Tag Archives: தினமலர்

பட்டாசு வெடிப்போம் வாருங்கள்!

15 Oct

Diwali

பட்டாசு வெடிப்போம் வாருங்கள் – தீய
பயங்கரவாதம் ஒழியட்டும்!
மத்தாப்பு கொளுத்திட வாருங்கள் – உலகில்
மகிழ்ச்சியே எங்கும் நிறையட்டும்!

(பட்டாசு)

இல்லம் தோறும் தீப ஒளி
இருளை விரட்டி ஓட்டட்டும்!
உள்ளம் தோறும் இறையருளின்
உயர்வுத்தன்மை ஓங்கட்டும்!

(பட்டாசு) Continue reading

Advertisements

தன்னல மறுப்பும் அகிம்சையும் இன்றைய தேவை

2 Oct

 

தினமலர் – ஈரோடு (02.10.2001)

அறவழிப் போராட்டத்தின் மூலமே அடிமைத்தளையை நொறுக்க முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணல் மகாத்மா காந்தி.  நாட்டு விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அத்தலைவர், விடுதலை பெற்ற தேசத்தில் ஆட்சித்தலைமை ஏற்க மறுத்தது, உலக வரலாற்றில் இன்றும் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவரது அரசியல் கொள்கைகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் பலருக்கு உண்டென்றாலும்கூட, அவரது சத்திய சோதனையான வாழ்க்கையை வியந்து போற்றவே செய்கிறார்கள். அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த நாட்டில், அந்த அகிம்சையையே ஆயுதமாக்கிக் காட்டிய மாவீரர் அல்லவா மகாத்மா!

உண்ணாவிரதத்தைக் கூட சக்தி வாய்ந்த ஆயுதமாக்கிக் காட்டியவர்; சாதாரணமான உப்பை சுதந்திரத்தின் சின்னமாக மாற்றிக் காட்டியவர்; ராட்டை நூற்பதையே விடுதலை வேள்வியாக உருவாக்கியவர், மகாத்மா காந்தி. அவரது தலைமையில் எண்ணற்ற தியாகியர் செங்குருதி சிந்தி, கல்லுடைத்து, வெஞ்சிறையில் வாடி, பாடுபட்டுப் பெற்றதுதான், இன்று நாம் இன்பமாக அனுபவிக்கும் சுதந்திரம்.

நாட்டில் ஊழலும், பிரிவினைவாதமும், சுயநலமும் பெருகியுள்ள இன்றைய சூழ்நிலையில், தேசத்தின் நோய் தீர்க்கும் அருமருந்து, காந்திஜி பரப்பிய தன்னல மறுப்பே!

உலகில் பயங்கரவாதம் கோரத்தாண்டவம் ஆடும் சூழலில், போர்மேகம் விரிந்து பரந்து உலகை அச்சுறுத்தும் இன்றைய அவசர காலகட்டத்தில், மானிட உலகுக்கு சமய சஞ்சீவினியாக விளங்குவது, மகாத்மா காந்தி வலியுறுத்திய அகிம்சைக் கொள்கையே.

எளிய வாழ்வு வாழ்ந்த அந்த அரிய திருமகனாரின் பிறந்த தினமான இன்று, அவரது நினைவைப் போற்றும் வகையில்,  அவரது லட்சியங்களை நினைவுகூர்வோம்! இன்றைய நமது தேவை, தன்னல மறுப்பும் அகிம்சையும் மட்டுமே!

 

-தினமலர் (ஈரோடு பதிப்பு)- 02.10.2001

 

.

 

 

சுதந்திரம் வாழ்வின் ஏணி

16 Aug

Dinamani Kavithai150814

சுதந்திரம் என்பது சுவாசக் காற்று
அடைத்திட முயன்றால் அயர்வே கிட்டும்!

சுதந்திரம் என்பது சுகமான ராகம்
இடறிட நினைத்தால் இடிகளும் முழங்கும்!

சுதந்திரம் என்பது பூக்களின் நேசம்
சிதைத்திடத் துணிந்தால் புரட்சி வெடிக்கும்!

சுதந்திரம் என்பது அமைதிப் பூங்கா
அழித்திட முயன்றால்அதிரடி உண்டு!

சுதந்திரம் என்பது வாழ்வின் ஏணி
பறித்திட முயன்றால் பதிலடி கிடைக்கும்!

சுதந்திரம் என்பதன் பொருள் மிக சுலபம்
சுதந்திரம் தானே சுகங்களின் உச்சம்!

– தினமணி (18.08.2014) கோவை- விளம்பரச் சிறப்பிதழ்.

 

முகவரி அறிவோம்!

15 Aug

கத்தியின்றி ரத்தமின்றி
பெற்றிடவில்லை இந்த
பெருமை மிகு சுதந்திரத்தை!

தீரன் சின்னமலையும்
ஜான்சிராணியும்,
கட்டபொம்மனும்,
தாந்தியாதோபேயும்,
திப்பு சுல்தானும்
அடித்த முதலடி
மறந்திட முடியுமா?

செக்கிழுத்தோம்…
குண்டடி பட்டோம்..
தூக்கு மேடையில்
துணிந்து ஏறினோம்!

உத்தம் சிங்குகளும்,
மதன்லால் திங்க்ராக்களும்,
வாஞ்சி நாதன்களும்,
பகத் சிங்குகளும்
அந்நியனை அலற வைக்கும்
அமரச் சமரில்
ஆகுதி ஆகினர்!

வெஞ்சிறையில் வீழ்ந்த
சாவர்க்கரும்,
திலகரும்,
தடியடி பட்ட
லஜபதிராயும்
ரத்தம் சிந்தாமலா – நாம்
சுதந்திரர் ஆனோம்?

நேதாஜியின்
தேசிய இராணுவம்
வடகிழக்கில்
சுதந்திரம் கண்டதை
மறைக்க முடியுமா?
மறுக்க முடியுமா?

சும்மா வரவில்லை
சுகமான சுதந்திரம்!
ஆருயிர் ஈந்த
அரும்பெரும் தியாகியர்
சரித்திரம் மறப்பது
சம்மதம் தானா?

அஹிம்சையின் பெயரில்
சுதந்திரப் போரை
மூடி மறைத்தால்
முகவரி இழப்போம்!
பொன்விழா கண்ட பூரிப்பு போதும்…
இன்றே நமது முகவரி அறிவோம்!

.
நன்றி: தினமலர் (ஈரோடு, சேலம்)
(15.08.2004)

.