Tag Archives: தீபாவளி

தீபாவளி விருந்து…

16 Nov

dm wrapper

தேசிய வார இதழான விஜயபாரதம், தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டுள்ள  சிறப்பிதழ் பல்சுவை மலராக மிளிர்கிறது. ஆயிரமாண்டு காணும் வைணவப் பெரியார் ஸ்ரீ ராமானுஜரின் திருவுருவத்தை மணியம் செல்வன் ஓவியமாக முகப்பு அட்டையில்  வரைந்திருக்கிறார்.

இந்த ஆண்டு மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், சுவாமி தயானந்த சரஸ்வதி, நூற்றாண்டு காணும் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் வண்ணப்படங்கள், அவர்களுக்கு சிறந்த அஞ்சலியாக அமைந்துள்ளன.

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தரின் ஆசியுரை வழங்கியிருக்கிறார். ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி  விமூர்த்தானந்தரின் நேர்காணல் மலரின் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா, விமலா ரமணி, இந்திரா சௌந்தர்ராஜன், பாக்கியம் ராமசாமி, படுதலம் சுகுமாறன் ஆகியோரின் சிறுகதைகளுடன், அண்மையில் மறைந்த எழுத்தாளர் கௌதம நீலாம்பரனின் கடைசிக் கதையான ‘இலங்கை ராணி’யும் இடம்பெற்றுள்ளது.

பேராசிரியர் சரஸ்வதி ராமநாதனின் நகரத்தார் குறித்த கட்டுரை, தான் சந்தித்த மகான்கள் குறித்த இல.கணேசனின் கட்டுரை, சங்க இலக்கியத்தில் தேசிய சிந்தனைகள் என்ற தலைப்பிலான ஆர்.பி.வி.எஸ்.மணியனின் கட்டுரை ஆகியவை  குறிப்பிடத்தக்கவை. தஞ்சை வெ.கோபாலன், பி.என்.பரசுராமன், பத்மன், நரசய்யா, மா.கி.ரமணன் உள்ளிட்டோரின் கட்டுரைகளும் மலரில் மணம் வீசுகின்றன.

கவிமாமணி மதிவண்ணன் லக்குமி தோத்திரத்தை இனிய தமிழில்
வழங்கியிருக்கிறார்.  ஓவியர் தாமரை ராமலிங்க வள்ளலாரின் வரலாற்றை  படக்கதையாகத் தீட்டியிருக்கிறார்.

காங்டாங், மைசூரு, ஹம்பி, தலைக்காவிரி ஆகிய இடங்கள் தொடர்பான  பயணக் கட்டுரைகளும், தோரணமலை, அந்தியூர் கால்நடைச் சந்தை, நட்டாற்றீஸ்வரர்  கோயில் தொடர்பான கட்டுரைகளும் மலரின் பல்சுவையைக் கூட்டுகின்றன.

மொத்தத்தில் விஜயபாரதம் தீபாவளி மலர் வாசிப்பனுபவத்தை இனிமையாக்கும் நல்விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளது.

***

விஜயபாரதம் தீபாவளி மலர்- 2015

ஆசிரியர்: ம.வீரபாகு

510 பக்கங்கள், விலை: ரூ. 100,

பாரதீய கலாச்சார சமிதி,

12, எம்.வி.தெரு, பஞ்சவடி,
சேத்துப்பட்டு, சென்னை- 600 031.

தொலைபேசி: 044- 2836 2271.

அண்ணலை அறியும் வழி!

10 Nov

Ambedkar 2

அந்தச்  சிறுவனை கட்டைவண்டியிலிருந்து இறக்கிவிட்ட

பெரிய மனதுக்காரர் அறிந்திருக்க மாட்டார்,

தான் ஒரு மாபெரும் தலைவரின் உருவாக்கத்துக்கு

அடிப்படைக் காரணம் என்று.

 

ஆரம்பப் பள்ளியில் அனைவரும் மரப்பலகைகளில் அமர,

தான் மட்டும் வீட்டிலிருந்து கோணிப்பை கொண்டுவரும்

நிர்பந்தத்தின் அவசியத்தை அறியாப் பாலகன் அறிந்தபோது

அவன்  கண்கள் உகுத்த கண்ணீரின் காரணத்தை  மட்டுமல்ல-

பேராசிரியர்களின் பேராசானாக, சட்ட வல்லுநராக

அவன்  வருங்காலத்தில் மலரப் போவதையும்

அந்த ஆசிரியர்கள் அறிந்திருக்கவில்லை.

 

அந்த மாணவனுக்கு வகுப்பு இடைவேளையில்

குனிந்து நின்று இரு கைகளை ஏந்தச் செய்து

தண்ணீர் ஊற்றிய பள்ளி உதவியாளருக்குத் தெரியாது,

தீண்டாமையால் அவதிப்படும் அந்த மாணவன்

எதிர்காலத்தில்  ‘சாதியை ஒழிக்கும் வழி’யைக் கண்டறிவான் என்று.

 

கல்லூரியில் அந்த இளைஞரை மட்டும் கீழ்த்தரமாக நடத்திய

சக மாணவர்களுக்குத் தெரிந்திருக்காது,

பொருளாதாரம், சட்டம், அரசியல் அறிவியல், தத்துவம், வரலாறு

எனப் பல துறைகளில் அவன் பின்னாளில்

மாபெரும் நூல்தொகையைப் படைப்பான் என்று.

 

மன்னரின் விருப்பத்தால் பரோடா அரண்மனையில்

பணியில் சேர்ந்த அந்த ஊழியரை விடாது துரத்திய

அதிகாரபீட ஈனர்களுக்குத் தெரியாது,

அவன் உலகம் முழுவதும் வரவேற்கப்படப் போகும்

ஒளிமயமான நிகழ்வு.

 

பந்தர்பூர் கோயிலுக்கு யாத்திரை செல்ல எண்ணிய

பிரிய மனைவி ரமாவின் இறுதி ஆசை மரணித்தபோது

அந்த இளம் கணவன் எடுத்த சபதம் போல,

பின்னாளில் புதிய யாத்திரைத் தலமாக

நாகபுரியில்  ‘தீக்‌ஷா பூமி’யை உருவாக்குவான் என்று

அந்தக் கோயிலின் வைதீகர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

 

தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியுரிமை கோரி

வட்டமேஜை மாநாட்டின்போது காந்தியுடன் மோதிய

அந்த இளம் தலைவரை கடுமையாக விமர்சித்த

சாதி அரசியல்வாதிகள் அறித்திருக்க நியாயமில்லை,

மகாத்மாவே அவரை சுதந்திர இந்தியாவில்

சட்ட அமைச்சராக்கப் பரிந்துரைப்பாரென்று.

 

எருமைகளும் பன்றிகளும் கும்மாளமிடும் மஹாத் குளத்தில்

கீழ்சாதி என்பதால் நீரெடுக்க மறுக்கப்பட்ட

தன் மக்களுக்காக சத்தியாக்கிரஹம் செய்த

அந்த நாயகனைத் தாக்கத் துடித்த

மேல்சாதி இந்துக்களுக்குத் தெரியாது,

அவர் மிக விரைவில் அனைவருக்கும் பொதுவான

‘புதிய மனு ஸ்மிருதி’யை உருவாக்கப் போகும் வரலாறு!

 

பணமும், பதவியும், ஆதரவும் நல்கி,

காயங்களுக்கு மருந்திட்டு விலைபேசி,

அவரை எப்படியேனும் தங்கள் வலைக்குள்

வீழ்த்தத் துடித்த அயல்மத நேயர்கள் அறிய நியாயமில்லை,

அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த தேசபக்தியின் அனல்.

 

எந்த மக்களால் அவமதிக்கப்பட்டாரோ,

எந்த மக்களால் புறக்கணிக்கப்பட்டாரோ,

எந்த மக்கள் தீட்டுக்காக முகம் சுழித்தார்களோ,

அதே மக்களின் நலனுக்காக-

அவர்களும் வாழும் தேசத்தின் ஒருங்கிணைந்த நலனுக்காக-

அவர் படைக்கப் போகும் அரசியல் சாசனத்தை

பரிதாபத்துக்குரிய அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை.

 

படித்து பட்டங்கள் பெற்று,  உயர் பதவிகள் அடைந்தபோதும்

அவரை அங்கீகரிக்க மறுத்து அடம் பிடித்த

மரத்துப்போன சமூகத்துக்கு அவர் தந்த

பௌத்த மதமாற்ற சவுக்கடியின் வலி

இன்னமும் கூட உணரப்படவில்லை.

 

அவரது கண்களில் சுடர்ந்த ஒளியை தரிசித்தவர்கள் சிலரே.

நமது நன்றிக்குரிய அவர்களும் இல்லாதிருந்தால்

இந்த நாடு என்னவாகி இருக்கும்?

அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும்கூட,

இந்தக் கேள்வியை ஏளனமாகப் பார்ப்பவர்களுக்குப் புலப்படாது

அந்த மகத்தான தலைவரின் தொலைநோக்குச் சிந்தனை.

 

பாரதத்தில் மறக்கப்பட்ட மகான் புத்தரை

தனது நவயாண மார்க்கத்தால் புத்தெழுச்சி கொள்ளச் செய்த

அந்த நவீன போதிசத்துவரின் பெருமையை

பகுத்தறிவாளர்களோ, மதவாதிகளோ, அறிவுஜீவிகளோ

ஜீரணிக்க முடியாது.

 

ஒடுக்கப்பட்ட சகோதரர்களின் வீழ்ச்சியைத் தடுக்க

22 அம்ச உறுதிமொழித் திட்டம் அளித்தவர்;

எழுதுகோலை ஆயுதமாக்கியதால்,

முரண்பட்டவர்கள் ரத்தம் சிந்துவதைத் தவிர்த்தவர்;

தேசப் பிரிவினையை எதிர்த்தவர்;

காஷ்மீர விசேஷ அந்தஸ்தை மறுத்தவர்;

இட ஒதுக்கீட்டுக்கு காலக்கெடு விதித்தவர்;

புராணக் கொடுமைகளை எதிர்த்தது போலவே

பிற மதங்களின் சீரழிவையும்  விளக்கியவர்;

ஏக்கப் பெருமூச்சுடன் தவித்த தோழர்களுக்கு

கல்வியே உயர்வுக்கு வழி என்று

வாழ்வனுபவத்துடன் போதித்தவர்;

மத்திய ரிசர்வ் வங்கி உருவாகக் கருவானவர்;

தீண்டாமைக் கொடுமையை சட்டரீதியாக வென்றவர்;

பாகுபாடுகளுக்கு எதிரான குரல்களுக்கு முகமானவர்…

அவரது பன்முக ஒளிவீசும் ரத்தின ஜாலத்தை

இன்னமும் முழுமையாக நாம் உணர்ந்தோமில்லை.

 

அவரைப் போல ஒடுக்கப்பட்டால்,

அவரைப் போல நசுக்கப்பட்டால்,

அவரைப் போல புறக்கணிக்கப்பட்டால் மட்டுமே

அவரது தாபம் புரியும்.

ஆனாலும் அவற்றை மீறி வென்ற-

சிரத்தையின், ஒழுக்கத்தின், விடாமுயற்சியின்

வெளிப்பாடான அவரது ஞானமும்,

சீறியெழுந்த ஆற்றலின் உத்வேகமும் புரிய,

நீங்கள் அண்ணலாக வேண்டும்.

 

ஈசனை அறிய வேண்டுமானால், ஈசனாவதே வழி.

அம்பேத்கரை அறிய வேண்டுமாயினும்

அதுவே வழி!

.

விஜயபாரதம் தீபாவளி மலர்- 2015

.

புத்தரின் புன்னகை

9 Nov

குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.

நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி

மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.

ஓங்கி உயர்ந்த அரசமர நிழலில்

மோன நிலையில் இருக்கிறார் புத்தர்.

 

மயில் ஆடிக்கொண்டிருக்கிறது;

அமைதி எங்கும் விரிந்திருக்கிறது.

ஊர்க்கோடியில் வீற்றிருக்கும்

காவியுடைத் துறவியைக் காண கூட்டம் குழுமுகிறது; நோட்டமிடுகிறது.

வணங்கிய மக்களை வணங்கி, அமுத மொழிகளைப் பகர்கிறார் புத்தர்:

 

ஆசையை விட்டொழியுங்கள்; அகிலத்தை ஆளுங்கள்.

தர்மம் செய்யுங்கள்; தர்மப் பாதையில் செல்லுங்கள்.

சங்கம் ஆகுங்கள்; சங்கமம் ஆக்குங்கள்.

புத்தன் ஆகுங்கள்; புது உலகைக் காணுங்கள்.

கூறிய புத்தனை பணிகிறது கூட்டம்.

மலர்களைத் தூவுகின்றனர் மக்கள்.

 

தூவிய மலர்களை திருப்பி வழங்கி ஆசி அளிக்கும் புத்தனைக் கண்டு

ஒருவன் மனதில் குமுறும் கோபம்.

இத்தனை நாட்கள் கட்டிக் காத்த

ஆசைகள் பொய்யா? பூசைகள் பொய்யா?

சீறும் கோபம் சொல்லினில் தெறிக்க

நிந்தனை மொழிகளால் அர்ச்சனை செய்தான்.

கோபத்தாலே நரம்பு புடைக்க கத்திய அவனை

கருணை தவழ புத்தர் பார்த்தார்; புன்னகை புரிந்தார்.

 

பலமணி நேரம் வசைமொழி கூறியும்

புன்னகை மாறா புத்தனைப் பார்த்து,

ஓய்ந்தான் எளியவன்; புத்தர் சிரித்தார்.

மெல்லிய குரலில் உறுதியாய் ஒலித்தார்:

 

பக்தர்கள் தூவிய நறுமண மலர் போலவே

உனது குறுமொழி மலர்களை புன்னகையாலே திருப்பித் தந்தேன்;

ஆசை இல்லா உள்ளம் இருந்தால்

புகழால் போதையும், இகழால் வாதையும்

நிகழ்வது இல்லை; நித்திய உண்மை.

என்றார் புத்தர்.

எளியவன் உணர்ந்தான்.

கண்ணீர் வழிய கரங்கள் குவித்தான்.

 

புத்தரின் புன்னகை எங்கும் பரவுகிறது.

உலகில் அமைதி தவழ்கிறது.

மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் வருட

மான்கள் மருண்டோடுகின்றன.

உடன் புலிகள் விளையாடுகின்றன.

 

குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.

நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி

மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.

.

‘ஓம் சக்தி’ தீபாவளி மலர்- 2015

.

.

பண்டிகைகளின் ராஜா தீபாவளி!

2 Nov

அனைத்து மதத்தினருக்கும் ஆனந்தம் அளிக்கும்

பண்டிகைகளின் ராஜா தீபாவளி!

பண்டிகைகள் மக்களுக்கு ஆனந்தம் அளிப்பவை மட்டுமல்ல, இவை தான் மக்களை ஒரு சமுதாயமாகப் பிணைக்கின்றன. அதிலும் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் புழங்கும் இந்தியப் பெருநிலத்தில் பண்டிகைகளின் முக்கியத்துவம் சாதாரணமானதல்ல.

குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவம் அளவிட முடியாதது. ‘பண்டிகைகளின் ராஜா’ என்று தீபாவளியைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு பல்வேறு சமுதாயத்தினரிடமும், பல்வேறு மதத்தினரிடமும் தீபாவளியின் தாக்கம் உள்ளது.

இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி:

தீபாவளி இந்துப் பண்டிகைகளில் தலையாயது. குறிப்பாக, இந்து சமயத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டிலுமே தீபாவளிக்கு முக்கியத்துவம் உள்ளது. சைவர்கள் கேதாரகௌரி விரதம் அனுஷ்டித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

புனிதத்தலமான கேதாரத்தில் (தற்போதைய கேதார்நாத்) சுயம்புவாகத் தோன்றிய சிவனை அடைய விரும்பி பராசக்தி 21 நாள் விரதம் இருந்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அதன் இறுதியில் சிவன் சக்திக்கு காட்சியளித்து தன்னில் ஒருபாதியாக சக்தியை ஏற்று அர்த்தநாரீஸ்வரராக மாறினார் என்பது புராணம் கூறும் கதை. அந்த நன்னாள் தான் தீபாவளித் திருநாள்.

இதையொட்டி, புரட்டாசி மாதம் தசமி வளர்பிறை திதியில் துவங்கி ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி வரை 21 நாள்கள் விரதம் இருந்து சிவனை வழிபட மணவாழ்க்கை சிறப்புறும் என்பது நம்பிக்கை. இதுவே கேதாரகெüரி விரதமாகும்.

வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பிய நாள் என்பதாலும், நரகாசுரனை கிருஷ்ணர் வதைத்த நாள் என்பதாலும் வைணவர்களுக்கு இந்நாள் முக்கியமான பண்டிகை நாளாகிறது. மாலவனிடம் நரகாசுரன் கேட்ட வரத்திற்காகவே தீபாவளி நன்னாளில் எண்ணெய்க் குளியலுடன் வழிபடுவது பொதுவான பண்பாட்டுப் பழக்கமாக நாடு முழுவதும் மாறி இருக்கிறது.

பாண்டவர்கள் பன்னிரு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து நாடு திரும்பிய நாளும் தீபாவளி நாளே. இதுதவிர, தீபாவளியை பலநாள் திருவிழாவாகக் கொண்டாடுவது வடமாநிலங்களில் விசேஷமாக உள்ளது.

கோவத்ச துவாதசி, தனத் திரயோதசி, லட்சுமி பூஜை, கோவர்த்தன பூஜை, காளி பூஜை, யம துவிதியை, மார்வாரிப் புத்தாண்டு, பஹு பீஜ் என தீபாவளியை ஒட்டிய ஒருவார காலமும் பண்டிகைக் கொண்டாட்டம் பல் மாநிலங்களில் பலவிதங்களில் தொடர்வது இப்பண்டிகையின் கோலாகலச் சிறப்பு.

சமணர்கள் கொண்டாடும் தீபாவளி:

தீபாவளிப் பண்டிகை சமணர்களுக்கும் உரித்தானது. சமண மதத்தின் கடைசி (24-ஆவது) தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

பழமையான சமண இலக்கியமான ‘கல்பசூத்திரம்’ என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூலில் தீப வழிபாடு குறித்த செய்தி வருகிறது. இதை எழுதியவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யார் பத்ரபாகு என்ற சமண முனிவர்.

‘மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால் தீப விளக்கை ஏற்றி வைப்போம் என்று, காசி, கோசல மக்களும், பதினாறு கண அரச மக்களும் தங்கள் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி வைத்தனர்’ என்று எழுதி இருக்கிறார் பத்ரபாகு.

இலக்கியத்தில் ‘தீபாவளி’ என்ற சொல் முதன்முதலாகப் பிரயோகிக்கப்படுவது, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜினசேன முனிவரால் இயற்றப்பட்ட ‘ஹரிவம்ச புராணம்’ என்ற சமண இலக்கியத்தில் தான். அதில் வரும் ‘தீபாவளி காயா’ என்ற வார்த்தையின் பொருள் “ஞான ஒளி உடலைவிட்டு நீங்குகிறது” என்பதே. இதிலிருந்து உருவானதே தீபாவளி என்ற வார்த்தை என்று சமண இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மாமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் என்பதால், பெüத்த மதத்தினரும் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

சீக்கியர்கள் கொண்டாடும் தீபாவளி:

பஞ்சநதி பாயும் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்களுக்கோ, தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் திருநாளாக தீபாவளி மிளிர்கிறது.

‘சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் தீபாவளி’ என்று மூன்றாவது சீக்கிய குரு அமர்தாஸ் (1552- 1574) அறிவித்தார்.

சீக்கியர்களின் ஆலயமான ‘ஹர்மந்திர் சாஹிப்’ எனப்படும் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் ஒரு தீபாவளி நன்னாளில் தான். அமிர்தசரஸ் குளத்தையும் அதையொட்டிய நகரையும் நிர்மாணித்த நான்காம் சீக்கிய குரு ராம்தாஸ் 1577-ஆம் ஆண்டு தீபாவளியன்று இப்பணியைத் துவக்கினார். இப்பணியை முழுமையாக்கி அமிர்தசரஸ் நகரை உருவாக்கினார் அடுத்து வந்த ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜூன் தேவ்.

சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர்கோவிந்த சிங் (1595 – 1644), அப்போதைய முகலாய மன்னர் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டார். அவருடன் 52 இந்து அரசர்களும் கைது செய்யப்பட்டு குவாலியர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மதமாற்றத்தை வலியுறுத்தி சிறைக்குள் இவருக்கு கொடிய சித்ரவதைகள் இழைக்கப்பட்டன.

அவை அனைத்தையும் தனது ஆன்ம வலிமையால் வென்ற குரு ஹர்கோவிந்த சிங்கின் பெருமையை மன்னர் ஜஹாங்கீர் உணர்ந்தார். இறுதியில் சிறையில் இருந்து குருவை விடுவிக்க மன்னர் முன்வந்தார். ஆனால், தன்னுடன் சிறையிலுள்ள 52 இந்து மன்னர்களையும் விடுவித்தால் மட்டுமே தானும் வெளிவருவேன் என்றார் குரு ஹர்கோவிந்த் சிங்.

கடைசியில் ஒரு தீபாவளி நன்னாளில் குரு ஹர்கோவிந்தருடன் 52 இந்து மன்னர்களையும் விடுவித்தார் மொகலாய மன்னர் ஜஹாங்கீர். 1619, அக்டோபர் 26-ஆம் நாள் இந்தச் சரித்திர நிகழ்வு நடைபெற்றது. அதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ‘பந்தி சோர் திவஸ்’ என்ற விழா சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது.

சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குரு கோவிந்த் சிங், 1699-ஆம் ஆண்டு, சீக்கியர்களின் பண்டிகைகளில் பைசாகிக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளியை அறிவித்தார்.

அமிர்தசரஸ் பொற்கோவிலின் நிர்வாகி குரு பாயி மணிசிங் மொகலாய அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தைக் கட்ட மறுத்ததால், 1737-இல் லாகூர் கோட்டை சிறையில் சித்ரவதைக்கு ஆளாகி தீபாவளியன்று பலியானார். சீக்கியர்களின் கால்சா படை மொகலாயருக்கு எதிராக தீவிரமாகப் போராட இவரது படுகொலையே காரணமாக அமைந்தது.

இத்தகைய தியாகமயமான சரித்திரப் பதிவுகளுடன், முந்தைய குருமார்களின் புனித நினைவுகளுடன் தீபாவளியை சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர்.

பிற மதத்தினரும் கொண்டாடும் தீபாவளி:

இந்துக்கள், சமணர்கள், பெüத்தர்கள், சீக்கியர்கள் மட்டுமல்லாது இந் நாட்டிலுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் கொண்டாடும் விழாவாக தீபாவளி உள்ளது. பொதுவான பண்டிகை வழிபாடுகளில் இவர்கள் பங்கேற்காவிடிலுமó, தீபாவளிக்கே உரித்தான பட்டாசு வெடிப்பதிலும் பட்சணங்கள் பறிமாறுவதிலும் இவர்களும் பங்கேற்கின்றனர்.

பட்டாசுகள் ஒலிக்க, மத்தாப்புகள் ஒளிவீச, எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும்போது, நம்மைப் பிரிக்கும் வேற்றுமைகளை விட நம்மை இணைக்கும் பண்டிகைகள் வலிமையானவை என்பதை நாம் உணர்கிறோம்.

இவ்வாறாக, நாடு முழுவதும் உள்ள மக்களைப் பிணைக்கும் பசையாக, சமுதாயத்தை இணைக்கும் விசையாக தீபாவளிப் பண்டிகை விளங்கி வருகிறது. நமது பண்பாட்டுப் பாலமாக, நாட்டின் ஒருமைப்பாட்டின் ராகமாக தீபாவளி விளங்குகிறது எனில் மிகையில்லை.

தினமணி- கோவை (தீபாவளி கொண்டாட்டம்- 31.102013)

 

 

.

தமிழ் இலக்கியங்களில் தீபாவளி!

13 Nov

நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. எனினும், தமிழகத்தில் தீபாவளிக்கு எதிரான பிரசாரம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு; வடவர் பண்டிகையான தீபாவளிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற குரல்கள் அபசுரமாக எழுவதுண்டு.

அவ்வாறு கூறுவோர், தமிழ் இலக்கியத்தில் தீபாவளி குறித்த பதிவுகள் இல்லை என்று கூறுகின்றனர். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர். தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழா குறித்தும் கூட தமிழ் இலக்கியத்தில் உறுதியான பதிவுகள் இல்லை.

மாறாக, நமது பழந்தமிழ் இலக்கியங்களில் இந்திரவிழா, கார்த்திகை விளக்கு, ஐப்பசி ஓணம் போன்ற பண்டிகைகள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. காலந்தோறும் மாறித் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மானிட சமுதாயத்தின் சிறப்பாகவே பண்டிகை மாற்றங்களைக் கருத வேண்டும் என்பது மானுடவியலாளர்களின் கருத்து.

இந்நிலையில், தமிழ் இலக்கியத்தில் திருமால் வழிபாடு, விளக்கு வழிபாடு தொடர்பாக இடம்பெற்றுள்ள சில பதிவுகளை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

ஒளி வழிபாட்டின் துவக்கம்:

தீப வழிபாடு தமிழருக்குப் புதிதல்ல. கௌமாரத்தில் தீப வழிபாடு பேரிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் முருகனை ‘சேயோன்’ என்று பாடுகிறது. திருமுருகாற்றுப்படை என்ற தனிநூலே முருகன் பெருமை பேச எழுந்துள்ளது.

சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த பாலகனான முருகனை கிருத்திகை நாளில் விளக்கேற்றித் துதிப்பது தமிழர் மரபு. அதன் தொடச்சியாகவே வடலூர் வள்ளலார் சோதி வழிபாட்டை சென்ற நூற்றாண்டில் பிரபலப்படுத்தினார்.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், விளக்கு வழிபாட்டைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது…

(நெடுநல்வாடை: 42-43)

இன்றும் தமிழகத்தில் கார்த்திகை தீப வழிபாடு, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரமும் முழுமதியும் கூடிய நன்னாளில் நடந்து வருகிறது. சங்கம் மருவிய கால இலக்கியமான கண்ணங்கூத்தனாரின் கார் நாற்பது, கார்த்திகை மாத தீப வழிபாட்டுக்கு ஆதாரமாக உள்ளது.

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் நாள் விளக்கு

(கார்நாற்பது -26)

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியும் கார்த்திகை விளக்கு குறித்து, ‘கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்’ என்று பாடுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், திருமயிலையில் இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பிக்கப் பாடிய பூம்பாவைப் பதிகமும் கார்த்திகை விளக்கீடு குறித்துப் பேசுகிறது.

கார்த்திகை நாள்… விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்!

(திருஞானசம்பந்தர் பூம்பாவை திருப்பதிகம்- திருமுறை: 2-47)

தீபாவளியாக மாறியதா?

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீப வழிபாடே தீபாவளியாக மாற்றம் பெற்றது என்ற கருத்து உள்ளது. மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது தற்போதைய தீபாவளியின் வடிவம் உருவானதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் தீபாவளியின் வடிவம் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.

பழமையான சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூறில், அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில் இவ்வழிபாட்டுக்கு ‘தீபாவளி’ என்ற பெயர் இல்லையெனினும், அதையொத்த பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பது இப்பாடலில் உறுதியாகிறது.

மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!

(அகநானூறு – 141ம் பாடல்)

என்று நக்கீரர் பாடுகிறார்.

‘அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்’ என்பது அமாவாசை நாளையே குறிக்கிறது. இந்தச் செய்யுளில் வரும் பழவிறல் மூதூர் திருவண்ணாமலையைக் குறிப்பதாகவும் கூறுவர். திருவண்ணாமலை தீப வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்றது. இங்கு ஈசன் சோதி வடிவமாகத் தரிசனம் தருவதாக ஐதீகம்.

கார்த்திகை தீபம் நிகழும் கார்த்திகை மாத பெüர்ணமிக்கும், தீபாவளிப் பண்டிகை வரும் ஐப்பசி மாத அமாவாசைக்கும் இடையே 15 நாட்கள் மட்டுமே வித்யாசம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

சமண இலக்கியத்தில் தீபாவளி:

பழமையான சமண இலக்கியமான ‘கல்பசூத்திரம்’ என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூலில் தீப வழிபாடு குறித்த செய்தி வருகிறது. இதை எழுதியவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யார் பத்ரபாகு என்ற சமண முனிவர்.

‘மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால் தீப விளக்கை ஏற்றி வைப்போம் என்று, காசி, கோசல மக்களும், பதினாறு கண அரச மக்களும் தங்கள் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி வைத்தனர்’ என்று எழுதி இருக்கிறார் பத்ரபாகு.

இலக்கியத்தில் ‘தீபாவளி’ என்ற சொல் முதல்முதலாகப் பிரயோகிக்கப்படுவது, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜினசேன முனிவரால் இயற்றப்பட்ட ‘ஹரிவம்ச புராணம்’ என்ற சமண இலக்கியத்தில் தான். அதில் வரும் ‘தீபாவளி காயா’ என்ற வார்த்தையின் பொருள் “ஞான ஒளி உடலைவிட்டு நீங்குகிறது” என்பதே. இதிலிருந்து உருவானதே தீபாவளி என்ற வார்த்தை என்பது சமண இலக்கிய ஆய்வாளர்களின் கருத்து.

பழந்தமிழகத்தில் சமண மதத்தின் செல்வாக்கு பரவியிருந்ததற்கு ஆதாரப்பூர்வமான பல சான்றுகள் உள்ளன. சிலப்பதிகார நாயகன் கோவலன் கூட சமண சமயத்தவன் தான். எனினும், அக்காலத்தில் மதவேற்றுமையால் மக்கள் பிளவுபட்டிருக்கவில்லை என்பதற்கு சிலப்பதிகாரமே சாட்சியாகத் திகழ்கிறது. சமணர் இல்லங்களில் அனுசரிக்கப்பட்ட வழிபாடு பிற சைவ, வைணவர் இல்லங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.

பழந்தமிழகத்தில் மால் வழிபாடு:

பழந்தமிழகத்தில் மாலவன் வழிபாடு இருந்தமைக்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்பது தொல்காப்பிய நூற்பா (தொல்- அகம்-5).

திருமால் வழிபடப்படும் நிலப்பகுதியாக ‘முல்லை’யை தொல்காப்பியர் காட்டுகிறார்.

முதற்பெருங் காப்பியமான சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியர் குரவையில் மாயவனின் அவதார மகிமையைப் பாடி மகிழும் மக்களைக் காண்கிறோம்.

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரனும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர்கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!…

(சிலப்பதிகாரம்- 17- ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல்)

என்று குரவையிட்டுப் பாடும் ஆய்ச்சியர் மூலம் அக்காலத்தில் நிலவிய மாலவன் வழிபாட்டை அறிகிறோம். திருமால் வழிபாடு வடக்கிலிருந்து வந்து பரவியதல்ல என்பதை பரிபாடலும் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.

ஆகவே, பழந்தமிழகத்திலேயே மாலவன் வழிபாடும் விளக்கு வழிபாடும் இருந்தமைக்கு இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. சைவ, வைணவத்தில் மட்டுமல்லாது சமணத்திலும் தீப வழிபாடு இருந்துள்ளது உறுதியாகத் தெரிகிறது.

சமண மதத்தினர் அனுசரித்த மகாவீரர் மோட்ச தினமும் பழந்தமிழர் அனுசரித்த கார்த்திகை தீபமும் இணைந்து இன்று நாம் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு அடிகோலியிருக்க வாய்ப்புள்ளது. காரணம் எதுவாயினும், சமுதாயத்தைப் பிணைக்கும் சக்தியாக தீபாவளி பண்டிகை விளங்குவது நமக்கெல்லாம் பெருமை அளிப்பது தானே?

தினமணி – தீபாவளி மலர்- 2012

.

சீக்கியர்கள் கொண்டாடும் தீபாவளி….

21 Oct

வண்ணமயமான தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் உற்சாக வெள்ளத்தைக் கரைபுரளச் செய்யும் முதன்மையான பண்டிகை தீபாவளி தான். இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் கொண்டாடப்படுவதல்ல என்பது பலரும் அறியாத தகவல்.

சமண மத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

மாமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் என்பதால், புத்த மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். பஞ்சநதி பாயும் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்களுக்கோ, தீபாவளி தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் சங்கமத் திருநாள்.

“சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் தீபாவளி” என்று மூன்றாவது சீக்கிய குருவான குரு அமர்தாஸ் (1552- 1574) அறிவித்தார். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.

சீக்கியர்கள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் ஹர்மந்திர் சாஹிப் எனப்படும் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் ஒரு தீபாவளி நன்னாளில் தான். அமிர்தசரஸ் குளத்தையும் அதையொட்டிய நகரையும் நிர்மாணித்த நான்காம் சீக்கிய குரு ராம்தாஸ் 1577ம் ஆண்டு தீபாவளியன்று இப்பணியைத் துவக்கினார். இப்பணியை முழுமையாக்கி அமிர்தசரஸ் நகரை உருவாக்கினார் அடுத்துவந்த ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜூன் தேவ்.

சீக்கியர்களின் எழுச்சிக் காலமாகக் கருதப்படும் காலம் ஆறாவது குரு ஹர்கோவிந்த சிங்கின் காலம் (1595 – 1644). இவர் அப்போதைய முகலாய மன்னர் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டார். அவருடன் 52 இந்து அரசர்களும் கைது செய்யப்பட்டு குவாலியர் கோட்டையிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதமாற்றத்தை வலியுறுத்தி சிறைக்குள் இவருக்கு கொடிய சித்ரவதைகள் இழைக்கப்பட்டன. அவை அனைத்தையும் தனது ஆன்ம வலிமையால் தாண்டிய குரு ஹர்கோவிந்த சிங்கின் பெருமையை மன்னர் ஜஹாங்கீர் உணர்ந்தார். இறுதியில் சிறையில் இருந்து குருவை விடுவிக்க மன்னர் முன்வந்தார். ஆனால், தன்னுடன் சிறையிலுள்ள 52 இந்து மன்னர்களையும் விடுவித்தால் மட்டுமே தானும் வெளிவருவேன் என்றார் குரு ஹர்கோவிந்த் சிங்.

கடைசியில் குருவின் மனவலிமையே வென்றது. ஒரு தீபாவளி நன்னாளில் குரு ஹர்கோவிந்தருடன் 52 இந்து மன்னர்களையும் விடுவித்தார் மொகலாய மன்னர் ஜஹாங்கீர். 1619, அக்டோபர் 26ம் நாள் இந்த சரித்திரப்புகழ் பெற்ற நிகழ்வு நடைபெற்றது.

அதனை ஆண்டுதோறும் நினைவுகூரும் விதமாக, “பந்தி சோர் திவஸ்’ என்ற விழா சீக்கிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அமிர்தசரஸ் திருக்குளத்தில் சீக்கியக் குழந்தைகள் வண்ண விளக்குகளை மிதக்கவிட்டு, பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர்.

சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குரு கோவிந்த் சிங், 1699ம் ஆண்டு, சீக்கியர்களின் பண்டிகைகளில் பைசாகிக்கு அடுத்ததாக, முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளியை அறிவித்தார். அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்கள் தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அமிர்தசரஸ் பொற்கோவிலின் நிர்வாகியும் குரு கோவிந்தரின் பால்ய நண்பருமான குரு பாயி மணிசிங் மொகலாய அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தைக் கட்ட மறுத்ததால், 1737, டிசம்பரில் கைது செய்யப்பட்டு லாகூர் கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு லாகூர் ஆளுநர் சஹாரியா கானால் கடும் சித்ரவதைக்கு ஆளாகி பாயி மணிசிங் தீபாவளியன்று பலியானார்.

அவரது மரணம் சீக்கியர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. ஏற்கனவே பத்தாவது குருவான குரு கோவிந்தரால் அமைக்கப்பட்ட கால்சா படை மொகலாயருக்கு எதிராக தீவிரமாகப் போராட இவரது படுகொலை காரணமாக அமைந்தது.

இவ்வாறாக, தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் பதிவுகளுடன், முந்தைய குருமார்களின் புனிதமான நினைவுகளுடன் தீபாவளியை சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர். இந்நாளில் சிறப்பு மிகுந்த நமது பாரம்பரியத்தை நாமும் நினைவில் கொள்வோம்.

தினமணி- கோவை (21.10.2012 )

ஒளி விழா கொண்டாட்டம் – விளம்பரச் சிறப்பிதழ் 

.

%d bloggers like this: