமங்களைக் குறைக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து முடிவெடுத்து, அதைச் செயல்படுத்துவதே.

வி.ஐ.பிக்கள் அத்தி வரதரை சேவிப்பதில் தவறில்லை. அவர்களும் பகதர்களே. ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை //தளர்ந்த முதியோர்கள், உடல்நலம் குன்றியோர், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு// ஏன் அளிக்கப்படவில்லை என்பதே இங்கு எழுந்துள்ள கேள்வி.

இன்றுடன் அத்தி வரதர் திருவிழா 20 நாட்களைக் கடந்துள்ளது. இன்னமும் 20 நாட்கள் இத்திருவிழா நடைபெற உள்ளது. இனிவரும் நாட்களிலேனும் பக்தர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் தெளிவான நடைமுறைகளை ஏற்படுத்தி, வி.ஐ.பி. என்ற பெயரில் சிலரை மட்டும் தனிவழியில் அனுப்புவதைத் தவிர்த்து, தேவைப்படும் பக்தர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து அத்தி வரதர் தரிசனத்தை அனைத்து பக்தர்களுக்கும் உறுதிப்படுத்துவது மாநில அரசின் கடமை.

பக்தர்களும் அத்தி வரதரை ஒரு முறை தரிசித்துவிட்டால் அடுத்த பக்தர்களுக்கு வழிவிட்டு வாய்ப்பளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று புதிய பக்தர்களுக்கு நெருக்கடி கொடுப்பதை ஆன்மிக அன்பர்கள் தவிர்ப்பது நல்லது.

அரசின் கடமை இயலாதவர்களுக்கு முதன்மை வாய்ப்பளிப்பதே. அதிகார வர்க்கத்துக்கும் பணபலத்துக்கும் சாமரம் வீசுவதல்ல. இறைவனின் முன்பு அனைத்து பக்தர்களும் சமம். அவனது சன்னிதியில் அரசே பாரபட்சம் காட்டுவது ஆட்சியில் உள்ளோருக்கு நல்லதல்ல.

முகநூல் பதிவு (20.07.2019)

 

%d bloggers like this: