Tag Archives: தீபாவளி மலர்

புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு: கொடுமணல்

23 Nov

கொடுமணலின் நுழைவாயிலில் வரவேற்கும் கல் பதுக்கை.

”கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்
சாய்அறல் கடுக்கும் தாழ்இரும் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரைஅகம் நண்ணிக் குறும்பொறை நாடி…’’

-சங்க இலக்கியமான எட்டுத்தொகையில் ஒன்றான பதிற்றுப்பத்தில் 74வது பாடலில் வரும் வரிகள் இவை. புலவர் அரிசில்கிழார், சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய பாடல் இது.

“வேதங்களைச் சொல்லக்கேட்டு அதற்கான விரதங்களை இடைவிடாமல் கைக்கொண்டு வேள்விகளைச் செய்து முடித்த மன்னவனே! நுண்ணிய கருமணலைப் போன்ற, கீழே தாழ்ந்து இறங்கிய கரிய கூந்தலைக் கொண்ட திருமகளான லட்சுமியிலும் சிறந்த மற்றொரு திருமகளாகிய உன் மனைவிக்காக கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் வேலைப்பாடு மிகுந்த அரிய அணிகலன்களையும், பந்தல் என்ற ஊர் தந்த புகழ்பெற்ற முத்துக்களையும் கொண்டு வந்தவனே…” என்று செல்கிறது இக்கவிதை.

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் கொடுமணம்தான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, தொல்லியல் சின்னங்கள் நிறைந்த கொடுமணல். தொல்லியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சியில், சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே, கொடுமணலில் மிகப் பெரும் அணிகலன் உற்பத்தி மையம் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. Continue reading

புட்டிகளின் உலகம்

8 Nov
.
அங்கிங்கெனாதபடி எங்கும்
பரவிக் கிடக்கின்றன புட்டிகள்.
.
சாக்கடைக் கால்வாய்களில்…
குப்பைமேடுகளில்…
முட்டுச்சந்துகளில்…
சாலையோரங்களில்…
இருட்டு மூலைகளில்…
எல்லா இடங்களிலும்
காணக் கிடைக்கின்றன புட்டிகள்.
.
கரும்பச்சை நிறப் புட்டிகள்…
தங்கநிறம் மின்னும் புட்டிகள்…
கழுத்து நீண்ட புட்டிகள்…
சப்பையான புட்டிகள்…
குடுவை வடிவிலான புட்டிகள்…
எல்லா வடிவங்களிலும்
பொறுக்கக் கிடைக்கின்றன புட்டிகள்.
.
மப்பில் மல்லாந்து கிடப்பவன் போல,
அதீதக் குடிகாரனின் உடல்
கோணிக் கிடப்பதுபோல,
போதையில் சட்டை கிழிந்து
குப்புறக் கிடப்பவன் போல,
எச்சில் வழிய ஈக்கள் மொய்க்க்
மண்ணில் கிடப்பவன் போல,
சொறிநாய்களின் பக்கத்திலேயே
பரிதாபமாகக் கிடக்கின்றன புட்டிகள்.
.
மதுக்கடைகளின் புறக்கடையிலும்
ஐந்து நட்சத்திர விடுதித் தாழ்வாரங்களிலும்
மாபெரும் மாளிகைகளின் உப்பரிகைகளிலும்
நதிக்கரையோர ஆக்கிரமிப்புக் குடிசைகளிலும்
தொழிற்சாலைகளின் கழிவறைகளிலும்
பொதுஉடைமை பேசுகின்றன புட்டிகள்.
.
அடித்த சரக்கின் வீரியத்தில்
அடித்துக் கொண்ட குடிமகன்கள்
குருதிவழிய மடிந்து கிடப்பது போல,
உடைந்தும் கிடக்கின்றன
சில புட்டிகள்.
.
அருவிகளில் தலைகுப்புற விழுந்து
சிதறிக் கிடக்கும் கண்ணாடிப் புட்டிகள்…
வனப்பகுதியில் வீசப்பட்ட
கிறுக்கர்களின் புட்டிகள்…
மேல்தட்டு இளைஞர்களால்
நடுச்சாலையில் உடைக்கப்பட்ட
உற்சாகப் புட்டிகள்.
கடல் மணலில் புதைக்கப்பட்டு
மாயமான புட்டிகள்.
புட்டிகள் இல்லாத இடமில்லை.
.
சொர்க்கத்தையும் நரகத்தையும்
மண்ணில் காட்டும் திரவத்தை
காலி செய்து கிடப்பவை
இந்தப் புட்டிகள்.
.
எந்த இடத்திலும் எல்லா வடிவிலும்
எத்தனை வேண்டுமாயினும்
புட்டிகள் கிடைக்கும்.
தேடுங்கள் தட்டுப்படும்-
இறைவனைப் போல.
சேகரியுங்கள் காசு கிடைக்கும்
இதுவே மறுசுழற்சி முறை.
அதே காசில் நுரைத்துத் தளும்பி
மூர்ச்சையாகுங்கள்-
அரசு உருப்படும்.
.
இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள்
கழித்து இம்மண்ணில் நடக்கும்
தொல்லியல் ஆய்வுகளில்,
அழிந்துபோன நமது நாகரிகத்தின்
சாட்சியாக விளங்கக் கூடியவையும்
அங்கிங்கெனாதபடி
எங்கும் கிடைக்கும் இதே புட்டிகள் தான்…
.
-விஜயபாரதம் – தீபாவளி மலர்- 2013
.
%d bloggers like this: