Tag Archives: பெரிய புராணம்

உலகம் தழுவிய தமிழ்ப் பார்வை

21 Feb
 
.
.
உலகு தழுவிய பார்வை என்பது தமிழ் மொழிக்குப் புதியதன்று. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்று (புறநானூறு -192) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனார் பிரகடனம் செய்திருக்கிறார்.
.
‘வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில்’ (தொல்காப்பியம் – சிறப்புப் பாயிரம்) வாழ்ந்தாலும் ஆழிசூழ் உலகம் குறித்த பரந்த பார்வை தமிழர்களிடம் இருந்துள்ளது.
இலக்கியம் என்பது மனிதனை மேம்படுத்தவே; அந்த மக்களை ‘உலகம்’ என்ற ஆகுபெயரில் அழைப்பதும் தமிழ் இலக்கியங்களின் சிறப்பு. அதிலும் தமிழின் முதன்மையான இலக்கியங்கள் பலவும் ‘உலகம்’ என்ற சொல்லிலோ அதற்கு இணையான பிற சொற்களிலோ துவங்குவது, வியப்பும் மகிழ்ச்சியும் அளிப்பதாகும்.
.
தமிழின் இலக்கணத்தைச் செம்மைப்படுத்திய பவணந்தி முனிவரும்,
‘மலர்தலை உலகின் மல்குஇருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்…’
-என்றே நன்னூலைத் துவங்குகிறார் (சிறப்புப் பாயிரம்).
.
பத்துப்பாட்டில் உலகம்:
.
சங்க இலக்கியக் கருவூலத்தில் முதல் நூலான திருமுருகாற்றுப்படையை,
‘உலகம் உவப்ப வலன் ஏற்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு…’
-என்றுதான் நக்கீரர் துவங்குகிறார்.
.
தனது இன்னொரு பத்துப்பாட்டு நூலான நெடுநல்வாடையிலும்,
‘வையகம் பனிப்ப, வலனேர்பு வளைகிப்
பொய்யா வானம் புதுப்பெண் பொழிந்தென…’
-என்றே நக்கீரர் துவங்குகிறார்.
.
மற்றொரு பத்துப்பாட்டு நூலான மதுரைக்காஞ்சியை,
‘ஓங்கு திரை பரயின்
ஒளி முந்நீர் வரம்பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து…’
-என்று துவங்குகிறார் மாங்குடி மருதனார்.
.
தொகை நூல்களுள் ஒன்றான கடவுள் வாழ்த்தை அடுத்த பாடல், உலகின் ஐம்பூதங்களை வியந்து பாடுகிறது.
‘மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு…’
-என்று முரஞ்சியூர் முடிநாகனார் (புறம்- 2 ) பாடிச் செல்கிறார்.
.
சங்க இலக்கியப் பாக்கள் பலவற்றின் உள்ளடக்கத்தில் உலகம் குறித்து வரினும், இலக்கியத்தின் துவக்கத்திலேயே ‘உலகம்’ இடம் பெறுபவை மட்டுமே சிறப்புக் கருதி இங்கு குறிப்பிடப்பட்டன.
.
காப்பியங்களில் ஞாலம்:
.
ஐம்பெரும் காப்பியங்களும் உலகின் முதன்மையை உணர்த்தியுள்ளன. முதன்மைக் காப்பியமான இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம், உலகை வாழ வைக்கும் ஞாயிற்றைப் போற்றி, அடுத்ததாக திங்களையும் மாமழையையும் போற்றித் துவங்குகிறது.
.
உலகின் பசிப்பிணி அறுப்பதே தலையாய அறம் என்கிறது, பௌத்தக் காப்பியமான மணிமேகலை.
.
திருத்தக்கத் தேவரின் சீவக சிந்தாமணி, மூவர் முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த…’ என்றே துவங்குகிறது.
.
முழுமையாகக் கிடைத்திராத வளையாபதியும்,
‘உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமான்
திலகம் ஆய திறல் அறிவின் அடி…’
-என்று வணங்கித் துவங்குகிறது.
.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதன்மையானதும், உலகப் பொதுமறை என்று போற்றப்படுவதுமான திருக்குறளில் 70 -க்கு மேற்பட்ட குறட்பாக்கள் உலகம் குறித்த கண்ணோட்டத்துடன் இலங்குகின்றன. ஆதிபகவன் முதற்றே உலகு’ என்ற தலைமைக் குறளே (குறள் – 1 :1 ) திருக்குறளின் அடிநாதமாக விளங்குகிறது.
.
பக்திக்காலக் காப்பியமான கம்பரின் ராமாயணம், ‘உலகம் யாவையும் தாமுளவாக்கலும்’ என்றே (பால காண்டம் -1) துவங்குகிறது. ஆழிசூழ் உலகம், மானுடம் வென்றதம்மா – போன்ற சொற்றொடர்கள் வாயிலாக உலகம் குறித்த கம்பரின் கனிந்த பார்வையை உணர முடிகிறது.
.
சைவக் காப்பியமான, தொண்டர்தம் பெருமை கூறும் பெரிய புராணம், ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று துவங்குகிறது. இந்த முதலடியை சேக்கிழாருக்கு ஈசனே அசரீரியாய் எடுத்துக் கொடுத்ததாக நம்பிக்கை. இக்காப்பியம், ‘உலகெலாம்‘ என்றே நிறைவடைகிறது.
.
வாழ்க வையகம்:
.
‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ (திருமூலரின் திருமந்திரம்-147) என்று வாழ்ந்த சித்தர்களின் பூமி தமிழகம். உலகம் குறித்த அவர்களது பார்வை விசாலமானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்று அறைகூவியவர் திருமூலர்.
.
சைவத் தத்துவ விளக்கமான சிவஞானபோதம் நூலினை,
‘மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு பகரின் அல்லதை…’
-என்று மெய்க்கண்டார் துவங்குகிறார்.
.
இவ்வாறாக, வாழையடி வாழையென, தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் ‘உலகம்’ என்ற சொல்லையே முதன்மைப்படுத்தி, இலக்கியங்கள் உருவாக்கியது கண்டு உவகை மிகுகிறது.
.
இதன் தொடர்ச்சியாகவே, சென்ற நூற்றாண்டில் நாடகக் காப்பியம் படைத்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும், ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தை’ என்று மனோன்மணீயம் நூலினைத் துவங்குகிறார்.
.
இந்த சிந்தனைப் பெருக்கால் தான், வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்று மகாகவி பாரதியால் வேண்ட முடிந்தது; புதியதோர் உலகம் செய்வோம், கேட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்று பாரதிதாசனால் பாட முடிந்தது .
.
இத்தகைய மிக உயர்ந்த உலகு தழுவிய பார்வையுடன் இலக்கியங்கள் தழைத்தெழுந்த மண் தமிழகம்.
.
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’
.
-என்று வாழ்ந்த தாயுமானவர் போன்ற மாமேதைகளின் அடியொற்றி, தமிழ் இலக்கியங்களின் உலகப் பார்வையை நம்முள் விரித்து, நாமும் தமிழ் வளர்ப்போம்.
.
தினமணி (27. 06. 2010)  – கோவை.
‘பொங்கும் தமிழோசை’ இணைப்பிதழ்
.
.
Advertisements