Tag Archives: பஞ்சபூத வணக்கம்

நுழைவாயில்

22 Feb

எழுதுவதும் பஞ்சபூதம்;
எழுதப்படுவதும் பஞ்சபூதம்…

என் நெடுநாளைய கனவு இன்று நனவாகியது.
ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்துவத்தை
வசன கவிதை நடையில் விளக்க முயற்சித்திருக்கிறேன்.
பிழைகள் இருக்கலாம்; மன்னிக்கலாம்.
.
பஞ்சபூதங்கள் தான் உலகம்.
அவை இணைந்து, பிரிந்து
சரித்திரம் பலவற்றை உருவாக்கின;
உருவாக்குகின்றன; உருவாக்கும்.
அதாவது பஞ்சபூதமே உலகம்.
அவற்றையே வணங்குங்கள்.
அவையே நம் கதி, பதி, விதி.
.
இதனை என் எழுதுகோல் நுனியில்
(விசைப்பலகையில்) நர்த்தனமாடிய
வாணி தேவிக்கே சமர்ப்பிக்கிறேன்.
எழுதியது எள்ளளவு!
எழுதாதது எவ்வளவோ!.

-வ.மு.முரளி.
.
Advertisements

ஆகாயம்

22 Feb
அகண்ட வானம் சலனமில்லாமல்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது.
அதில் துளியிலும் துளியாய்
நான்.
 .
எத்தனையோ சூரியன்கள்
எள்போல இறைத்திருக்க
ஒரே ஒருவன் மட்டும்
ஒவ்வொரு நாளும் வருகிறான்.
ஒருவன் மட்டும் ஏன்?
மற்றவர்களும் வந்துவிட்டால்
நான்
மடிந்துவிடுவேன் என்பதாலா?
 .
எட்டுப் பேர் வட்டமிட
என்னை நோக்கி
வரும்போது தான் தெரிகிறது –
நான் உட்பட
அதனைச் சுற்றிக் கொண்டிருப்பது.
.
என்ன ஒரு வண்ணக்கோலம்!
எப்படி?
வியக்கும்போது
விஞ்ஞானி உருவாக்கப் படுகிறான்.
 .
எல்லாம் நிறப்பிரிகை
எல்லாம் தூய நிறம்!
என்று ஆகாயம் ஆர்ப்பரிக்கையில்
என் மனக் குமுறல்கள்
மடிந்துவிடுகின்றன.
அகந்தைமனம்
அடங்கிப்போகிறது.
 .
என் கனவுகளைச் சிதைக்காத
அந்த கண் சிமிட்டும் தாரகைகள்
தனக்குள் அடக்கிக்கொண்ட
அண்டத்தை எண்ணி
நகைக்கும்போது
என் சிற்றோடைக் கனவு
சிற்றருவி ஆகிறது.
 .
ஒளியை உடையது!
ஒலிப்பது!
ஒன்றச் செய்வது; ஒன்றியது
எல்லாம் ஆகாயம் தான்.
 .
எனக்கு சூட்சுமமாய்,
‘என்’ என்ற
மனத்துக்குச் சூட்சுமமாய்,
பிரபஞ்சத்தின் ஆணிவேர் –
ஆகாயம்.
நான்
சல்லிவேரில் ஒட்டிய
ஓரணுத் துகள்.
 .
சிதம்பர ரகசியத்தை
அறிந்தவர்கள்
சிவனை அறிந்து விடுவார்கள்.
அறிந்தவர்கள் அவனை
அடைந்து விடுகிறார்கள்.
நான் புரிந்தவன் போல
புலம்பிக் கொண்டிருக்கிறேன்.
 .
மனம் இற்று,
மானமும் அற்று,
உடல் சிதைய,
உள்ளம் குலைய,
ஆவி பிரிகையில் தான்
ஆகாயம் புரிகிறது.
அதனால் தான் நான்
இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
 .
எட்டாத உயரத்தில்
கிட்டாத பொருளிருக்க
ஏணிப்படியை எண்ணி
லாபமில்லை தான்.
ஆனால் அதுவும் ஒரு
சந்தோஷம் தான்.
 .
எனக்கு
சந்தோஷம் தந்தது – ஆகாயம்.
தந்து கொண்டிருப்பது – பிரபஞ்சம்.
தரப்போவது-
எதுவென்றாலும் அது
அது மூலக்கூறு தான்.
.

நிலம்

22 Feb
நஞ்சையோ புஞ்சையோ –
பத்து காணியோ நூறு காணியோ
எத்தனை வைத்திருந்தாலும்
ஆறடி நிலமும் அவனுக்கு கிடையாது.
அஸ்தமனத்துக்குப் பிறகு
ஒருபிடி பஸ்மம் தான்.
.
தன்னைத் தானே சுற்றிக்கொண்டு
தன்னையும் சிலர் சுற்றவைத்து
ஏதோ ஒன்றைச் சுற்றிச் சுற்றப்பட்டு
ஓயாமல் உருளும் பூமியைப்
போன்றதுதான்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை.
.
இதைப் புரிந்தவன் பூமியாள்கிறான்
புரியாதவன் புலம்பிக்கொண்டிருப்பான்.
கனவுகளைக் கண்டே
களைத்துப்போயிருப்பவன்
நனவுகளைக் காணும்போது
நாணிப்போகிறான்-
இயற்கை தான்.
.
ஏர்முனை படும்போது சிலிர்த்து,
மழைத்துளி வீழின் கிரஹித்து,
தூவப்படும் விதைகளுடன் காதலித்து,
செடி முளைத்து… கதிர் விளைத்து…
ஓ! இத்தொடர் சங்கிலியில்
மீண்டும் விதைகள் தூவப்படும்!
.
விட்டுப்போன வித்துக்கள்
உயிர்களுக்கு உணவாகி,
உணவாக உறவாடி,
மஃகி – மடிந்துபோய்…
மண்ணுக்குள் மீண்டும் ஒரு
தொடர் சங்கிலி.
.
தொடர் சங்கிலியாய்
தோற்றம் தருவது நிலம் தான்.
இதற்கு ஆரம்பமும் இல்லை;
முடிவும் இல்லை.
நாமெல்லாம் ஏதாவது ஒரு கண்ணியிலே
ஏதாவது ஒரு பகுதி தான்.
.
இதை அறிபவன்
நிலத்தை ஆள்பவனுடன்
நிலைத்து விடுகிறான்.
அறியாதவன் நிலத்தால் ஆளப்படுகிறான்.
.
நுண்ணுயிர்ச்சேறு,
எரிமலைக் குழம்பு
அகண்டநீர்க் கொள்கலன்,
அருணனின் சிதறல்,
கடந்தும் உள்ளும் இருக்கும்
காலத்தின் தோற்றம்.
.
எரிமலைக் குழம்பில்
நுண்ணுயிர்ச் சேறா?
அருணனின் சிதறலா
அகண்டநீர்க் கொள்கலன்?
திகைப்பினால் –
வாயுவின் வட்டிலை எண்ணி
நாசி நிலை தடுமாறி
பெருமூச்சு விளைக்கிறது!
.
எத்துணையோ சிதறல்களில் ஒன்றான
எத்துணையோ துகள்களில்
ஒன்று தான் நான்.
அத்துகள்களிலும்
எத்துணையோ அணுக்கள்!
.
எல்லாமே காலத்தின் தோற்றம் விளைத்த
கடவுளின் தேற்றங்கள் தான்.
நிலமே மூலம்.
இல்லையேல் எல்லாம் நிர்மூலம்.
அதற்கு அடிபணி –
அது தான் தெய்வம்.
.
அள்ள அள்ளக் குறையாத வள்ளலாய்,
எடுக்க எடுக்க மாளாத சுரங்கமாய்,
அமுதசுரபியாய் நிலம்.
ஆழம் அதிகமாக ஆக
அதிசயங்கள் உரைக்கப்படும்.
ஆனால் –
எல்லாமே மண்ணுக்குள் போவது தான்
என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
.
நாடுங்கள்; ஊடுங்கள்; தேடுங்கள்…
தட்டுப்படும்! தட்டுப்படும்! தட்டுப்படும்!
மண்ணுக்குள் வைரம்,
கடலுக்குள் பவளம்,
கல்லுக்குள் தேரை,
எல்லாமே கிடைக்கும்-
எடுத்துக் கொள்ளுங்கள்!
.
எட்டடுக்கு வீடெடுத்து
முற்றத்திலே நின்று,
தங்கத் தட்டெடுத்து-
சந்தனத்தை வடிகட்டி,
சரம் சரமாய்த் தெளியுங்கள்!
வெள்ளிப்பொடி அரைத்து
வீதியிலே தூவுங்கள்!
கூடவே –
நன்றியுடன் நினையுங்கள்!
நிலத்தையே வணங்குங்கள்…
நிலத்தையே பாடுங்கள்!
.
எல்லோரும் ஒருநாளில்
மண்ணாகப் போகின்றோம் –
என்பதை மறவாதீர்!
எல்லோரும் சொல்லுங்கள்:
.
”ஜகமே ஜனனம்;
ஜகமே மரணம்”
ஓம் சாந்தி!
.

நீர்

22 Feb
தாகம் தவிக்கிறது
தேகம் துடிக்கிறது
வேகம் குறைகிறது
உடனே தண்ணீர் தேவைப்படுகிறது.
.
தண்ணீர், வெந்நீர்
என்நீராயினும்
இத்தாகத்தை தணிக்க
அந்நீர் தேவை.
.
இந்த சதைப்பிண்ட உடலுக்கு
இயந்திரமான இயக்கத்துக்கு
உயவுப் பொருளாய்
உறுதுணையாய் நீர்.
.
நீர் ஒரு கூட்டுப்பொருள்.
இரு அணுக்கள் இணைந்த
மூலக்கூறு நீர்.
உண்மை தானே!
மூலத்தின் சிறுகூறு தானே
நீர்?
.
நீருக்கு எல்லோரும் சமம்
ஜாதி, மதம், மொழி, இனம், வர்க்கம்
என்ற பேதம் கிடையாது.
அதனால் மற்றவருக்கு
சேதம் ஏற்படலாமே தவிர
அதற்கென்றும்
சேதம் கிடையாது- ஆனால்
‘என்னை நம்பி தான்
உலகம் உருள வேண்டும்’ என்ற
வேதம் மட்டும் உண்டு.
.
நீர் உறைந்தால் திடமாகிறது.
கொதிக்க வைத்தால் வாயுவாகிறது.
அக்னியுடன் இணைந்து
திரிமுகம் காட்டும் நீருக்கும்
இரட்டைகள் உண்டு.
அதனால் தான் உலகம்
சமநிலையில் உருள்கிறது.
.
அழியும் பொருட்கள்
சில காலமாவது நிலைத்திருக்க
அழியாப் பொருட்களை
நாட வேண்டியிருக்கிறது.
நீ நீரை நாடுகிறாய்.
அவன் நீரைத் தேடுகிறான்
நான் நீரைப் பாடுகிறேன்.
.
நீர் உன்னுள்ளேயே உறைந்திருக்கிறது.
குறையும்போது
வெளியே நீரைத் தேடு.
இறையை நாட நினைத்தால்
உன்னுள்ளேயே தேடு.
.
கடலின் அலைகள் கரையில்
ஆக்ரோஷமாக ஆரோகணிப்பதைப்
பார்க்கும்போது புரிகிறது-
உலகின் தாளகதி
ஜலம் என்பது.
.
நீர் அழியாப்பொருள்
ஆதாரப்பொருள்
இறைவனின் அருள்.
அதனை வணங்கு.
.
அறுசுவைக்கும் ஆதார வித்து அது.
அழியும் பொருட்களின் அடிப்படை விந்து அது.
உலகத்தின் பொருட்களை உருவம் கொண்டு
உலகை ஆட்டும் சித்து அது.
இதை அறிந்துகொண்ட விந்தையை எண்ணி
சிந்தை மகிழ்கிறது –
இன்னும் நாள் இருக்கிறது.
.
நீர்
அதிசயப்பொருள்
ஆதிப்பொருள்
இறைவனின் அருள்.
அதனை வணங்கு.
.
”ஜலமே
உன்னை வணங்குகிறேன்-
நீ இறைவன்.
ஜலமே உன்னை வாழ்த்துகிறேன் –
நீ என் ஆதார சுருதி.
ஜலமே உன்னைத் தேடுகிறேன் –
நீயே நான்”
 .
என்று தினமும் பிரார்த்தி.
புரிந்து போற்று.
தேற்றப்படுவாய்-
அது தான் உன் பிராப்தி.
.