Tag Archives: பண்டிகை

நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?

29 Oct
vishnu-vishwaroopa.
நாடு முழுவதும் நரகாசுரர்கள்!
எத்தனை கொடியோர், எத்தனை வடிவில்?
நரகாசுரரை ஒழித்திடும் வீர
நாயகர் யாரோ? சிந்தித்திடுவோம்!

Continue reading

உடன்பிறப்பென உணர்வோம் நாம்!

29 Aug

Rakhi
நமது நாட்டின் பண்டிகைகள் அலாதியானவை. பல்வேறு பிராந்தியங்களின் வண்ணங்களைப் பிரதிபலிப்பவையாக அவை விளங்குகின்றன. ஆயினும், தேசத்தை இணைக்கும் பசையாக சில பண்டிகைகள் மட்டுமே அமைகின்றன. அவற்றுள் ஒன்றுதான் ரக்ஷாபந்தன் திருநாள்.

ஆவணி மாதம் வரும் பெüர்ணமியில் பெண்கள் தங்கள் சகோதரர்களின் வலது மணிக்கட்டில் ‘ராக்கி’ எனப்படும் பட்டு மணிக்கயிற்றை அணிவித்து, அவர்களிடம் பரிசு பெறும் நாள் ரக்ஷாபந்தன் நன்னாள். தமிழகத்திலும் இதேபோன்ற வழக்கம், பௌர்ணமியை ஒட்டி வரும் ஆவணி அவிட்ட நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்வாறு தான் நமது பாரத தேசியம் மலர்ந்தது. நம் மண்ணில் கண்ணுக்குத் தெரியாமல் ஆழ ஓடிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் இணைந்தே இந்தத் தேசத்தைக் கட்டியமைத்தன. அதற்கு வெளிப்புறத்தில் நாம் கொடுத்த கட்டுக்கோப்பான வடிவம்தான் இந்திய அரசியல் சாசனம். கண்ணுக்குப் புலனாகாத மின்சாரம்போல இந்த நாட்டை ஒருங்கிணைத்திருப்பதும், நம்மை இந்தியர்களாக உணரச் செய்வதும் இந்தப் பண்பாட்டு விழுமியங்களே.

இதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் அதிவேக இயந்திர உலகில் இதை நினைவுபடுத்த மகாத்மா காந்தி, லோகமான்ய திலகர் போன்ற மகான்கள் இப்போதில்லை. அதன் விளைவையே ஆங்காங்கே தென்படும் உக்கிரமான மோதல்களாகக் காண்கிறோம்.

மொழிவாரி மாநிலங்கள் உருவாக வித்திட்டது பொட்டி ஸ்ரீராமுலு என்ற தெலுங்கரின் உயிர்த் தியாகம்தான். 27 நாள்கள் தொடர்ந்த அவரது உண்ணாவிரதம் அவரது உயிரைப் பறித்தது; அதேசமயம், புதிய ஆந்திரமும் மொழிவாரி மாநிலங்களும் உருவாக வழிவகுத்தது. ஆனால், இன்று நாம் காண்பதென்ன?

எந்த மொழிக்காக ஸ்ரீராமுலு தன்னுயிர் ஈந்தாரோ அதே தெலுங்கு பேசும் மக்கள், தங்கள் சகோதரத்துவத்தை மறந்து, ஆந்திரப் பிரதேசம் – தெலங்கானா என்ற இரு மாநிலங்களாகப் பிரிந்து சச்சரவிட்டுக் கொள்கிறார்கள். இதற்கு வழிவகுத்தது அரசியல் தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த நாடு, முழுவதும் புனிதத் தீர்த்தங்களால் நிறைந்தது. தினசரி நீராடலின்போது, கங்கை முதல் காவிரி வரை தியானிப்பது மரபாகவே இருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள நதிகள் அனைத்தும் புனிதம் என்ற சிந்தனையுடன், அவை அனைவருக்கும் பொது என்ற எண்ணமும் செழித்திருந்த காலமுண்டு. அதை மன்னர்கள் மறந்தபோது, இந்த மண்ணில் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரலாற்றையும் நாம் மறந்துவிட்டோம்.

அதனால்தான், தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நீருக்கு கர்நாடகத்திடமும், முல்லைப் பெரியாறு நீருக்கு கேரளத்திடமும் தமிழகம் மல்லுக் கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அண்டை மாநிலத்தவரும் நம்மைப் போன்ற மக்கள் தான் என்ற சகோதரத்துவ மனப்பான்மை மங்கியதன் விளைவல்லவா இது?

இந்த உலகில் வாழும் எவருமே தன்னிச்சையாக இயங்க முடியாது. பலதரப்பட்டவர்களின் இயக்கத்தால் தான் இந்த உலகம் வாழ்கிறது. எனவேதான், சமுதாயம் சீராக இயங்க நமது முன்னோர் சில ஏற்பாடுகளைச் செய்துவைத்தனர். தொழில்ரீதியான இந்தப் வகைப்பாடுகள் காலப்போக்கில் பிறப்பின் அடிப்படையில் ஜாதியாக மாற்றம் பெற்றபோதும்கூட, ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் வன்மங்களில் ஈடுபட்டதில்லை. ஆனால் இன்றைய நிலை என்ன?

நாடு விடுதலை பெற்று 68 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், மேலவளவு, நாயக்கன்கொட்டாய், உத்தப்புரம், சேஷசமுத்திரம் என தீண்டாமையின் கொடுமைகளுக்குச் சாட்சியாகும் பெயர்கள் நீள்கின்றனவே? இதுவா நமது தலைவர்கள் கனவு கண்ட சமுதாய ஒற்றுமை? அம்பேத்கர் சிலைகளுக்கும் முத்துராலிங்கத் தேவர் சிலைகளுக்கும் கம்பித் தடுப்புகளால் கவசப் பாதுகாப்பு செய்ய வேண்டிய நிலையில் தான் நமது ஒற்றுமை இருக்கிறது என்பது, மகத்தான கனவுகளைக் கண்ட நமது முன்னோருக்கு இழைக்கப்படும் அவமானமல்லவா?

‘வசுதைவ குடும்பகம்’ என்பது நமது உபநிடத மகாவாக்கியம். இதையே கணியன் பூங்குன்றனார் தமிழில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முழங்கினார். உலகம் ஒரு குடும்பம்; மக்கள் அனைவரும் உறவினர்கள் என்ற இந்த உயரிய பண்பாட்டை மறந்ததால் அல்லவா, மதத்தின் பெயரால் நாட்டில் ஆங்காங்கே ரத்தம் சிந்தப்படுகிறது? இங்கு சிந்தப்படும் ஒவ்வொரு துளி செந்நீருக்கும் கண்ணீருக்கும் விலையாக, நாட்டின் ஒற்றுமை பலிகடா ஆக்கப்படுவது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா?

கட்டிய மனைவியைத் தவிர பிற பெண்களெல்லாம் அன்னையரே; ஸ்ரீராமனே ஆண்களின் முன்மாதிரி வடிவம் என்று வாழ்ந்த நமது கலாசாரம் எங்கு போனது? ஆண் – பெண் என்ற இரு பாலின சமநிலையில் தான் உலகம் இயங்குகிறது என்பதை மறந்து, பெண்களை காமத்துடன் நோக்கும் கயமை எப்போது நம்மிடையே பரவியது?

இந்தக் கேள்விகள், பதில் கூற முடியாத கேள்விகளல்ல. இவற்றுக்கான விடைகளை நாம் அறிந்தே இருக்கிறோம். தெரிந்தோ, தெரியாமலோ, நம் ஆழத்தில் இயங்கும் பண்பாட்டு ஊற்று இப்போதும் நம்மை சில நேரங்களிலேனும் சிந்திக்கச் செய்கிறது.

நம்மைப் பிளவுபடுத்தும் கோடரிகளைவிட நம்மை இணைக்கும் வேர்கள், ஆழமானவை; வலிமையானவை. அவை நம் கண்களுக்குத் தெரியாததால், நாம் அடிக்கடி திக்கின்றித் திகைக்கிறோம். இத்தகைய சூழல்களுக்கு கலங்கரை விளக்கமாக நமது முன்னோர் உருவாக்கிச் சென்ற பண்டிகைதான் ரக்ஷாபந்தன் விழா.

‘இந்தியா எனது தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறப்புகள்’  என்று உதட்டளவில் உச்சரிப்பது மட்டுமல்லாது உளப்பூர்வமாக உணர்த்துவதே ரக்ஷாபந்தனின் சிறப்பு. கண்ணனின் மணிக்கரத்தில் பாஞ்சாலி அணிவித்த ரக்ஷையின் தொடர்ச்சி இது. ரஜபுதன வீரர்களும், மாவீரன் சிவாஜியும், மாமன்னன் ராஜராஜ சோழனும் கங்கணமாக அணிந்த மங்கலக் கயிறு இது.

இந்த நாளில், நமது சகோதர பந்தத்தை உறுதிப்படுத்த ராக்கியைப் பயன்படுத்துவோம். சகோதர – சகோதரி பாவனையை வளர்க்க உதவும் இந்த ரக்ஷை, நமது சகோதரத்துவத்தையும் மேம்படுத்தட்டும். நாம் ஒருவருக்கொருவர் அணிவிக்கும் ராக்கி நமது பந்தத்தை பலப்படுத்தும்; கூடவே நாட்டின் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தும்.

(இன்று ரக்ஷாபந்தன் தினம்)

-தினமணி (29.08.2015)

.

மன்மத ஈகை வாழி!

14 Apr

மன்மதனும் ரதியும்

மன்மத ஆண்டே மணம்மிக வருக!

மனமதில் மகிழ்வைத் தருக!

வன்மைகள் குறைய, நன்மைகள் ஓங்க,

வல்லமை நல்லோர் பெறுக!

 

இதுவரை இருந்த நாட்கள் கழிந்தன

இனிதே செல்லும் ஜயவருடம்!

புதியது பிறக்க பழையது கழிவது

புவியிதன் ஜாதகத் தொடர்சலனம்!

வெற்றிகள் பற்பல தந்து மறைந்த

வளமுறு ஆண்டு ஜயவருடம்!

குற்றம் கடியும் கோவலன் தன்னை

குடிகள் அமர்த்திய நற்தருணம்!

(மன்மத)

 

உருவம் ஒன்றென இல்லாத் தேவன்

பெயரில் அமைந்தது புதுவருடம்!

பருவம் வந்த உயிர்களிடத்தே

உலவும் உணர்வின் அருவடிவம்!

விரிசடைக் கடவுள் விழியினில் எரிந்த

வில்லவன் வாழ்வே தியாகமயம்!

வரிவிழி மங்கை ரதியவள் மட்டும்

வரமெனக் காண்பாள் கணவர்புயம்!

(மன்மத)

 

முக்தியை நாடிக் காலம் மறந்த

முக்கண் முதல்வன் யோகமயம்!

பக்தியை எள்ளும் பகைவர்கள் உவக்க

பதைத்தவர் நாடினர் பாசுபதம்!

சக்தியும் சிவனும் தன்னை உணர்ந்தால்

சங்கடம் நீங்கும் இவ்வுலகம்!

யுக்தியில் உணர்ந்தோர் வேண்டிடக் கன்னலில்

யுவனவன் தொடுத்தான் புஷ்பசரம்!

(மன்மத)

 

தவஒளி மிகுந்த சிவனின் ஞானம்

தனலாய்ப் பெருகிட சக்திமயம்!

பவமென உதித்த சரவண பாலன்

பகையினை வெல்ல பரிபூர்ணம்!

உலகம் உய்ந்திட தன்னை ஈந்து

உவகை கொண்டவன் அஸ்திமயம்!

கலகம் ஆயினும் காரியமாற்றிய

காரணன் பெயரே புதுவருடம்!

(மன்மத)

 

இன்பம் நல்கும் இளமையின் தேவன்

இனிதாய் ஈந்தான் தன்வாழ்வு!

துன்பம் ஏற்று, துயரம் நீக்கிய

தூயவன் வழியே நல்வாழ்வு!

மன்மத ஆண்டு வருகையில் இதுவே

மனதினில் உதிக்கும் புதுநினைவு!

புன்மைகள் ஒழிய, புதுமைகள் ஓங்க,

புண்ணியம் தரட்டும் இந்நினைவு!

(மன்மத)

 –விஜயபாரதம்- புத்தாண்டுச் சிறப்பிதழ் (17.04.2015)

புத்தாண்டு உருவான வரலாறு…

6 Jan

எல்லையற்றது காலம். ஆயினும் உலகில் வாழும் மக்கள் ஏதாவது ஒரு எல்லைக்குள் கட்டுப்பட்டு வாழ வேண்டியுள்ளது. அதற்காகவே காலக் கணக்கீடுகள் உருவாக்கப்பட்டன.

பாரத காலக் கணக்கீடு:

காலத்தைக் கணக்கிடும் முறைகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியதற்கு இந்தியாவின் பண்டைய இலக்கியமான வேதங்களில் சான்றுகள் உள்ளன. இந்தியாவில் காலத்தை கல்பம், மன்வந்திரம், யுகம், ஆண்டு, அயனம், ருது, மாதம், வாரம், நாள், மணி, நாழிகை, விநாடி என்று பல கூறுகளாக நமது முன்னோர் வகுத்திருந்தனர்.

நாடு நெடுகிலும் இப்போதும் புழக்கத்தில் இருக்கும் பஞ்சாங்கத்தின் வயது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். பஞ்சாங்கமே நமது நாட்டில் நாள்காட்டியாக இருந்துவந்துள்ளது.  அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே வாய்மொழி மனன முறையில் பஞ்சாங்கத் தகவல்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.

ரோமன் காலண்டர்:

ஆனால் உலக அளவில் நாள்காட்டி முறை முதன்முதலில் ரோமப் பேரரசில் உருவானதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அதைக் கடைபிடித்ததாலும், ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவியதாலும் இக்கருத்து உருவாகியிருக்க வேண்டும்.

ஆனால், ரோமப் பேரரசு காலத்தைய ரோமன் காலண்டரின் துவக்கம் கி.மு. 700 மட்டுமே. அதற்குப் பின் ஜூலியஸ் சீஸரால் சீர்திருத்தப்பட்ட ஜூலியன் காலண்டரின் துவக்க ஆண்டு கி.மு. 45.
அதற்கு இணையான விக்கிரமாதித்திய சகாப்தம் (கி.மு. 57), சாலிவாகன சகாப்தம் (கி.பி. 78) போன்றவை இந்தியாவிலும் இருந்துள்ளன. இந்து வானவியலின்படி கலியுகம் துவங்கி இதுவரை 5,116 ஆண்டுகள் (கி.மு. 3102) ஆகியுள்ளதாக நமது பஞ்சாங்கங்கள் கூறுகின்றன.

கிரிகோரியன் காலண்டர்:

அந்தந்த நாட்டு மக்களின் நம்பிக்கை, மதம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில், உலக அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையில் நாள்காட்டியைக் கடைபிடித்து வந்துள்ளது. இந்தியாவிலும் கூட பல்வேறு பிரதேசங்களில் பல வகையான ஆண்டுத் துவக்கங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

ஆனால் உலக அளவில் பொதுவான நாள்காட்டியின் தேவை உணரப்பட்டபோது உருவானது தான் தற்போது நாம் பயன்படுத்தும் ஆங்கில நாள்காட்டி என்று அழைக்கப்படும் ‘கிரிகோரியன் காலண்டர்’.

அதற்கு முன்னர் ஆண்டின் துவக்கம் மார்ச் 1, மார்ச் 25, ஈஸ்டர், செப்டம்பர் 1, செப்டம்பர் 25 எனப் பலவகையாக உலகத்தில் அனுசரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய எழுச்சியின் போது, பக்கத்துப் பக்கத்து நாடுகளில் நிலவிய கால வேறுபாடுகளால் குழப்பம் ஏற்பட்டபோது, பொதுவான நாள்காட்டியின் தேவை உணரப்பட்டது.

1582-இல் கத்தோலிக்க மதகுருவாக இருந்த போப் 13-வது கிரிகோரியால் அறிமுகப்படுத்தப்பட்டதே தற்போது வழக்கத்தில் உள்ள நாள்காட்டி ஆகும். அவரது பெயரே புதிய காலண்டருக்கு சூட்டப்பட்டது.

இதனை வடிவமைத்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஜெசூட் பாதிரியாரான வானியல் மேதை கிறிஸ்டோபர் கிளாவியஸ். இதில் தான் ஜனவரி 1 முதல் துவங்கும் தற்போதைய நாள்காட்டி முறை அறிமுகமானது.

எல்லா நாளும் புதிய நாளே:

இவ்வாறு தான் நாம் பயன்படுத்தும் சர்வதேச நாள்காட்டி உருவானது. இதன் துவக்கமாக ஜனவரி 1 இருப்பதால், இந்நாளை புத்தாண்டின் துவக்கமாக உலகம் கொண்டாடுகிறது.

இதுவரையிலான வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கு வாய்ப்பு உருவாவதாக ஓர் நம்பிக்கையை உருவகமாக ஏற்படுத்துகிறது புத்தாண்டு. எனவே தான் இந்நாள் கொண்டாட்டத்துக்கு உரியதாகிறது.

ஆனால், கதிரவன் மறைந்து மீண்டும் உதிக்கும்போது உருவாகும் ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய நாளே. உண்மையில், நமது காலம் ஒவ்வொரு நாளும் கழிவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறது நாள்காட்டி. எனவே, வரும் நாட்களை மதிப்புள்ளதாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

மது அருந்துவதும், நள்ளிரவு 12.00 மணிக்கு ஆரவார இரைச்சலுடன் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும் தான் புத்தாண்டு என்ற மாயை சமீபகாலமாக நம்மிடையே பரவி வருகிறது. மறுநாள் விடியாமல் போகாதா என்று பட்டினியால் ஏங்கும் பல கோடிப் பேர் வாழும் உலகில் இத்தகைய கொண்டாட்டங்களைப் போல பொருளற்ற செயல் வேறில்லை.

புத்தாண்டு என்பது கேளிக்கைகளில் ஈடுபடுவதற்கான தருணம் மட்டுமல்ல, நம்மை நாமே மறுவிசாரணை செய்து கொள்வதற்கான தருணமும் கூட. வரக்கூடிய 2011-ஆம் ஆண்டேனும் நம்மை புதிய மனிதர்களாக்கட்டும்.

தினமணி (வேலூர்) 01.01.2015

புத்தாண்டுச் சிறப்பிதழ்

ஊர்கூடித் தேர் இழுப்போம்!

20 Feb

2014-02-15 16.32.43

.

ஊர்கூடித் தேர் இழுப்போம்!
ஒற்றுமையால் பொலிவுறுவோம்!

அனைவரது உழைப்பாலும்
உருவாகும் சமுதாயம்!
அனைவரது பங்களிப்பும்
இருந்தால்தான் வாழ்வுயரும்!

தானியங்கள், காய்கறிகள்
தந்திடுவார் விவசாயி!
மானம் காக்கும் ஆடை
தருபவரோ நெசவாளி!

தச்சர்களும் கொல்லர்களும்
கொத்தர்களும் உழைப்பதனால்
இல்லம் அமைகிறது;
இனிதாகிறது வாழ்க்கை!

பண்டங்கள் விற்பவரால்
பகிர்ந்துண்டு வாழுகிறோம்!
படையினில் இருப்பவரால்
பயமின்றி உறங்குகிறோம்!

அசுத்தம் நீக்குபவரால்
ஆரோக்கியம் பேணுகிறோம்!
உடலுழைப்புத் தருபவரால்
உருவாகும் புதுஉலகம்!

மருத்துவர் பிணியகற்றி
மனிதத்தைக் காத்திடுவர்!
மந்திரங்கள் ஓதுபவர்
பண்பாட்டைக் காத்திடுவர்!

வாழ்விற்கு வளம்கூட்ட
வழிகாட்டும் ஆசிரியர்!
சமுதாயம் காத்திடவே
அமைகிறது நல்லரசு!

சமுதாயம் என்பது தான்
சனங்களின் கூட்டுறவு!
அதைத்தானே காட்டுகிறது
அழகான தேரோட்டம்!

ஊர்கூடித் தேர் இழுப்போம்!
ஒற்றுமையால் பொலிவுறுவோம்!

.

-தினமணி-கோவை
(காரமடை தேரோட்ட விழா சிறப்பு மலர் 15.02.201)

.