Tag Archives: தொழில்துறை

உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்!

18 Oct

சமுதாயம் வாழ்வதும் வளர்வதும் அதன் உழைப்பின் அடிப்படையில் மட்டுமே. குறிப்பாக உலகுக்கு உணவளிக்கும் விவசாயமும், மானம் காக்கும் நெசவுத் தொழிலும், இருப்பிடம் அமைக்கும் கட்டுமானத் தொழிலும் எந்த ஒரு நாட்டுக்கும் அடிப்படையானவை. இந்த மூன்று அடிப்படைத் தொழில்களுக்கு உறுதுணையாக மண்பாண்டம், மரவேலை, உலோகத் தொழில், பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு, வணிகம், கல்வி என தொழில்கள் பல்கிப் பெருகின.

நாம் இன்று நவீன உலகமாக வளர்ந்திருக்கிறோம். நமது தொழில் துறைகளும் பலவிதமாகப் பெருகி உள்ளன. அறிவியலின் வளர்ச்சியாலும், தொழில்நுட்ப மேம்பாட்டாலும் உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. அதேசமயம், தொழில்வளத்தால் இதுவரை உலகம் கண்டிராத புதுமைகளையும் அற்புத வசதிகளையும் கொண்டவர்களாக நாம் உள்ளோம்.

இந்த நிலையை அடைய மானுட சமுதாயம் பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது. உழைப்பே உயர்வு தரும் என்ற தாரக மந்திரத்துடன் மானுட சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடத்திவந்த தொழில்களின் வளர்ச்சியே நாகரிக மேம்பாட்டின் அடிப்படை. Continue reading

Advertisements

கிராமிய வங்கி ஊழியர்களின் ஓய்வூதியப் போராட்டம்

28 Apr

-பி.எஸ்.எம்.ராவ்


கிராமிய வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாக நடத்திவரும் உரிமைப் போராட்டம்,  நமது நாட்டின் அதிகாரவர்க்கம் எவ்வாறு கீழ்நிலையிலுள்ளவர்களைப் புறக்கணிக்கிறது என்பதையும்,  ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள்நல அரசு  என்ற கோட்பாட்டை முழுமையாக நிராகரிக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

இந்த வங்கிகளில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களின் கூக்குரல்கள் விழலுக்கு இறைத்த நீராயின. இந்த ஓய்வூதியர்கள் 25,000 பேரில் சுமார் 3,500 பேர் ஏற்கெனவே காலமாகிவிட்டனர். இவர்கள் 1990-களில் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர். அது 2003-இல் சட்டப் போராட்டமாக வடிவெடுத்தது. ஆயினும் இதுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இனிமேல் கிடைத்தாலும், ஓய்வூதியம் பெறாமலே இறந்துபோன ஆத்மாக்கள் நற்கதி அடையுமா என்று தெரியவில்லை.   Continue reading

சென்னை புத்தகக் கண்காட்சி- சில அனுபவங்கள்…

18 Jun

chennai-book-fair

சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுவந்த 39-வது புத்தகக் கண்காட்சி சிறப்பாக நிறைவு பெற்றுவிட்டது. ஜூன் 1-இல் தொடங்கி 13-இல் நிறைவடைந்த இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு 10 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர்; ரூ. 15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தால் (பபாசி) நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, நிகழாண்டில் பல்வேறு பிரச்னைகளையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது.

டிசம்பரில் பெய்த பலத்த மழையால் சென்னையில் பொங்கல் பண்டிகை விடுமுறையில் தொடங்க இயலாதுபோன புத்தகக் கண்காட்சி, வழக்கமான இடத்திலும் நடத்த முடியாமல், தீவுத் திடலில் தற்போது நடத்தப்பட்டுள்ளது. இதற்காக பபாசி நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களைப் பாராட்ட வேண்டிய தருணம் இது. Continue reading

எல்லாம் பழங்கதை

14 Oct

மயான பூமியின் நடுகற்களா இவை?
இல்லை –
மறந்துபோன நெசவுத் தொழிலின்
மிச்ச சொச்ச அடையாளங்கள்.

ஆங்கிலேயனை மிரட்டிய
அகிம்சை ஆயுதம்
இந்த பாவுக் கற்களில் தான்
பட்டை தீட்டப்பட்டது.

நமது தாத்தாக்களும் பாட்டிகளும்
மழலைப் பருவத்தில்
இந்தப் பாவுக் கற்களில் தாவிப் பிடித்து
விளையாடி இருக்கிறார்கள்.

ஆயுத பூஜை நேரங்களில்
இக்கற்களுக்கு கற்பூர ஆரத்தி
காட்டியதும் உண்டு.

சூரியன் சுடத் தொடங்கும் முன்
கஞ்சியுடனும் நூலுடனும்
நெசவாளர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும்
இங்கு தவமாய்க் கிடக்கும்.

எத்தனை கோடி துணிகளின்
உற்பத்திக்கு உதவியவை
இந்த பாவுக் கற்கள்?

பல்லாயிரம் பேருக்கு
கஞ்சி வார்த்தவை –
கிராமப் பொருளாதாரத்தின்
கிளையாய்த் திகழ்ந்தவை –
மானம் காக்க ஆடை தந்தவை-
எல்லாம் பழங்கதை.

இன்று-
தொழில்புரட்சியின் இயந்திர மயமாதலில்
நசிந்துபோன அரிய தொழிலின்
சிதிலமான நினைவுச் சின்னங்கள்.

நாய்கள் இயற்கை உபாதைக்கு
கால்களைத் தூக்குவது
இந்தக் கற்களின் மீது தான்.
எருமைகளும் கழுதைகளும்
நமைச்சலுக்கு நாடும் இக்கற்களின்
பூர்வீகம் அவற்றுக்குத்
தெரிய நியாயமில்லை தான்.

முக்காடிட்டு தலை குனிந்திருக்கும்
பாவுக் கற்களை,
பாரதம் ‘இந்தியா’ ஆனதன்
பரிதாப விளைவு எனலாமா?

-சுதேசி செய்தி (ஜூன்- ஜூலை 2002 )
-விஜயபாரதம் (23.08.2002)
படம் பிடித்த இடம்:  பவானி, ஈரோடு மாவட்டம்.

.