Tag Archives: தமிழாக்கம்

பண்பாட்டை விளக்கும் உன்னதத் திருவிழா

28 Aug

நமது நாட்டின் பண்பாட்டுச் சிறப்புக்கு அடையாளமாகத் திகழ்பவை பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் தோற்றக் காரணம் உண்டு. மக்களை ஒன்றிணைப்பதும், மகிழ்ச்சியூட்டுவதுமே பண்டிகைகளின் அடிப்படை நோக்கம். அந்த வகையில் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தனிச் சிறப்பு மிக்கதாகும்.

‘பரசுராம க்ஷேத்திரம்’ என்று அழைக்கப்படும் பெருமை வாய்ந்த கேரளத்தை முன்னொரு காலத்தில் மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். இவர் பிரகலாதனின் பேரன். நல்லாட்சி நடத்தியதால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தான தர்மம் செய்வதில் நிகரற்றவராக விளங்கிய இவரது மனத்திலும் மாசு புகுந்தது. தானத்தில் தன்னை விஞ்ச ஆளில்லை என்ற ஆணவமும், தேவர்களை அடிமைப்படுத்திய அசுர குணமும் மகாபலிக்கு வினையாக அமைந்தன.

மகாபலி மன்னனின் ஆணவம் போக்கி தேவர்களைக் காக்க வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, மூன்றடி நிலம் தானம் கேட்டுப் பெற்றார். மகாபலியை சம்ஹரித்தார் என்பது புராணக் கதை. ஓரடிக்கு மண்ணையும் மற்றோர் அடிக்கு விண்ணையும் அளந்த வாமனனின் விஸ்வரூப தரிசனம் கண்ட மகாபலி சக்கரவர்த்தி, மூன்றாம் அடிக்கு தனது தலையையே அளித்தார். அதன் மூலம் இறையருள் பெற்றார்.

எனினும் நல்லாட்சி நடத்திய நாயகனான மகாபலி, ஆண்டுதோறும் மலையாள சிங்கம் மாதம், திருவோண நட்சத்திரத்தன்று தனது நாட்டைக் காண வந்து செல்ல வரம் கேட்டுப் பெற்றார் என்பது மக்களின் நம்பிக்கை.

அதன்படி தங்களது சுபிக்ஷம் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்க, அந்நாட்டு மக்கள் புத்தாடை புனைந்து, ஒன்பது சுவை உணவுடன், வாசலில் மலர்க் கோலமிட்டு, சாகச விளையாட்டுகளுடன் விழா கொண்டாடுகின்றனர். இதுவே ஓணம் பண்டிகையின் தாத்பரியம்.

மலையாள மக்கள் அனுசரிக்கும்  ‘கொல்ல வருஷம்’ என்ற நாள்காட்டியின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஹஸ்த நட்சத்திரம் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்களும் கொண்டாடப்படுவதே ஓணம் பண்டிகை. மாநிலம் முழுவதும் அறுவடை முடிந்து வீடுதோறும் செல்வம் குவிந்திருக்கும் சூழலில் இப்பண்டிகை வருகிறது. மக்களுக்கு ஆனந்தம் தருகிறது.ஸ

ஒரு நாட்டின் பண்பாட்டின் சின்னமாக விளங்குபவை ஆடைகளும் உணவு வகைகளும் தான். அதன்படி, மலையாளிகளுக்கே உரித்தான ‘கசவு’ வெண் பட்டாடைகள் தனிச்சிறப்பு பெற்றவை. இந்த ஆடைகளை அணிந்து, 64 வகையான பதார்த்தங்களுடன் கூடிய ‘ஓண சத்யா’ விருந்தளித்து உறவினர்களையும் நண்பர்களையும் உபசரிப்பது கேரள மக்களின் பண்டிகை மாண்பு.

அடுத்து, பண்பாட்டின் அடையாளங்களாக சாகசக் கலைகளும் நாட்டியங்களும் இசைப் பாடல்களும் விளங்குகின்றன. ஓணம் விழாவில் பெண்கள் ஆடும் ‘கைகொட்டுக் களி’யும், ஆண்கள் ஆடும் ‘புலிக்களி’யும் சிறப்பானவை. தவிர, பாரம்பரியமான கயிறு இழுத்தல் போட்டி, களரி, படகுப் போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.

கேரளத்துக்கே உரித்த யானைத் திருவிழா ஓணம் பண்டிகையின் சிகரமாகும். பண்டிகையின் பத்தாம் நாளான திருவோணம் அன்று, யானைகளை அலங்கரித்து ஊர்வலம் நடத்தி மகிழ்வர்.

‘அத்தப்பூக் களம்’ எனப்படும் பூக்கோலம், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு கேரளத்தவரின் இல்லத்தின் முகப்பிலும் காணப்படுவது ஓணம் பண்டிகையின் முத்திரையாகும். ஜாதி, மத வித்தியாசமில்லாமல் கேரளத்தைச் சார்ந்த அனைவரும் கொண்டாடும் ஓணம் பெருவிழா, சத்தமின்றி மலையாள மக்களை ஒருங்கிணைத்து, அவர்களது பண்பாட்டுப் பெருமிதத்தை நினைவூட்டி வருகிறது.

கேரள மக்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பண்பாட்டை மறவாமல் கொண்டாடும் திருவோணம் திருவிழா, பாரதத்தின் பெருமையையும் பார் முழுவதும் பரப்பி வருகிறது. இவ்விழாவை நாமும் கொண்டாடி மகாபலி சக்கரவர்த்தியின் அருளைப் பெறுவோமே!

—————————————

நீதி தவழும் நாடு…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்கள் பாடும் பாடல், மகாபலி சக்கரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. மகாபலி ஆண்ட நாட்டின் சிறப்பை நினைவுகூர்ந்து, அதேபோன்ற நாடு அமைய பண்டிகையின்போது பிரார்த்திக்கிறார்கள் மக்கள். இதோ அந்தப் பாடலின் வரிகள்:

மாவலி மன்னன் ஆண்ட நாட்டில்
மனிதர்களெல்லாம் சரிநிகரே!
ஆனந்தம் எங்கும் தாண்டவமாடும்.
அவதியென்பதே எங்குமில்லை.

நோய்கள் நெருங்கா நாடு அது
சிசுக்களை சாவு அண்டாது.
பொய்யை அறியா பண்புறு மக்கள்!
கொள்ளையும் திருட்டும் அங்கில்லை.

வாய்மை எங்கும் பேச்சில் மிளிரும்
அளவைகள் தரத்தை வெளிப்படுத்தும்.
யாரும் யாரையும் ஏமாற்றாத
நேர்மை ஒளிரும் வீரிய தேசம்.

மாவலி ஆண்ட மண்ணில் என்றும்
அனைவரும் ஒரு குலம்! சரிநிகரே!

– தினமணி (கோவை) 28.08.2012

பொன் ஓணத் திருநாள் -விளம்பரச் சிறப்பிதழ்

நாளை (29.08.2012) திருவோணத் திருநாள்

.

இளமையின் கர்வம்

30 May

ஒரு நாள்:

தோட்டத்திலே, காலையிலே ரோஜா மலர்ந்தது
வாட்டமான இளமைக்காக கர்வம் அடைந்தது.

சுக்குப் போல வறண்டிருந்த தோட்டக்காரரோ
பக்கத்திலே நின்றிருக்க, ரோஜா பார்த்தது.

”அதிக வயது ஆகிப் போன தோட்டக்காரரே
விதி உனக்கு முடிந்த தின்று” என்று சிரித்தது.

நண்பகலில் வெப்பத்தினால் மேலும் விரிந்தது
மென்மையான சுகந்தத்தினை வீசி வந்தது.

மீண்டும் அவன் காலடியைக் கேட்ட போதிலே
வேண்டு மட்டும் கிண்டலாகச் சிரித்துக் கொண்டது.

மறுநாள்:

பாவமென்று பரிகசித்த ரோஜா மண்ணிலே
ஆவியற்று, அற்பமாக வாடிக் கிடந்தது.

முதியவராம் தோட்டக்காரர் பகலில் வந்தனர்;
விதி முடிந்த மலர்களினை வீசி எறிந்தனர்.

இளமை, அழகு நிலைத்திருந்து கண்டதுமில்லை.
இளமையினால் முதுமையினை எள்ளல் மடமையே!

.

குறிப்பு:  இக்கவிதை  Austin Dobson  எழுதிய ‘THE ROSE AND THE GARDENER’ என்ற ஆங்கிலக் கவிதையை தழுவி எழுதப் பட்டது

மூலப் பாடலைக் கேட்க: சொடுக்கவும்.

பாடலைக் காண: சொடுக்கவும்.

.

சாவுப்பறை

7 May

.

குலப்புகழ், பெருமை நிலை எல்லாமே
நிழல் தான் – நிலையல்ல!
வலிவிதி முன்னால் படையும் சரியும்,
யமன் அரசருகினிலே
செங்கோல் வீழும்
மகுடமும் தாழும்.
துரும்பாய், தூளாய் மறைந்து போகும்
இரும்பாய் இற்று இழிந்து போகும்!

.

படைவாளுடனே சிற்சில பேர்கள்
ஆத்தியை அறுத்திடுவர்!
கடைசியில் உணர்ந்து கைவிட்டிடுவர்,
இறைவன் சிரித்திடுவன்:
தொலைவோ, அருகோ
விதிமுன் சருகே.
முணுக்கும் சுவாசம் முற்றுப் போகும்,
பிணக்கும் இணக்கும் அற்றுப் போகும்!

.

உனக்கணிவித்த மாலை உலரும்
பின் ஏன் வீண்பெருமை?
தனக்கே வெற்றி, தோற்றவர் அடிமை
என்பதும் இழப்புத் தான்:
தலைமாட்டினிலே சவக் குழி
தப்பிட இல்லை ஒருவழி.
சிலதின் விளைவால் திளைத்திடுகின்றாய்,
வலிவிதி அதனால் விளைத்திடுகின்றாய்!.

.

– இக்கவிதை, ஆங்கிலத்தில்  JAMES SHIRLEY எழுதிய DIRGE என்ற கவிதையின் தழுவல்.

RefRef. : Learning through pleasure / Macmillan publication- 1986 / page: 69-70.

.Web Ref.: http://www.wwnorton.com/college/english/nael/noa/pdf/27636_17th_U27_Shirley-1.pdf

.

காகித ஓடங்கள்

24 Mar

.

நாள் தவறாமல் தினமும் காகித ஓடம்
நன்றாகச் செய்ததனில் பெயரெழுதி
மாளாது நான் ஆற்றில் விட்டிடுகின்றேன்
மனிதர் அரிதாகவாழ் ஓரிடத்தில்
யாரேனும் ஒருவரதைக் கண்டெடுத்து
யாருடைய படகென்று அறிவாரென்றே
சோராத எதிர்பார்ப்பு எந்தன் கண்ணில்..

தோட்டத்தில் பறித்திட்ட லில்லிப்பூவை
இன்றையநாள் உதயத்தின் உருவமாக
இதமாகப் படகதனில் ஏற்றிவிட்டால்
கன்றாமல், கவனத்தால் படகு சேர்க்கும்-
காரிருளில், இரவதனில், நம்புகின்றேன்.

.

– இக்கவிதை குருதேவர் ரவீந் திரநாத் தாகூர் எழுதிய ‘கீதாஞ்சலி’ நூலில் உள்ள ‘PAPER BOATS’ கவிதையின் மொழிபெயர்ப்பு.

.

.

ஒருமை மந்திரம்

6 Mar

மந்திரம் அனைத்தும் கண்டநல் ரிஷிகள்
இந்திரன், யமன் என உனை அழைத்திட்டார்;
சொற்களால் விளக்கிட இயலா உன்னை
நற்பிரம்மம்என வேதாந்திகளும்,

“சிவமே வாழி” எனச் சைவர்களும்,
‘தைவதம் விஷ்ணு’ என வைணவரும்,
வணங்கிடுகின்றார் வளமுறு எட்டுக்
குணங்களை உடையாய், கோவே வாழி!

பௌத்தர்கள் உன்னை புத்தன் என்றோத,
‘பவித்திர அருகர்’ என ஜைனர்களும்,
சீக்கியர் ‘சத்ஸ்ரீ அகாலி’ எனவும்,
வாக்கிடை வணங்கும் வரமே வாழி!

ஞாலம் உய்ந்திட நடமிடு ராஜன்,
காலம் ஆளும் சரவணன், சாஸ்தா
எனப் பலவாறு உனைத் தொழுகின்றோம்
மனமதில் வாழும் மதியே வாழி!

அன்புடன் உன்னை அன்னையே என்றும்,
தண்ணிழல் வேண்டித் தந்தையே என்றும்,
பாடிப் பரவசமாகிட முக்தி
நாடிப் பிரார்த்தனை செய்தோம் வாழி!

இத்தனை பெயரால் வணங்கிய பின்னும்
அத்தனைக்குள்ளும் அசைந்திடு தீபம்
ஒன்றே, ஒன்றே, இரு வேறல்ல!
நன்றே! உந்தன் அடிபணிகின்றோம்!

ஓம் சக்தி!

– விஜயபாரதம் – தீபாவளி மலர் – 2000

இக்கவிதை, சமஸ்கிருத ஸ்லோகமான ‘ஏகாத்மதா மந்திரம்’ பாடலின் மொழிபெயர்ப்பு.

.

இறைவனை வழிபடு!

24 Feb

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!
மறைபல மனனம் செய்வதனாலுன்
மாரகம் தவிர்ந்து போய்விடுமா?

பொருள் மிக விரும்பும் மூடா, மூடா!
பொதியெனும் ஆசை அகற்றிவிடு!
தருமமுரைக்கும் கடமையினைச் செய்
தடைந்திடும் பொருளில் மகிழ்வுறுக!

மங்கையர் தனமும் நாபியும் கண்டு
மதியினை இழந்து பதறாதே!
அங்கம் முழுதும் மாமிச வடிவம்
என்பதை மனதில் எண்ணிடுக!

தாமரை இலைமேல் தண்ணீர் போல
சஞ்சலமின்றி வாழ்ந்திடுக!
பூமியை ஆளும் துயரும் நோயும்
புன்மையும் முழுதும் உணர்ந்திடுக!

செல்வம் சேர்கையில் அண்டும் சுற்றம்,
சேவகனாகப் பணியாற்றும்!
வல்லமை குன்றி மூப்படைந்தாலோ
வார்த்தை கூறவும் ஆளில்லை!

பிராணன் உடலில் உள்ள வரைக்கும்
பிரியம் இருக்கும் உன் மீது!
பிரேதமாக நீ சாய்ந்து விட்டாலோ
பிரிய மனைவியும் தள்ளி நிற்பாள்!

அன்புறு மகனை பகையாய் மாற்றும்
அம்சம் பொருளின் இயல்பன்றோ?
பொன்னும் பொருளும் என்றும் துன்பம்,
இன்பம் மெய்யாய் ஒன்றுமில்லை!

பாலகன் ஆசை விளையாட்டின் மேல்,
பதினென் வயதில் கன்னியர் மேல்!
காலம் கடந்த கிழவனின் ஆசை
கவலையில்; கடவுளைப் பிடித்தவர் யார்?

யாருன் மனைவி? யாருன் பிள்ளை?
யாரிடமிருந்து நீ வந்தாய்?
சாரும் மானிட வாழ்க்கை விந்தை
தத்துவ மிதனை எண்ணிப் பார்!

நல்லவர் நட்பால் நலியும் பற்று,
பற்றற்றவர்க்கு மயக்கமில்லை!
வல்லவர் அவர்க்கே வாய்மை விளங்கும்,
வழியது ஒன்றே முக்திக்கு!

செல்வம் இன்றேல் சுற்றம் இல்லை,
தண்ணீர் இன்றேல் குளமில்லை!
பொல்லாக் காமம் முதியோர்க்கில்லை,
தத்துவ மறிந்தால் வினையில்லை!

செல்வம், பந்தம், இளமைச் செழிப்பால்
செருக்கினை அடைந்து ஆடாதே!
எல்லாம் காலன் முன்னால் சாம்பல்,
எனவே இறையை எண்ணிடுக!

பகலும் இரவும் தினமும் மாறும்,
பருவம் பலமுறை மாறிவரும்!
அகலும் ஆயுள்; இகழும் காலம்;
ஆசைப் பிணைப்பு போவதில்லை!

இன்னருள் சங்கர பகவத்பாதர்
இருளில் உழன்ற பண்டிதனை
நன்னிலை அடைய பன்னிரு பாவால்
பண்ணிய மாலையை அருளினரே!

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!

குறிப்பு:
ஆதிசங்கரர் இயற்றிய “பஜகோவிந்தம்“- த்வாதச மஞ்சரிகா ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் இது.
– விஜயபாரதம் (1999), வேதமுரசு.
.