Tag Archives: தீ

தீ

22 Feb
செந்தழல் துடிக்கிறது
அனைத்தையும் அபகரிக்க
தன் நாவுகளை
எண்திசைகளிலும் விரிக்கிறது.
அதன் ஊடே கருநிழல்.
கருநிழலிலுள்ள
கரிமச் சேர்மங்கள் தான்
கனலை உருவாக்குகின்றன.
அனலுக்கும் ஒரு ஆத்மா.
.
அருகில் நெருங்கும் முன்னரே
அபாய எச்சரிக்கையாய்
அனல் தோலைத் தடவுகிறது.
என் மனமோ அதனுள்ளேயே
ஒன்றத் தான் ஓடுகிறது.
என்ன ஒரு ஆகர்ஷம்!
.
தூய்மையான தீக்கு நிறமில்லை-
தூய நீரைப் போல.
தூய ஆத்மாவுக்கு
உடல் ஒரு பொருட்டில்லை.
துன்பமும் இல்லை.
.
பொருட்கள் எரியும்போது
வெளிப்படும் வெப்பம்
இயக்க ஆற்றலாக மாறும்போது
உலகம் உருள்கிறது.
நாமும் உழல்கிறோம்.
நாம் எரியும்போது,
உலகம் மட்டும்
உழன்றுகொண்டு உருளும்.
.
எதுவும் ஓர் எல்லைக்குட்பட்டது-
தீயைத் தவிர.
ஏனென்றால் அது தான்
எல்லைகளை உருவாக்குகிறது.
.
அணுவைப் பிளந்த அணுவாலே தான்
இந்த அண்டம் உருவானது.
அணுவைப் பிளந்தால் அக்னி.
அதுவே அகிலத்தின் அதிகாரி.
.
ஈஸ்வரன் அழிக்கும் தெய்வம்
அக்னி அழிப்பது.
அது தெய்வம்.
அழிக்க முடிந்தால்
ஆக்கவும் முடியும்.
ஆக்கத்தையும் அனல் அளிக்கும்.
..
ஏழை, பணக்காரன்,
வெள்ளையன், கருப்பன்
என்ற வேறுபாடு கருதாமல்
ஏற்றுக்கொள்வது அக்னி தான்.
சமத்துவம் விரும்பும் சகோதரர்களே
அக்னியை வலம் வருவீர்.
அது ஞானி.
.
சிவனது நெற்றிக்கண் திறந்து
திரண்ட அக்னி அம்புகள்
காற்றால் வருடப்பட்டு,
ஆகாயத்தில் பயணப்பட்டு,
நீர்க்கடலில் குளிரில் பட்டு,
நிலமான விந்தை கண்டோம்.
வித்துவோ, விந்துவோ
அது அக்னி தான்.
அதை நம்பு; அதுவே சாஸ்வதம்.
.
அகந்தையைப் பொசுக்கு
அறியாமையை எரித்தொழி
கயமைகளை தீக்கு தீவனமாக்கு
பாவத்தை பஸ்மம் ஆக்கு.
உன் சரித்திரம் உலக ஏட்டில்
ஒரு வரியாய் பொறிக்கப்படும்.
.
காற்றுடன் காதல் கொண்டு
அதையும் அனலாக்குகிறது.
நீருடன் காதல் கொண்டு
காற்றாக்குகிறது.
நிலத்துடன் உறவு கொண்டு
நீராக்குகிறது.
ஆகாயத்தில் ஒளிர்ந்து
ஆகர்ஷிக்கிறது.
அக்னியே அடிப்படை-
அவரை வணங்கு.
.
பாதையைப் பார்த்துப் போ!
தோளின் பாரத்தைக் கருதாதே!
நீயும் ஒரு நாளில்
பாரமாய்- பாறையாய்
மாறப்போகிறவன்(ள்).
உன் பின்னாலும் வருகிறார்கள்…
உன் முன்னாலும் சென்றிருக்கிறார்கள்.
.
அதோ தெரிகிறது மயானம்.
அதோ எரிகிறது தீ!
அந்த நீறை இட்டுக்கொள்.
அதை வலம் வா!
உன்னிப்பாய்த் தொடு-
ஓம் அக்னியே ஸ்வாகா!
.
Advertisements