Tag Archives: விஜயபாரதம்

கேவலோசை

18 Oct

சிறுக(வி)தை

காலம்:

ஐப்பசி மழை பொழிந்ததன் ஈரம் படர்ந்த அதிகாலை நேரம்.

இடம்:

பசும்புல் பரவிய மணற் பரப்பும் சார்ந்த இடமும்.

திணை:

நெய்தல்- இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

***

இருகரம் வீசி அதிகாலை நடைபயிலும் பொழுதில்

கேட்டது ஓர் ஈனசுரம்.

கவனம் சிதறித் திரும்பிப் பார்த்தால் தெரிந்தது

குருதி வழியக் கிடந்த பரிதாபக் குயில்.

அருகிலேயே கூரிய அலகில் கிழிபட்ட இறகுகளுடன்

உக்கிரப் பார்வை வழியும் அண்டங்காக்கை.

தரையெங்கும் சிதறிக் கிடந்தன குயிலின் இறகுகள்.

காக்கையின் விழிகளில் வெளிப்பட்டது-

பரம்பரைப் பகையா, வயிற்றுப் பசியா, வேறு ஏதாவதா?

 

சட்டென கைகளை ஓங்க, வெருண்டோடி

அண்டை மரக்கிளையில் அமர்ந்தது ஓரவிழிக் காக்கை.

நிற்க இயலாமல் தத்தளிக்கும் குயிலை என்ன செய்வது?

அருகில் கிடந்த சிறுகல்லை வீச, தெறித்து அமர்ந்தது காக்கை.

மீண்டும் கல்லெடுத்தேன், மறுகிளை அமர்ந்தது.

புதரில் கிடந்த ஒடிந்த குச்சியால் விசிற, பறந்தது காக்கை.

விழிகளில் உயிராசையுடன் தத்தி அமர்ந்தது குயில்.

அதன் பார்வையில் தென்பட்டது நன்றியாக இருக்கலாம்.

தன்னை மீட்டு எங்கேனும் பாதுகாப்பாக வைப்பேன் என்றும்

அது நினைத்திருக்கலாம்.

எட்டு மணி பேருந்தைப் பிடித்தாக வேண்டிய அவசரத்தில்,

உருக்குலைந்து கிடந்த குயிலைக் கடந்தேன்.

 

சில நிமிட தொலைவுக்குப் பின்

மீண்டும் ஒலித்தது அதே ஈனசுரம்.

திரும்பிப் பார்த்தால்-

அதே குயிலின் அருகே மீண்டும் அதே அண்டங்காக்கை.

பல அடி தொலைவையும் தாண்டி அழைத்தது

குயிலின் மரண ஓலம்.

மானுடன் எனக்கு நிற்க நேரமில்லை.

 

இப்போது சாவகாசமாக இருக்கிறது.

அலுவலக கணினித் திரையில்

குறித்த நேரத்தில் வருகையைப் பதிவு செய்தாகிவிட்டது.

இனி கவிதை எழுதலாம்- எதை எழுதுவது?

சட்டென நினைவுக்கு வந்தது குயிலின் அழுகுரல்.

அதையே எழுதலாம்- நல்ல கரு.

வலிமையே வாழும் என்பதற்கும், உயிராசைக்குமான போட்டி!

‘தீராத பகையும் அலுவலக அவசரமும்’ என்று தலைப்பிடலாம்.

அந்தக் குயிலின் அழுகைதான் நெருடுகிறது-

இனிய குரல் கொண்ட குயிலிடமிருந்தா

அந்தக் கேவலோசை வந்தது?

 

-விஜயபாரதம்- தீபாவளி மலர் 2017

 

Advertisements

நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?

29 Oct
vishnu-vishwaroopa.
நாடு முழுவதும் நரகாசுரர்கள்!
எத்தனை கொடியோர், எத்தனை வடிவில்?
நரகாசுரரை ஒழித்திடும் வீர
நாயகர் யாரோ? சிந்தித்திடுவோம்!

Continue reading

நல்ல காலம் பிறக்குது!

28 Oct
 Kudukuduppai
 .
நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது!
 .
வல்லமை வளருது! வல்லமை வளருது!
அல்லவை அழியுது! அறமே பெருகுது!
நல்லவர் வாழ்ந்திட நவநிதி வளருது!
நல்ல காலம் பிறக்குது!
.
சொல்லடி ஜக்கம்மா, விண்ணவர் ஈஸ்வரி!
அம்மையே, நாயகி, வேதகி, வித்தகி!

Continue reading

சுதந்திரச் சங்கு

13 Aug
sangu
.
சுதந்திரம் என்பது பிறப்புரிமை – அதை
அடைந்திட யாசகம் தேவையில்லை!
சுதந்திரம் என்னது உயிராகும் – அதை
இடறிட அனுமதி எவர்க்குமில்லை!
 .
விடுதலை இல்லா மனிதன் – உலகில்
விழைந்திடும் செயல்களில் வெற்றிகளில்லை.
படிகுழி வீழ்ப்படு புலியின் – பலத்தில்
பலனெதும் இல்லை கண்டீர்!
 .
களை களைந்தால் பயிர்வளங்கள் உயர்ந்திடுதல் போல
தளை உடைந்தால் தனிப்பொலிவில் திளைத்திடுவோம் நாமே!
அதனாலே ஊதிடுவாய் சுதந்திரத்தின் சங்கை –
இதமேயினி எங்கெங்கும் என்றூதி ஆடு!
 .