கொங்கு மண்டலத்தில் பாடல் பெற்ற சிவத்தலங்கள்

5 Apr

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி தமிழகத்தில் உண்டு. தமிழகத்தின் பழமையான நகரங்கள், ஊர்கள் பலவும் அங்குள்ள கோயிலை மையமாகக் கொண்டே உருவாகியிருப்பதைக் காண முடியும். தமிழோடு சைவமும் வைணவமும் வளர்த்த பெருமை மிக்கது தமிழகம்.

கொங்குநாடு அமைவிடம்:

பண்டைக்காலத்தில் தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு என அரசியல்ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த பிராந்திய வேறுபாடுகள் ஒவ்வொரு காலத்திலும் மாறியபடியே இருந்துள்ளன. ஆயினும், ஏதாவது ஒரு ஊரைக் குறிப்பிடுகையில் அந்த ஊர் உள்ள பகுதியை சேரநாடு, கொங்குநாடு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்துள்ளது.

அதன்படி, தர்மபுரி முதல் கோவை வரையிலான தற்போதைய மேற்கு மண்டல தமிழகப் பகுதிகள் ‘கொங்குநாடு’ என்று அழைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்கள் அக்காலத்தில் கொங்குநாடு என்று அழைக்கப்பட்டுள்ளன.

இந்த கொங்குநாடு பகுதியில் உள்ள ஆலயங்கள் பல. ஊர்தோறும் ஆலயங்கள் இருந்தாலும், அவற்றில் சில ஆலயங்கள் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்தச் சிறப்புக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம், பரிகாரம், பாடல்கள் உள்பட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், கொங்குநாட்டில் தேவாரத் தமிழ்ப் பதிகம் பெற்ற ஏழு தலங்கள் முக்கியமானவை.

 தேவார மூவர்:

தமிழகத்தில் சைவசமய எழுச்சி 1,500 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. அப்போது தோன்றிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவார மூவர் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கால்நடையாகவே சென்று பக்திப்பயிர் வளர்த்தனர். சைவ சமயத்தில் மட்டுமல்லாது தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடும் திறனும் படைத்த அவர்கள், ஊர்தோறும் சென்று அத்தலத்தின் இறைவனையும் தலத்தையும் போற்றிப் பதிகங்கள் பாடி மக்களை வழிப்படுத்தினர்.

அவர்களது தமிழகப் பயணம் பல அற்புதங்களை நிகழ்த்துவதாகவும் அமைந்தது;  இறையாற்றல் வாய்ந்த மொழி தமிழ்மொழி என்பதை நிலைநாட்டுவதாகவும் அமைந்தது. தேவார மூவர் பாடிய பதிகங்கள் பன்னிரு திருமுறைகளில் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.  அவற்றில் கொங்கு நாட்டில் உள்ள ஏழு தலங்கள் மீதான பதிகங்களும் அடங்கும்.

திருநணா (பவானி), திருச்செங்கோடு, கருவூர் (கரூர்), திருமுருகன் பூண்டி, திருப்பாண்டிக் கொடுமுடி (கொடுமுடி), திருப்புக்கொளியூர் (அவிநாசி), வெஞ்சமாக்கூடல் ஆகிய ஏழும் ‘கொங்கேழ் தலங்கள்’ என்ற சிறப்புப் பெற்றவை. இத்தலங்கள் தேவார மூவர் விஜயம் செய்து அற்புதங்கள் நிகழ்த்திய பெருமை வாய்ந்தவை.

தேவாரப் பாடல்களில் பதிவு பெற்று ஆன்மிக சரித்திரத்தில் இடம் பெற்றவை இந்த ஏழு தலங்களும். அந்த ஏழு தலங்களுக்கும் செல்வோமா?

முக்கூடலில் உள்ள பவானி:

கங்கை, யமுனை, அந்தர்வாஹினியான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடுமிடம் திரிவேணி சங்கமம் (பிரயாகை) என்று அழைக்கப்படுகிறது. இந்துக்களின் வழிபாட்டில் திரிவேணி சங்கமத்துக்கு பேரிடம் உண்டு. உ.பி. மாநிலத்தின் அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமம் புண்ணியத்தலமாகவும் தீர்த்தாடனத் தலமாகவும் விளங்குகிறது.

அதற்கு இணையானது தென்னகத்திலுள்ள, பவானி கூடுதுறை என்று தற்போது அழைக்கப்படும் ‘திருநணா’. காவிரி, பவானி, கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் இங்கு கூடுகின்றன. இங்கு புனித நீராடலும் நீத்தார் கடன் மேற்கொள்வதும் மிகச் சிறப்பானவை.

இங்குள்ள சங்கமேஸ்வரர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்கு சங்கமேஸ்வரர் என்ற பெயரில் ஈசன் குடிகொண்டுள்ளார். இறைவி, வேதநாயகி. இக்கோயில் வளாகத்திலேயே, ஸௌந்தரவல்லித்  தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் தனி சந்நதியில் காட்சி தருகிறார். இக்கோயிலின் தலவிருட்சம் இலந்தை மரம்.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் திருநணா. சம்பந்தரின் திருநணாப் பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தைப் பாடியுள்ளார். தனது பக்தரான ஆங்கிலேய அதிகாரி வில்லியம் காரோவின் உயிரை வேதநாயகி அம்மன் காத்ததாகவும், அதற்கு நன்றிக்கடனாக அம்மனுக்கு தந்தக் கட்டில் வழங்கியதாகவும் (1804ம் ஆண்டு) கோயில் தலவரலாறு கூறுகிறது. ÷

ஈரோடு மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. ஈரோட்டிருந்து 15 கிமீ. தூரத்திலும், சேலத்திலிலிருந்து 56 கிமீ. தூரத்திலும் பவானி உள்ளது. கொங்கு மண்டலத்தின் பிரதானமான கோயில் பவானி எனில் மிகையில்லை.

சமத்துவம் கூறும் திருச்செங்கோடு:

ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்த, ஈசனே மாதொரு பாகனாக தரிசனம் அளிக்கும் தலம் திருச்செங்கோடு. இங்குள்ள சுயம்பு வடிவான மூலவரில் இடதுபாகம் அம்பிகையாகவும், வலதுபாகம் சிவனாகவும் காட்சி தருகிறது.

செந்நிறமான மலையாதலால் திருச்செங்கோடு என்று பெயர்பெற்ற 1,900 அடி உயரமுள்ள மலை மீது மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார். தலத்தின் இறைவி பாகம்பிரியாள். கணவனும் மனைவியும் மனமொத்து வாழ்வதற்கு, இணைபிரியாத இச்சிலாரூபமே வழிகாட்டும் தத்துவமாகும்.

1,250 படிக்கட்டுகளில் ஏறியோ, கார் மூலமாக தார்ச்சாலையில் பயணித்தோ கோயிலை அடையலாம். மூலவரின் காலடியில் சுரக்கும் வற்றாத தேவதீர்த்தம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூலவருக்கு வலப்புறம் வேட்டியும் இடப்புறம் சேலையும் அணிவிக்கின்றனர். இங்கு அம்பிகைக்கு தனி சந்நிதி இல்லை. ஆதிகேசவப் பெருமாளுக்கு இங்கு தனிக்கோயில் உண்டு.

“கொடிமாடச் செங்குன்றூர்’ என்று திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் திருச்செங்கோடு. இப்பதிகம் முதல் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்களும் இங்குள்ள செங்கோட்டுவேலன் மீது பாடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. ஈரோட்டிலிருந்து 18 கிமீ. தூரத்திலும், சேலத்திலிருந்து 27 கிமீ. தூரத்திலும், நாமக்கல்லிலிருந்து 35 கிமீ. தூரத்திலும் திருச்செங்கோடு உள்ளது. சிலப்பதிகார நாயகி கண்ணகி இம்மலைக்கு வந்ததாகவும் புராணக்கதை உண்டு.

பசு வழிபட்ட கருவூர்:

இவ்வுலக உயிர்கள் அனைத்தும் ஈசன் முன்பு சமமானவையே என்பதை உணர்த்துகிறது பசு வழிபட்ட கருவூர் (தற்போதைய கரூர்) திருத்தலம். இங்குள்ள சுயம்பு வடிவான லிங்கம் மீது பசுவின் குளம்படிகளைக் காணலாம். இவரை ஆனிலையப்பர் என்றும் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.

காவிரியின் துணை நதியான அமராவதி ஆற்றங்கரையில், கரூர் நகரின் மையப்பகுதியில் பிரமாண்டமான ஆலய அமைப்புடன் உள்ளது பசுபதீஸ்வரர் கோயில். இங்குள்ள இறைவியின் பெயர் சுந்தரவல்லி. ஆனந்த வல்லி என்ற பெயருடன் பழைய கோயிலிலும் இறைவி தரிசனம் தருகிறார். இக்கோயிலின் நூற்றுக்கால் மண்டபம் காண வேண்டியதாகும். கருவறையிலுள்ள மூலவர் மீது பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் சூரியஒளி விழும்படி ஆலயக் கட்டுமானம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளை உடையது கரூர். கந்தபுராணத்தில் கூறப்படும் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை மிக்கது இக்கோயில் என்று தலபுராணம் கூறுகிறது. பதினென் சித்தர்களுள் ஒருவரும் ராஜராஜ சோழனின் குருவுமான கருவூர்ச் சித்தர் வாழ்ந்த இடம் இது. இக்கோயிலில் கருவூர்ச் சித்தருக்கு தனி சந்நிதி உண்டு.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது. கருவூர்ப் பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. 14ம் நூற்றாண்டில் கரூர் வந்த அருணகிரிநாதர், இக்கோயிலில் குடிகொண்டுள்ள முருகன் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. கோவையிலிருந்து 121 கிமீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 115 கிமீ. தூரத்திலும், ஈரோட்டிலிருந்து 65 கிமீ. தூரத்திலும் கரூர் உள்ளது. ஈரோடு- திருச்சி ரயில்மார்க்கத்திலும் கரூர் உள்ளது. 63 நாயன்மார்களுள் ஒருவரான புகழ்ச்சோழ நாயனார் கருவூரை ஆண்ட மன்னராவார். எறிபக்த நாயனார் பிறந்த தலமும் இதுவே.

மும்மூர்த்திகள் அருளும் கொடுமுடி:

வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையிலான பலப்பரீட்சையில் மேருமலையின் ஒருபகுதியான வைரமுடி சிதறி விழுந்த இடமே கொடுமுடி என்று தலபுராணம் கூறுகிறது. கோயிலின சுயம்பு வடிவான இறைவனுக்கு கொடுமுடி நாதர் அல்லது மகுடேஸ்வரர் என்று பெயர். இறைவியின் நாமம் வடிவுடைநாயகி.

காவிரி நதிக்கரையில் உள்ள இத்தலம், மும்மூர்த்திகளுக்கும் தனி சந்நிதி கொண்டிருப்பதால் தனிச்சிறப்பு பெற்றது. இங்குள்ள பிரம்மாவும், வீரநாராயணப் பெருமாளும் மகுடேஸ்வரரை வணங்குவதாக ஐதீகம். இங்குள்ள ஈசனை அகத்தியர் வழிபட்டதாகவும், அவரது விரல் தடங்கள் மூலவர் திருமேனியில் பதிந்திருப்பதாகவும் ஐதீகம் உண்டு.

காவிரி நதி, வன்னிமரம் அருகிலுள்ள தேவதீர்த்தம், பரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்கள். காவிரியிலும் தேவதீர்த்தத்திலும் நீராடி, சிவனையும் பெருமாளையும் வழிபட, தீராப் பிணிகளும், பில்லி, சூனியம்,மனநோய் போன்றவையும் அகலும் என்பது நம்பிக்கை.

ஈசனின் ஆருயிர்த்தோழர் சுந்தரர் விஜயம் செய்து பாடி மகிழ்ந்த தலம் இது. பாண்டிக் கொடுமுடிநாதர் மீது சுந்தரர் பாடிய நமச்சிவாய பதிகம் ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மலையத்துவஜ பாண்டியனால் திருப்பணி செய்யப்பட்டதால் “திருப்பாண்டிக் கொடுமுடி’ என்று பெயர்பெற்ற இந்தப் பரிகாரத் தலம் தற்போது கொடுமுடி என்று வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி உள்ளது. ஈரோட்டிலிருந்து 40 கிமீ. தூரத்திலும், திருப்பூரிலிருந்து 89 கிமீ. தூரத்திலும் இத்தலம் உள்ளது. ஈரோடு – திருச்சி ரயில் மார்க்கத்தில் பயணித்தும் இங்கு செல்லலாம். திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் கூட இத்தலத்து இறைவனை பதிகங்களில் பாடி வணங்கியுள்ளனர்.

தமிழின் இறைமை காட்டிய அவிநாசி:

தொல்மொழியான தமிழுக்கு இறையாற்றல் உண்டு என்பதை மெய்ப்பித்த தலம்  ‘திருப்புக்கொளியூர்’ என்று பழங்காலத்தில் வழங்கப்பட்ட அவிநாசி திருத்தலம்.  ‘காசிக்குச் சென்றால் தான் முக்தி; அவிநாசியை நினைத்தாலே முக்தி’ என்ற சொல்வழக்கு உண்டு.

தமிழகத்தின் பழங்கால வணிகப்பாதையான ராஜகேசரி பாதையில் அமைந்த அவிநாசி, சுந்தரரின் பாதம் பட்டுப் புனிதமடைந்த தலமாகும். இக்கோயிலின் இறைவர் அவிநாசியப்பர்; இறைவி கருணாம்பிகை. காசி கங்கை, நாககன்னிகை தீர்த்தம், ஐராவத தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. தலவிருட்சம் மாமரம்.

சுந்தரர் இத்தலத்துக்கு வந்தபோது எதிரெதிர் வீடுகளில் ஒரு வீட்டில் மங்கல ஒலியும் மறுவீட்டில் அமங்கல ஒலியும் கேட்டன. அதுகுறித்து சுந்தரர் விசாரித்தபோது, இரு வீடுகளிலும் இருந்த ஐந்து வயதுச் சிறுவர்கள் இருவர் அருகிலுள்ள தாமரைப் பொய்கையில் நீராடச் சென்றபோது ஒருவனை முதலை விழுங்கியது தெரியவந்தது. அதில் தப்பிய பாலகனுக்கு ன்று உபநயனம் செய்விக்கப்படுவதும், தமது குழந்தை இத்தருணத்தில் இல்லையே என்ற ஆற்றாமையால் எதிர்வீட்டுப் பெற்றோர் அழுவதும் உணர்ந்த சுந்தரர், பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று திருப்புக்கொளியூர்ப் பதிகம் பாடினார்.

முதலை பாலகனை உண்ட குளக்கரையில் ‘எற்றான் மறக்கேன்’ என்று துவங்கும் பதிகம் பாடினார் சுந்தரர். பதிகத்தின் 4வது பாடலில் ‘முதலையை பிள்ளை தரச் சொல்லு’ என்று ஈசனுக்கே கட்டளையிட்டார் சுந்தரர். அதையேற்று, வற்றிய குளம் நிறைந்து முதலை அங்கு தோன்றியது; தான் ஐந்தாண்டுகளுக்கு முன் விழுங்கிய பாலகனை 10 வயது சிறுவனாக உயிருடன் உமிழ்ந்து மறைந்தது முதலை. இத்தகைய தெய்வீகத் தமிழின் அற்புதம் நிகழ்ந்த தலம் அவிநாசி.

இந்த மகிமைமிகு நிகழ்வு நடந்த குளம் அவிநாசியில் கோயிலிருந்து அரை கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு சுந்தரருக்கு தனிக்கோயிலும் உண்டு. பங்குனி உத்திர நாளில் இக்குளக்கரைக்கு வரும் அவிநாசியப்பர் முதலையுண்ட பாலகனை மீட்ட திருவிளையாடலில் பங்கேற்கிறார். சுந்தரர் பாடிய திருப்புக்கொளியூர்ப் பதிகம் ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. திருப்பூரிலிலிருந்து 8 கிமீ. தூரத்திலும், கோவை, ஈரோட்டிலிருந்து தலா 40 கிமீ. தூரத்திலும், பவானியிலிருந்து 53 கிமீ. தூரத்திலும் அவிநாசி உள்ளது. அவிநாசித் தேர் தமிழகத்திலுள்ள தேர்களில் இரண்டாவது பெரியதாகும்.

சித்தம் காக்கும் திருமுருகன் பூண்டி:

மிகப் பழமையான திருமுருகன் பூண்டி தொல்பொருள் சின்னமாக அறிவிக்கப்பட்டதாகும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சீரடைய இத்தலத்தின் சண்முக தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தங்களில் நீராடி, ஈசனை வழிபடுவதும் குணமடைவதும் இத்தலத்தின் சிறப்பாகும்.

செந்நூரில் சூரமத்மனை வதம் செய்தபிறகு தன்னைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் போக்க முருகன் வழிபட்ட தலம் இது; ஞானத்தின் அதிபதியான கேதுபகவான் ஈசனை வழிபடும் தலமும் இதுவே என்கிறது தலபுராணம். இங்கு கேது பகவானுக்கு தனி சந்நிதியும் உண்டு.

திருமுருகனால் நிறுவப்பட்டு வழிபடப்பட்ட பரிகாரத் தலம் என்பதால் ‘திருமுருகன் பூண்டி’ என்று பெயர் பெற்ற இத்தலத்தின் இறைவர் திருமுருகநாதர். இறைவியின் நாமம் ஆவுடைநாயகி. மூலவர் சந்நிதியின் வலப்புறம் ஆறுமுகக் கடவுளுக்கு தனி சந்நிதி உள்ளது.

தனது உற்ற தோழர் சுந்தரரின் பொருளை ஈசனே வேடன் வடிவில் வந்து பறித்து நிகழ்த்திய வேடுபறித் திருவிளையாடலின் மூலமாக சுந்தரரின் பெருமையை உலகறியச் செய்தார் ஈசன். திருமுருகன் பூண்டி திருத்தலத்தில் வேடுபறிக்குழி இன்றும் உள்ளது. இந்த நிகழ்வை ஆண்டுதோறும் வேடுபறி உற்சவமாகக் கொண்டாடுகின்றனர்.

தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்ட பொருளை திரும்பப் பெறக் கோரி சுந்தரர் இத்தலத்து இறைவன் மீது பாடினார். இப்பதிகம் ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவருக்கு திருடிய பொருளைக் காட்டிய விநாயகர் ‘கூப்பிடு விநாயகர்’ என்ற பெயரில் தரிசனம் தருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. திருப்பூரிலிலிருந்து 7 கிமீ. தூரத்திலும், அவிநாசியிலிருந்து 4 கிமீ. தூரத்திலும் திருமுருகன் பூண்டி உள்ளது. இழந்த பொருளை மீட்க வேண்டுவோர் இத்தலத்தில் பிரார்த்திக்கலாம் என்பது பக்தர்தம் நம்பிக்கை. சிற்பத் தொழிலிலும் திருமுருகன் பூண்டி சிறந்து விளங்குகிறது.

இந்திரன் வழிபட்ட வெஞ்சமாகூடல்:

கொங்கேழ் தலங்களில் இத்தலம் மட்டுமே போக்குவரத்து வசதிகள் குறைந்த ஊரகப் பகுதியில் உள்ளது. குடகனாற்றின் கரையில் உள்ள இத்தலம் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. குடகனாற்றுடன் ஒரு சிற்றாறு கலக்கும் இடம் என்பதாலும், வெஞ்சமன் என்ற வேடன் ஆண்டு வழிபட்ட தலம் என்பதாலும் “வெஞ்சமாகூடல்’ என்று பெயர் பெற்றது.

தேவர்களின் தலைவனான இந்திரன் சாபவிமோசனம் பெற இங்கு வந்து வழிபட்டதாக ஐதீகம். பாண்டியர்காலக் கல்வெட்டுகள் இங்கு கிடைத்துள்ளன. இங்குள்ள இறைவனின் பெயர் விகிர்தநாதேஸ்வரர். இறைவி பெயர், விகிர்தேஸ்வரி அல்லது பண்ணேர்மொழியம்மை.

சுந்தரரின் பாடலுக்கு மயங்கி, இத்தலத்தில் ஈசனே கிழரூபம் எடுத்து வந்து தனது இரு புதல்வர்களை மூதாட்டியிடம் ஈடுவைத்துப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்கிறது தலபுராணம். இத்தலத்தின் இறைவன் மீது சுந்தரர் பாடிய பதிகம் ஏழாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

கொங்கு மண்டல சதகத்திலும் இத்தலம் குறித்துப் பாடப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவர் கருவறைக் கதவுகளில் கொங்கேழ் தல மூர்த்திகளின் சிலாரூபங்கள் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு. இங்குள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் பாடிப் பரவியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் இத்தலம் உள்ளது. கரூரிலிருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 14 கிமீ. தூரம் பயணித்தால் ஆறுரோடு பிரிவு என்ற இடம் வரும் அங்கிருந்து 8 கிமீ. தூரம் பயணம் செய்தால் வெஞ்சமாகூடல் தலத்தை அடையலாம்.

– மேற்கண்ட ஏழு திருத்தலங்களும் சைவமும் தமிழும் வளர்த்து, மக்களை நன்னெறிப்படுத்தியவை. இத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபடும்போது, தேவார மூவரும் அருந்தமிழால் போற்றிப் பாடிய பதிகங்களும், அவர்களது தெய்வீக சாதனைகளும் நினைவில் வருகின்றன. மந்திரத் தமிழில் பதிகம் பாடி இறைவனை வணங்கிய நமது முன்னோரின் நினைவுகளே நம்மை என்றும் காக்கும்.

– சிகரம் தொட்ட நகரம்

தினமணி  (கோவை) சிறப்பிதழ் (மார்ச்30,  2012)

.

2 Responses to “கொங்கு மண்டலத்தில் பாடல் பெற்ற சிவத்தலங்கள்”

  1. தமிழன் April 6, 2012 at 3:03 PM #

    அருமையான பதிவு. தங்கள் சேவைக்கு நன்றி.

    -தமிழன்

    Like

  2. Vishvarajan July 21, 2012 at 10:04 AM #

    Very informatice pages. Thanks a lot.

    Like

Leave a comment