Tag Archives: வாழ்க்கை

சாஸ்வத சமதர்மம்

22 May

எரிந்து கொண்டிருந்தது அது. 
நேற்றுவரை அது 
அவராக இருந்தது.
அவர் – கோடீஸ்வரர்.

அருகிலேயே 
அதுவும் எரிந்தது.
இன்று காலை அது 
அவனாக இருந்தது.
அவன்- அநாதை.

நாளை 
இரு சவச் சாம்பல்களும் 
மண்ணில் கலந்திருக்கும்.

வெட்டியான் 
காத்திருக்கிறான் –
நாளை வரப் போகும் 
பிணங்களுக்காக. 

விஜயபாரதம் (06.11.1998)

சிந்தியல் வெண்பா

20 May


நல்லவர் நாட்டம் நாவினில் ஒடுக்கம்
வல்லவர் ஆகிட வழியது ஒன்றே
அல்லவை அறவே ஒழி.

 

வாழ்க்கை

17 May


நாவின் ருசி மயக்கத்தில்
வயிற்றுவலியை
மறந்த வாழ்வு.
நாப்புண்ணை சபிக்கும்
பசி படர்ந்த வயிறு.
இரண்டினூடே
ஊசலாடுகிறது 
வாழ்க்கை.

விஜயபாரதம் (28.01.2000)

காத்திருப்பு…

16 May

மருத்துவமனை முன்
ஆவலாய் காத்திருக்கின்றன
அமர ஊர்திகள்.

வாரிசை உருவாக்க
இடம் தேடி அலைகிறது
இலவம்பஞ்சு விதை.

எல்லாத் திசைகளிலும் 
பாய்கிறது
கடிவாளமற்ற குதிரை.

தயங்கி ஓடும் கடிகாரத்துக்கு
கொடுக்க வேண்டும் 
சாவி.

 

 

பூனைக்குட்டி 

14 May

அறைக்குள்ளிருந்த புழுக்கம்
வெளியே வந்தவுடன்
அடித்த வெயிலில்
காய்ந்து போனது தெரியாமல்
கால்கள் நடக்கின்றன.
நேற்று இந்நேரம்
வீட்டில் கடும் மழை.
குளிருக்கு இதமாக
போர்வைக்குள் சுருண்டிருந்த 
கால்களினிடையே 
சுருண்டிருந்தது 
பட்டு ரோமப் பூனைக்குட்டி.

Continue reading

நீரூற்றுப் பேனா 

13 May

பாவாடைதாவணி போல
வழக்கொழிந்துவிட்டது
நீரூற்றுப் பேனா.
எங்கு பார்க்கினும்
சுடிதார் போல
பந்துமுனைப் பேனாக்கள். Continue reading

மத்திமன் 

12 May

காலையில் எழுந்து கடன்களை ஆற்றி
அலுவலகத்துக்கு ஆலாய்ப் பறந்து
மேலதிகாரி முன் நெளிந்து நின்று
துவளா மனத்துடன் சுடுசொல் வாங்கி
கடமையாற்றி, மிகுபணி செய்து
அரை வயிற்றுணவு மதியம் உண்டு
மாதம் முழுவதும் தட்டுத் தடுமாறி
மாதம் முடிந்த சம்பள நாளில்
கஜவட்டிக்காரனுக்கு காணாமல் ஒளிந்து
பைக்கள்ளர்களுக்கு பயந்து பயந்து
சிறு நடையிட்டு வீட்டை ஏகி
ஒருமுழப் பூச்சரம் முகர்ந்து வாங்கி
மனைவியை நினைத்து மரத்தில் மோதி
விதியை நினைத்து வீக்கம் தடவி
சிறு குழந்தைக்கு மிட்டாய் வாங்கி
வீட்டை ஏகி
மனைவியின் கரத்தில் சம்பளம் தருவது
மத்திமனுக்கு மாதவம் அன்றோ?

.

நேற்றைய நினைவு

11 May

இன்றைய காலை இனிதாய் இருக்க
வென்றிட வேண்டும் நேற்றைய நினைவை!

நேற்றைய காலை நேரத்தினிலே
நாற்றமெடுத்த வியர்வையின் நடுவே
காற்றில்லாமல் கசப்புறு மனத்துப் 
பேற்றினைப் பெற்றேன் பேருந்தினிலே! Continue reading

கவிதா ஜனனம்

11 May

திக்கித் திணறி,
முக்கி முனகி,
இறுதியில் பிரசவமானது
கவிதை.

எத்தனை நாட்கள்
மனக் கருவறையில்
அடை காத்து
இன்று பொரிந்திருக்கிறது 
கவிதை. Continue reading

மானிட வாழ்க்கை

10 May

மானிட வாழ்க்கை நாடக மேடை
என்றார் சேக்ஸ்பியர், நாடக மேதை.

அருளே வாழ்க்கை, அதற்கே என்று
அருட்பா வள்ளல் சொன்னார் நன்று.

இவ்வுலகம் இனி மேலும் போதும்,
வேண்டாப் பிறவி – புத்தர் போதம். 

அரிதாம் பிறக்க மானிடராக 
அவ்வை சொன்னாள் தேனமுதாக.

மானிட அல்லல் போதும் என்றார்
மறுமறுபடியும் துன்பம் கொண்டோர்.

இவற்றில் எத்தனை பொய்யென மறுப்பது?
எல்லாம் உண்மை; ஏற்பவர் பொறுப்பது!

-விஜயபாரதம்
.
%d bloggers like this: