Tag Archives: மகாத்மா காந்தி

உலகிற்கு வழிகாட்டும் சுவாமி விவேகானந்தர்!

14 Sep

மூன்றே வார்த்தைகளில் ஒரு நாட்டையும் மக்களையும் கவர்ந்து வெற்றிக்கொடி நாட்ட முடியுமா? அதுவும் அறிவில் சிறந்தவர்களும் பல மதத் தலைவர்களும் நிறைந்த சபையில், தனியொருவனாக நின்று அனைவரது உள்ளங்களையும் கொள்ளையிட முடியுமா?

இதை நடத்திக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர். இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893, செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற உலக சர்வ சமயப் பேரவையில் பாரதத்திலிருந்து இந்து சமயப் பிரதிநிதியாகப் பங்கேற்றவர் விவேகானந்தர். அந்த மாநாட்டின் நோக்கங்களை வரையறுத்தவராக அவர் மாறியது ஓர் உலக அதிசயம்.

அப்படி என்ன அவர் புதிய விஷயங்களைச் சொல்லிவிட்டார்? உலகைப் பீடித்திருக்கும் பிரிவினைவாதமும், அளவுக்கு மீறிய மதப்பற்றும், மதவெறியும் உலகை ரத்தக்களரியாக்குகின்றன என்ற அவரது கருத்தில் புதுமை ஏதும் இல்லை. இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே, சிலுவைப் போர்களின் போதே உலகம் உணர்ந்துவிட்டது. எனில், விவேகானந்தரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது எது?

இங்கு தான் பாரதத்தின் ஆன்ம வலிமை வெளிப்படுகிறது. விவேகானந்தர் உண்மையில் இந்து சமயப் பிரதிநிதியாக மட்டும் உலக சர்வ சமயப் பேரவையில் பங்கேற்கவில்லை. அவர் அங்கு ஆறு நாட்களில் நிகழ்த்திய உரைகளை வாசிக்கும் எவரும் அவரது தேசபக்தியால் புளகாங்கிதம் அடைவர்.

உலகில் மதவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் புகலிடம் அளித்த நாட்டிலிருந்து வந்தவன் என்றுதான் தன்னை முதல் நாள் பேச்சில் விவேகானந்தர் அறிமுகப்படுத்திக் கொண்டார். யூதர்களுக்கும் பார்ஸிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த நாட்டிலிருந்து வருபவன் நான் என்று அவர் நெஞ்சு நிமிர்த்திப் பேசினார். இந்த நெஞ்சுரத்துக்குத் தகுதி உடையவர்கள் வேறு எவரும் அங்கிருக்கவில்லை.

’எங்கெங்கோ தோன்றும் ஓடைகள் அனைத்தும் இறுதியில் கடலில் சங்கமிப்பதைப் போல அனைத்து மதங்களும் இறைவனிடம் சென்று சேர்கின்றன’ என்ற பொருள் தரும், பாரத மக்கள் அன்றாடம் பாடும் சிவ மகிமை ஸ்தோத்திரத்தை அந்தச் சபையில் விவேகானந்தர் பாடியபோது, அடிமை தேசத்தின் ஆண்மை மிக்க ஆன்மா பேசியதை சபை உணர்ந்தது.

இதுதான் அந்த மாநாட்டில் பேசிய பிற மதத் தலைவர்களிடமிருந்து விவேகானந்தரை வேறுபடுத்திக் காட்டியது. உலகம் முழுவதும் மதவெறி தலைவிரித்தாடுகையில் மானுடம் என்ன ஆகுமோ என்ற கவலையில் கூடிய அம்மாநாட்டிற்குத் தெளிவான வழிகாட்டுதலை, ஓர் இந்துத் துறவி என்ற முறையில் விவேகானந்தரால் கச்சிதமாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்த முடிந்தது.

அவரது பேச்சின் துவக்கமே அதை அடிக்கோடிட்டுக் காட்டியது. ’அமெரிக்கா வாழ் சகோதர சகோதரிகளே’ என்ற மூன்றே வார்த்தைகளில், அங்கு கூடியிருந்த 7 ஆயிரம் பேருக்கும் தான் அடுத்து என்ன சொல்லப் போகிறேன் என்பதை அவர் தெளிவுபடுத்திவிட்டார்.

பரிபூரணமான இதயசுத்தியால் அமைந்த கம்பீரமான உடல்மொழியும், தியாகமும் துறவும் அமைத்துக் கொடுத்த அற்புதமான மனத்தெளிவும் அவருக்குப் பொலிவூட்டின. தனது இதய அன்பின் ஆழத்திலிருந்து அவர் கூறிய அச்சொற்கள் போலித்தனமானவை அல்ல என்பதை அந்த விநாடியே சர்வ சமயப் பேரவை உணர்ந்தது. அதனால் தான் வேறு யாருக்கும் கிட்டாத மிக நீண்ட கரவொலியும் வரவேற்பும் அந்த இளம் துறவிக்கு அங்கு கிடைத்தன.

அடுத்தடுத்த நாட்களில் சபையில் சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் விவேகானந்தரைப் பேச அழைத்து, சர்வ சமயப் பேரவை நிர்வாகிகள் பெருமை பெற்றனர்.  ‘இந்தியாவின் இளம்புயல்’ என்று அமெரிக்கப் பத்திரிகைகள் அவரை வர்ணித்தன. அதற்கடுத்த ஆண்டுகளில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அவர் நிகழ்த்திய தொடர்  பிரசாரம், வெளிநாடுகளில் இந்தியா குறித்து உருவாகியிருந்த தவறான கருத்துகளை மாற்றி அமைத்தது.

பல நூறு ஆண்டுகளாக பல்வேறு நாடுகளால் சூறையாடப்பட்ட போதும் இந்தியா தனது ஆன்ம வலிமையை இழக்கவில்லை. படையெடுத்து வந்தவர்களையும் சுவீகரித்து, ஜீரணித்து, அவர்களையும் அவர்களது புதிய மதங்களையும் மனமார அரவணைத்ததால் தான் பாரதம் உலகிற்கே வழிகாட்டும் தகுதி பெற்றது. இதற்கு பாரதத்தின் பன்னெடுங்காலப் பாரம்பரியமும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பாட்டு விழுமியங்களும் தான் காரணம்.

அத்தகைய, உலகையே ஒரு குடும்பமாகப் பாவிக்கும் ’வசுதைவ குடும்பகம்’ என்ற உபநிடத மகாவாக்கியம் அல்லவா விவேகானந்தரை உருவாக்கியது? அதுவல்லவா பிற்காலத்தில் மகாத்மா காந்தியையும் உலகிற்கு ஈந்தது! இதை உலகம் மறந்ததால் அல்லவா, 2001ஆம் ஆண்டில் இதே செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து போயினர்!

இன்றும்கூட நாள்தோறும் உலகில் நிகழும் மதவெறி சார்ந்த நிகழ்வுகளும் அதற்கு பரிதாபமாகப் பலியாகும் மனித உயிர்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வாக உலகிற்கு விவேகானந்தரின் போதனைகளை மீண்டும் முன்வைக்கும் பொறுப்பு பாரதத்திற்கே உள்ளது. சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜெயந்திக் கொண்டாட்டங்கள் நிகழும் இந்த ஆண்டைவிட அதற்கு மிகவும் பொருத்தமான தருணம் வேறு எது?

தினமணி இணையதளம்  (14.09.2013)

ஜனவரி முப்பது

2 Oct

இன்று காந்திஜி இறந்த தினம்.

மாலைகளைச் சுமக்க முடியாமல்
தள்ளாடும் அவர் மேல்
காகம் உட்கார்ந்து
கரைந்து கொண்டிருக்கிறது.

பாவம் காந்திஜி!

அருகில் நெருங்கினால்
‘மணம்’ வீசுகிறதே?
யாரோ சாணாபிஷேகம்
செய்திருக்க வேண்டும்.

சுதந்திர ஜனநாயகம்!

அவர் காங்கிரஸ் கட்சி
என்றல்லவா எண்ணியிருந்தேன் –
எல்லாக் கட்சிக் கொடிகளையும்
ஏந்தியிருக்கிறாரே?

பரந்த மனப்பான்மை?
இல்லை…
பக்கா சுயநலம்!

சிற்பி ஊன்றுகோலை
கையுடன் நன்கு
பிணைத்திருக்கலாம் –
பாருங்கள்,
காந்திஜி ஊன்றுகோலில்லாமல்
தள்ளாடுவதை!

கட்சிக்கொடிகள்
இருப்பதால் தான்
அவர்
நின்று கொண்டிருக்கிறார்!

கட்சிகள் வாழ்க!

என்ன கண்ணாடியையும்
காணவில்லை?
ஊன்றுகோலை உருவியவன் தான்
கண்ணாடியையும்
களவாடியிருப்பான்!

பரவாயில்லை,
அவருக்கு எளிமையே
விருப்பம்!
நல்ல வேளை
உடையையாவது சிமென்ட்டில்
செய்தார்கள்!

ஒருவரையே
பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி?
இந்தப்புறம்
ஒருவர் இருப்பாரே?

ஆஹா…
அதோ…

-விஜயபாரதம் (29.01.1999)

.

மீண்டும் வேண்டும்…

18 Aug

This slideshow requires JavaScript.

மீண்டும் வேண்டும் காந்திஜி –
மதவாதிகளிடமிருந்து
மக்களைக் காக்க…
அராஜகவாதிகளிடமிருந்து
அரசியலை மீட்க…

மீண்டும் வேண்டும் நேதாஜி –
வெளிநாட்டு மோகத்தை
வேருடன் கிள்ளி எறிய…
வெற்றிபெறும் உத்வேகத்தை
நாட்டுக்கு அளிக்க…

மீண்டும் வேண்டும் திலகர் –
தேசபக்தி நறுமணம்
எங்கும் பரவ…
வேஷமிடும் சதியாளர்கள்
நடுங்கியோட…

மீண்டும் வேண்டும் அம்பேத்கர் –
ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம்
விரைவில் அமைய…
எல்லோரும் எல்லாமும்
எங்கேயும் பெற…

மீண்டும் வேண்டும் பாரதி –
சுதந்திரத்தின் சுகத்தை
அனைவரும் உணர…
அடிமைத்தனத்தின் எச்சங்கள்
அலறியோட…

மீண்டும் வேண்டும் சுதந்திரம் –
உயர்வைத் தடுக்கும்
ஊழல் அரக்கனிடமிருந்து…
சுயநலமே பிரதானமான
அதிகாரிகளிடமிருந்து…
நாட்டை அழிக்கும்
நாசகாரர்களிடமிருந்து…

– தினமணி (விளம்பரச் சிறப்பிதழ்), கோவை (15.08.2012)

.

அத்தனைக்கும் ஆசைப்படும் காங்கிரஸ்

19 Jun

‘கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை’ என்ற பழமொழி, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. கோவையில் கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம், அக்கட்சியினரின் காமராஜர் ஆட்சிக் கனவுகளுக்கு தூபம்போட்டது. அதேசமயம், திமுக.வுடனான கூட்டணியை சுகமான சுமையாகத் தாங்க வேண்டிய கட்டாயம் இருப்பது, தலைவர்களின் அடக்கமான பேச்சில் வெளிப்பட்டது.

முன்னாள் நிதியமைச்சரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டை ஒட்டி,கோவையில் பிரத்யேகமாக நடந்த விழாவில் சி.எஸ். நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. இதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டுவிழா, சி.எஸ். நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக, கோவை நகரின் பல பகுதிகளில் பெரிய அளவிலான கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பல்வேறு கோஷ்டியினரின் வரவேற்பு விளம்பரங்கள், திராவிடக் கட்சிகளுக்கு போட்டியாக வைக்கப்பட்டிருந்தன. இந்த விளம்பரங்களில் மரியாதைக்குரிய பெரியவர் சி.சுப்பிரமணியத்தைத் தேட வேண்டியிருந்தது.

‘விரலுக்கேற்ற வீக்கம்’ போல, காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கூட்டம் திரண்டிருந்தது. இதையே பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் குழுமிவிட்டதாக, மேடையில் முழங்கியவர்கள் குறிப்பிட்டனர். பல கோஷ்டியினர் இந்தப் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தும் கூட, நிகழ்ச்சி நடந்த சிறு மைதானம் நிறைந்தது அவர்களுக்கு பூரிப்பை அளித்தது. ஆனால், வராத காங்கிரஸ் கோஷ்டியினர் குறித்த கவலையே எங்கும் தென்படவில்லை.

கட்சி பொதுக்கூட்ட அழைப்பிதழில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பெயர் விடுபட்டது அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தி அளித்தது. அதன்விளைவாக, விழாவில் மாநிலத்தலைவர் கே.வீ.தங்கபாலுவுக்கு கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்ததால், இளங்கோவன் ஆதரவாளர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் காரணமாக, ஈவிகேஎஸ்.இளங்கோவனும் அவரது ஆதரவாளர்களும் இந்த விழாவைப் புறக்கணித்தனர்.

கோவை மாநகர மேயராக இருப்பவர் ஆர்.வெங்கடாசலம்; முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் தீவிர ஆதரவாளர். பிரபுவுக்கு தகுந்த முக்கியத்துவம் தராததால், இவரும், பிரபு ஆதரவாளர்களும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். விமானநிலையம் சென்று பிரணாப் முகர்ஜியை வரவேற்ற கோவை மேயர், நாணய வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ளவில்லை; பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. மாநகரின் முதல்குடிமகன் தங்கள் கட்சிக்காரராக இருந்தும், அவர் வராதது குறித்து யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

மற்றொரு மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் தரப்பினரும், தங்கள் தலைவருக்கு உரிய கெüரவம் தரப்படாததால், இந்நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவை தங்கம் (வால்பாறை), விடியல் சேகர் (காங்கயம்), ஆர்.எம்.பழனிசாமி (மொடக்குறிச்சி) ஆகியோரது புறக்கணிப்பு காரணமாக, மக்கள் பிரதிநிதிகள் பலர் இருந்தும் பயனின்றி விழா நடந்தது. சிதம்பரம் ஆதரவாளரான எம்என்.கந்தசாமி (தொண்டாமுத்தூர்) மட்டுமே விழாவில் பங்கேற்றார்.

மகாத்மா காந்தியின் ஓர் அறைகூவலுக்காக, வீடு,வாசல், குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு ராட்டைக்கொடி ஏந்தி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை, அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்காக கோஷ்டிகானம் இசைக்கும் அளவுக்கு தாழ்ந்துவிட்டது வேதனைதான்.

இத்தனைக்கும் காரணம், அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லாத மாநிலத் தலைமையே என்றாலும், சி.சுப்பிரமணியம் என்ற மகத்தான மனிதருக்காகவேனும், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கோஷ்டி மனப்பான்மையைக் கைவிட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பலரும், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று முழங்கினர்; காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்க பலர் சூளுரைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, “தமிழகத்தில் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கான கடும் முயற்சியை தமிழக காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்” என்று உருவேற்றினார்.

இறுதியாகப் பேசிய ப.சிதம்பரமும், “தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு இடம்தரும் அரசு அமையும்” என்று பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு என்பதை அவர் சொல்லவில்லை.

திமுக கூட்டணி ஆட்சியை ‘வலி’ப்படுத்தியதாலேயே ஈவிகேஎஸ்.இளங்கோவன் இந்நிகழ்ச்சிகளில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேசமயம், பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள், அதிமுக.வை விமர்சிப்பதைத் தவிர்த்தனர். மாநில அரசின் நலத்திட்டங்கள் பல மத்திய நிதியால் நடப்பதை சிலர் குறிப்பிட்டனர்.

எது எப்படியோ, காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த உத்வேகம் அளித்திருக்க வேண்டிய கோவை பொதுக்கூட்டம், வெறும் சம்பிரதாய நிகழ்வாக மாறிவிட்டது. ஆயினும், காமராஜர் ஆட்சி, மாநில அரசில் பங்கு, கூட்டணி அரசு உள்ளிட்ட முழக்கங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் குறை வைக்கவில்லை.

அரசியல்கட்சி என்றால் ஆட்சிக்கனவு இருப்பதில் தவறில்லை. ஆனால் என்ன செய்ய? ஆளுக்கொரு கோஷ்டி, நாளுக்கொரு சண்டை என்று தொடரும்போது, கனவு நனவாவது எப்படி?

ஆசை இருக்கிறது ஆட்சியைப் பிடிக்க. ஆனால் அதிர்ஷ்டம் இருப்பதோ கோஷ்டியாய் பிரிய…

– தினமணி (சென்னை பதிப்பு; அரசியல் அரங்கம் – 04.09.2010)

.

மண்ணுக்கேற்ற பொதுவுடைமைவாதி

5 Jun

ராம் மனோகர் லோகியா

(பிறப்பு: 1910, மார்ச் 23  – மறைவு:  1967, அக்டோபர் 12)

அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவம்  பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  உருவானது.   ‘சோஷலிசம்’ எனப்படும்  இத் தத்துவம், அரசே அனைவரது வாழ்வையும் சமமாகவும் நலமாகவும் பேண வேண்டும் என்ற அடிப்படையில் உருவானது. இத் தத்துவத்தை பாரத மண்ணுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தவர் இந்திய சோஷலிச அரசியல்வாதிகளின் குருவாக மதிக்கப்படும் ராம் மனோகர் லோகியா. இவரது வாழ்வே ஒரு வேள்வி போன்றது; இளைய தலைமுறையினர் அறிய வேண்டியது.

பிறப்பும் வளர்ப்பும்:

உத்தரபிரதேசத்தின் அக்பர்பூரில், காங்கிரஸ் தலைவர் ஹீராலாலுக்கும் ஆசிரியை சாந்தாவுக்கும் 1910, மார்ச், 23 ல் மகனாகப் பிறந்தார் ராம் மனோகர் லோகியா. சிறுவயதிலேயே தாயை இழந்த ராம், தந்தையால் வளர்க்கப்பட்டார். தந்தையின் தேசியப் பணிகளை பாலகனாக இருந்தபோதே கண்ணுற்ற ராம், இயல்பாகவே தேசியவாதியாக வளர்ந்தார்.

மகாத்மா காந்தியின் தீவிர விசுவாசியாக இருந்த ஹீராலால், அவரை அடிக்கடி சந்திப்பார். அப்போதெல்லாம் தனது மகன் ராமுடன் செல்வார். அப்போதே காந்தி மீது ராமுக்கு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவரது சுய கட்டுப்பாடு, ஆன்மிக வலிமை, தேசிய சிந்தனை ஆகியவை ராமுக்கு வழிகாட்டின. தனது பத்தாவது வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார் ராம்!

மராட்டிய சிங்கம் பால கங்காதர  திலகர் மறைவை (1920) அடுத்து சிறு கடையடைப்பு நடத்தியதே ராமின் முதல் விடுதலைப் போராட்ட பிரவேசம். அப்போது அவருக்கு வயது 10! அடிக்கடி காந்தியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்த ராம், 1921 ல் ஜவஹர்லால் நேருவை சந்தித்தார். அவரது முற்போக்கு சிந்தனைகள் ராமை வசீகரித்தாலும், சில கருத்துக்களில் முரண்பட்டார். நேருவுடனான கொள்கை மாறுபாடுகளை வாழ்வின் இறுதிவரை ராம் மனோகர் லோஹியா வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் இருவரும் ஒத்த சிந்தனைகளுடன் இயங்கினர்.

1928 ல் சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது அதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவுக்கு ‘டொமினியன்’ அந்தஸ்து வழங்கலாமா என்று ஆராய வந்தது தான் சைமன் கமிஷன்.  அதாவது இங்கிலாந்தின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு சுயாட்சியுடன் பிரிட்டனின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கம். மாணவராக இருந்த ராம், ‘சைமனே திரும்பிப் போ’ போராட்டத்தை தனது பகுதியில் நடத்தினார்.

1929  ல் காசி ஹிந்து பலகலைக்கழகத்தில் இன்டர்மீடியட் படிப்பை முடித்த ராம், தனது பி.ஏ. (ஹானர்ஸ்) படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் (வித்யாசாகர் கல்லூரி)   முடித்தார்.  பிறகு,  ஜெர்மனியிலுள்ள  பெர்லின் பலகலைக்கழகத்தில்  படிக்க  விரும்பினார்.  அதற்காக ஜெர்மானிய  மொழியைக் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கியதால், தனது  மேல்படிப்புக்காக  கல்வி உதவித்தொகையும் பெற்றார்.

அநீதிக்கு எதிரான போராளி:

ஐரோப்பாவில் ராம் இருந்தபோது, ‘லீக் ஆப் நேஷன்ஸ்’ எனப்படும் நாடுகளின் கூட்டமைப்பு ஜெனீவாவில் கூடியது. அதற்கு பிகானீர் ராஜாவின் பிரதிநிதியாக ராம் சென்றார்;  ஆனால் வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அதையடுத்து வாயில் அருகிலேயே ஆர்ப்பாட்டம்  நடத்திய ராம், அந்நாட்டு பத்திரிகைகளில் தனது கண்டனத்தை வெளியிட்டார்.  தொடர்ந்து  கடிதம் மூலமாக தனது போராட்டத்தைத் தொடர்ந்த ராம், ஜெனீவாவில் இந்தியருக்கு ஏற்பட்ட அவமத்திப்பை அம்பலப்படுத்தினார். அதன்மூலமாக, இந்தியாவில் அவரது புகழ் பரவியது.

அதையடுத்து, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று உணர்ந்த ராம், அதற்காக, ஐரோப்பிய  இந்தியர் சங்கத்தை நிறுவினார். இந்தியாவுக்கு வெளியே செயல்பட்ட இந்தியர்களின் இயக்கங்களை ஒருங்கிணைப்பதை அந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.

தனது மேற்படிப்பின் முடிவில், முனைவர் பட்ட ஆய்வுக்காக, ‘உப்பு சத்யாகிரகம்’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தியின் சமூக- பொருளாதாரக் கோட்பாடுகளை விளக்கி ஆய்வைப் பூர்த்தி செய்தார். அதற்காக முனைவர் பட்டம் பெற்றார். 1932 ல் நாடு திரும்பினார் ராம்.

விடுதலைப் போரில் பங்கேற்பு:

நாடு திரும்பிய ராம், காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஆயினும், காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைளில் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. பெரும்பாலும் நில உடைமையாளர்களும் பெரும் தனவந்தர்களுமே காங்கிரஸ் தலைவர்களாக இருந்த நிலையில், நாட்டின் ஏழை மக்கள் குறித்து சிந்தித்தார் ராம். வெளிநாட்டுக் கல்வியால் அவர் ‘சோஷலிசம்’ குறித்த கனவுகளுடன் நாடு திரும்பி இருந்தார்.

தனது கொள்கைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே, ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்  கட்சி’யை ஸ்தாபித்தார் (1934).  அதன் பத்திரிகையான  ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்’ இதழில் தொடர்ந்து  பல அற்புதமான  அரசியல் கட்டுரைகளை ராம் எழுதினர்.

1936 ல் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம், கட்சிக்குள் வெளிவிவகாரத் துறையை உருவாக்கினார். அதன் முதல் தலைவராக நேருவால் ராம் மனோகர் லோகியா நியமிக்கப்பட்டார். அந்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திர (?) இந்தியாவின் எதிர்கால வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருதுகோள்களை வரைந்தார்.

1939  ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியபோது இந்தியா பிரிட்டனுக்கு ஆதரவு அளிக்கலாம்; கூடாது என்ற இருவேறு குரல்கள் காங்கிரசில் எழுந்தன. அதில், இரண்டாவது அணியில் ராம் இருந்தார். போரைப் பயன்படுத்தி, இந்தியாவிலுள்ள பிரிட்டீஷ் நிர்வாகத்திற்கு சிரமம்  ஏற்படுத்தி அவர்களை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்பது ராமின் கருத்தாக இருந்தது. அரசு நிறுவனங்களை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தால் கைது செய்யப்பட (24.05.1939) ராம்,  மாணவர்களின் எதிர்ப்புக்கு பயந்து மறுநாளே விடுவிக்கப்பட்டார்.

விடுதலையடைந்த ராம் மனோகர் லோகியா,  காந்தியின் பத்திரிகையான  ‘ஹரிஜன்’ இதழில் (01.06.1940) ‘இன்றைய சத்யாகிரகம்’ என்ற கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையில் ராஜதுவேசம் இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்த  ஆங்கில அரசு, ராம் மனோகர் லோகியாவுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அப்போது  ‘லோகியா முதல்தரமான அறிஞர்; பண்பட்ட பெரிய மனிதர்; சுதந்திரமான சிந்தனையும் உயர்ந்த சீலமும் வாய்ந்தவர்’ என்று குறிப்பிட்டார் தண்டனை வழங்கிய நீதிபதி!

ராம் மனோகர் லோகியாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மகாத்மா காந்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய காந்தி, ”டாக்டர் ராம் மனோகர் லோகியா சிறைக்குள் இருக்கும்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. அவரைப் போன்ற துணிவும் எளிமையும் கொண்ட மனிதர் வேறு யாரையும் நான் கண்டதில்லை.அவர் வன்முறையை பிரசாரம் செய்யவில்லை. அவர் என்ன செய்தாரோ, அது அவரது மேன்மைக்கு மேலும்  மெருகூட்டுவதாகவே    அமைந்திருந்தது” என்றார்!

சிறையில் ஆங்கில அதிகாரிகளால் மனரீதியான கொடும் சித்ரவதைக்கு ராம் ஆளானார். இந்நிலையில் உலகப்போரில் காங்கிரசின் ஆதரவைப் பெற போராட்ட வீரர்கள் பலரும் அரசால் விடுவிக்கப்பட்டனர். அப்போது ராம் மனோகர் லோகியாவும் விடுதலை ஆனார் (டிசம்பர் 1941).

‘வெள்ளையனே வெளியேறு’ தளகர்த்தர்:

1941  ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் நாடு முழுவதும் துவங்கியது. காந்தி, நேரு, படேல், ஆசாத் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் தள்ளப்பட்டனர். அப்போது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் முக்கியத்துவம் வெளிப்பட்டது. ராம் மனோகர் லோகியாவின்  தலைமைப் பண்பு  ஒளிவீசியது.

வெளிப்படியாக இயங்க முடியாத நிலையில்  தலைமறைவுப்   போராட்டத்தில்  ராம்  ஈடுபட்டார். ரகசிய இடங்களில் இருந்து பிரசாரத் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகித்த குழுவில் ராமும் இருந்தார்.உஷா மேத்தாவுடன் இணைந்து மும்பையில் ராம் நடத்திய ரகசிய வானொலியான ‘காங்கிரஸ் ரேடியோ’ மூன்று மாதங்கள் வெற்றிகரமாக இயங்கியது! சுதந்திரப் போரில் ரகசிய வானொலி பயன்படுத்திய நிகழ்வு அரசையே அதிர்சிக்குள்ளாக்கியது.

முன்னணித் தலைவர்கள்  இல்லாதபோதும் காங்கிரசின் மாதாந்திரப் பத்திரிகையான ‘இன்குலாப்’ இதழை அருணா ஆசப் அலியுடன் இணைந்து தயாரித்து வெளியிட்டார் ராம் மனோகர் லோகியா.

ஆயினும் அரசு ராமின் நடவடிக்கைகளை மோப்பம் பிடித்தது. போலீசார் சுற்றி வளைத்த நிலையில், கொல்கத்தாவுக்கு தப்பிய ராம், அங்கு வெவ்வேறு  பெயரில் மாறுவேடத்தில் வாழ்ந்தார். அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிய ராமுக்கு நேபாள புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கொய்ராலா  சகோதரர்களுடன் ராமுக்கு ஏற்பட்ட நட்பு, அவரது வாழ்வின் இறுதிவரை நீடித்தது.

அங்கிருந்து நாடு திரும்பி மீண்டும் தலைமறைவு இயக்கத்தில் ஈடுபட்ட ராம் 1944 ல் மும்பையில் கைதானார். சித்ரவதைக்கு பெயர்பெற்ற லாகூர் சிறைக்கு அனுப்பப்பட  ராம், அங்கு கடுமையான சித்ரவதைக்கு ஆளானார். அதனால் ராமின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் தலையீட்டால் ராம் மனோகர் லோகியாவும் அவரது சீடர் ஜெயபிரகாஷ் நாராயணனும் விடுதலை ஆயினர்.

ஓய்விலும் போராட்டம்:

விடுதலைக்குப் பின்,  ஓய்வுக்காக கோவா சென்ற ராம், அங்கும் அமைதியாக இருக்கவில்லை. கோவாவை  ஆண்ட போர்ச்சுக்கீசிய அரசு மக்கள் மீது கொடும் அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்ததைக் கண்டித்து, ராம் போராடினார்.

அதன் விளைவாக கைது செய்யப்பட்டார். ஆயினும், மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை கோவா அரசு நீக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. இன்றும் கோவா மக்களின் நாட்டுப்புறப் பாடல்களில் ராம் மனோகர் லோகியாவின் வீரப் பிரதாபங்கள் பெருமையுடன் பாடப்படுகின்றன.

அந்தக் காலகட்டத்தில் நாட்டில் கிளர்ந்த இந்து- முஸ்லிம் வேற்றுமை ராமுக்கு வேதனையை ஏற்படுத்தியது. நாட்டை மதரீதியில் பிளவுபடுத்துவதற்கு ராம் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். மதரீதியில் பிளவுபட்ட பகுதிகளில் வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் அஹிம்சை நெறியை முன்னெடுத்து,  மக்களை ஒன்றுபடுத்த முயன்றார்.

1947  ல் நாடு விடுதலை பெற்று, மக்கள் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்த வேலையில்,  தனது ஆதர்ஷ குருநாதரான மகாத்மாவின் அடியொற்றி, மதக்கலவரங்களில் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மயான பூமிகளில் அமைதி திரும்ப பாடுபட்டுக் கொண்டிருந்தார் ராம் மனோகர் லோகியா.

சுதந்திர நாட்டிலும் போராட்டம்:

நாடு சுதந்திரம் பெற்ற  பிறகு,  உள்நாட்டு  அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய  தேவையை உணர்ந்தார் ராம் மனோகர் லோகியா.  நாட்டின் முன்னேற்றத்தில்   பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்று பிரசாரம் செய்த ராம், தானே அதற்கு முன்மாதிரியாக விளங்கினார். மக்களே கால்வாய்களையும்  சாலைகளையும் அமைக்க வேண்டும் என்று கூறிய ராம், ‘பணியாரி’ நதியின் குறுக்கே, மக்களை ஒருங்கிணைத்து  அணைக்கட்டு  ஒன்றைக் கட்டினார். அது இன்றும்  ‘லோகியா சாகர் அணை’ என்ற பெயருடன் உள்ளது.

”ஆக்கப்பூர்வமான  கட்டமைப்புப் பணிகள் அல்லாது செய்யப்படும் சத்யாகிரகம் என்பது வினைச்சொல் இல்லாத வாக்கியம் போன்றது” என்பது ராம் மனோகர் லோகியாவின் புகழ்பெற்ற பொன்மொழி. பொதுப்பணிகள் சமூகத்தில்  நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதிபட நம்பினார். சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க  வேண்டும் என்பதில் ராம் பெரும்பங்கு வகித்தார்.

ஜனநாயக நாட்டில் மக்களின் குறைகளை  மக்கள் பிரதிநிதிகள் அறிய வேண்டியது அவசியம் என்ற ராம், அதற்காக ‘ஜனவாணி தினம்’ என்ற ஒருநாளை அறிமுகப்படுத்தினார். அந்நாளில் மக்கள் தங்கள் குறைகளை பிரதிநிதிகளிடம் முறையிட வாய்ப்பளித்தார். அம்முறை இன்றும் நாடாளுமன்றத்தில் நடைமுறையிலுள்ளது.

நாட்டின் பொதுமொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று ராம் விரும்பினார். ”நம்மிடையே உள்ள ஆங்கிலப் பயன்பாடு நமது அசலான சிந்தனைகளை மழுங்கச் செய்கிறது;  நம்மிடையே தாழ்வு மனப்பான்மையை  ஏற்படுத்துகிறது; தவிர, படித்தவர்களுக்கும் பிறருக்கும் இடையே பெருத்த இடைவெளியை உருவாக்குகிறது. எனவே ஹிந்தி மொழியை அதன் புராதனப்  பெருமையுடன் புதுப்பிக்க வேண்டும்”  என்பது லோகியாவின் கருத்து.

திட்டக்குழு மாயையைத் தகர்த்தவர்:

1963  ல் நாடாளுமன்றம் சென்ற ராம் மனோகர் லோகியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதுவரை மூன்று பொது தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான் ஒருகட்சி ஆட்சியே நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதனை ராம்  எதிர்த்தார். ”பிரதமர் நேருவுக்கு ஒருநாள் செலவிடப்படும் தொகை   ரூ. 25  ஆயிரம்; அதே சமயம் நாட்டின் ஏழைக் குடிமகனுக்கு 3  அனா வருமானத்திற்கும் கூட வழியில்லை” என்ற ராம், நமது அரசின் திட்டமிடலை கடுமையாக விமர்சித்தார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் நேரு, ”ஏழ்மையை ஒழிக்க திட்டக் குழு செயல்படுகிறது. அதன் புள்ளிவிபரப்படி, நாட்டின் சாமானியக் குடிமகனின் சராசரி தினப்படி வருமானம்  15  அனா ஆகும்” என்றார்  (அந்நாளில்  இதன்  மதிப்பு   ஒரு  ரூபாயை விட  சற்றே குறைவு).

இந்தப் புள்ளிவிபரத்தைச்  சாடிய லோகியா, சிறப்பு விவாதம் நடத்த அழைப்பு விடுத்தார். விவாதத்தில் பேசிய லோகியா, தனது புகழ்பெற்ற நாடாளுமன்றப்  பேசான  ‘தீன் (3) அனா – பந்த்ரா  (15) அனா’ விவாதத்தில் நாட்டின் திட்டக்குழு நடத்தும் நாடகங்களை விலாவாரியாக விளக்கி அதன் முகத்திரையைக் கிழித்தார். அதன்மூலமாக, திட்டக் குழு முனவைக்கும் புள்ளிவிபரங்கள் மாயையானவை என்று நிரூபித்தார். இறுதியில் ராம் மனோகர் லோகியா கூறுவதே  உண்மை என்பதை நாடு உணர்ந்தது. இந்த விவாதம் திட்டக்குழுவின் பணிகளை செம்மைப்படுத்த உதவியது.

ஜாதிகளுக்கு இடையிலான வேற்றுமையே  நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாக  ராம் கூறினார். ”ஜாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள், திறமையை குறுக்குகின்றன; குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளை குறுக்குகிறது; ஜாதி வேற்றுமைகள்  உள்ளவரை  மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும்” என்றார் ராம் மனோகர் லோகியா. மேல்த்ட்டிலுள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தட்டிலுள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்த முயன்றால் இந்தப் பிரச்னை தீரும் என்பது ராமின் கருத்து. உணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு (ரொட்டி அவுர் பேட்டி)  இருப்பதே ஜாதியை ஒழிக்கும் என்றும் ராம் அறிவுறுத்தினார்.

புரட்சிகரமான சிந்தனையாளர்:

பொதுவுடைமையை விரும்பினாலும் கம்யூனிசத்தை லோகியா ஏற்கவில்லை. கம்யூனிசமும் (பாட்டாளிகளின் சர்வாதிகாரம்)   காப்பிட்டலிசமும்  (முதலாளிகளின்   ஏகாதிபத்தியம்)   உலகின் பிரச்னைகளைத் தீர்க்காது என்று அவர் தீர்க்கமாக உரைத்தார். இரண்டுமே இயந்திர மயமானவை என்ற அவர், பெரும் தொழிற்சாலைகளை அமைப்பது மூன்றாம்  உலகத்தை அமைக்க உதவாது என்று எச்சரித்தார்.

‘மார்க்சிசம் ஐரோப்பாவின் ஆசியா மீதான கடைசி ஆயுதம்’ என்றே லோகியா வர்ணித்தார். மூன்றாம் உலக நாடுகளுக்கு முதலாளித்துவமும் கம்யூனிசமும் அல்லாத மாற்று அரசியல் தத்துவங்கள் தேவை என்று ராம் சொன்னார்.

1962  ல் சீனா இந்தியா மீது போர் தொடுத்தபோது,   ”இந்தியா,   பிற நாடுகளின் ஆக்கிரமிப்பைத்  தடுக்க  வேண்டுமானால்,  தோல்வியைத்  தவிர்க்க  வேண்டுமானால், அணு ஆயுதம்  தயாரிக்க   வேண்டும்”  என்று கூறி நாட்டில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கினார். ஆனால், அவர் அன்று சொன்னது இன்று நியாயம் என்று உணரப்பட்டிருக்கிறது. ராம் மனோகர் லோகியாவின் தீர்க்க தரிசனங்கள் நெல்லிக்காயாக துவர்ப்பை அளித்ததால் அக்காலத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டார். ஆனால், பின்பு இனிக்கும் நெல்லியின்  இயல்பு அவரது அறிவுரைகளில் மிளிர்ந்தது.

அரசின் அதிகாரங்களை குறைத்து மக்களிடம் அதிகாரத்தைப் பரவலாக வேண்டும் என்ற ராம், ‘ஹிந்த் கிசான் பஞ்சாயத்’ அமைப்பை நிறுவி, விவசாயிகளின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள உதவினார்.

உலக அளவில் உள்ள அனைத்து  சோஷலிஸ்ட்களையும்   ஒருங்கிணைத்து,   ஓர் அமைப்பாக  வேண்டும் என்று லோகியா  கனவு கண்டார்.  பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றிய லோகியா, உலக அரசு குறித்த சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வந்தார்.

தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான கலைஞர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் என புதிய இளம் தலைமுறையுடன் விவாதித்து காலம் கழித்தார். புதுதில்லியில் 1967, அக்டோபர் 12  ல் மறைந்தார். அப்போது அவருக்கென்று சொந்தமான வங்கிக் கணக்கோ, சொத்தோ ஏதும் இருக்கவில்லை.

ஒரு உண்மையான பொதுவுடைமைவாதியாக வாழ்ந்து மறைந்த ராம் மனோகர் லோகியா, இன்றைய தேவையாக நம் முன் ஆதர்ஷமாக உள்ளார்.

மீள்பதிவு: தேசமே தெய்வம்

.