ராம மந்திரம் ஓது
25 Marநதிநீர் முழுதும் நாட்டின் உடமை!
19 Feb(காவிரியின் சுயசரிதையும் அறிவுரையும்)
.
தட்சிண கங்கை என்பது நானே!
அட்சய பாத்திர அமுதும் நானே!
கன்னட நாட்டின் தலைக்காவிரியில்
என்னது அடிவேர் புறப்படுகிறது!
என்கரை எங்கும் லட்சுமி நடனம்!
என்னது மூலோர் அகத்திய முனிவர்!
பற்பல ஊர்கள், நற்பல நகரம்,
சிற்றெனக் கடந்து சீறிப் பாய்ந்தேன்!
.
செல்கிற பாதை எல்லாம் பசுமை
பல்கிட வளத்தைப் பெருக்கிடுகின்றேன்!
மண்ணைப் பொன்னாய் மாற்றியதாலே,
தண்ணீர் தானே எனக் கருதாமல்-
பொன்னி என்றே போற்றிடுகின்றீர்!
அன்னை என்றே அன்புடன் சொன்னீர்!
எல்லாம் அந்த ஈஸ்வரன் கிருபை!
வல்லான் அவனை வாழ்த்துகள் சேரும்!
.
பெண்களின் பருவம் மாறுதல் போலே,
என்னுடை நீரும் போக்குகள் மாறும்!
துள்ளிக் குதித்து, துந்துபி பாடி,
அள்ளித் தெளித்து அருவியுமாவேன்!
மெல்லப் பதிந்து நடந்திடு போதில்
எல்லை தெரியா ஏரிகள் ஆவேன்!
கண்ணாமூச்சி காட்டிடு வண்ணம்
நுண்ணிய நூலாய் மாறுவதுண்டு!
.
மடைகள் பலவும், அணைகள் பலவும்
தடைகள் செய்யத் தவழ்ந்திடுகின்றேன்!
யாத்திரைத் தலங்கள், ஈஸ்வரனுறைந்து
காத்தருள் செய்யும் ஆலயம் பலவும்
என்கரை தனிலே வீற்றிருப்பதனால்,
இன்னருள் வேண்டும் பற்பல மக்கள்
புண்ணிய நதியாய் வணங்கிடுகின்றார்!
எண்ணிய அனைத்தும் ஈடேறிடுக!
.
பாரத நாட்டின் பண்பாட்டைப் போல்
சீரிளம் அழகு சிலிர்த்திடப் பாய்வேன்!
இடையில் சிற்சில வாய்க்கால் ஆவேன்!
கடைசியில் வங்கக் கடலில் கரைவேன்!
பிறப்பது முதலாய், இறப்பது வரையில்
திறத்துடன் அமையும் மனிதரின் வாழ்க்கை-
என்பதுபோலே என்னது சரிதம்
என்பதைச் சொன்னேன்! என்கதை தொடரும்!
***
என்கதை இதுவே, என்னுயிர் மக்காள்!
நன்றொரு சொல்லை உம்மிடம் சொல்வேன்!
எல்லாச் சிறப்பும், எங்கும் அன்பும்,
நில்லாதொழியும் நிலை வரலாமா?
ஒருதாய் வயிற்ருப் பிள்ளைகளே என்
இருவிழிதானே குடகும் தமிழும்?
ஒருவிழி நோக, மறுவிழி காணும்
பிரிவைத் தரவா நதியென ஆனேன்?
.
வேண்டாம் துயரம்! சோதர மக்காள்!
வேண்டும் அன்பு, ஒற்றுமை எண்ணம்!
புண்ணிய நதியென் சொற்களைக் கேளீர்!
திண்ணிய ஈசன் திருவருள் புரிக!
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,
இருவரும் நன்றாய் வாழ்ந்திட வேண்டும்!
“நதிநீர் முழுதும் நாட்டின் உடமை”
விதியிது புதிதாய் விரைவினில் காண்பீர்!
.
குறிப்பு:
இக்கவிதையின் முதல் பகுதி எழுதப்பட்ட நாள்: 29.08.1991.
இதன் இறுதிப் பகுதி எழுதப்பட்ட நாள்: 17.08.1998.
இக்கவிதை, ‘விஜயபாரதம்’ வார இதழில் (28.08.1998) வெளியானது. அப்போதும் காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம் உச்சத்தில் இருந்தது. அன்றைய பிரதமர் வாஜ்பாய் முயற்சியால் அப்போது பிரச்னை தீர்க்கப்பட்டது. அச்சமயத்தில் வெளியானது இக்கவிதை.
“நதிநீர் தனிப்பட்ட எந்த மாநிலத்துக்கும் சொந்தமானதல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானது”- என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை- அன்றே கூறியதை நினைவுகூரும் விதமாக இக்கவிதை இங்கு பதிவாகிறது.
.
பட்டாசு வெடிப்போம் வாருங்கள்!
15 Octபட்டாசு வெடிப்போம் வாருங்கள் – தீய
பயங்கரவாதம் ஒழியட்டும்!
மத்தாப்பு கொளுத்திட வாருங்கள் – உலகில்
மகிழ்ச்சியே எங்கும் நிறையட்டும்!
(பட்டாசு)
இல்லம் தோறும் தீப ஒளி
இருளை விரட்டி ஓட்டட்டும்!
உள்ளம் தோறும் இறையருளின்
உயர்வுத்தன்மை ஓங்கட்டும்!
(பட்டாசு) Continue reading
வழிகாட்டு கண்ணா!
14 Aug
கோகுலத்தில் வளர்ந்தவனே, கோபாலா, ஸ்ரீகிருஷ்ணா!
கோபியர்கள் மனங்கவர்ந்த கோபாலா, ஸ்ரீகிருஷ்ணா!
தேகமெலாம் கருநீல மேகமென உடையவனே!
தேசத்தைக் காத்திடவே எங்களுக்கு வழிகாட்டு!
(கோகுலத்தில்) Continue reading
வாசகர் கருத்துக்கள்…