Tag Archives: பாஜக

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு?

24 Jul

அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரைத் தீர்மானிப்பதற்கு முன் நடந்த அரசியல் கூத்துக்கள் அனைவருக்கும் தெரியும். பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியும் ஓர் அரசியல் அதிரடியை நிகழ்த்தினர்.

காங்கிரஸ் கட்சி முன்வைத்த உத்தேச வேட்பாளர்களின் பெயர்களை நிராகரித்த இவ்விருவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினர். இது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பிரணாப் முகர்ஜியின் பெயரை காங்கிரஸ் அவசரமாக அறிவித்தது.

அதன் பிறகு நடந்ததை நாடு அறியும். மம்தாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த முலாயம் சிங், ஒரேநாள் இரவில் அந்தர்பல்டி அடித்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் நகைச்சுவை.

பிரணாப் முகர்ஜியின் திறமைக்காகவும், பாஜக வென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் தான் அவரை ஆதரிப்பதாக முலாயம் சிங் கூறினார். அதாவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடக் கூடாது என்பதே அவரது தொலைநோக்குப் பார்வை.

இந்த ஞானோதயம், மம்தாவுடன் இணைந்து மிரட்டல் விடுத்தபோது எங்கே போயிருந்தது? இடையில் என்ன நடந்தது? பேரங்கள் ஆட்சி செய்யும் அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இப்போது, முலாயமை நம்பி காங்கிரசை எதிர்த்த மம்தா தனிமைப்பட்டு நிற்கிறார்.

நமது ஊடகங்கள் முலாயமின் புத்திசாலித்தனத்தையும் மம்தாவின் முட்டாள்தனத்தையும் விவரித்து செய்திகளை அள்ளி வழங்குகின்றன. அதாவது நம்பகத் தன்மையற்றவராக இருப்பதே புத்திசாலித்தனம் ஆகிவிட்டது.

முலாயம் சிங்கின் புத்திசாலித்தனம் இப்போது தான் வெளிப்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அவரது கட்சியின் குட்டிக்கரணங்கள் பிரசித்தமானவை. 2004ல் அயோத்தி நாயகன் கல்யாண் சிங்குடன் குலாவியபோதுதான் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. பிறகு அவரையும் நட்டாற்றில் விட்டார் முலாயம்.

1999ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தபோது சோனியா காந்தி பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் அதற்கு சம்மதித்த முலாயம், திடீரென போர்க்கொடி உயர்த்தி, சோனியாவின் ஆசையில் மண்ணைப் போட்டார். அதன் விளைவாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சி பகுஜன் சமாஜ். அக்கட்சிக்கும் காங்கிரஸ் அரசியல் எதிரி தான். ஆனால், நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டுக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை சிக்கலான தருணங்களில் காத்து வருகின்றன.

மக்களவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றவும், நம்பிக்கைத் தீர்மானங்களில் வெல்லவும் காங்கிரஸ் கட்சியை இக்கட்சிகள் என்ன காரணத்துக்காக ஆதரித்தன என்பது சாமானியர்கள் அறியாத புதிர். இவ்விரு கட்சிகளும் கடைசியில் சொல்லும் காரணமோ வேடிக்கையானது. மதவாத பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதாம். இதைக் கூறியே இக்கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன.

இக்கட்சிகள் மட்டுமல்ல, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பஸ்வானின் லோக் ஜனசக்தி, மு.கருணாநிதியின் திமுக, ராமதாஸின் பாமக போன்ற கட்சிகளும் அடிக்கடி கூறும் அரசியல் பூச்சாண்டி பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே.

நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டுள்ளன. முலாயமும், லாலுவும் கூட 1989 தேர்தலில் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்கள் தான். பஸ்வானும், கருணாநிதியும், ராம்தாசும், மம்தாவும், நவீன் பட்நாயக்கும், பரூக் அப்துல்லாவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் தான். மாயாவதியோ பாஜகவுடன் இணைந்து உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அரசையே நடத்தி இருக்கிறார்.

அவர்களே இன்று பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி முழக்கமிடுவது முரண். நாட்டிலுள்ள 20 சதவீதத்துக்கு மேற்பட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரவே இக்கட்சிகள் நாடகமாடுகின்றன. உடனடி லாபத்துக்காக பாஜகவுடன் கைகோர்க்கத் தயங்காத நமது ‘மதச்சார்பற்ற’ கட்சிகள், தேர்தல் லாபத்துக்காக பாஜகவை விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

‘பாஜக’ என்ற வார்த்தையைப் பூச்சாண்டியாகக் காட்டியே தேர்தல் களங்களில் வாக்குகளை பல கட்சிகள் அறுவடை செய்கின்றன. அரசியல் களத்தில் தாங்கள் நிகழ்த்தும் கூத்துக்களை நியாயப்படுத்தவும் இக்கட்சிகளுக்கு உதவுவது ‘பாஜக’ பூச்சாண்டி தான். ஊழலில் திளைக்கும் மத்திய அமைச்சர்கள் தப்பிப் பிழைத்திருப்பதற்கும் இதே பூச்சாண்டி தான் உதவி வருகிறது.

இன்றைய அரசியல் சூழலில் பிரதான எதிர்க்கட்சியின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் தீண்டாமையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வேறு கையில் நாட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு? ஒன்று பாஜக தன் மீதான மதவாதக் கறையைப் போக்கிக்கொள்ள வேண்டும். அல்லது, இந்தப் பூச்சாண்டி அச்சத்தைவிட ஆபத்தான அரசியல் கோமாளித்தனங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லாவிடில் ஊழல் அரக்கன் சத்தமின்றி நாட்டை கபளீகரம் செய்துவிடுவான். பூச்சாண்டியா? அரக்கனா? எது ஆபத்தானது? காலத்தின் கரங்களில் பதில் காத்திருக்கிறது.

மீள்பதிவு: குழலும் யாழும்

.

Advertisements

‘வாக்குமூலம்’ ஏற்படுத்திய சிக்கல்!

21 Jun

”நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காக்க இறுதி வரை போராடுவேன்” என்றார், பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்துச் சுதந்திரம் இல்லாத தேசங்களில் சர்வாதிகார ஆட்சி நிலவுவதையே காண்கிறோம்.

நமது நாடு ஜனநாயக நாடு; தேர்தல்கள் மூலம் அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தும் நாடு. அதற்காக வாக்காளரிடம் பிரசாரம் செய்யவும், வாக்குச் சேகரிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படை அலகுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் ஜனநாயகம் மீதான நம்பிக்கை பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்நிலையில், ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரமாணப் பத்திரம் அளித்து தேசிய அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் ஒருவர் கேரளத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பலத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டத் தலைவர் எம்.எம்.மணி, கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயனின் நம்பிக்கைக்குரியவர். இவர் கடந்த மே 27-ஆம் தேதி தொடுபுழாவில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் எல்லை மீறிப் பேசி இருக்கிறார்.

2008-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைத் துவங்கியவர், டி.பி.சந்திரசேகரன். இவர் கடந்த மே 4-ஆம் தேதி, கோழிக்கோடு அருகே கொல்லப்பட்டார். இவரது படுகொலையில் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கவே தொடுபுழாவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதில் கட்சியின் மாவட்டத் தலைவர் பேசிய அனைத்தும், நோக்கத்துக்கு மாறாகவும், மார்க்சிஸ்ட் கட்சி அளிக்கும் சுய வாக்குமூலமாகவும் அமைத்துவிட்டது விந்தைதான்.

“ஆமாம். எங்கள் அரசியல் எதிரிகளை நாங்கள் கொலை செய்துள்ளோம். இதற்காகப் பட்டியல் தயாரித்து வரிசைக்கிரமமாகக் கொன்றோம். இனிமேலும் கொல்வோம்” என்று தன்னிலை மறந்து கொட்டித் தீர்த்துவிட்டார், இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் எம்.எம்.மணி.

அதுமட்டுமல்ல, தங்களை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்றும் விளக்கமாக எடுத்துரைத்தார் மணி. எதிர்பார்த்தது போலவே இவரது பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் சுயரூபம் வெளிப்பட்டிருப்பதாக காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. மணியின் பேச்சு முழுவதும் விடியோ பதிவாகி தொலைக்காட்சிகளில் வெளியாகிவிட்டது. இவரது பேச்சின் அடிப்படையில், பழைய கொலை வழக்குகளைத் தூசி தட்டி, எம்.எம்.மணி மீது கொலைச் சதி வழக்கை கேரள மாநில காவல்துறை தொடர்ந்துள்ளது.

மணியின் பேச்சை அவரது அரசியல் குருவான பினராயி விஜயனே ரசிக்கவில்லை. கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக மணி பேசி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

இவரது பேச்சுக்கு ஒரு வாரம் முன்னதாகத்தான், “மார்க்சிஸ்ட் கட்சி கொலைகாரர்களின் கூடாரமாகிவிட்டது’ என்று, முன்னாள் முதல்வரும் பழுத்த மார்க்சிஸ்டுமான வி.எஸ்.அச்சுதானந்தன் குற்றம் சாட்டி இருந்தார். டி.பி.சந்திரசேகரன் கொலையில் தங்கள் கட்சியினர் தொடர்பு கொண்டிருப்பதை அவர் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினார்.

கேரளத்தில் அரசியல் எதிரிகளை மார்க்சிஸ்ட் கட்சியினர் பந்தாடுவது புதிதல்ல. மார்க்சிஸ்ட் கட்சியினரின் கொலைவெறித் தாக்குதலுக்கு காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் எனப் பல கட்சிகளும் இலக்காகி உள்ளன. ÷

1999-இல் பள்ளி வகுப்பறையிலேயே புகுந்து ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் என்பவரை, அவர் பா.ஜ.க.வைச் சார்ந்தவர் என்பதற்காக, மாணவர்கள் கண்ணெதிரில் மார்க்சிஸ்டுகள் கொலை செய்தனர். இவ்வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

குறிப்பாக, முன்னாள் முதல்வர் இ.கே.நாயனாரின் சொந்த மாவட்டமான கண்ணூரில் இதுவரை நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் – ஆர்.எஸ்.எஸ். மோதல் கேரளத்தில் அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது.

இவ்வாறாக, வன்முறையை மட்டுமே நம்பி அரசியல் நடத்தும் நிலையை கேரள மார்க்சிஸ்ட் கட்சியினர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்த தேசியத் தலைமை, இப்போது வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர், தர்ம சங்கடத்துடன் தவிக்கிறது.

மார்க்சிஸ்டுகள் ஆண்ட கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும், அக்கட்சி மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இது, அக்கட்சியின் சித்தாந்தத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒருபுறம் எங்கும் தனியார் மயம் எதிலும் தனியார் மயம் என்கிற போக்கு. தொழிலாளிகளின் நலனைப் பாதுகாக்க அரசே தயாராக இல்லாத நிலைமை. ஏழை எளியவர்களுக்காகவும், அல்லல்படும் விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், பாட்டாளி வர்க்கத்தினருக்காகவும் குரலெழுப்ப இடதுசாரி இயக்கங்களும் இல்லாமல் போனால், இந்தியாவின் நிலைமைதான் என்ன? வன்முறை மூலம் அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவது என்று தொடங்கினால், அதற்கு முடிவுதான் என்ன?

மக்களாட்சியில் நம்பிக்கை இருப்பதாக மார்க்சிஸ்டுகள் வாய்கிழியப் பேசியதெல்லாம் பொய்யா? பசுந்தோல் போர்த்திய புலிகளாகவா இருந்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள் என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள்.

சோவியத் ரஷியாவில் ஸ்டாலின் அதிபராக இருந்தபோது லட்சக் கணக்கான அரசியல் எதிரிகள் கொல்லப்பட்டது வரலாறு. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களும்கூட ஸ்டாலினிடமிருந்து தப்பவில்லை. அங்கு கம்யூனிஸம் காலாவதியாகிப் போனதற்கு ஸ்டாலினும் ஒரு காரணம். அதேபோன்ற நிலையை நோக்கி இந்தியாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செல்கிறார்களோ என்கிற சந்தேகம் மேலெழுகிறது.

(படம்: இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் எம்.எம்.மணி)

– தினமணி (21.06.2012)

.

கேள்விக்குறியாகும் பா.ஜ.க.வின் வருங்காலம்!

26 May

பா.ஜ.க. மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் சுயசரிதையான  ‘என் தேசம் என் வாழ்க்கை’ புத்தகத்தில் இரு அரிய புகைப்படங்கள் உள்ளன. 55 ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் மூன்று நண்பர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவை.

இளம் வயதில் அன்றைய பாரதிய ஜனசங்கத் தலைவர்களாக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பைரோன் சிங் ஷெகாவத், லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் எடுத்துக்கொண்ட படம் முதலாவது.

அதன் எதிரில், பிரதமர் வாஜ்பாய், குடியரசு துணைத் தலைவர் ஷெகாவத், துணைப் பிரதமர் அத்வானி என அதே மூவரும் 55 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. அதற்கு  ‘அரசியலைத் தாண்டி நீடித்திருக்கும் நட்பு’ என்று அத்வானி தலைப்பிட்டிருக்கிறார்.

இன்றைய பா.ஜ.க.வுக்குள் நிகழும் குழப்பங்களையும் மோதல்களையும் காணும்போது, மேலே குறிப்பிட்ட புகைப்படங்கள் நினைவில் வருவதைத் தடுக்க முடியவில்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக வளர்ந்து, கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பா.ஜ.க.வுக்கு என்ன ஆயிற்று?

இன்று பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 9 மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க. தான்.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்தால் பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், அதற்கான தகுதியை பா.ஜ.க. சமீபகாலமாக இழந்து வருவதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கி உள்ளன. பல்வேறு ஊழல் புகார்களால் நம்பகத்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சி தத்தளித்து வரும் நிலையில் பா.ஜ.க.வுக்கு அது சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், உள்கட்சிக் குழப்பங்களாலும், கட்டுப்பாடற்ற தன்மையாலும் நிலைகுலைந்து காணப்படுகிறது பா.ஜ.க. தேசியத் தலைமை. போதாதகுறைக்கு, பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் காணப்படும் நிலைமை ஊழலை எதிர்த்துக் கேள்விக்குறியாக்குகிறது.

பா.ஜ.க. வலுவாக உள்ள பல மாநிலங்கள் உள்கட்சிப் பூசல்களால் கேலிப்பொருளாகி இருக்கிறது. இதற்கு உச்சகட்ட உதாரணம், கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கலகக்குரல். முதல்வர் சதானந்த கவுடாவுக்கு குடைச்சல் தருவதே எடியூரப்பாவின் அன்றாடப் பணியாகி விட்டது.

கர்நாடக பா.ஜ.க.வில் நிலவும் பூசல்களால், தென்மாநிலத்தில் அக்கட்சி அமைத்த முதல் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இது போதாதென்று, பா.ஜ.க.வின் தேசியத் தலைமை முதுகெலும்பின்றித் தள்ளாடுவதாகக் குற்றம்வேறு சாட்டியிருக்கிறார் எடியூரப்பா.

பா.ஜ.க.வின் நம்பிக்கை நட்சத்திரமான குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல். அவருக்கு எதிராக, முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் வரிந்து கட்டுகிறார். கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கோர்தன் ஜடாபியா மகா குஜராத் ஜனதா கட்சியைத் துவங்கி பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஒரு காலத்தில் குஜராத்தில் பா.ஜ.க.வை வளர்த்த இன்னொரு தலைவரான சங்கர் சிங் வகேலாவோ காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி நரேந்திர மோடியின் ஜென்ம வைரியாகப் பிரசாரம் செய்கிறார்.

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் 43 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதாக மிரட்டி, கட்சியின் இன்னொரு தலைவரான குலாப் சந்த் கடாரியா நடத்துவதாக இருந்த பிரசார யாத்திரையைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்; இப்போதைக்கு அம்மாநிலத்தில் பூசல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை.

80 எம்.பி.க்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர கட்சியின் ஆதரவோ, தொண்டர் பலமோ அதிகரித்ததாகத் தெரியவில்லை. தமிழக காங்கிரஸ் போல உ.பி. மாநில பா.ஜ.க. மாறிவிட்டது. உமா பாரதி, ராஜ்நாத் சிங், கல்ராஜ் மிஸ்ரா, வருண் காந்தி, யோகி ஆதித்யநாத் என்று கோஷ்டிகளின் பட்டியல்தான் நீள்கிறது.

முன்னாள் முதல்வரும் அயோத்தி இயக்க நாயகனுமான கல்யாண் சிங் நடத்தும் ஜன கிராந்தி கட்சி, முலாயம் சிங் கட்சியை விடத் தீவிரமாக பா.ஜ.க.வை எதிர்க்கிறது.

உத்தரகண்டில் நூலிழையில் ஆட்சியை இழந்த பா.ஜ.க.வுக்கு, முன்னாள் முதல்வர்கள் பி.சி. கந்தூரி, ரமேஷ் போக்ரியால் ஆகியோரது நிழல் யுத்தம் மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

காங்கிரஸ் முதல்வர் பகுகுணாவுக்கு ஆதரவாக இரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்க்கண்டில் பா.ஜ.கவுக்கு எதிரி, அக்கட்சியின் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டிதான். அவரது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா வாக்குகளைப் பிரித்தால் பா.ஜ.க. நிலைமை சிக்கல்தான்.

தில்லியில் ஆட்சியைப் பிடிக்கப் பல சாதகமான வாய்ப்புகள் இருப்பினும், மதன்லால் குரானா, விஜய்குமார் மல்ஹோத்ரா, விஜய்கோயல், விஜேந்தர் குப்தா என்று நீளும் தலைவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், காங்கிரஸ் தெம்பாக இருக்கிறது.

இமாச்சலில் முதல்வர் பிரேம்குமார் துமலும், முன்னாள் முதல்வர் சாந்தகுமாரும் எதிரணியாகவே செயல்படுகின்றனர். மகாராஷ்டிரத்தில் முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டேவின் அதிருப்திக் குரலை இப்போதைக்கு கட்டுப்படுத்தி இருக்கிறது மத்தியத் தலைமை. ஜம்மு-காஷ்மீரில் பாஜக மாநிலப் பிரிவு முற்றிலும் குலைந்திருப்பது தலைமைக்கு கவலை அளிக்கும் விஷயம்.

பாஜகவின் மத்திய தலைமையிடம் எடுத்துச்செல்லாமல், இப்போதே பிரதமர் கனவில் வலம் வரத் தொடங்கிவிட்டார் சுஷ்மா சுவராஜ். அவருக்கும் அருண் ஜெட்லிக்கும் இடையேயான ‘நீயா, நானா’ போராட்டம் தலைநகர அரசியல் வட்டாரங்களில் சிரிப்பாய் சிரிக்கிறது. ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்ஹாவும் கட்சியில் இருக்கிறார்களா இல்லையா என்பது எப்போதாவது தான் தெரிகிறது. அவர்களுக்குள்ளும் போட்டியும் பொறாமையும்.

இப்படி, கொள்கைக்காக வாழ்ந்த தலைமுறை மாறி, தனிப்பட்ட பிரமுகர்களிடையிலான போட்டிக்களமாக பா.ஜ.க. மாறி வருவது துரதிருஷ்டம். வேடிக்கை என்னவென்றால், இந்தத் தலைவர்கள் யாருக்குமே வாஜ்பாயிக்கோ, அத்வானிக்கோ இருப்பது போன்ற தனிப்பட்ட மக்கள் செல்வாக்குக் கிடையாது என்பதுதான்.

கட்சிக்குள் அன்னியோன்யமாக இணைந்து பணி புரிந்த தலைவர்கள் இன்று சுயநலனுடன் மோதிக் கொள்வதைத் தடுக்காவிட்டால், பா.ஜ.க.வின் ஆட்சிக் கனவு நிறைவேறாமலே போய்விடும்.
 .
இப்போதைய பா.ஜ.க. தலைமை முன்னுள்ள கடுமையான சவால், ‘என் பதவி, என் குடும்பம்’ என்று மாறத் துடிக்கும் தலைவர்களைக் கட்டுப்படுத்துவது தான். இச்சவாலில் பா.ஜ.க. வெல்லுமா? நிதின் கட்கரி முன்பு நிகழ்காலம் கேள்வியாக நிற்கிறது.
.
ஜனதா என்றாலே குழப்பம் என்று பெயர் போலிருக்கிறது. ஒருவேளை, பாரதிய ஜனதா கட்சி  மீண்டும் பாரதிய ஜனசங்கம்  என்று பெயரை மாற்றிக் கொண்டால்  பிரச்னைகள் தீருமோ என்னவோ?

 

தினமணி (25.05.2012)

.

நமது தார்மிக வீழ்ச்சி

4 May

பாலியல் சர்ச்சைகளுக்கும் இந்திய அரசியலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அபிஷேக் சிங்வி விலகக் காரணமானது கூட பாலியல் சர்ச்சை தான். தன்னுடன் பணிபுரியும் பெண் வழக்குரைஞருடன் தகாத செயலில் அவர் ஈடுபட்டபோது விடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விடியோ பதிவுகள் தொலைக்காட்சிகளில் வெளிவராமல் தடையாணை பெற்ற சிங்வியால் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு ஒரு வார காலத்துக்கு சிங்விதான் மிகவும் தேடப்பட்ட நபராக இருந்தார். ஆரம்பத்தில் இந்தச் சர்ச்சைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று மறுத்து வந்த சிங்வி, இறுதியில் கட்சியின் பெயரைக் காப்பாற்ற பதவி விலகி இருக்கிறார்.

இப்போதும்கூட சிங்விக்கு காங்கிரஸ் கட்சி வக்காலத்து வாங்குகிறது. தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையுடன் முடிச்சுப் போடக் கூடாது என்று அக்கட்சி விளக்கம் அளித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய சர்ச்சைகள் புதியவை அல்ல. 1995-இல் தனது மனைவி நைனா சஹானியைக் கொலை செய்த தில்லி இளைஞர் காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏ.வுமான சுஷீல்குமார், அந்தச் சடலத்தை தந்தூரி அடுப்பில் எரித்தார். இந்தக் கொலைக்குக் காரணம்கூட முறையற்ற உறவுதான். 2003-இல் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முதல்வராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநராக இருந்தபோது நிகழ்ந்த வெட்கக்கேடான சம்பவத்தை மறக்க முடியாது. ஆளுநர் மாளிகையிலேயே மூன்று பெண்களுடன் கும்மாளமிட்டதாக திவாரி மீது விடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து அவர் 2009 டிசம்பரில் பதவி விலக வேண்டிவந்தது.

இதைவிட வேதனையான நிகழ்வு, திவாரிதான் தனது உண்மையான தந்தை என்று நிரூபிக்க நீதிமன்றத்தில் போராடிவரும் ரோஹித் சேகரின் வாழ்க்கை. தனது தாய் உஜ்ஜாலா சர்மாவுக்கும் திவாரிக்கும் இடையிலான கள்ள உறவில் பிறந்தவன்தான் என்று நிரூபிக்க அவர் போராடுகிறார். இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க மரபணு சோதனைக்கு ஆட்படுமாறு திவாரிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நாட்டின் ஆளும் கட்சி மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியும் இவ்விஷயத்தில் சளைத்ததல்ல. பாஜக முழுநேர ஊழியரும் தேசிய பொதுச்செயலாளருமான சஞ்சய் ஜோஷி, ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டதற்காக 2005-இல் கட்சியிலிருந்தே விலகினார். அண்மையில் தான் கட்சிக்குள் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ.க்கள் சி.சி.பாட்டீல், லட்சுமண சவதி, கிருஷ்ண பலேமர் ஆகியோர் பேரவையிலிருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை தற்போதும் நடக்கிறது.

விசாரணையில், மேலும் 15 எம்எல்ஏ.க்கள், கட்சி வித்தியாசமின்றி இக்காட்சியை ரசித்தது தெரிய வந்தது. மக்களாட்சியின் கோவிலான சட்டப் பேரவைக்கு நேரிட்டிருக்கும் நிலை பரிதாபமானது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் அக்கட்சியின் அமைச்சரான ஷோபா கரந்தலேவை தொடர்புப்படுத்தி பலவிதமான பிரசாரங்கள் செய்யப்பட்டுவிட்டன; வித்தியாசமான கட்சி என்ற தனது முத்திரை வாக்கியத்தை இழந்து நிற்கிறது பாஜக.

1990-களில் கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு நமது அரசியல்வாதிகளின் அசிங்கமான பக்கத்தைத் தோலுரித்தது. கோழிக்கோட்டில் ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் விபசாரத் தொழில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் லீக் தலைவர் குன்னாலிக்குட்டி மீது வழக்கு நடக்கிறது. இன்றும் அவர் கேரளத்தில் முக்கியமான அமைச்சராக நீடிக்கிறார்.

இவ்வாறாக இந்திய அரசியலில் பாலியல் சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து அடங்குகின்றன. இந்தியாவில் பாலியல் கருத்துகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. அதேசமயம் அதிகார பலத்தால் பாலியல் வரைமுறைகளை மீறவும் அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. இவ்விஷயத்தில் ஒரு விசித்திரமான அலட்சிய மனப்பான்மை நமது மக்களிடையே நிலவுவதுதான் புரியாத புதிர்.

துறவறத்தை உயர்ந்ததாகப் போற்றும் பண்பாடு இந்தியப் பண்பாடு. இல்லறத்திலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கலாசாரம் உள்ள நாடு இந்தியா. நமது வீட்டில் இந்த உயர்ந்த கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் நாம், பொதுவாழ்க்கையில் இவை மீறப்படும்போது புலம்புவதுடன் நிறுத்திக் கொள்கிறோம். அதுதான் விசித்திரம்.

போகபூமி என்று விவேகானந்தரால் வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில், அதிபர் கிளிண்டன் ஒரு பெண்ணுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார் என்பதற்காக அவரது ஆட்சிக்கு அந்நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். பாலியல் சுதந்திரம் உள்ள அமெரிக்காவிலேயே தமது ஆட்சியாளர்களும் தலைவர்களும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று அம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாமோ, தனிப்பட்ட வாழ்க்கையில் தூயவர்கள். அதேசமயம், நமது தலைவர்கள் உதிர்க்கும்  ‘பொது வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு’ என்ற தத்துவங்களை ஜீரணித்தபடி வாழ்கிறோம். நமது தார்மிக வீழ்ச்சி வருத்தம் அளிக்கிறது.

தினமணி (04.05.2012)

நன்றி: மதி (தினமணி- 28.04.2012 )

.