Tag Archives: தேர்தல்

தேர்தல் வேண்டுகோள்….

19 Mar

தேசிய சிந்தனைக் கழகம் அமைப்பு, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்துமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த அறிக்கை இங்கு இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ…

DCK Appeal 19042014

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு?

24 Jul

அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரைத் தீர்மானிப்பதற்கு முன் நடந்த அரசியல் கூத்துக்கள் அனைவருக்கும் தெரியும். பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியும் ஓர் அரசியல் அதிரடியை நிகழ்த்தினர்.

காங்கிரஸ் கட்சி முன்வைத்த உத்தேச வேட்பாளர்களின் பெயர்களை நிராகரித்த இவ்விருவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினர். இது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பிரணாப் முகர்ஜியின் பெயரை காங்கிரஸ் அவசரமாக அறிவித்தது.

அதன் பிறகு நடந்ததை நாடு அறியும். மம்தாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த முலாயம் சிங், ஒரேநாள் இரவில் அந்தர்பல்டி அடித்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் நகைச்சுவை.

பிரணாப் முகர்ஜியின் திறமைக்காகவும், பாஜக வென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் தான் அவரை ஆதரிப்பதாக முலாயம் சிங் கூறினார். அதாவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடக் கூடாது என்பதே அவரது தொலைநோக்குப் பார்வை.

இந்த ஞானோதயம், மம்தாவுடன் இணைந்து மிரட்டல் விடுத்தபோது எங்கே போயிருந்தது? இடையில் என்ன நடந்தது? பேரங்கள் ஆட்சி செய்யும் அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இப்போது, முலாயமை நம்பி காங்கிரசை எதிர்த்த மம்தா தனிமைப்பட்டு நிற்கிறார்.

நமது ஊடகங்கள் முலாயமின் புத்திசாலித்தனத்தையும் மம்தாவின் முட்டாள்தனத்தையும் விவரித்து செய்திகளை அள்ளி வழங்குகின்றன. அதாவது நம்பகத் தன்மையற்றவராக இருப்பதே புத்திசாலித்தனம் ஆகிவிட்டது.

முலாயம் சிங்கின் புத்திசாலித்தனம் இப்போது தான் வெளிப்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அவரது கட்சியின் குட்டிக்கரணங்கள் பிரசித்தமானவை. 2004ல் அயோத்தி நாயகன் கல்யாண் சிங்குடன் குலாவியபோதுதான் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. பிறகு அவரையும் நட்டாற்றில் விட்டார் முலாயம்.

1999ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தபோது சோனியா காந்தி பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் அதற்கு சம்மதித்த முலாயம், திடீரென போர்க்கொடி உயர்த்தி, சோனியாவின் ஆசையில் மண்ணைப் போட்டார். அதன் விளைவாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சி பகுஜன் சமாஜ். அக்கட்சிக்கும் காங்கிரஸ் அரசியல் எதிரி தான். ஆனால், நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டுக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை சிக்கலான தருணங்களில் காத்து வருகின்றன.

மக்களவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றவும், நம்பிக்கைத் தீர்மானங்களில் வெல்லவும் காங்கிரஸ் கட்சியை இக்கட்சிகள் என்ன காரணத்துக்காக ஆதரித்தன என்பது சாமானியர்கள் அறியாத புதிர். இவ்விரு கட்சிகளும் கடைசியில் சொல்லும் காரணமோ வேடிக்கையானது. மதவாத பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதாம். இதைக் கூறியே இக்கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன.

இக்கட்சிகள் மட்டுமல்ல, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பஸ்வானின் லோக் ஜனசக்தி, மு.கருணாநிதியின் திமுக, ராமதாஸின் பாமக போன்ற கட்சிகளும் அடிக்கடி கூறும் அரசியல் பூச்சாண்டி பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே.

நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டுள்ளன. முலாயமும், லாலுவும் கூட 1989 தேர்தலில் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்கள் தான். பஸ்வானும், கருணாநிதியும், ராம்தாசும், மம்தாவும், நவீன் பட்நாயக்கும், பரூக் அப்துல்லாவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் தான். மாயாவதியோ பாஜகவுடன் இணைந்து உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அரசையே நடத்தி இருக்கிறார்.

அவர்களே இன்று பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி முழக்கமிடுவது முரண். நாட்டிலுள்ள 20 சதவீதத்துக்கு மேற்பட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரவே இக்கட்சிகள் நாடகமாடுகின்றன. உடனடி லாபத்துக்காக பாஜகவுடன் கைகோர்க்கத் தயங்காத நமது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள், தேர்தல் லாபத்துக்காக பாஜகவை விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

‘பாஜக’ என்ற வார்த்தையைப் பூச்சாண்டியாகக் காட்டியே தேர்தல் களங்களில் வாக்குகளை பல கட்சிகள் அறுவடை செய்கின்றன. அரசியல் களத்தில் தாங்கள் நிகழ்த்தும் கூத்துக்களை நியாயப்படுத்தவும் இக்கட்சிகளுக்கு உதவுவது ‘பாஜக’ பூச்சாண்டி தான். ஊழலில் திளைக்கும் மத்திய அமைச்சர்கள் தப்பிப் பிழைத்திருப்பதற்கும் இதே பூச்சாண்டி தான் உதவி வருகிறது.

இன்றைய அரசியல் சூழலில் பிரதான எதிர்க்கட்சியின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் தீண்டாமையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வேறு கையில் நாட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு? ஒன்று பாஜக தன் மீதான மதவாதக் கறையைப் போக்கிக்கொள்ள வேண்டும். அல்லது, இந்தப் பூச்சாண்டி அச்சத்தைவிட ஆபத்தான அரசியல் கோமாளித்தனங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லாவிடில் ஊழல் அரக்கன் சத்தமின்றி நாட்டை கபளீகரம் செய்துவிடுவான். பூச்சாண்டியா? அரக்கனா? எது ஆபத்தானது? காலத்தின் கரங்களில் பதில் காத்திருக்கிறது.

மீள்பதிவு: குழலும் யாழும்

.

தன்னெஞ்சறிவது பொய்யற்க!

1 May

.

அதீத தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் நூலிழை அளவுதான் வித்யாசம் என்பார்கள். எந்த ஒரு செயலையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம். அதீதமான தன்னம்பிக்கை, அரிய சாகசங்களுக்கு அவசியம். ஆனால், அதை அநாகரிகமாக பொதுஇடத்தில் வெளிப்படுத்தும் போதுதான் அகந்தை ஆகிறது. தில்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசிய பேச்சு அவரது தகுதிக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.

.
காங்கிரஸ் மாநாட்டில் மூன்றாம் நாளில் பேசிய ப.சிதம்பரம், “அடுத்த பத்து ஆண்டுகளில், ஏன் அதற்குப் பிறகும்கூட பாரதிய ஜனதாவால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது” என்று பேசியிருக்கிறார். பாரதிய ஜனதாவின் எதிரி என்ற முறையில், அக்கட்சியைச் சாட காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உள்ளது. எனினும், ஜனநாயக ஆட்சிமுறையில் மக்களே அனைவருக்கும் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
.
நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோதே, பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. அதனை அவர் தனது பலவீனமாகக் கருதவில்லை; ஜனநாயகத்தின் பலமாகவே கருதினார்.
.
“இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ என்று ஒரு காலத்தில் முழங்கிய கட்சிதான் காங்கிரஸ். அதே இந்திராகாந்தி தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியுற்று, 1977ல் ஜனதாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது வரலாறு. நெருக்கடிநிலையை அடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பும் என்று யாரும் கனவில்கூட சிந்தித்திருக்கவில்லை.
.
காங்கிரஸ் சரித்திரத்திலேயே இல்லாத சாதனையாக, 1984ல் 404 காங்கிரஸ் எம்பி.க்களுடன் பிரதமரான ராஜீவ்காந்தி, அடுத்த தேர்தலில் தனது அமைச்சரவை சகாவாக இருந்தவரிடமே படுமோசமான தோல்வியைத் தழுவி, ஆட்சியைப் பறிகொடுத்தார். அதுவும், வெறும் 65 கோடி கமிஷன் கைமாறிய போபர்ஸ் ஊழலுக்காக. இதை காங்கிரஸ் இன்றும் துர்க்கனவாகவே என்றும் நினைக்கும்.
.
இதையெல்லாம் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருக்கு நினைவுபடுத்த வேண்டிய நிலை இருப்பதே, காங்கிரஸ் கட்சியின் தார்மிக வீழ்ச்சிக்கு காரணம் என்று கருத வேண்டியுள்ளது.
.
1998ல் 13 கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய், அடுத்த ஆறு ஆண்டுகள் காங்கிரஸ் வாடையில்லாத ஆட்சியை நாட்டிற்கு அளித்தார் என்பதையும் சரித்திரம் பதிவு செய்துள்ளது. பாஜக செய்த தவறுகளின் விளைவாகவே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி நாட்டில் உதயமானது. இதுவே நமது மக்களாட்சி முறையின் மாண்பு.
.
“இந்தியா ஒளிர்கிறது’ என்ற கோஷத்துடன் அதீத தன்னம்பிக்கையுடன் தேர்தல்களம் கண்ட பாஜக, 2004ல் ஆட்சியை இழந்தது. இன்று அதேபோன்ற நிலையில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது என்பதை அக்கட்சித் தலைவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.
.
பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளால் மத்திய அரசின் நம்பகத்தன்மை பலத்த அடி வாங்கியுள்ள சூழலில், தனது குறைகளை சரிப்படுத்த முயற்சிக்காமல், பிரதான எதிர்க்கட்சியை கேலி செய்வது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்கு கண்டிப்பாக உதவாது.
.
மத்திய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சி மீது பாய்வதால் மத்திய அரசின் தளகர்த்தர்கள் இப்போதைக்கு சந்தோஷம் அடையலாம். ஆனால், இதன்மூலம் தனது ஒரே எதிரி பாஜக என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொண்டு, அடுத்த தேர்தலில் அத்வானியின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அரசியலில் இரு துருவ சேர்க்கைக்கே, காங்கிரஸின் தற்போதைய நடவடிக்கைகள் ஊக்கமளிக்கின்றன.
.
“ஆட்சியை எப்படி நடத்துவது, மீண்டும் எப்படி ஆட்சிக்கு வருவது என்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் அறிந்துவைத்திருக்கிறது” என்றும் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கைதான் நமது நினைவில் வந்துபோகிறது. ஊழல் வழக்குகள் தொடர்பாக, உச்சநீதி மன்றம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சிக்கும்போதே தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் தெரிகிறது.
.
இத்தனைக்கும் பிறகும், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று மனப்பால் குடிக்க காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உண்டு. தனது தொண்டர்களை உசுப்பேற்ற சில அரசியல் வசனங்களை அக்கட்சித் தலைவர்கள் பேசுவதிலும் தவறில்லை. பேசட்டும்.
.
அதேசமயம், தனது பேச்சுக்கு கரவொலி எழுப்பும் தொண்டர்கள் போல நாட்டு மக்களும் முட்டாள்களல்ல என்பதையும் உள்துறை அமைச்சருக்கு யாரேனும் சொன்னால் நல்லது.
.
மீள்பதிவு: குழலும்யாழும் (21.12.2010)
.

தேர்தல் களத்தில் பறந்த கூத்தாடிகளின் கொடி

8 Apr

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான நடவடிக்கைகளால் கட்சிக்கொடிகளின் எண்ணிக்கை குறைந்தது. பல இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அதேசமயம்,  ‘கூத்தாடிகள்’ என்று ஒருகாலத்தில் விமர்சிக்கப்பட்ட திரையுலகினரின் பங்களிப்பு அமோகமாக இருந்தது. இந்தத் தேர்லில் தான் அரசியல் தலைவர்களின் பிரசாரத்திற்கு இணையாக திரையுலக நட்சத்திரங்களின் கொடி பறந்திருக்கிறது.

தமிழக அரசியலில் திரைத்தாரகைகளின் ஆதிக்கம் திராவிட அரசியல் கட்சிகளால்தான் முன்னெடுக்கப்பட்டது. பழம்பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு தமிழகத்தில் வித்திட்ட திராவிட இயக்கத்தின் செல்வாக்கிற்கு உதவியது திரையுலகம் தான்.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜி.ராமசந்திரன், எஸ்எஸ்.ராஜேந்திரன், சிவாஜி கணேசன், என்எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களின் திரையுலகப் பிரவேசமும் அவர்களது அரசியல் ஆவேசமும் தமிழக வரலாற்றில் பெரும் மாற்றம் ஏற்படுத்தின. ஒரே நேரத்தில் திரையுலகிலும் அரசியலிலும் புரட்சிகரமான மாற்றம் 1960களில் நிகழ்ந்தது. நடிகர், நடிகையர் குறித்த கூத்தாடிகள் என்ற விமர்சனத்தைத் துடைத்ததில் திராவிட இயக்கத்தின் பங்கு அளப்பரியது.

திரையுலக நாயகர்களை அரசியல் தலைவர்களாக வரிக்கும் போக்கு அன்று துவங்கியது. அதன் விளைவாக, அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜி.ராமசந்திரன், ஜானகி, ஜெயலலிதா என திரையுலகினர் ஐந்து பேரை முதல்வர்களாக்கி அழகு பார்த்தது தமிழகம். அதன் தொடர்ச்சியாக, அரசியல் அபிலாஷைகளுடன் கட்சி துவக்கிய சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோரால் ஜொலிக்க முடியவில்லை.

இருப்பினும் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் திரைத்துறையினர் களம் இறங்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தனித்த திரையுலகப் பட்டாளம் உண்டு. தவிர, தேர்தல் நேரத்தில் கட்சிகளால் ஆசைகாட்டி அழைக்கப்படும் நடிக நடிகையரும் பிரசாரத்தில் இடம் பெறுவதுண்டு. ஆனால், இம்முறை நடிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இதுவரை நடந்த தேர்தல்களில் கொடுக்கப்பட்டதில்லை.

அரசியல் கனவுகளுடன் தேமுதிக என்ற கட்சியைத் துவங்கிய விஜயகாந்த் அதிமுக அணியில் பிரதான இடம் பெற்றார். இதற்காக, கூட்டணித் தோழரான வைகோவைக் கழற்றிவிட்டார் ஜெயலலிதா. நடிகர் அருண் பாண்டியன் தேமுதிக சார்பில் வேட்பாளராக களம் இறங்கினார்.

சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் இயங்கும் சரத்குமாரும் அதிமுக அணியில் இடம் பெற்று மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார். அவரது துணைவியும் நடிகையுமான ராதிகா இம்முறை பிரசாரத்தில் ஈடுபடாதது குறிப்பிட வேண்டிய விஷயம். எம்பியும் நடிகருமான எஸ்எஸ்.சந்திரன் மறைவு அதிமுகவுக்கு இழப்பே.

அதிமுகவின் முன்னாள் பிரசாரகர் ராமராஜன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, இயக்குநர் ஆர்வி.உதயகுமார், நடிகர்கள் ராதாரவி, செந்தில், ஆனந்தராஜ், சிங்கமுத்து, நடிகைகள் சிகே.சரஸ்வதி, விந்தியா ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

இவர்களில் சிங்கமுத்து, அவரது வழக்கு எதிராளி வடிவேலுவின் திமுக ஆதரவு பிரசாரத்துக்கு பதிலடி கொடுப்பதற்காகவே களமிறக்கப்பட்டார். திரையுலகின் அதிருப்தியை வெளிப்படுத்த விஜயின் தந்தை இயக்குநர் எஸ்ஏ.சந்திரசேகர் களமிறங்கினார்.

திமுக.வுக்கு வாகை.சந்திரசேகர், குமரிமுத்து, தியாகு, எம்பி நெப்போலியன் போன்ற நிரந்தர நடிகர் பட்டாளம் எப்போதும் உண்டு. இம்முறை இயக்குநர் பாக்கியராஜ், பிரசாந்த், நடிகை குஷ்பு, லியோனி ஆகியோருடன் நகைச்சுவை நடிகர் வடிவேலின் அரசியல் பிரவேசம் திமுகவுக்கு உற்சாகம் அளித்தது.

குறிப்பாக, குஷ்புவின் கவர்ச்சியும், வடிவேலுவின் நையாண்டி பிரசாரமும் வாக்காளர்களைத் திரட்டுவதில் திமுகவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததை பல இடங்களில் காண முடிந்தது. திமுக தலைவர் கருணாநிதிக்கு கூடும் அளவிற்கு வடிவேலுக்கும் மக்கள் கூட்டம் திரண்டது. அதேசமயம், கோவையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்ற நிகழ்வில் இருக்கைகள் காலியாகக் கிடந்த காட்சியையும் காண முடிந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, எஸ்வி.சேகர், விக்ணேஷும், பாஜகவுக்கு தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி இரானியும் பிரசாரம் செய்தனர். கட்சி துவங்கி சுட்டுக்கொண்ட டி.ராஜேந்தர் இம்முறை களத்திலிருந்து ஒதுங்கியதால் பல நகைச்சுவைக் காட்சிகளை வாக்காளர்கள் இழக்க நேரிட்டது.

வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு தொகுதியில் போட்டியிட்டு தனது இருப்பை நிரூபித்தார்.  ‘வாய்ஸ்’ புகழ் ரஜினிகாந்த் எந்தப் பக்கமும் சேராமல் அமைதி காத்தது அவர்களது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்தார்.

இம்முறை இயக்குநர் சீமானின் பிரசாரம் திமுக கூட்டணிக்கு குடைச்சல் கொடுத்தது நிஜம். காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் கூடிய அவரது ஆவேசச் சொற்பொழிவு வாக்காளர்களிடம் பிரதிபலிக்கும் வாய்ப்புள்ளது.

நடந்து முடிந்த தேர்தலின் பிரசாரக் களத்தில் விஜயகாந்த், வடிவேலு, குஷ்பு, சீமான் ஆகியோரின் பங்களிப்பு அதிகம்; மக்கள் ஆதரவையும் இவர்கள் பெற்றனர். கொள்கைகளை விளக்கி அரசியல் நடத்த முடியாத அவல நிலைக்கு நமது அரசியல் கட்சிகள் சென்றுவிட்டதை திரையுலகினரின் அரசியல் பிரவேசம் காட்டுகிறது.

1960 களில் திராவிடக் கட்சிகளின் கரங்களுக்குள் தமிழக அரசியல் வர உதவிய அதே திரையுலகம், இப்போது, அவர்களது அரசியல் நெறிகளின் வீழ்ச்சிக்கும் சான்றாக இருப்பது காலத்தின் கோலம்.

நாவன்மையுடன் கொள்கைகளை விளக்கும் அரசியல் தலைவர்களைவிட கவர்ச்சியை மூலதனமாகக் கொண்ட திரைத்தாரகைகளே தமிழக அரசியலை நிர்ணயிப்பவர்களாக மாறி இருக்கிறார்கள். அரசியல் தரம் மேலும் வீழ்ச்சி அடைகிறது; சரித்திரம் திரும்புகிறது.

-இணைய பிரசுரக் கட்டுரை (30.04.2011)

.

பாஜகவுக்கு படிப்பினையான பேரவைத் தேர்தல்கள்

2 Apr

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், தேசிய அளவில் மக்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வை எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன. இந்நிலையில், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக இத்தேர்தலில் பெற்றுள்ள தோல்வி குறித்த ஆய்வு அத்தியாவசியமானதாகும்.

அரசியலில் வெற்றி, தோல்விகள் சகஜமானதே. எனினும் தோல்விகளிலிருந்து படிப்பினை பெறும் அரசியல் கட்சியே எதிர்காலத்தில் வெற்றிகளை அறுவடை செய்ய முடியும். அண்மைய தேர்தலில் பாஜக.வின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு, அக்கட்சிக்கு மட்டுமல்லாது நாட்டின் அரசியலுக்கும் முக்கியமானதாகும்.

பல ஆண்டுகளாக போராடித்தான் பாஜக தற்போதைய நிலையை அடைந்துள்ளது. 1984ல் இரு எம்பி.க்களுடன் இருந்த அக்கட்சி, தனது கடுமையான முயற்சியால் நாட்டின் ஆளும்கட்சியாக 1998ல் உயர்ந்தது. ஆனால், தனது வெற்றியைத் தக்கவைக்கத் தெரியாததால் அக்கட்சி ஆட்சியை இழந்தது.

இப்போதும் நாட்டின் ஆறு மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது; மேலும் இரு மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பங்கு வகிக்கிறது; மூன்று மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால், பாஜக.வின் வலிமை இம்மாநிலங்களைத் தாண்டி வளரவில்லை; இதன் காரணமாகவே மத்தியில் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது.

நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் வட மாநிலங்களில் காலூன்றிய அளவுக்கு பாஜக.வால் தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் தடம் பதிக்க முடியாததே அக்கட்சியின் பலவீனமாக உள்ளது. நாடு முழுவதும் பரவலாக உள்ள காங்கிரஸ் கட்சியுடன் பாஜகவை இந்த அம்சத்தில் ஒப்பிடவே முடியாது.

அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் பாஜகவுக்கு உள்ள நடைமுறைச் சிக்கலே காங்கிரஸ் கட்சிக்கு ஆதாயமாக மாறி வருகிறது. அண்மைய பேரவைத் தேர்தல்களும் இதையே சுட்டிக் காட்டுகின்றன.

இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில்தான் ஐந்து மாநில பேரவைத் தேர்தலில் பாஜக களமிறங்கியது. தேர்தல் நடந்த தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் இதற்கு முன்பும் பாஜக மாபெரும் வெற்றிகளைப் பெற்றதில்லை. அசாமில் மட்டுமே இம்முறை சிறிது நம்பிக்கை அக்கட்சிக்கு இருந்தது. பிற மாநிலங்களைப் பொருத்த மட்டிலும், பாஜக தனது இருப்பை வெளிப்படுத்தவே தேர்தலைக் கருவியாகப் பயன்படுத்தியது.

தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆளும்கட்சிகளுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்பட்டது. அதை தனக்கு சாதகமாகத் திருப்புவதற்கான ஆற்றல் இல்லாமல் பார்வையாளராக இருக்க வேண்டிய நிலையில் பாஜக இருந்தது. அதன் இந்துத்துவ ஆதரவுப் போக்கு காரணமாக தோழமை வாய்ப்புள்ள கட்சிகளும் மிரண்டு பின்வாங்கின.

அசாமில் காங்கிரஸின் எதிரிகளுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தால் அங்கு தருண் கோகோய் மீண்டும் முதல்வராகி இருக்க முடியாது. பாஜகவின் தனிப்பட்ட கொள்கைகளும், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் தலைமை இல்லாததும் அங்கு கூட்டணியின் சாத்தியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தன. அதன் விளைவாக காங்கிரஸ் தனது வெற்றியை இப்போது கொண்டாடுகிறது.

அசாமில் 23 தொகுதிகளில் பாஜக இரண்டாமிடம் பிடித்து, குறைந்த வித்யாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. அசாம் கண பரிஷத், அசாம் மாணவர் கூட்டமைப்பு கட்சிகளும் இதேநிலையை பல தொகுதிகளில் அடைந்துள்ளன. இக்கட்சிகள் இணைந்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும். இம்மாநிலத்தில் கூட்டணி அமையாததற்கு பாஜகவின் பிடிவாதமும் ஒரு காரணம்.

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதேச்சதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ந்த மக்கள் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்தனர். தமிழ்நாட்டில் திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழலால் வெகுண்ட மக்கள் அதற்கு மாற்றாக ஜெயலலிதாவின் அதிமுகவைத் தேர்வு செய்தனர். இந்த இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்புலத்தில் மமதா, ஜெயலலிதா ஆகியோரின் தொடர் போராட்டங்கள் உள்ளதை மறுக்க முடியாது.

பேரவைத் தேர்தலுக்கு இரு மாதங்கள் முன்னதாக புதிய அரசியல் கட்சியைத் துவங்கிய ரங்கசாமிகூட பாண்டிச்சேரியில் மகுடம் சூடி இருக்கிறார். அவரது அயராத உழைப்புக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் அது. இத்தகைய நம்பகத்தன்மையும் தலைமையும் வாய்ந்த தலைவர்கள் இம்மாநிலங்களில் அமையாதது பாஜகவின் தோல்விக்கு அடிப்படைக் காரணம் எனில் மிகையில்லை.

கேரளாவில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும்கட்சியை மாற்றுவது மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அங்கு இடதுசாரிகள்- காங்கிரஸ் என்று இரு துருவமாக உள்ள அரசியல் சூழலில் பாஜகவின் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. தவிர சிறுபான்மையினரின் ஆதிக்கம் மிகுந்த அம்மாநிலத்தில் பாஜக இன்னும் கிணற்றுத் தவளையாகவே உள்ளது; மூன்று தொகுதிகளில் மட்டும் குறைந்த வித்யாசத்தில் வெற்றியை இழந்த பாஜக, இம்மாநிலத்தில் பயணிக்க வேண்டிய தூரம் பல மடங்காக இருக்கிறது.

எந்த ஒரு கட்சியும் மக்களிடம் நம்பகத்தன்மையைப் பெற வேண்டுமானால், அதற்கான தொடர் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைக் கையில் எடுத்துக்கொண்டு போராடாமல் எந்தக் கட்சியும் முன்னேற முடியாது. இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களின் தலைமைகளே சான்று. குஜராத்தும் கர்நாடகாவும், மத்தியபிரதேசமும் பாஜக வசமாக, அம்மாநிலங்களில் அக்கட்சி நடத்திய மக்கள்நலப் போராட்டங்களே காரணம்.

அந்த வெற்றிகளை உதாரணமாகக் காட்டி, பிற மாநிலங்களில் வெற்றியை ஈட்ட முடியாது. தேசிய அளவிலான கொள்கைகளை முழங்குவதால் பிராந்திய வேறுபாடுகள் மிகுந்த நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள பிரத்யேகத் தேவைகளை அனுசரித்து அதற்கேற்ற அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, பாஜக.வால் தனது தளத்தை விரிவுபடுத்த இயலும். அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு சரியான மாற்றாக பாஜக.வால் உயர முடியும்.

இல்லாவிட்டால்,  ‘மதவாதக் கட்சி’ என்ற ஒற்றைக் குற்றச்சாட்டாலேயே பாஜக.வை புறந்தள்ளும் சாதுரியத்துடன், தொடர் தவறுகளை செய்தபடியே காங்கிரஸ் ஆட்சியில் தொடரும். இந்நிலை நாட்டிற்கு நல்லதல்ல.

ஐந்து மாநிலங்களில் பெற்றுள்ள வாக்குகள், தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியதும், தன்னைத் திருத்திக் கொள்வதும் பாஜக.வின் கடமை. தேசிய அளவில் இடதுசாரிகளின் செல்வாக்கு குறைந்துவரும் நிலையில், பாஜக தன்னைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் தொடர் தவறுகளால் திணறும் காங்கிரஸை மிரட்டவோ, வழிப்படுத்தவோ பாஜக.வால் முடியும்.

(இணைய பிரசுர கட்டுரை – 25.05.2011)

.